Advertisement

4

அன்று

“டேய் ஆதி உனக்கென்ன தலையெழுத்தாடா இப்படி கான்ஸ்டபிள் வேலை பார்க்கறேன்னு எங்க உயிரையும் சேர்த்து எடுக்கறே. ஒழுங்கா வீட்டில இரேன்டா ரிசல்ட் வர்ற வரைக்கும்” என்று அங்கலாய்த்தது ஆத்திரேயனின் அன்னை வாசவி.

“அம்மா உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது இனிமே இப்படி சொல்லாதீங்க. எதையும் ஆதியில இருந்து படிக்கணும்மா அடி மட்டத்துல இருந்து மேல வந்தா தான் கீழ என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியும்”

“ஐபிஎஸ் முடிச்சிட்டா நான் ஒரு பெரிய பதவியில போய் உட்காரந்திருவேன். ஆனா நமக்கு கீழ இருக்கவங்களோட வேலை என்ன வலி என்னன்னு தெரிஞ்சுக்க முடியாமலே போய்டும்மா. எனக்கு அனுபவம் வேணும்ன்னு தான் நான் மாமாவை கம்பெல் பண்ணி இந்த வேலையிலவே சேர்ந்தேன்”

“சேர்ந்தது தான் சேர்ந்தே இந்த ஊர்ல உனக்கு வேலை கிடைக்கலியா. வாரத்துக்கு ஒரு நாள் வர்றே, நைட் வந்திட்டு மறுநாள் நைட் கிளம்பிடுறே” என்று இன்னமும் பொருமினார் அவர்.

“அம்மா இங்கவே இருந்தா என்னை எல்லாரும் ஈசியா கண்டுப்பிடிச்சிடுவாங்க. அதனால தான் வேற ஊர்ல வேலை வேணும்ன்னு உறுதியா கேட்டு வாங்கினேன் மாமாகிட்ட சொல்லி”

“மாமா… மாமா… மாமா… உன்னை பெத்தது நானு ஆனா மூச்சுக்கு மூன்னூறு தரம் மாமான்னே சொல்லிட்டு இருக்கடா நீ”

“உங்க அண்ணனை தானே சொன்னேன். அது உங்களுக்கு பிடிக்கலையா??”

“கூடப்பிறந்த அண்ணனை பிடிக்கலைன்னு யாரும் சொல்வாங்களா. அதுவும் நான் சொல்வேனா”

“அப்புறமென்ன??”

“அம்மாவையும் கொஞ்சம் கவனி கண்ணா. ரிசல்ட் எப்போ வருது??”

“இன்னும் ஒரு மாசத்துல ரிசல்ட் வந்திடும்”

“ஹப்பாடா இப்போ தான் எனக்கு நிம்மதியே”

“அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கு நான் இங்க இருக்க மாட்டேனே, ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சு போஸ்டிங் அப்போ தான் இங்க வருவேன்”

“பரவாயில்லை இப்போ மட்டும் நீ எங்க கூட இருக்கியா என்ன”

“ஆமா அண்ணன் எங்கே இங்க வந்து நாளான மாதிரி இருக்கு”

“உங்கண்ணன் ரூபன் நாளைக்கு வர்றேன்னு சொன்னான் உங்க அண்ணி அவ அம்மா வீட்டுக்கு போயிருக்காளாம். அவளை போய் கூட்டிட்டு நேரா இங்க வந்திடறேன்னு சொல்லியிருக்கான்”

“ஆதி நம்ம திலோக்கு ஒரு நல்ல சம்மந்தம் வந்திருக்கு. அதையும் பேசத்தான் நாளைக்கு உங்க அண்ணனையும் வரச்சொன்னேன். நீயும் மாப்பிள்ளை போட்டோவை பார்த்திடு, எல்லாம் பேசி வைச்சிடுவோம். உன் ட்ரைனிங் எல்லாம் முடிஞ்சு நீ இங்க வந்ததும் திலோ கல்யாணத்தை முடிச்சிடலாம்”

“கல்யாணத்துக்கு நான் வரலாமா??” என்ற குரலில் மற்ற இருவரும் திரும்பி பார்க்க வாசவி அதே வேகத்தில் மகன் புறம் திரும்பிக் கொண்டார்.

“உங்கப்பாவுக்கு எப்பவுமே அசட்டுத்தனமான பேச்சு தான். பொண்ணு கல்யாணத்துக்கு அவருக்கு வெத்தலை பாக்கு வைக்கணுமா என்ன, காலையில அவர் தான் இந்த போட்டோவை கொடுத்தார். இப்போ பேச்சைப் பாரு” என்று கணவரை மகனிடம் வறுத்தார் மனைவி.

“வாசு”

“அப்படி கூப்பிடாதீங்க ஆம்பிளை பேரு மாதிரி இருக்கு”

“இங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆட்சி தானே நடக்குது. அப்போ நான் அப்படி கூப்பிட்டா தப்பில்லை” என்றார் அவர்.

“ஆதி பாருடா உங்கப்பாவை”

“அப்பா அம்மாவை எதுக்குப்பா ஓட்டுறீங்க, விடுங்கப்பா பாவம்”

“அவளுக்கு எல்லாரும் பாவம் பாருங்க. எனக்கு ஒருத்தரும் பார்க்கறதில்லை”

“நீங்க பாவம்ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க”

“நம்புறாங்களே அந்த எதிர்த்த வீட்டு மரகதம்” என்று அவர் ஆரம்பிக்கவுமே டென்ஷன் ஆகிவிட்டார் வாசவி.

“சரி சரி முறைக்காத எனக்கு காபி வேணும்” என்று அவர் சொல்லவும் முனகிக்கொண்டே எழுந்தவர் “ஆதி உனக்கு வேணுமா??”

“போடுங்கம்மா” என்று அவன் சொல்லவும் சமையலறை விரைந்துவிட்டார் அவர்.

“அப்புறம் ஆதி எக்ஸாம்லாம் எப்படி பண்ணியிருக்கே??”

“சூப்பரா பண்ணியிருக்கேன்ப்பா”

“பர்ஸ்ட் அட்டெம்ப்ட்லவே”

“கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்”

“அதை தான் நானும் சொல்ல வந்தேன். உங்க மாமா போன் பண்ணியிருந்தார்”

“என்ன சொன்னாங்கப்பா” என்றான் அவன் ஆர்வமாய்.

“உன் மேல உங்க மாமனுக்கு ரொம்ப நம்பிக்கை நீ கண்டிப்பா பெரியாளா வருவேன்னு சொல்லிட்டு இருந்தான். அவனைப் போலவே வரணும்ன்னு ஆசைப்பட்டே சாதிச்சுட்டேன்னு தான் சொல்வேன்” என்றார் அவன் தந்தை சுசிந்தரம்.

“தேங்க்ஸ்ப்பா…”

“எப்போப்பா ஊருக்கு கிளம்பணும்??”

“நாளைக்கு தான்ப்பா”

“நாளைக்கு அப்போ பாப்பாவை பொண்ணு பார்க்க வரச்சொல்லிடலாமா??”

“உங்களுக்கு திருப்தியாப்பா… மாமா ஓகே சொல்லிட்டாங்களா??”

“எனக்கு திருப்தி தான் மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா உனக்கும் திருப்தியா தான் இருக்கும். தவிர உங்க மாமன் ஓகே சொல்லணும்ன்னு அவசியமே இல்லை ஏன்னா கேட்டதே அவன் தான்”

“என்னப்பா சொல்றீங்க?? நம்ம தீரனுக்காப்பா”

“சூப்பர் ஆதி சரியா சொல்லிட்டே, நல்லா கெஸ் பண்றே. போலீஸ்க்காரன்ல”

“மாமாவே கேட்டாங்களாப்பா, திலோ ஓகே சொல்லிட்டாளா”

“திலோக்கும் சம்மதம் தான்”

“தீரன் ரொம்ப படிச்சவனாச்சேப்பா”

“அவனுக்கு திலோவை பிடிச்சிருக்கு அவளுக்கும் தான்”

“லவ்வா”

“அதெல்லாம் இல்லைடா பிடிச்சு தான் கேட்கறாங்க. திலோகிட்ட கேட்டப்போ அவளுக்கும் பிடிச்சிருக்குன்னு சொன்னா அவ்வளவு தான்”

“ஓகேப்பா அவங்களை வரச்சொல்லிடுங்க” என்றுவிட வாசவி காபியோடு வந்தார்.

“என்ன உங்கப்பா எல்லாம் சொல்லிட்டாரா. உனக்கு சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு பார்த்தேன் அதுக்குள்ள என்னை அங்க அனுப்பிட்டு இங்க உன்கிட்ட உளறிட்டாரா” என்றார் அவர்.

ஆதி ஐபிஎஸ் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே பத்தாம் இடத்தை பிடித்திருந்தான். அவன் ட்ரைனிங் முடித்து அகமதாபாத்தில் போஸ்டிங் ஆகியிருந்தான்.

இரண்டு வருடத்திற்கு பின்பே அவனுக்கு தமிழ்நாட்டிற்கு மாற்றல் கிடைத்து வந்திருந்தான்.

————

“மெல்லினா நீ இன்னும் தூங்கலையா??”

“இல்லைம்மா இந்த முறை நான் எப்படியாச்சும் பாஸ் பண்ணிடணும்மா”

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்ன்னு சொல்வாங்க நீ உன்னாலாதை செய் கண்டிப்பா பலன் இருக்கும்”

“அம்மா இந்த முறையும் நான் பாசாகலைன்னா நான் திரும்பவும் வேலைக்கே போறேன்ம்மா” என்றாள் அவள் கலங்கிய விழிகளுடன்.

“என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அவளால முடியும். உன் மேல நீயும் நம்பிக்கை வை, இந்த முறை இல்லைன்னா அடுத்த முறை நீ ஜெயிக்கற வரை உன்னோட முயற்சியை கைவிடக்கூடாது” என்றார் மகேஸ்வரி உறுதியாய்.

அந்த வார்த்தைகள் அவளை தைரியம் கொள்ளச் செய்தது. புது நம்பிக்கையை கொடுத்தது எல்லாமே அவளின் பரீட்சை முடிவுகள் வரும் வரை தான். இந்த முறையும் அவளுக்கு தோல்வியே. 

தொடர்ச்சியாய் மூன்று முறை தோல்வியை தழுவியிருந்தாள். சில மதிப்பெண்கள் வித்தியாசத்திலேயே அவள் தோல்வியடைந்திருந்தாள். கண்கள் அருவியாய் பொழிய சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள். 

அவளின் தங்கையோ ஸ்கூல் பர்ஸ்ட் வந்திருந்தாள் அந்த முறை. மகேஸ்வரிக்கு பெரிய மகளை ஆறுதல்படுத்துவதா சின்ன மகளை நினைத்து மகிழ்வதா என்ற மனநிலை.

எல்லாம் ஒதுக்கி அவர் மெல்லினாவை தான் கவனித்தார். “மெல்லினா” என்று அவர் அழைக்கவும் அவர் மடியில் படுத்து ஓவென்று கதறி தீர்த்தாள் அவள். “இங்க பாரு” என்று சொல்லி அவள் முகத்தை நிமிர்த்தினார்.

“நான் அப்போ சொன்னது தான் இது உன்னோட வெற்றியோட அடுத்த படி. எடுத்ததுமே மேல இருக்க படிக்கு போய்ட முடியாது, ஒவ்வொரு படியா தான் ஏறனும். நீ ஏற வேண்டிய படி இன்னும் இருக்கு போலடா ஏறு உன்னால முடியும். அப்பாவை நினைச்சுக்கோ அவர் உனக்கு உறுதுணையா இருப்பாரு” என்று ஆறுதல் கொடுத்தார் அவர்.

மீண்டும் தேர்வெழுதினாள் அவள், இரவு பகலாய் அவள் படித்து எழுதியதிற்கு பலனாய் அவள் இந்திய அளவில் நாற்பத்தியெட்டாம் இடம் பிடித்திருந்தாள். ஆத்திரேயன் அகமதாபாத்தில் தன் பணி முடித்து தமிழ்நாடு திரும்பும் வேளை இவள் நேர்முகத்தேர்வில் நன்மதிப்பெடுத்து ஐபிஎஸ் ஆகியிருந்தாள்.

ட்ரைனிங் முடித்து கேரளாவின் கோழிக்கோட்டில் அவளுக்கு பணி நியமனம் வந்திருந்தது. அவள் ட்ரைனிங் முடித்து போஸ்டிங் வந்ததுமே முதலில் தன் சொந்த ஊரான உதகைக்கு தன் அன்னையையும் தங்கையையும் பார்க்கச் சென்றாள்.

வீட்டினருக்கு சர்ப்ரைஸ் செய்ய வென்று அவள் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருந்தாள். வாசலில் அழைப்பு மணி கேட்க மகேஸ்வரி தான் வந்து கதவை திறந்தார்.

மூத்த மகளை அங்கு கண்டதும் அளவில்லாத ஆனந்தம் அந்த தாய்க்கு. சில பல மாதங்களுக்கு பின்னே மகளை காண்கிறாரே அப்படியே கட்டிக்கொண்டார் மகளை. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது அவருக்கு.

“அம்மா உள்ளே போகலாம் வாங்க” என்று அவள் சொன்ன பின்னே தான் அவளை விடுவித்தார் அவர்.

“கிளம்பி வர்றேன்னு சொல்லவே இல்லையே தங்கம்”

“சும்மா உங்களுக்கு ஷாக் கொடுக்கலாம்ன்னு தான்மா”

“உனக்கு இங்க நெறைய அதிர்ச்சிகள் இருக்கு” என்று மெலிதாய் முணுமுணுத்துக் கொண்டார் அவர்.

“என்னம்மா அமைதியா இருக்கீங்க. ஆமா இந்த வெண்பா எங்கம்மா. அவ மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன். நான் போன் பண்ணும் போதெல்லாம் அவகிட்ட பேசவே முடியலை. என்கிட்ட பேசுறதைவிட அவளுக்கு வேற என்ன வேலை”

“அவ இங்க இருந்தா தானேம்மா பேசுவா உன்கிட்ட”

“புரியலைம்மா எனக்கு”

“ஒண்ணும்மில்லை நீ போய் குளிச்சுட்டு வா நான் உனக்கு சாப்பாடு ரெடி பண்றேன்” என்று திரும்பி நடந்தவரை அவளின் குரல் தடுத்தது.

“அம்மா நில்லுங்க என்னாச்சுன்னு சொல்லிட்டு போங்க”

“நீ…” என்று ஏதோ சொல்ல வந்தவரை அவள் இடை நிறுத்தினாள்.

“நீங்க இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா”

“வெண்பா ஓடிப்போய்ட்டா”

“ம்மா!!”

“ஆமா அவ ஒருத்தன் கூட ஓடிப்போய்ட்டா”

“என்னம்மா சொல்றீங்க ஏன் என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை”

“நீ படிக்க ஊருக்கு போயிருக்க, இதை சொன்னா நீ இங்க கிளம்பி வந்திட மாட்டியா… போனவளை நாம தடுத்து நிறுத்தவா முடியும். அதான் அவன் போயிட்டாளே அப்புறம் என்ன செய்ய”

“அம்மா அந்த பையன் நல்லவனோ கெட்டவனோ எதுவும் தெரியாதேம்மா. நம்ம வீட்டு பொண்ணும்மா அவ”

“அவ யோசிச்சாளா இதெல்லாம், நீ மட்டும் எதுக்கு அவளுக்காக யோசிக்கறே. நமக்கு மூத்தவ இருக்காளே அவளோட வாழ்க்கை என்னாகும்ன்னு ஒரு நிமிஷம் கூட அவ உனக்காக யோசிக்கலை”

“எழுதிவைச்சுட்டு ஓடிப்போய்ட்டா”

“அதுக்காக அப்படியே விட்டுட்டீங்களாம்மா”

“போய் கூப்பிட்டேன் இதெல்லாம் வேணாம்ன்னு அவளுக்கு எடுத்து சொன்னேன். அவ கேட்கலை, அவளோட வாழ்க்கையை தீர்மானிக்க அவளுக்கு உரிமை இருக்காம், சொல்றா என் முகத்துக்கு நேரே”

“என்னம்மா நீங்க அவ சின்ன பொண்ணும்மா”

“ஓட்டு போடுற வயசு வந்திடுச்சு மெல்லினா அவளுக்கு. அவளோட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கா அவளைப் போய் சின்ன பொண்ணுன்னு சொல்றே”

“இப்போ எங்கம்மா இருக்கா அவ”

“குன்னூர்ல”

“நான் போய் பார்த்திட்டு வர்றேன்”

“உனக்கு அம்மா வேணும்ன்னா நீ அங்க போகாதா”

“அம்மா  உங்களுக்கு நான் வேணும்ன்னா நீங்க அவளை சேர்த்துக்கணும்”

“முடியாது” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் அவர்.

தன் தாயை எப்படியோ சமாதானம் செய்து முழுகாமல் இருந்த தங்கைக்கு உரிய சடங்குகள் செய்து சீமந்தம் முடித்து அவள் பிரசவத்திற்காய் தாய் வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டிருந்தாள்.

மெல்லினா தங்கையை அன்னையிடம் சேர்ப்பித்தவுடன் கேரளாவிற்கு கிளம்பியிருந்தாள், கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அங்கிருந்தாள். அவளின் பணியினை பார்த்து அவள் கேட்ட மாறுதல் கிடைத்திருக்க இதோ தற்போது சென்னைக்கு வந்திருந்தாள்.

Advertisement