Advertisement

‘அவர் இருந்தா என்னை காப்பாத்துவார்ல’ என்று குருட்டு தைரியத்தை மனதில் வைத்து அவள் அங்கு செல்ல அந்தோ பரிதாபம் அவன் அங்கில்லை. இது போல திட்டமிட்டு காரியம் செய்பவர்கள் உடனிருப்பவர்களை அப்புறப்படுத்தி தான் காரியம் நிகழ்த்துவர் என்பதை அவள் யோசித்திருக்கவில்லை.

அவள் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருக்க கதவை திறந்த ராஜன் போதையுடன் கதவை திறந்தான். “சார் பைல்” என்று இவள் நீட்ட அதை வாங்காமல் “உள்ளே வா” என்று சொன்னான்.

“இருக்கட்டும் சார்” என்று நீட்டினாள்.

“உள்ள வந்து கொடுத்திட்டு போ வெளியவே நின்னு கொடுத்தா என் மரியாதை என்னாகறது” என்று அவன் கோப முகம் காட்ட வேறு வழியில்லாது உள்ளே சென்றாள்.

வாசல் கதவுக்கருகிலேயே அவள் நிற்க அவளின் எச்சரிக்கை உணர்வை கண்டுக்கொண்டிருந்த ராஜன் சட்டென்று அவள் காலை தட்டிவிட கீழே சாய முற்பட்டவளை இழுத்தவன் கதவை அடைத்துவிட்டான்.

“சார்” என்றாள் இவள்.

“என்னடி”

“கதவை எதுக்கு சாத்துனீங்க??”

“எதுக்குன்னு தெரியாத மாதிரி நடிக்காத, நீ அப்படி ஆளுன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆரம்பத்துல பிகு பண்ணுவியாமே அப்புறம் சொர்க்கத்தை காமிச்சதும் நீ அதுக்கும் மேல சொர்க்கத்தை காட்டுவியாமே” என்ற அவன் பேச்சு அவளுக்கு தீயாய் எரிந்தது.

“போடா” என்றவள் அவள் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தையை சொல்லி திட்டியவள் சட்டென்று எட்டி கதவை திறக்கப் போக ராஜன் அவள் எண்ணம் புரிந்து எட்டி அவளை பின்னிருந்து பிடிக்க அருவருத்துப் போனாள் அவள்.

அவளை முழுதாய் பின்னிருந்து அவன் அணைத்தது போலிருக்க உடலெல்லாம் தகித்தது அவளுக்கு. முயன்று அவனை தள்ளப் பார்க்க ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் இருந்தவனை நகர்த்தக் கூட முடியவில்லை அவளால். 

‘இப்போ இவனை தள்ளுறதை விட இந்த கதவை திறக்கறது தான் முக்கியம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு கதவை திறப்பத்தில் முனைந்தவள் வெற்றிக்கொள்ள இவள் இழுக்கும் முன்னே கதவு திறந்தது.

ஆத்திரேயன் தான் திறந்திருந்தான், அவனைக் கண்டதும் உயிரே வந்தது போலிருந்தது அவளுக்கு.

“நீங்க எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்தீங்க??” என்று அவளிடம் சீறினான் அவன்.

“பைல் கொடுக்கச் சொன்னாங்க” என்றாள் திக்கி.

“கிளம்புங்க முதல்ல”

“ஆத்திரேயா” என்று கத்தினார் ராஜன்.

“சார் நான் கமிஷனர்கிட்ட கம்பிளைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்” என்றான் அவன்.

“என்னடா மிரட்டுறியா??”

“ஏங்க இன்னும் இங்க என்ன பண்றீங்க போங்க முதல்ல” என்று மெல்லினாவை பார்த்து கத்தினான் அவன். இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் குரலில் விரைவாய் நகர்ந்திருந்தாள் அங்கிருந்து.

அதில் போதை முழுதும் இறங்கியிருக்க ஆத்திரத்தோடு ராஜன் இவனை முறைத்தான். “போய் நீங்க குடிக்கறதை கண்டினியூ பண்ணுங்க” என்றுவிட்டு கதவை சாற்றிக்கொண்டு சென்றுவிட்டான் அவன்.

மெல்லினா அந்நிகழ்வுக்கு பின்னர் தான் உடல்நிலை சரியில்லை என்று அவளுக்கு தெரிந்த பேமிலி டாக்டரிடம் சொல்லி சான்றிதழ் வாங்கி அவள் வேலை பார்த்த காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தாள்.

திடிரென்று வந்திறங்கிய மகளைக் கண்டதும் ஆனந்தம் வந்தது மகேஸ்வரிக்கு. “என்ன மெல்லினா திடிர்ன்னு வந்திருக்கே”

“சும்மா தான்ம்மா உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு” என்றவள் தன் அன்னையின் மடி மீது தலை வைத்துக் கொண்டாள்.

“என்னடா அம்மாவை ரொம்ப தேடுனியா??”

“ரொம்ப…” என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி விழி நீர் அவரின் புடவையை நனைக்க அவரின் கண்களும் கலங்கிப் போனது.

சிறிது நேரம் அப்படியே இருந்தனர் அம்மாவும் பெண்ணும். சில மணித்துளிகளிலேயே தன்னை சுதாரித்துக் கொண்டவள் “அம்மா நான் மெயின் எக்ஸாம் எழுதலாம்ன்னு இருக்கேன்” என்றாள் மெல்ல.

“என்னடா சொல்றே எனக்கு புரியலை”

“அப்பாவோட ஆசையை நிறைவேத்தலாம்ன்னு இருக்கேன்மா”

“அப்போ இந்த வேலை”

“இப்போதைக்கு லீவ் சொல்லியிருக்கேன். எக்ஸாம் அடுத்த மாசம் தான், நான் போன முறை இங்க வந்தப்பவே சும்மா போட்டு வைக்கலாம்ன்னு போட்டு வைச்சேன்”

எழுந்து அமர்ந்திருந்தவள் “இப்போ எழுதி முடிக்கணும்ன்னு தோணுதும்மா. ஏட்டாவே இருந்தா பெரிசா மதிப்பு இருக்காதும்மா” என்று எங்கோ வெறித்துக் கொண்டு சொல்ல மகளை ஊன்றிப் பார்த்தார் அத்தாய்.

“என்னாச்சு மெல்லினா??” என்று கேட்க நடந்ததை ஒன்றுவிடாமல் இவள் தன் தாயிடம் சொல்ல அவரின் உள்ளம் பதறியது.

“உன்னை இந்த வேலைக்கு போகச்சொல்லி நானே அனுப்பிட்டனே. வேணாம் மெல்லினா உனக்கு இந்த வேலை வேணாம்டா”

“அம்மா நீங்களா இப்படி. தைரியமா எதிர்கொள்ளுன்னு சொல்ற நீங்களா இப்படி சொல்றீங்க”

“இப்பவும் அதை நான் சொல்வேன் மெல்லினா. ஆனா எனக்கு நீயும் முக்கியம் ஒரு தாயா மகளை காக்கணும் ன்னு தான் நான் நினைக்கிறேன்”

“அப்போ நான் ஐபிஎஸ் எழுத சரின்னு சொல்லுங்க”

“மறுபடியும் அந்த வேலை உனக்கு வேணாம்”

“வேணும்மா கண்டிப்பா வேணும். எனக்கு பதவி வேணும் எந்த பதவியை வைச்சு என்னை ஓட ஓட விரட்டப் பார்த்தாங்களோ அந்த பதவியை வைச்சு அவங்களை நான் விரட்டணும். அதுக்கு எனக்கு அதிகாரம் வேணும் அவங்களை விட அதிகாரம் எனக்கு வேணும்” என்று சொன்னவளின் கண்களில் இருந்த தீவிரத்தை கண்டுக்கொண்டார் மகேஸ்வரி.

அதற்கு மேல் மகளை அவர் தடுக்கவில்லை, சரியென்றுவிட்டார். “அம்மா என்னோட சம்பளம் இல்லாம உங்களால சமாளிக்க முடியுமா”

“அப்பாவோட பென்ஷன் வருமேடா தவிர நானும் ஸ்வெட்டர் பின்னி விக்கறேன். தினப்பொழுது நல்லாவே போகுது, வீடு சொந்த வீடு தானே வாடகை செலவில்லை. உன்னோட படிப்புக்கு பேங்க்ல இருக்க பணம் போதுமா இருக்கும் நினைக்கிறேன்”

“அதெல்லாம் எடுக்க வேண்டாம்மா என் படிப்புக்கு நான் பார்த்துக்குவேன். பார்ட் டைம் ஜாப் பண்ணலாம்ன்னு இருக்கேன். ஏற்கனவே பிரண்ட்கிட்ட கேட்டுட்டேன், எனக்கு இப்போ தேவை ஒரு லேப்டாப் தான்”

“அதான் வீட்டில ஒண்ணு இருக்கே??”

“அதுல நெறைய பீச்சர்ஸ் இல்லைம்மா. அது காலேஜ் படிக்கும் போது எனக்கு கொடுத்தது. வெண்பாக்கு யூஸ் ஆகும் இருக்கட்டும். செகண்ட்ஸ்ல ஒரு லேப்டாப் மட்டும் வாங்கிட்டா போதும் நான் பார்த்துக்குவேன்”

“சரி நீ பண்ணு” என்று அவர் உறுதி கொடுக்க கடுமையாய் படித்தாள் அவள். முதல் இரண்டு முயற்சி தோல்வியை கொடுக்க சற்று துவண்டு தான் போனாள் அவள்.

இதற்கிடையில் இவளை வேலையில் வந்து சேரச்சொல்ல தன் ராஜினாமாவை அனுப்பி வைத்திருந்தாள் இவள். நேரில் ஒரு முறை வந்து செல்ல சொல்ல அங்கு சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தயாளன் மோகனின் கேசில் இருந்து வெகு சுலபமாய் வெளியே வந்திருந்தார். மோகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்டதாக அவன் வீட்டினரை சொல்ல வைத்து ஏதேதோ செய்து வெளியே வந்திருந்தார் அவர்.

இன்று

விக்ரம் மிகப்பெரிய பிசினஸ்மேன் பண்பானவனாக அடக்கமானவனாக அனைவராலும் அறியப்பட்டவன். அவன் ஆத்திரேயனின் நெருங்கிய நண்பன் என்பது பலர் அறியாத விஷயம்.

அவன் ஏதோ ஒரு விஷயமாய் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருக்க பேசி முடித்து வெளிய வரவும் ஆத்திரேயன் அவன் கண்டுக் கொண்டிருந்தான்.

“ஹேய் விக்ரம் நீ இங்க என்ன பண்ணுறே?? போலீஸ் வேலை பார்க்க வந்திட்டியா எனக்கு போட்டியா??”

“அட போடா நீ வேற ஆபீஸ்ல ஒரு சின்ன தெப்ட்டா அதுக்கு கம்பிளைன்ட் பண்ண வந்தேன்”

“பாரப்பா இதுக்கு நீ உன் சர்கிள்ல இருக்கற ஸ்டேஷன்க்கு தானே போயிருக்கணும்”

“அங்கயும் சொல்லிட்டேன் எனக்கு பெரிசா ஒருத்தர் மேல டவுட் அதான் இங்கயும் ஒரு கம்பிளைன்ட் கொடுக்கலாம்ன்னு வந்தேன்”

“பெரியாளாகிட்டன்னு சொல்லு”

“அடப்போடா நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன். பெரியாளு எல்லாம் இல்லை நீங்க தான் ஐபிஎஸ் ஆனதும் எங்களை எல்லாம் கண்டுக்கறதே இல்லை”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைடா” என்ற ஆத்திரேயன் நண்பனுடன் சகஜமாய் உரையாடிக் கொண்டிருக்க தன் கேபினில் இருந்து வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப வெளியே வந்திருந்தாள் மெல்லினா.

கீழே இறங்கி வந்து விட்டிருந்தவளுக்கு ஏதோ போன் வர பேசிக்கொண்டே மேலே பார்த்தவளின் கண்களில் விக்ரமும் ஆத்திரேயனும் பேசிக் கொண்டிருப்பது விழ அவள் கண்களில் அப்படியொரு கனல் வந்திருந்தது.

முகம் கோபத்தில் சிவந்திருக்க போனை கட் செய்துவிட்டு அவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். இருவரும் பேசிக்கொண்டே கீழே வந்தவர்கள் இவளை தாண்டிக்கொண்டு சென்றனர்.

விக்ரமின் காரின் அருகே சென்று மேலும் அரை மணி நேரமாய் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீதிருந்த பார்வையை அவள் அகற்றவேயில்லை. 

ஒரு வழியாய் விக்ரம் கிளம்பவும் ஆத்திரேயன் நடந்து வர அவனுடன் இணைந்துக் கொண்டான் நித்தேஷ் அவனுடன் படித்தவன் பேட்ச் மேட் இப்போதும் உடன் பயணிப்பவன். இவளைத் தாண்டிக் கொண்டு அவர்கள் செல்ல கைத்தட்டி அழைத்தாள் அவள்.

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ” என்று இவள் கை தட்டினாள்.

ஆத்திரேயனுக்கு கோபம் ஜிவ்வென்று ஏறியது. அதென்ன கைத்தட்டி அழைப்பது என்று. மெல்லினாவை எங்கோ பார்த்தது போல் தோன்றினாலும் மதுரையில் அவளை பார்த்தது அவன் நினைவிற்கு வரவேயில்லை.

தினமும் ஆயிரக்கணக்கானவர்களை கிரிமினல், போலீஸ் என்று பார்ப்பவனுக்கு மெல்லினா என்ற ஒருத்தியே மறந்து போயிருந்தாள். தவிர அன்று அவன் அவள் பெயரை கூட கேட்டிருக்காததால் பெரிதாய் ஞாபகமில்லை அவனுக்கு.

மெல்லினா அவனை மறந்தால் தானே நினைப்பதற்கு. அவள் வாழ்நாளின் இறுதி வரை அவனை அவள் நினைத்துக் கொண்டிருப்பாள். அவளுக்குள் அவன் அந்தளவிற்கு ஆழப் பதிந்து போயிருந்தான்.

“ஹேய் என்ன யாரை கைத்தட்டி கூப்பிடுறே”

“உங்களை தான்”

“என்ன கொழுப்பா உனக்கு?? அன்னைக்கு உன்னைப் பத்தி கமிஷனர் நல்லவிதமா சொன்னார்ன்னு தான் மூர்த்தி சார் வெளிய போனப்போ உங்களை சேர்த்துக்கிட்டேன்”

“இப்போ என்னன்னா என்கிட்டவே திமிரா நடந்துக்கறே??”

“இப்போ என்ன திமிரா நடந்துக்கிட்டேன்.  உங்க மேல நான் எவ்வளவு மரியாதை வைச்சிருக்கேன் தெரியுமா உங்களுக்கு. உங்களை இங்க வைச்சிருக்கேன்” என்று அவள் இதயப்பகுதியை சுட்டிக்காட்டினாள்.

நித்தேஷ் சுவாரசியமாய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் நடப்பதை. “அப்படிப்பட்ட நீங்க இப்படி பண்ணலாமா?? ச்சே உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை. நீங்க இப்படின்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை”

“என்ன பண்ணிட்டேன் நான் இப்போ??”

“என்ன பண்ணலை, இதெல்லாம் ஒரு பொழைப்பா உங்களுக்கு. உங்களை மனசுல நினைச்சதுக்கு நான் ரொம்ப வெட்கப்படுறேன்” என்று தன் போக்கில் அவனை திட்டத் தீர்த்தவள் ஓய்ந்து போய் “நீங்க எப்படி போனா எனக்கென்ன, யாருக்கு சப்போர்ட் பண்ணா எனக்கென்ன. என் வேலையை நான் பார்க்கறேன்”

“உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டி வந்தா தயங்காம எடுப்பேன்” என்று கத்திவிட்டு அவள் பாட்டுக்கு சென்றுவிட்டாள்.

சத்தியமாய் ஆத்திரேயனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “டேய் மச்சான் இவ என்னடா சொல்லிட்டு போறா”

“ஏன்டா உனக்கு புரியலையா??”

“ஒண்ணும் புரியலை எதுக்கு திட்டினான்னு”

“அவ திட்டினான்னு மட்டும் உனக்கு புரிஞ்சுதா வேற எதுவும் புரியலையா”

“வேறென்னடா மச்சான்”

“அவ உன்னை விரும்பறேன்னு சொன்னது உனக்கு புரியலையா”

“என்ன!!” என்று அதிர்ந்தவன் தூரத்தே மிடுக்காய் நடந்து செல்லும் அவளை கண்கொட்டாது பார்த்தான்.

Advertisement