Advertisement

3

அன்று

“என்னை வரச்சொன்னீங்களாமே சார், சொல்லுங்க என்ன விஷயம்??” என்று முறைப்போடே தயாளனின் முன் வந்து நின்றாள் மெல்லினா.

“என்னடி திமிரா??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலே.

“மரியாதையா பேசுங்க, இல்லைன்னா…”

“இல்லைன்னா என்னடி செய்வே??” என்றார் அவர் இன்னும் எகத்தாளமாய்.

“உங்ககிட்ட நான் பேசுறது வேஸ்ட்” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ஹேய் நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போறே நில்லுடி” என்றார்  அவர்.

“என்ன??” என்றாள் திரும்பி.

“யாரைக்கேட்டு என் மேலே கம்பிளைன்ட் பண்ணே??”

“கம்பிளைன்ட்டா??”

“எனக்கு தெரியும் நீ தான் கம்பிளைன்ட் கொடுத்தே??”

“சரி அதுக்கென்ன இப்போ” என்றாள் அவள் திமிராய்.

“நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சு தான் பண்றியா… உன்னை என்ன வேணா பண்ணுவேன்…”

“பண்ணிக்கோ” என்று முன்பைவிட திமிராய் தயாளனை பார்த்தாள் அவள்.

“என்னடி பயம் விட்டு போச்சா”

“நான் இதுவரைக்கும் உன்னை பார்த்து பயந்ததே இல்லை”

“ஒழுங்கா கம்பிளைன்ட் வாபஸ் வாங்கு”

“நீங்க தப்பு பண்ணீங்களா??”

“நா… நான் எந்த தப்பும் பண்ணலை”

“அப்போ நான் கொடுத்த கம்பிளைன்ட் பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க. தப்பு செய்யாதவன் எதுக்கு பயப்படணும்”

“என்ன வார்த்தை ஜாலம் என்கிட்டயேவா??”

“சார் நானெல்லாம் உங்களுக்கு சுண்டைக்காய் மாதிரி என்னைப் பார்த்து நீங்க ஏன் பயப்படுறீங்க??”

“எது உன்னை பார்த்து நான் பயப்படுறேனா?? நீயெல்லாம் எனக்கு இணையா?? எவ்வளவு பேசுற உன்னை என்ன பண்ணுறேன் பாரு” என்று மிரட்டியவர் மறுநாளில் இருந்து அவளுக்கு இரவு நேரப்பணியை கொடுத்தார்.

பெண்களுக்கு இரவு நேரப்பணி கொடுக்கக்கூடாது என்றாலும் ஆளில்லா நேரங்களில் வேறு வழியில்லாது அது போல பணிகளை செய்ய வேண்டி இருக்கும். மோகன் தான் பெரும்பாலும் இரவு நேரப்பணிகளில் இருப்பது.

புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்கள், என்ன வேலை கொடுத்தாலும் செய்பவர்கள் என்று அவர்களே சிலரை கணித்து அவர்களுக்கே இரவு நேரப்பணி பெரும்பாலும் தள்ளிவிட்டுவிடுவர்.

இதோ இப்போது மெல்லினாவை பழிவாங்க வேண்டும் என்று தயாளனும் அதே யுக்தியை செய்கிறார் இப்போது.

இரவு பணியின் போது எது நடந்தாலும் அங்கு காவலுக்கு இருப்பவரே முழு பொறுப்பாவார். அதை வைத்து அவளை படாதபாடு படுத்தியிருந்தார் தயாளன். ஒரு நாள் இரவு இவள் பொறுப்பில் காவலில் இருந்த ஒருவரை வேண்டுமென்றே தப்பிக்க வைக்க அவர் முனைய அவன் தப்பித்து செல்லும் முன் இவள் அவனை கண்டுக்கொண்டிருந்தாள்.

விலங்கை கொண்டு கம்பியோடு அவனை கட்டிப் போட்டிருந்தாள். அது முதல் அவள் அதிக கவனத்துடன் இருந்தாள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்காத குறையாய் அவள் இருந்தும் ஒரு நாள் ஸ்டேஷனில் ஓர் அசம்பாவிதம் நடந்தேவிட்டிருந்தது.

கம்பிளைன்ட் கொடுக்க பெரியவர் ஒருவர் ஸ்டேஷனுக்கு வந்திருக்க இவள் காலையில் வருமாறு அவரிடம் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் மயக்கம் வருகிறது என்று சொல்லி மயங்கி விழுந்தவர் அந்த இடத்திலேயே உயிரை விட்டிருந்தார்.

பதறிப் போனது அவளுக்கு, தயாளனுக்கு முதலில் அவள் அழைக்க வேண்டுமென்றே இவள் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. அடுத்து அவள் ரைட்டருக்கு அழைக்க அவர் உடனே அழைப்பை ஏற்று அங்கு வந்திருந்தார்.

மறுநாள் பெரிய விசாரணையே நடந்தது அங்கு. நல்ல வேளையாக யாரும் அவளை எதுவும் சொல்லியிருக்கவில்லை. தயாளனுக்கு தான் திட்டு விழுந்தது மேலதிகாரியிடம் இருந்து.

பெண் காவலரை இரவுப்பணியில் அமர்த்தியது தவறு என்று அவருக்கு மெமோவும் கொடுக்கப்பட்டது. என்ன தான் அவசரத்தேவை என்றாலும் இத்தனை நாட்கள் அதை செய்திருக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தனர். தயாளனுக்கு அவள் மீது வன்மம் கூடிக் கொண்டே சென்றது.

அந்த நேரத்தில் தான் அங்கு வந்திருந்தான் ஆத்திரேயன். கோவையில் இருந்து ஒரு கேஸ் விஷயமாய் அவனை அங்கு அனுப்பி வைத்திருந்தனர். அவன் அங்கிருந்து சில ஆவணங்களை வாங்கிக்கொண்டு செல்வதற்காய் தன் மேலதிகாரியுடன் வந்திருந்தான்.

தயாளனுக்கு மெமோ கொடுத்தும் அவன் அடங்கவேயில்லை. அவனுக்கு உதவி செய்யவும் சில மேலதிகாரிகள் இருப்பதால் அவன் காரியத்தை சாதித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு மாதம் எப்படியோ கழிந்தது. மோகன் தற்கொலை பற்றிய அவன் மீதான விசாரணை அடுத்த மாதம் வர இருந்தது. அதற்கு முன்பு அந்த கேசை வாபஸ் செய்ய வைக்க அத்தனை தொல்லைகள் கொடுத்தான் அவன்.

“மெல்லினா”

“சொல்லுங்க சார்”

“நாளையில இருந்து உனக்கு நைட் டியூட்டி”

“சார் எனக்கு நைட் டியூட்டி போடக்கூடாதுன்னு…” என்று அவள் இழுத்தாள்.

“அவங்க ஆயிரம் சொல்வாங்க வேலையை யார் பார்க்கறது. எத்தனை நாளைக்கு சிவாவுக்கு டியூட்டி போடுறது”

“அப்போ பிரான்சிஸ்க்கு போடுங்க சார்”

“அதை நீ சொல்லக்கூடாது எனக்கு தெரியும் யாருக்கு என்ன வேலை கொடுக்கணும்ன்னு நீ எனக்கு சொல்லத் தேவையில்லை. எல்லாம் அந்த பாழாப் போன மோகனால வந்தது”

“ஒழுங்கா நைட் டியூட்டி பார்த்திட்டு இருந்தவனுக்கு என்ன கேடுகாலமோ செத்து தொலைச்சுட்டான். இப்போ என் உயிரை வாங்குறான்” என்று அவர் பாட்டுக்கு பேச “எத்தனை நாளைக்கு??”

“நாலு மாசத்துக்கு”

“சார்”

“எத்தனை நாளைக்குன்னு எல்லாம் சொல்ல முடியாது. செய்ய சொன்னா செய், நானே திரும்ப சொல்லுவேன் இப்போ போ”

இரவு நேரப்பணி முடிந்து காலை அவள் செல்ல வேண்டிய நேரம் கடந்தும் ஒருவரும் வந்து சார்ஜ் எடுத்துக்கொள்ள வரவில்லை. இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தது கண்களை எரியச் செய்தது.

அப்போது தான் ஆத்திரேயன் வந்தான். இவள் அங்கிருந்த மேஜையில் சற்று தலை கவிழ்ந்து படுத்திருந்தாள் அசதியில். “ஸ்டேஷன்ல யாருமில்லையா” என்ற குரல் எரிச்சல் மூட்ட “ஏன் என்னைப் பார்த்தா ஆளா தெரியலையா” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவள் இவனைக்கண்டு ஆச்சரியத்தில் விழிவிரித்து நின்றாள்.

‘என்ன இந்த பொண்ணு இப்படி பார்க்குது??’ என்று தான் பார்த்தான் ஆத்திரேயன்.

“மேடம்” என்று அவன் கையசைத்துக் கேட்க சட்டென்று சுதாரித்துக் கொண்டவள் “சொல்லுங்க சார்” என்றாள்.

“தயாளன் சார் இல்லையா??”

“இனிமே தான் வருவார்”

“பிரான்சிஸ் எப்போ வருவார்??”

“அவரும் இனி தான் வருவார்”

“நேரமாச்சு ஏன் யாரும் இன்னும் காணோம்?? நீங்க மட்டும் என்ன பண்றீங்க??”

“நான் நைட் டியூட்டி பார்க்க வந்தேன் சார். அவங்க இனிமே தான் வருவாங்க”

“என்ன நீங்க நைட் பார்த்தீங்களா எதுக்கு?? அதெல்லாம் நீங்க பார்க்க வேண்டியது இல்லையே”

“அப்போ நீ வேணா பாரேன்” என்ற குரலில் இருவரும் திரும்ப அங்கு தயாளன் நின்றிருந்தார்.

இவன் அவரைப் பார்த்ததும் சல்யூட் வைக்க பதிலுக்கு தலையசைக்க கூட இல்லை அவர். “என்ன நீ பார்க்கறியா??”

“சார்…”

“யார் நீ??”

“கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்கேன் சார். அந்த ஜான்சன் கேஸ் விஷயமா உங்ககிட்ட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு போகணும். தவிர அவனைப்பத்தி விசாரிக்கவும் வந்திருக்கோம்”

“வந்திருக்கோம்ன்னா”

“ராஜன் சாரும் வந்திருக்கார். சார் கோவிலுக்கு போயிட்டு இங்க நேரா வர்றேன்னு சொன்னாரு”

“கான்ஸ்டபிளா நீ உனக்கு என்னமோ பெரிய உயரதிகாரி கணக்கா இவகிட்ட விசாரணையை போட்டுட்டு இருக்க. பெரிய இதுன்னு நினைப்பா உனக்கு. என் ஸ்டேஷன்ல என்ன நடக்குதுன்னு நீ கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவர் சொல்ல இவன் எதுவும் பேசவில்லை.

சரியாய் அந்நேரம் ராஜன் உள்ளே நுழைந்தார். அவன் மீண்டும் அவருக்கு ஒரு சல்யூட் வைக்க இவளும் வைத்தாள்.

ராஜனின் பார்வை தற்செயலாய் அல்லாது முழுக்கவே மெல்லினாவின் மீதே இருக்க அதை ஒரு சிரிப்புடன் உள்வாங்கிக் கொண்டிருந்தார் தயாளன். மனதிற்குள் அவருக்கு திட்டங்கள் ஓட ஆத்திரேயன் ராஜனின் பார்வை கண்டுக்கொண்டு மெல்லினாவை நோக்கி கண்களால் கிளம்புமாறு சைகை செய்தான்.

அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாய் தயாளனிடம் திரும்பியவள் “சார் என் டியூட்டி முடிஞ்சது நான் கிளம்பறேன்” என்று நகர்ந்தாள்.

“கொஞ்சம் நில்லு நான் இன்னும் உன்னை கிளம்பவே சொல்லலையே??”

“இருக்கலாம் சார் ஆனா என் டியூட்டி முடிஞ்சது. எல்லாமே டேபிள்ள வைச்சிருக்கேன் போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு வெளியேறிவிட அவமானத்தில் அவரின் முகம் கன்றியது.

“என்ன தயாளன் உங்களுக்கு கீழே வேலைப் பார்க்கற ஆளு கூட உங்களை மதிக்கறதில்லை போல” என்று கிண்டலாய் கேட்டார் ராஜன்.

“அவளை ஒரு வழி பண்ணுறேன்” என்ற மனதிற்குள் குமுறிய தயாளன் “அப்புறம் ராஜன் சொல்லு உனக்கு என்ன செய்யணும்” என்று அவருடன் சகஜ உரையாடலுக்கு சென்றுவிட்டார்.

ராஜன் கிளம்பும் முன் தன் மனதில் இருப்பதை தயாளனிடத்தில் சொல்லிவிட்டே சென்றிருந்தார். தயாளனும் ராஜனும் முன்பே நன்கறிந்தவர்கள் போலும். தயாளனுக்கு மெல்லினாவை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியே உண்டாகி இருந்தது.

ராஜன் விஷயத்தில் அவளை மாட்டிவிட எண்ணினார். அன்று இரவு வேலைக்கு வந்தவளை ராஜனிடத்தில் டாகுமென்ட்ஸ் கொடுத்து வருமாறு ஹோட்டல் அறைக்கு அவர் தனியே அனுப்பினார்.

“சார் நான் எதுக்கு போகணும்??”

“இன்னைக்கு உனக்கு நைட் டியூட்டி கிடையாது. நாளையில இருந்து காலையில வேலைக்கு வந்திடு, இப்போ இதை மட்டும் கொடுத்திட்டு நீ வீட்டுக்கு போகலாம்” என்றிருந்தார் அவர்.

காலையிலேயே ராஜனின் பார்வையை உணர்ந்திருந்தவளுக்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது. அவனுடன் வந்திருந்த ஆத்திரேயன் காலையில் இவளுக்கு கொடுத்த எச்சரிக்கை ஞாபகம் வந்தது.

Advertisement