Advertisement

மகேஸ்வரியின் கிடுக்குபிடிக்கு பதில் சொல்லாது மெல்லினா நின்றிருக்கஅம்மாக்காக சரின்னு சொல்ல மாட்டியாம்மாஎன்றார் அவர்.

அம்மா உங்களுக்காக தான் சரின்னு சொல்லணும் அதைப்பத்தி தான்ம்மா யோசிக்கறேன்என்றாள் மகள்.

கல்யாணத்தைப் பத்தி பேசினா சரின்னு சொல்ல வேண்டியது தானே. ஒரு வேளை உனக்கு யாரையும் பிடிச்சிருக்கா… சொல்லும்மா போய் பேசுவோம்என்றவரை பார்த்து முகம் மலர்ந்தது அவருக்கு.

இதை ஏன்மா வெண்பாக்கு செய்யலை

நான் செய்ய மாட்டேன்னு யார் சொன்னா?? அவ என்கிட்ட சொல்லவே இல்லை, தவிர அவளுக்கு அது கல்யாணம் பண்ணுற வயசா சொல்லு… எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும். பருவத்தே பயிர் செய்ன்னு சும்மாவா சொன்னாங்க

அவளோட அவசரம் எனக்கு பிடிக்கலை. அதனால தான் என்னால அவளை இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியலை. நீ என்ன சொல்றே??” என்று அவர் பிடித்த பிடியிலேயே நின்றார்.

சரிம்மாஎன்று மகள் சொன்ன ஒற்றை வார்த்தையில் மறுநாளே மாப்பிள்ளை வீட்டினரை வரவைத்திருந்தார் அவர்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அரைமணி நேரத்தில வந்திடுவாங்கலாம் மெல்லினா நீ சீக்கிரம் வீட்டுக்கு வாடாஎன்று மகேஸ்வரி அழைத்த போது உள்ளே எதுவோ அடைப்பது போன்ற உணர்வு.

அவர் அவ்வளவு தூரம் அழைத்தும் கடைசி நேரத்தில் ஏதோ வேலை இருப்பதாக சொல்லி அவள் வீட்டிற்கு செல்வதை தவிர்த்திருந்தாள்.

ஆத்திரேயன் மீண்டும் இடையிட்டான்.நீ அவங்களை வர வேண்டாம்ன்னே சொல்லியிருக்கலாம்ல

சொல்லியிருக்கலாம் தான்… அம்மாக்காக மட்டும் சரின்னு சொல்லலை, எனக்காகவும் தான். எந்தவொரு நிச்சயமுமில்லாத ஒரு நிலையில நான் என்ன முடிவெடுக்கன்னு எனக்கு தெரியணும்ல. தவிர உங்க மேல இருந்தது வெறும் ஈர்ப்பில்லைன்னு நான் உணர்ந்ததும் அந்த நிமிஷம் தான். யார் முன்னாடியும் போய் நிக்க எனக்கு விருப்பமில்லை

அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. அப்புறம் கேரளாவுக்கு போயிட்டேன், அதுக்கு பிறகு அம்மா என் கல்யாண பேச்சை வெறும் வார்த்தையோடவே நிறுத்திக்கிட்டாங்க. அடுத்த கட்டத்துக்கு போகவே இல்லை, எப்போ கல்யாணம் பண்ணிக்கறேன்னு கேட்பாங்க. வெயிட் பண்ணுங்கம்மான்னு சொல்வேன் அதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டாங்க

அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு?? இந்த வெண்பா தான் அவங்களுக்கு கம்ப்யூட்டர் கத்துக் கொடுத்திருக்கா, நான் லூசு மாதிரி கிரியேட் பண்ணி வைச்ச போல்டர் எல்லாம் ஓபன் பண்ணி பார்த்திருக்காங்க

நீ எதுக்கு இப்போ லூசுன்னு சொன்னே

பின்னே அந்த வயசுல நான் பண்ணது எல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தானே

சென்னைக்கு வந்தப்பிறகு நடந்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே. எந்தவொரு சந்தர்ப்பத்துலயும் நானா என் மனசுல உள்ளதை உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன்

உன் மனசுக்குள்ளவே வைச்சுட்டா சம்மந்தப்பட்டவங்களுக்கு எப்படி தெரியுமாம்

என்னன்னு சொல்வேன் இப்படி ஒரு படம் பார்த்தேன் அது மாதிரி நடக்குதான்னு பார்த்து நானே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா. எனக்கே நான் செஞ்சது இப்போ நினைச்சா சில்லியா தான் தெரியுது

உங்களை விரும்பினதை சில்லின்னு சொல்ல வரலை. ஆனா அப்போ நான் செஞ்சதெல்லாம் சிறுப்பிள்ளைத்தனம் தானே

இங்க பாரு லவ் எல்லாம் காரண காரியம் பார்த்து தான் வரும்ன்னு யார் சொன்னாங்க உனக்கு. எப்போ எந்த நிமிஷம் எந்த நொடியில வரும்ன்னு அதை யாராலுமே கணிக்க முடியாது

சின்ன விஷயத்துலயும் அது நடக்கலாம், பெரிய விஷயத்துலயும் அது நடக்கலாம். உன்னோட காதலை நீயே குறைவா ஏன் எடைப்போட்டுக்கறே

நான் அதை குறைவா நினைக்கலைங்க. ஆனா என் காதலை சொல்லி உங்ககிட்ட எதையும் கேட்க எனக்கு பிரியமில்லை. ஆனா எங்கயோ ஒரு நம்பிக்கை எனக்கிருந்துச்சு

எனக்கு விருப்பமில்லாதது எதுவும் நடக்காதுன்னு. எதையும் உங்ககிட்ட வெளிப்படுத்தக்கூடாதுன்னு நினைச்சுட்டு கடைசில நானே உங்ககிட்ட உளறிட்டேன். விக்ரம் கூட நீங்க பேசினது பார்த்து எனக்கு அப்படியொரு கோபம், எந்த உரிமையில உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன் என்னை நானே திட்டிக்கிட்டேன்

வீட்டுக்கு போன பிறகு யோசிச்சு பார்த்தப்போ மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட தானே உரிமையோட பேச முடியும்ன்னு தோணுச்சு. நீங்க அன்னைக்கு அப்படி நடக்கவும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்

உங்களை தப்பாவும் நினைக்க முடியலை, ஆனா நீங்க செஞ்சதை ஏத்துக்கவும் முடியலை. இனிமே இந்த ஊர்லவே இருக்கக்கூடாதுன்னு நினைச்சப்போ தான் அம்மா போன் பண்ணாங்க மாப்பிள்ளை பார்த்திருக்கேன்னு

எப்பவும் வேணாம்ன்னு சொன்ன நான் அப்போ சரின்னு சொன்னேன். அப்படி சொல்லிட்டோமேன்னு மனசுல எந்தவொரு குற்றவுணர்ச்சியும் வரலை. அது ஏன்னு அங்க வந்திருந்தவங்களை பார்த்ததுமே எனக்கு புரிஞ்சு போச்சு

நீங்க தப்பானவர் இல்லைன்னு மனசுக்குள்ள அப்படியொரு சந்தோசம். அதை சொல்ல வார்த்தையே இல்லை, அப்புறம் நடந்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே

ஆனாலும் நீ ரொம்ப அழுத்தம் தான்டி, எவ்வளவு விஷயம் நடந்திருக்கு அப்படியே அமுக்குணி மாதிரி இருந்திருக்கே. எனக்கா உன் மேல லவ் வரலைன்னா அப்படியே என்னை விட்டிருப்பியா நீ

தெரியலை

இதென்ன பதில்

நிஜமாவே எனக்கு தெரியலை. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதை முடிவெடுக்குற உரிமை உங்களுக்கிருக்கு, இடையில அதை நான் தடுக்குற மாதிரி ஆகாதா

நீ சொல்லாம எனக்கு அது தெரியாம போறது தான் சரியா?? என்கிட்ட நீ சொல்லி அதை நான் மறுத்திருந்தா வேற, அப்படியொண்ணு நடக்கவே நீ சந்தர்ப்பம் கொடுக்கலையே

நான் சொல்லி நீங்க மறுத்திருந்தா அப்படி ஒண்ணை என்னால நினைச்சுக்கூட பார்க்கக் முடியலை. படிச்சிருக்கலாம், தெளிவா யோசிக்கறவளா இருக்கலாம், ஆனா உணர்வுப்பூர்வமா யோசிக்கும் போது நானும் ஒரு மனுஷி தானே

எல்லாவித உணர்வுக்கும் நானும் ஆட்பட்டவள் தானே. என்னால அது முடியும்ன்னு தோணலை. நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது எனக்கு புரியுது. நான் சொல்லியிருக்கலாம்ன்னு இப்போ எனக்கு தோணுது. நான் பண்ணது தப்பாங்க?? உங்க அளவுக்கு எனக்கு காதலிக்க தெரியலை

காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கவும் எனக்கு தெரியலை. மனசுக்கு பிடிச்சவங்களை சந்தோசப்படுத்த எதையும் செய்யலாம்ன்னு எனக்கு தெரியலைஎன்று சொல்லும் போது அவள் குரல் உடைந்து விழியில் கண்ணீர் அருவியானது.

பேபி என்ன இது?? அன்புல சின்னது பெரிசுன்னு எதுவுமில்லை. நானாச்சும் உன்னை விரும்பினதுமே கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சேன், எனக்கு காத்திருக்கவெல்லாம் பொறுமையே இல்லை

ஆனா நீ அப்படியில்லை பேபி. எனக்காகவே காத்திட்டு இருந்திருக்கே, அது கூட தெரியாம நான் இருந்திருக்கேன்னு தான் எனக்கு கொஞ்சம் பீலிங் ஆகிடுச்சு. மத்தப்படி நீ என்கிட்ட சொல்லாது என்னை வேற எந்தவிதத்துலயும் பாதிக்கலை

நான் கொஞ்சம் ஒரு மாதிரி தான். தானா வலிய வந்து பேசினா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடுவேன். காலேஜ்ல என் பக்கத்துல பொண்ணுங்களே ரொம்ப வர மாட்டாங்க

பிரண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க சுடு தண்ணியை ஊத்தின மாதிரி ஏன்டா மூஞ்சியை வைச்சுக்கறேன்னு சொல்வாங்க. ஏனோ எனக்கு அப்போ லவ் பண்ணுறவங்களையும் லவ்ன்னு சொல்லி ஊர் சுத்துறவங்களையும் பார்த்தாலே கோபம் வரும்

பாரேன் அப்படி சுத்திட்டு இருந்தவனை உன் பின்னாடி சுத்த வைச்சுட்டே பேபி நீஎன்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

பேபி நீ எனக்கு இன்னும் அதை சொல்லவே இல்லைஎன்றான் காதோரம்.

அதா…

ஹ்ம்ம்

எது??”

தெரிஞ்ச மாதிரி அதான்னு கேட்டே?? போடிஎன்று சலித்தாலும் அவன் அணைப்பை இறுக்கியிருந்தான் இன்னும்.

மெல்ல அவனிடத்தில் இருந்து பிரிந்தவள் அவன் விழிகளை நேருக்கு நேராய் நோக்கிஐ லவ் யூஎன்று சொல்ல அதை அவன் உணர்வதற்கு முன்பே அவனை மற்றொரு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் அவன் மனைவி.

அவளை அணைத்திருந்தவனின் இதழை அணைத்திருந்தாள் அவள்.

——————

எல்லாம் எடுத்து வைச்சிட்டியாம்மா??”

எடுத்து வைச்சிட்டேன் அத்தை. நீங்க கிளம்பியாச்சா??”

ஹ்ம்ம் புறப்படலாம்வாசவி மீண்டுமொருமுறை எடுத்து வைத்திருந்த பொருட்களை கண்களால் சரி பார்த்தவர் வீட்டை பூட்டினார்.

ஆனாலும் உங்க மருமகளுக்கு இவ்வளவு திமிர் ஆகாது. மாமியார் தானே கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனா தான் என்னவாம். ஏதோ சொல்லிட்டனாம் இந்த பக்கமே வர மாட்டேங்கறா

நான் பார்த்துக்க மாட்டேனா அவளை. அவளைத்தேடி நாம தான் போக வேண்டி இருக்குஎன்று மருமகள் மீதிருந்த ஆதங்கத்தை வார்த்தையில் கொட்டிக் கொண்டிருந்தார் வாசவி. 

மெல்லினா உண்டானதில் இருந்தே பார்கவியை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார் வாசவி. ஒரு நாள் அதை நேரிலேயே கண்டுவிட்ட ஆதவன் அன்னையை ஒரு வழி செய்துவிட்டான். அன்றிலிருந்து அவர் அவளை எதுவும் சொல்வதில்லை.

அவர்கள் இருவரும் அதற்காக சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். அதற்கான பலனுக்காய் அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். 

மெல்லினாவிற்கு வளைக்காப்பு ஏற்பாடாகியிருந்தது. ஆத்திரேயனுக்கு வளைக்காப்பு தங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் மெல்லினாவின் மனம் அறிந்தவனாய் மண்டபம் எடுத்திருந்தான் விழாவிற்காய். 

தன் மகவை தாங்கிக் கொண்டு அன்னநடை நடந்து வந்து மேடையில் அமர்ந்த மனைவியை கண்டு சந்தோசமாக இருந்தாலும் அவன் முகத்தில் துளியும் சிரிப்பில்லை. 

முகம் மலர்ந்து சிரித்தவனின் அகம் மலரவில்லை.எதுக்கு மூஞ்சியை உங்கம்மா மாதிரி வைச்சுட்டு இருக்கீங்க??”

எங்கம்மாவை எதுக்கு பேபி இழுக்கறே?? அவங்க என்ன பண்ணாங்களாம்??”

அவங்களுக்கு நான் அந்த வீட்டுக்கு வரலைன்னு கோபம் என்கிட்ட மூஞ்சி கொடுத்தே பேசலை

நீயாச்சு உன் மாமியாராச்சு அந்த பஞ்சாயத்துக்கு எல்லாம் என்னைக் கூப்பிடாதே??”

சரி கூப்பிடலை நீங்க ஏன் இப்படி இருக்கீங்க??”

ஏன்பா எங்களை எல்லாம் எதுக்கு கூப்பிட்டீங்க வளையல் போடத்தானே. புருஷனும் பொண்டாட்டியுமே பேசிட்டு இருந்தா நாங்க என்ன பண்ண??” என்று குசும்பு பெண்மணி ஒருவர் கேட்க ஆத்திரேயன் அவள் புறம் திரும்பாது வந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

மெல்லினாவின் தந்தை முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். மகேஸ்வரியிடம் கேட்டு தான் மகளுக்கு செய்ய வேண்டியதை நிறைவாகவே செய்து முடித்திருந்தார் அத்தந்தை.

நிறைமதியை போல அமர்ந்திருந்தவளை கண்டு அவர் மனம் நிறைந்திருந்தது. உடன் தன் மனைவி வாசுகியையும் நினைத்துக் கொண்டது மனது. அவள் இருந்திருந்தால் மகளை கண்டு பூரித்துப் போயிருப்பாள் என்று அவரால் நினையாமல் இருக்க முடியவில்லை. 

விழியோரம் லேசாய் ஈரம் கசிந்தது. பிறர் அறியாமல் அவர் துடைத்துக் கொண்டாளும் மேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் அது தப்பாது விழுந்திருந்தது. தந்தை எதை நினைத்து கலங்கியிருப்பார் எண்ணியவளின் விழிகளும் நீரினால் நிரம்பத்தான் செய்தது.

Advertisement