Advertisement

27

என்ன யோசனை??” என்றவாறே ஆத்திரேயன் தன் மனைவியின் அருகில் அமர்ந்தான்.

யோசனைன்னு இல்லை கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு…

அதுக்கென்ன அவசியம் இப்போ??”

அப்பா வந்து உடனே கிளம்பிட்டாங்களே??”

அது மட்டும் தானா??”

அதைப்பத்தி பேசி இனி என்னாகப் போகுது. வந்தாங்க பார்த்தாங்க கிளம்பிட்டாங்கஎன்றவளை கூர்ந்து நோக்கினான்.

சரி அதைப்பத்தி பேசலை போதுமா??”

நான் ரொம்ப லக்கி தெரியுமா??” என்றவள் அவன் தோளில் நன்றாய் சாய்ந்துக் கொண்டு.

ஆஹான்

உண்மை தான்என்றவளின் விழிகளின் ஓரத்தில் நீர் துளிர்க்க ஒற்றை விரலால் அதை சுண்டிவிட்டான்.

இது நாம சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்

தெரியும் ஆனா நீங்க என்னை அழுக வைக்கறீங்களே. உங்களுக்கு நான் என்ன செய்யப் போறேன்

இனிமே நீ செய்ய என்ன இருக்கு, நீயே எனக்கு கிடைச்ச பொக்கிஷம் தான். இதுல போனஸா நம்ம குழந்தையும் வரப் போறாங்க இதுக்கு மேலே எனக்கு என்ன வேணும் சொல்லு. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்

இருந்தாலும்…

போதும் போதும் என்னைப்பத்தி ஓவரா பில்டப் பண்ணாதே. நான் செஞ்சதெல்லாம் ஒண்ணுமேயில்லை

அதே தான் நானும் சொல்றேன். உங்க மேல வைச்ச அன்புக்காக நான் ஒரு சிறு முயற்சி கூட எடுத்ததில்லை. ஆனா நீங்க என்னை மாதிரி இல்லை

அடியேய் போதும்டி இதே பேசி இன்னைக்கு நாளை ஓட்டிறலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?? ஒரு முடிவு தெரியாம இன்னைக்கு விடுறதாயில்லை, நான் மட்டுமில்லை ஒருத்தரும் உன்னை விட மாட்டாங்க

என்ன முடிவுங்க??” என்று தெரியாதது போல கேட்டவளின் இதழ்கடையில் ஒரு குறுநகை ஓடியது.

கள்ளி எல்லாம் தெரிஞ்சுட்டே கேட்பியே??”

உங்ககிட்ட அதை சொல்லணும்ன்னு தான் நான் ரொம்ப ஆவலா இருந்தேன். நீங்க எனக்கு பண்ண சர்பிரைஸ்ல வேற எதுவும் மைன்ட்ல ஓடலைங்க

நான் உங்களை விரும்பி… இல்லை எனக்கு உங்களை பிடிக்கும்ன்னு…என்று எப்படி தொடங்க வேண்டும் என்று தெரியாமல் விட்டுவிட்டு பேசியவளின் முன்னே கரம் நீட்டி தடுத்தான் அவள் கணவன்.

நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்??”

எப்படி??”

எங்க வீட்டுக்கு போனீங்களா??”

அவன் தலை தன்னைப் போல் ஆடியது.உனக்கு நாளைக்கு இன்னொரு சர்பிரைஸ் இருக்கு தெரியுமா??”

மறுபடியுமா அப்பாவை கூட்டிட்டு வந்த மாதிரி அம்மாவையும்… அதெப்படி நடக்கும் அவங்க தான் இல்லையே இப்போ…என்று முகம் வாடியவளின் தாடை தொட்டு நிமிர்த்தினான்.

நீ சொன்ன மாதிரி நீ நிஜமாவே ரொம்ப லக்கி தான்என்றவனை இப்போது கூர்ந்து நோக்குவது அவளின் முறையானது.

உனக்கு கடவுள் நிறைய கருணை செஞ்சிருக்கார் தெரியுமா அதை என்னைக்காச்சும் நீ உணர்ந்திருக்கியா… உனக்கு என்ன இல்லையோ எதை நீ இழந்து தவிச்சியோ உனக்கு அதை ஒண்ணுக்கு ரெண்டா கொடுத்திருக்கான் தெரியுமா.அம்மா அப்பான்னு நான்கு பேர் உனக்குஎன்று ஆத்திரேயன் சொல்லவும் அவளின் முகம் மலர்ந்தது.

அப்போ நாளைக்கு அம்மா தான் வரப்போறாங்களா??” என்றவளின் அகம் பொலிவாகியது.

அம்மான்னா எல்லா பொண்ணுங்களுக்கும் சிரிப்பு வருமே

எல்லாருக்கும் வர்றதுக்கும் எனக்கு வர்றதுக்கும் வித்தியாசம் இருக்குங்க. நீங்க சொன்ன மாதிரி அந்த கடவுள் எனக்கு கருணை செஞ்சு தான் இருக்கார். அவங்க மட்டும் இல்லைன்னா நான் என்னாகியிருப்பேன்

அதை நினைச்சுக்கூட பார்க்க முடியலைங்க. அம்மாகிட்டயும் அப்பாக்கிட்டயும் என்னைக்கும் வேறுபாடு இருந்ததில்லைங்க. அவங்க என்கிட்டயும் வெண்பாகிட்டயும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க

அன்புலயும் சரி கண்டிப்புலயும் சரி ஒரு சின்ன தப்பைக் கூட கண்டுப்பிடிக்க முடியாது அவங்கிட்ட, கடவுள் எனக்கு நல்லதை தான் செஞ்சிருக்கார் இப்போ வரைக்கும். ஆமா உங்களுக்கு தான் பழைய கதை எல்லாமே தெரிஞ்சிருக்கே அப்புறம் எதுக்கு முடிவு சொல்லுன்னு சொன்னீங்க??”

நானா தெரிஞ்சுக்கிட்டது நீ சொல்றதுக்கு முன்னாடி அதைப்பத்தி தெரிஞ்சுக்கணுங்கற ஆவல்ல தான். விடுகதையோட பதிலை கண்டுப்பிடிக்கிற ஆர்வம்ன்னு கூட சொல்லலாம்

அதான் தெரிஞ்சுட்டீங்களே

உன் வாயால அதை தெரிஞ்சுக்கணும். ஹவ் அம் லக்கின்னு நீ சொல்றதை கேட்கும்போது நான் உணர்வேன்ல அதுக்காக தான்என்று ஆர்வம் பொங்க கேட்டவனின் தலையை மெல்ல கோதியவள் சொல்லவாரம்பித்தாள்.

டீன் ஏஜ் என்ற சொல்லப்படும் பருவ வயதில் இருந்தாள் மெல்லினா. முகத்தில் ஒரு பரு கூட இல்லாத மாசுமருவற்ற பளிங்கு முகம் அவளுக்கு. அன்று பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பிற்கு தேர்வு நடப்பதால் அவளுக்கு மதியத்திற்கு மேல் தான் பள்ளியே என்பதால் வீட்டிலிருந்தாள்.

ஆனந்தன் ஸ்டேஷனுக்கு சென்றிருந்தார். மகேஸ்வரி காய்கறிகளை அறிந்துக் கொண்டிருந்தவர் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். போரடித்ததால் மெல்லினாவும் அவருடன் சென்று படம் பார்க்க ஆரம்பித்தாள்.

என்ன படம்மா இது அழுவையா இருக்கு??”

பேசாம பாருடிஎன்றவரின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.

எப்படித்தான் இதெல்லாம் பார்க்கறீங்களோ??” என்று சலிப்போடு எழுந்து சென்றிருந்தாள். ஏனோ அன்று இரவு உறக்கத்தில் அந்த படத்தில் வந்தது போல அவளும் ஒருவனை நேரில் பார்க்காமலே காதல் கொள்வது போன்ற கனவு ஒன்றை கண்டாள்.

பாதியில் இரவில் கனவு கலைந்து விழித்து எழுந்து அமர்ந்தவளுக்குச்சே இதென்ன இப்படி கனவு, படத்துல நடந்ததே நம்ப முடியாததா இருக்கு. இதுல இப்படியொரு கனவா எனக்குஎன்று நினைத்தவள் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

மேலும் ஒரு மாதம் சென்றிருக்கும் தொலைக்காட்சியில் ஓடிய படத்தின் பாடலில் உள்ளறையில் இருந்து எழுந்து வந்திருந்தாள் அவள்.

காதல் வைபோகமே 

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்தப் பண் பாடுமே!!

ஒரு பேப்பர்ல அவ ஹீரோவோட போட்டோவை பார்ப்பாளாம் அதை பார்த்ததும் பிடிச்சு போய் தன்னோட நோட்டுல ஒட்டி வைச்சுக்குவாளாம், அவரையே உயிரை விரும்புவாளாம் இதெல்லாம் நடக்குமா என்னஎன்ற கேள்வி மீண்டும் அவளுக்கு எழுந்தது.

படிக்கும் வயதில் இது போன்ற எண்ணம் அவளுக்கு எழுந்ததிற்கு காரணம் தொலைக்காட்சி மட்டுமல்ல உடன் படிக்கும் தோழமைகளும் தான். காதல் என்றால் என்னவென்று முழு அர்த்தம் கூட தெரியாத அந்த வயதில் பருவ வயதின் ஈர்ப்பில் தங்கள் பின்னே சுற்றும் எதிர்பாலினத்தவரின் மீது அவர்களும் பார்வையை திருப்பத்தானே செய்திருந்தனர்.

அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போதும் எப்போதும் உடன் வரும் அவளின் தோழி அவளுடன் வரவில்லை.மது கிளம்பலாமாஎன்று அவள் கேட்டதிற்குஇன்னைக்கு ஷ்ரவன் வர்றேன்னு சொல்லியிருக்கான் மெல்லினா. நீ கிளம்பு

அவன் வந்தா என்னடி??”

அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது மெல்லினா நீ போஎன்று சொன்னவளின் முகத்தில் இருந்த உணர்வை படிக்க முடியவில்லை அவளுக்கு.

ஏன் புரியாது??” என்றாள் தனக்கும் எல்லாம் புரியும் தெரியும் என்ற தொனியோடு.

அதெல்லாம் லவ்ப்பா உனக்கு பிடிக்காது, சொன்னாலும் புரியாது. நான் போயிட்டு வர்றேன், எங்கம்மா கேட்டா நான் சாந்தி வீட்டுக்கு நோட்ஸ் வாங்க போயிருக்கேன்னு சொல்லிடுஎன்றுவிட்டு நகர்ந்தவளை முடிந்த மட்டும் முறைத்தாள் அவள்.

வீட்டிற்கு வந்த பிறகு அவளை பாதித்த அந்த திரைப்படத்தின் பாடல் வேறு ஒலிக்கவும் ஆர்வமாக அதை பார்த்திருந்தாள். மீண்டும் அதே கேள்வியே எழுந்தது அவளுக்கு, எனக்கு லவ்ன்னா புரியாதா ஏன்?? என்று அவள் மனம் அவள் எண்ணத்தை வேறு திசையில் பயணிக்க வைத்தது.

எனக்கும் இப்படிலாம் லவ் வருமா செக் பண்ணி பார்ப்போம். நாளைக்கு பேப்பரை புரட்டுவோம் நமக்கும் யாராச்சும் பிடிக்குதான்னு பார்ப்போம்என்ற ஆராய்ச்சியில் என்றுவிட்டது அவள் மனம்.

காலையில் என்றுமில்லாத அதிசயமாய் செய்தித்தாளை கேட்ட மகளை ஆச்சரியம் மேலிட பார்த்த தந்தை அவள் புறம் நீட்டினார் அத்தாளை.

ஏன் பாப்பா பேப்பர் படிக்கிற நல்ல பழக்கமெல்லாம் எப்போ வந்துச்சு உங்களுக்கு??” என்றார் அவர்.

சட்டென்று கேள்வி கேட்ட தந்தைக்கு என்ன சொல்வதென்ற பதட்டம் வந்து தொற்றிக்கொண்டது அவளுக்கு.

இல்லைப்பா சும்மா தான் பார்க்கலாம்ன்னு அதுல அப்படி என்ன தான் இருக்குன்னு நீங்க காலையில அதை தூக்கிவைச்சுட்டு உட்கார்ந்துக்கறீங்க அதான்ப்பாஎன்று சமாளித்தவாறே அவ்விடத்தில் இருந்து நகர்ந்திருந்தாள்.

பக்கங்களை புரட்டி பார்த்தவளுக்கு சாலை விபத்து, அரசியல், கள்ளக்காதல் இது போன்ற பக்கங்களே முதல் சில பக்கங்களை நிறைத்திருக்க இதை போய் அப்பா எப்படித்தான் படிக்கறாங்களோ என்று தான் ஓடியது.

கடைசி சில பக்கங்களில் விளையாட்டும் சினிமாவும் இடம் பிடித்திருக்க பார்வையை அதன் மீது ஓட்டினாள். கிரிக்கெட் பற்றிய செய்தியும், கால்பந்து விளையாட்டு செய்தியும் அந்த பக்கத்தை முழுதாய் நிறைத்திருக்க வெளியில் அவள் அன்னையின் குரல் அவளை அழைத்தது.

செய்தித்தாளை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள்என்னம்மாஎன்றவாறே.

வெண்பா எங்கே??”

அந்த மாலினி வீட்டுக்கு போயிட்டு வர்றேன்னு சொன்னாம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு தான் போனா

உங்கப்பாவுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. நேத்து என்கிட்ட அவ கேக்கும் போதே வேணாம்ன்னு சொன்னேன். அவர்கிட்ட கேட்கவும் சரின்னு அனுப்பி வைச்சுட்டாரா. ஆமா எங்க உங்கப்பா??”

இப்போ தான்ம்மா பேப்பர் படிச்சிட்டு இருந்தாங்க, குளிக்க போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

ஆமா நீ உள்ள என்ன பண்ணிட்டு இருக்கே??”

பேப்பர் பார்த்திட்டு இருந்தேன்

சரி வா இந்த காய் எல்லாம் கழுவி எடுத்திட்டு வாஎன்று அவர் வேலை சொல்லவும் அதை கவனிக்கச் சென்றாள்.

அன்றிலிருந்து அவ்வப்போது செய்தித்தாளை அவள் புரட்டவும் தவறுவதில்லை. மகளை ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்று ஆனந்தனுக்கு ஆசை. ஒரு முறை மகளிடம் அதை அவர் சொல்லியிருந்தார்.

பாப்பா அதுக்கெல்லாம் நிறைய படிக்கணும். நாட்டு நடப்பெல்லாம் விரல் நுனியில வைச்சிருக்கணும், டிவி பார்க்கணும், முக்கியமா நியூஸ் எல்லாம் படிக்கணும். அப்போ தான் பொது அறிவு வளரும்என்று அவர் சொல்லியிருந்தார்.

அதன் பொருட்டும் அவள் செய்தித்தாளை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தாள். அப்போதிலிருந்தே ஒவ்வொரு விஷயமும் உன்னிப்பாய் கவனிக்க கற்றிருந்தாள்.

அன்று இரவு உறங்க அறைக்கு வரும் போது தான் காலையில் செய்தித்தாள் படிக்கவில்லை என்ற நினைவு வர ஹால் டிபாயின் மீதிருந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.

Advertisement