Advertisement

“என்னாச்சு அத்தை??”

“உங்க மாமா நெறைய பேப்பர்ஸ் வைச்சிருக்காங்க. இங்க இருக்க மலைக்கிராமம் மலைவாசி மக்கள்பத்தி தகவல் எல்லாம் எடுத்து வைச்சிருக்காங்க. அது உங்களுக்கு உதவுமான்னு பாருங்களேன். அப்புறம் ஒரு போட்டோ கூட இருக்கு, எனக்கே இப்போ தான் தெரியும்”

“அதுல மெல்லினாவோட” என்றுவிட்டு நிறுத்திவிட்டான் அவன்.

“அம்மாவோட போட்டோ தான். இவங்க பைலிங் பண்ணுறதுக்காக எடுத்திருப்பாங்க போல. யானையோட போராடினப்போ அவங்க உடம்புல நிறைய காயமாகிடுச்சு. முகமெல்லாம் வீங்கிப் போச்சு. அந்த போட்டோ அவங்க இறந்த பிறகு எடுத்தது”

“அதனால தான் மெல்லினாகிட்ட கூட ஏன் என்கிட்ட கூட அவர் காட்டலைன்னு நினைக்கிறேன். என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க அவங்க அப்பாவை கண்டுப்பிடிக்கவே முடியலைன்னு. ஒரு வேளை அவங்க உயிரோட இருந்திருந்தா இந்நேரம் கண்டுப்பிடிச்சிருக்கலாம். இங்க இருக்க பேப்பர் எல்லாம் அவங்க இறந்து போறதுக்கு ரெண்டு வருஷம் முந்தையது”

இதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டும் உடனே நித்தேஷுக்கு தகவல் கொடுத்திருக்க அவனின் நண்பன் மகேஸ்வரியிடம் அந்த தகவலை வாங்கி தேடுதலை தொடங்கியிருந்தான்.

அவர்கள் முழுமூச்சாய் அதில் இறங்கியிருக்க நித்தேஷின் நண்பன் கொடுத்த தகவலில் தான் ஆத்திரேயன் அங்கு பயணப்பட்டான்.

அவரை இங்கு அழைத்தும் வந்துவிட்டான். தமிழும், கன்னடமும் ஆங்காங்கே மலையாளமும் பேசும் மக்கள் வாழும் ஊர் மசினக்குடி. அதன் மலையோர கிராமத்தில் வசிக்கும் மலைஜாதி மக்கள் இருக்கும் பகுதிக்கு தான் ஆத்திரேயன் சென்றிருந்தான்.

அங்கு தான் இருப்பார்களா என்று தெரியாது போனாலும் தினமும் ஒரு இடமாக அவர்கள் மசினக்குடியை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை தான் வலம் வந்தனர் இரண்டு நாட்களாய், எங்காவது மெல்லினாவின் தந்தையை கண்டுப்பிடித்துவிட மாட்டோமாவென்று.

அன்று வேறு ஒரு கிராமத்திற்கு சென்றனர். அந்த கிராமத்திற்குள் நுழையும் போதே ஏகப்பட்ட கெடுபிடிகள் எதற்கு ஏன் என்று அவர்கள் இவர்களை உள்ளே நுழையவே அனுமதிக்கவில்லை.

எப்படியோ உள்ளே சென்றுவிட்டார்கள் மருத்துவ வசதி செய்வதற்காக வந்திருப்பதாக கூறி. உடன் ஒரு மருத்துவ குழுவினரும் அவர்களுடன் இருந்தனர்.

ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் உடல்நிலை கேட்டறிந்து ஒரு பக்கம் குழுவினர் வேலைகளை தொடங்கியிருக்க ஆத்திரேயன் சோர்ந்திருந்தான். மெல்லினாவிடம் பெரிதாய் அவளுக்கு சர்பிரைஸ் கொடுப்பதாக கூறி வந்துவிட்டோம் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று அவனுக்கு வருத்தம்.

ஆனாலும் தன் முயற்சியை அவன் கைவிடுவதாக இல்லை. அப்போது தான் ஒருவர் வேறு ஊருக்கு சென்றுவிட்டு கிராமத்திற்குள் வந்தார். அவரை பார்த்ததுமே ஆத்திரேயன் எழுந்து நின்றுவிட்டான்.

நல்ல உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்றிருந்தவரை கண்டதால் மட்டும் அவன் எழுந்து நின்றிருக்கவில்லை. அவரின் முக ஜாடை கண்டு ஆச்சரியத்தில் தான் எழுந்து நின்றிருந்தான்.

அவனுக்கு அதிகம் சிரமமிருக்கவில்லை அதற்கு மேல். மெல்லினா தன் தகப்பனின் முக அமைப்பை கொண்டிருந்தாள். 

நேரே அவர் முன் சென்று நின்றவனை ‘யாரது’ என்பது போல் பார்த்தார் அவர்.

“நாகா என்ன பாக்குறே. அவுங்க டாக்டர் குழுவோட வந்தவங்க. உனக்கு கூட மூட்டு வலிக்குதுன்னு சொன்னியே அவங்க கூட போய் பாருப்பா மருந்தெல்லாம் இலவசமா தாறாங்க” என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லவும் ஆத்திரேயனின் செவிகள் கூர்மையாகின.

மகேஸ்வரி சொன்னது சட்டென்று அவன் நினைவில் வந்தது மெல்லினாவின் அன்னையின் கையில் பச்சைக்குத்தியிருந்ததாக சொன்ன அந்த நாகம் வர “உங்க பேரு என்ன??” என்றான் அவரிடம்.

“அது எதுக்கு நீங்க கேட்கறீங்க??” என்றார் அவர் அவனை அளவிடும் நோக்கோடு.

அவரின் பார்வை அப்படியே மெல்லினாவை நினைவுப்படுத்தியது அவனுக்கு. கேள்வி கேட்கும் போது அவள் எப்படி கண்களை சுருக்கி ஒருவித கூர்மையோடு அளவிடும் நோக்கில் கேட்பாளோ, அதே தொனியில் தான் அவரும் அவனிடத்தில் கேட்டார்.

அவர் கை நீட்டி பேசும் போது இன்னொரு அடையாளமும் அவன் கண்ணில்பட்டது. அது அவர் கையில் வேலை பச்சைக்குத்தியிருந்தார். அதே போன்று மெல்லினாவின் தாயின் கையிலும் இருந்தது.

மகேஸ்வரியின் கணவர் எடுத்து வைத்திருந்த போட்டோவில் மெல்லினாவின் தாயின் வலது கையில் வேலும் இடது கையில் நாகமும் பச்சைக்குத்தியிருந்தது. ஒவ்வொரு குறிப்பும் எதிரில் இருப்பவர் மெல்லினாவின் தந்தையே என்று அவனுக்கு நூறு சதவீதம் உறுதியாய் தெரிவித்தது.

“சந்தேகமில்லை நீங்க மெல்லினாவோட அப்பா தான்” என்று அவன் உடைத்துவிட அப்பா என்றது மட்டுமே அவர் காதில் அழுத்தமாய் விழ அவர் உடல் இளகியது. அதை உணர்ந்துக் கொண்டான் எதிரில் இருந்தவன்.

“நீ… நீங்க”

“நான் ஆத்திரேயன், மெல்லினாவோட ஹஸ்பென்ட்”

அவன் சொன்னது அவருக்கு புரியவில்லை. “மெல்லினாவோட கணவன்” என்று கழுத்தில் தாலி போல அவன் சைகை செய்ய அவருக்கு புரிந்தது.

“உங்க மனைவி” என்று அவன் ஆரம்பிக்கவுமே அவர் உடல் இறுகியது. 

ஆத்திரேயனுக்கு ஒரு யோசனை தோன்ற மெல்லினாவும் அவனுமாக இருக்கும் புகைப்படத்தை தன் அலைபேசியில் எடுத்து அவர் முன் நீட்டவும் அவர் முகம் மலர்ந்தது.

அவரிடம் பேசப்பேச அவர் தன் மனைவியையும் மகளையும் தொலைத்த கதையை சொன்னார். பிடிவாதம் கொண்ட அவர் மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு தனியே காட்டு வழியில் பயணம் செய்திருக்க வழி மாறி எங்கோ மாட்டிக் கொண்ட கதை சொன்னார் அவர்.

“அவ செத்து போயிட்டான்னு தெரிஞ்சதும் எனக்கு உசிரே போச்சு. அவளைத் தேடி நான் அலையாத இடமில்லை, எங்க போனாலும் நைட்க்குள்ள நாங்க எங்க இடத்துக்கு வந்திடணும். அது தான் இங்க சட்டம் ஊரைவிட்டு ரெண்டு மூணு நாள் வெளிய போகணும்ன்னா அதுக்கு நிறைய சம்பிரதாயம் இருக்கு இங்க”

“இங்க எல்லாரும் அவ எங்கயோ ஓடிப்போய்ட்டான்னு பேசுனாங்க. எனக்கு தெரியாதா என் பொஞ்சாதி பத்தி ஆனாலும் எந்த பதிலும் சொல்ல முடியலை. தினமும் அவளைத் தேடி தேடி அலைஞ்சேன். வேற ஊருக்கெல்லாம் கூட போய் தேடி அலைஞ்சேன். அவ காணாம போய் நாலு மாசம் கழிச்சு தான் அவ செத்து போனதே எனக்கு தெரியும்” என்று பேசினார் அவர்.

“புள்ளைய படிக்க வைக்கணும் எங்க ஆளுங்க எல்லாம் படிச்சு நல்லா வரணும்ன்னு அவளுக்கு எண்ணம். இங்க ஒரு அம்மா வந்தாங்க அவங்க தான் பேசி அவளை மாத்திட்டாங்க. அதுல இருந்தே படிப்பு படிப்புன்னு அதே தான் சொல்லிட்டு இருந்தா”

“நான் அவளை பொறுமையா இருக்கச் சொன்னேன் கேட்கலை. கோவிச்சுக்கிட்டு காட்டுக்குள்ள தனியா கிளம்பிட்டா இப்போ அவளை நான் பார்க்க முடியாமலே போய்டுச்சு”

“என் பொண்டாட்டி செத்துட்டான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன் ஆனா புள்ளையப்பத்தி எந்த விபரமும் யாரும் சொல்லவே இல்லை தம்பி. எப்போவாச்சும் அவளை பார்க்க மாட்டோமான்னு தான் தவம் கிடந்தேன்”

அவரின் பேச்சு தமிழ் போலத்தான் இருந்தது ஆனாலும் அதில் கன்னட வாசமும் இருந்தது போலும். முழுதாய் அவனால் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

அவரை எப்படியும் மெல்லினாவின் முன் நிறுத்திவிடவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த ஆத்திரேயன் அவரை தன்னுடன் அழைத்து வந்துவிட்டிருந்தான்.

மதிய உணவை உண்டதும் ஆத்திரேயன் அவன் அறைக்கு சென்றுவிட மெல்லினா சிறிது நேரத்தில் வந்தாள்.

“இங்க என்ன பண்ணுற பேபி. போய் உங்கப்பா கூட பேசிட்டு இரு, நமக்கு நெறைய நேரம் கிடைக்கும் போ” என்ற கணவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டாள் அவள்.

“என்னாச்சு பேபி?? எதுக்கு கண்ணு கலங்குறே மறுபடியும்??”

“அப்பா ரெடியாகிட்டாங்க??”

“எங்க??”

“ஊருக்கு கிளம்பணுமாம்”

“என்ன??” என்றவன் “நான் பேசுறேன், போய் மாமாவை பார்ப்போம் வா” என்று சொல்லி அவளுடனே வெளியே வர அவளின் தந்தை நாகராஜன் தயாராய் நின்றிருந்தார்.

“எங்க மாமா கிளம்பிட்டீங்க??” என்றான் ஆத்திரேயன்.

“ஊருக்கு போகணும் என் பொண்ணை பார்த்திட்டேன் இன்னும் என்ன வேணும் எனக்கு”

மெல்லினா ஆத்திரேயனின் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டிருந்தாள். முகம் வெளுத்து போயிருந்தவளை கண்டவன் “என்ன மாமா அவசரம் இங்கவே எங்க கூடவே இருந்திடுங்களேன்”

“நான் அங்கவே வாழ்ந்து பழகிட்டேன். என் புள்ளை அவங்கம்மா ஆசைப்படி படிச்சு நல்ல உத்தியோகத்துல இருக்கு அதைப்பார்க்கவே எனக்கு சந்தோசமா இருக்கு, அதுக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா நான் வந்து பார்க்கறேன். எனக்கு பார்க்கணும் போல இருக்கும் போதும் உடனே வந்து பாக்குறேன் இப்போ கிளம்பட்டுங்களா” என்று அவர் கிளம்புவதிலே குறியாய் நின்றார்.

“அப்பா” என்றழைத்தாள்.

ஆத்திரேயனிடம் மறுத்தது போல மகளிடம் அவரால் மறுக்க  முடியவில்லை. அவரின் பழக்க வழக்கமே வேராகிற்றே அவர்களுடன் அவரால் ஒன்ற முடியவில்லை. சோபாவில் அமர்வதற்கே சங்கடமாய் உணர்ந்தவருக்கு ஒவ்வொன்றும் கஷ்டமாகவே இருந்தது.

ஆத்திரேயனுடன் மகளைப் பார்க்க சென்னைக்கு வருவதற்குள் அவருக்கு பலவித அசவுகரியங்கள். ஆத்திரேயன் இத்தனைக்கும் எதற்கும் முகம் சுளித்திருக்கவில்லை. அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டான்.

ஆத்திரேயனுக்கு அவரைப் புரிந்தது. திரும்பி தன் மனைவியைப் பார்த்தான் அவரை போகவிடு என்ற செய்தியுடன்.

“இன்னைக்கு ஒரு நாள் கூட என்னோட இருக்க மாட்டீங்களா” என்றாள் மெல்லிய குரலில்.

“மெல்லினா நாம அங்க போய் அவர்கூட இருக்கலாம், அவங்களை போகவிடு” என்று சொல்லிவிட்டவன் அவரைப் பார்த்து “இருக்கலாம் தானே” என்று சொல்ல அவர் பதறிப் போனார்.

“என்ன பேசறீங்க, நீங்க எங்க குலதெய்வம். நீங்க ரெண்டு பேரும் வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்”

“உங்க ஊர்ல எதுவும்…”

“சொல்ல மாட்டாங்க நான் பார்த்துக்கறேன்” என்றார் அவர்.

“உங்ககிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்”

“சொல்லுங்க”

“உங்க பொண்ணை மட்டும் நீங்க இப்போ பார்க்கலை அவளோட இன்னொரு உயிரும் இருக்கு. இன்னும் சில மாசத்துல அவங்களை நீங்க பார்ப்பீங்க” என்று சொல்லவும் மகளை பரிவுடன் ஏறிட்டார் அவர். 

கண்கள் கலங்கியது அவருக்கு மீண்டும். தன் கையில் தாங்கிய மகளை சிறு வயதிற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறார். தன் மகவுக்கு ஒரு மகவு என்பதை நினைக்கும் போதே உள்ளுக்குள் சிலிர்த்தது அவருக்கு.

 

ஒரு நாளில் எவ்வளவு தான் சந்தோசத்தை தாங்குவார் அந்த மனிதர். ஆனாலும் இரும்பானவரே சட்டென்று எதையும் சமாளித்துக் கொண்டு எழுந்து நிற்கும் துணிவு அவரிடத்தில்.

மெல்லினாவின் அசாத்திய தைரியம் அவரிடத்தில் இருந்து வந்ததே என்பதை உணர்ந்துக் கொண்டான் ஆத்திரேயன்.

ஏதோ ஞாபகம் வந்தவராய் அவர் கையில் இருந்த பையில் இருந்து எதையோ எடுத்தார். “இதை வாங்கிக்கோம்மா” என்று மகளிடத்தில் நீட்ட அதை வாங்காமல் அவள் ஆத்திரேயனை பார்த்தாள்.

“நீ உங்கம்மா மாதிரி இல்லை” என்று அவர் மெல்ல சிரித்துக் கொண்டு சொல்லவும் எதிரில் நின்றிருந்த இருவரும் புரியாமல் அவரைப் பார்த்தனர்.

“உங்கம்மா வாசுகி நான் சொல்ற எதையும் கேட்க மாட்டா. நீ அப்பா கொடுக்கறதை வாங்குறதுக்கு கூட உன் புருஷனை பார்க்கறே” என்று அவர் சொல்லவும் அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

“வாங்கிக்கோம்மா இது உங்கம்மா போட்டிருந்த பவளமணி” என்று சொல்லி உள்ளிருந்ததை எடுத்து அவள் கையில் வைக்க ஒரு நொடி அதிர்ந்தது அவள் உடல்.

“அம்மா பேரு வாசுகியாப்பா” என்ற மகளை பார்த்து கண்களை இறுக மூடித்திறந்தார் அவர்.

பெற்றவள் தான் பிள்ளைக்கு தகப்பனை அடையாளம் காட்டுவாள். இங்கு பெற்றவர் பெற்றவளை அடையாளம் காட்டுகிறார், அதை நினைக்கும் போதே நெஞ்சு வெம்பியது அவருக்கு.

தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு பையில் இருந்து அழகான வெண் சங்கு ஒன்றை எடுத்து அவள் கையில் வைத்தவர் “நீ குழந்தையா இருக்கும் போது பால் குடிச்ச சங்கு இது தான், நாளைக்கு உன் பிள்ளைக்கு இது உதவும்” என்றார் அவர்.

பின் அவர்களிடம் இருந்து அவர் விடைபெற ஆத்திரேயன் அவருக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தான் அவர் திரும்பி செல்வதற்கு.

மெல்லினாவிற்கு வருத்தம் காலையில் வந்து மாலையிலேயே அவர் கிளம்பி விட்டிருந்தாரே என்று. தன் கையால் ஒரு வாய் கூட அவர் சாப்பிட்டிருக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.

இரவு உணவு முடித்து இருவரும் படுக்கையறைக்கு வர மெல்லினா எதுவும் பேசாமல் படுத்துவிட “என்ன யோசனை??” என்றான் அவளின் மணவாளன்.

Advertisement