Advertisement

26

கோவிலுக்கு சென்றுவிட்டு மெல்லினாவின் வீட்டு வாயிலில் ஆதவன் வண்டியை நிறுத்த “எல்லாரும் உள்ள வந்திட்டு போங்க” என்றாள் மெல்லினா.

“இன்னொரு நாள் வர்றோம்மா” என்றான் அவன்.

“ஏன் மாமா நீங்க கூட வர மாட்டீங்களா??” என்றாள் தன் மாமனாரை வருத்தத்துடன் பார்த்தவாறே.

வாசவிக்கு உள்ளூர புகைந்தது. ‘இங்க நான் ஒருத்தி இருக்கேன் என்னைய ஒரு வார்த்தை வான்னு கூப்பிடலை’ என்று மாமியாராக இன்னமும் யோசித்துக் கொண்டிருந்தார் தான் செய்ததை மறந்து.

மருமகளை கேட்கவும் சுசிந்தரதிற்கு சங்கடமாகிப் போக அவர் தன் மூத்த மகனைப் பார்க்க அவன் கண்களால் ஏதோ ஜாடை செய்தான். 

சுசிந்தரம் “நாங்க எல்லாரும் இன்னொரு நாள் வர்றோம்மா. பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம்மா. கோவிலுக்கு போனா நேரா வீட்டுக்கு தான் போகணும்ன்னு சொல்வாங்க. உனக்கு சந்தேகம்ன்னா உங்க அத்தைய வேணா கேட்டுப்பாரு” என்று அவர் தன் மனைவியையும் உள்ளே இழுத்துவிட்டார் மெல்லினா அவரிடத்தில் கேட்க மாட்டாள் என்றறிந்தே.

அது போலவே அவளும் வேறொன்றும் சொல்லவில்லை “கண்டிப்பா இன்னொரு நாள் எல்லாரும் வரணும்” என்று அழுத்தமாய் சொன்னவள் தன் மாமியாரை ஒரு பார்வை பார்த்தாள்.

வாசவி அப்படியே அசந்துவிட்டார் அவளின் அந்த பார்வையில். ‘நான் சொன்னது மற்றவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்’ என்று அவள் சொல்வது போலவே இருந்தது அவருக்கு.

“சரி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுங்க” என்றுவிட்டு வண்டியில் இருந்து இறங்கினாள் அவள். அவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்தவள் மெல்ல வீட்டை நோக்கி நடைபோட சற்றே நடை தொய்ந்தது விழிகள் சொன்ன சேதியில்.

ஒரு சில நொடிகள் மட்டுமே அத்தாமதம் அடுத்த நொடி  திறந்திருந்த கதவை கண்டதும் கண்களும் உள்ளமும் ஒருங்கே மலர்ந்தது அவளுக்கு.

‘என்கிட்ட சொல்லாம வந்திட்டு எனக்கு சர்ப்ரைஸ் பண்ணுறாரா அதுக்கு தான் என்னை வெளிய அனுப்பினாரா. இப்போ அவரை என்ன பண்ணப் போறேன் பாரு’ என்று என்னென்னவோ எண்ணிக்கொண்டு களிப்பும் ஓட்டமும் நடையுமாக வந்து திடுதிப்பென்று உள்ளே நுழைந்தவள் அப்படியே நின்றுவிட்டிருந்தாள்.

ஆத்திரேயன் உண்மையிலேயே அவளுக்காக கொடுத்த அதிர்ச்சியில் அவள் தான் உறைந்திருந்தாள் அந்நேரம். சோபாவின் நடுவில் அமர்ந்திருந்த அந்த உருவத்தை அவளால் கண்டுப்பிடிக்க முடியாமல் போனால் தான் அதிசயமாக இருந்திருக்கும்.

ஆத்திரேயன் அருகே வந்ததோ தன் கையை ஆதரவாய் பற்றிக்கொண்டதோ எதுவும் அவள் உணரவில்லை. ஓவென்று அழுக வேண்டும் என்ற உணர்வு மட்டுமே அந்நொடி.

அதை அவளால் கண்டுப்படுத்தவே முயலவில்லை. அவள் மடங்கி அமர்ந்து அழுகவும் கணவனும் எதிரில் அமர்ந்திருந்தவரும் ஒருங்கே அவளை தாங்கிக் கொள்ள இன்னமும் அவளின் விசும்பல் கூடித்தான் போனது.

எப்போதும் மனைவி அழுதால் தாங்காது ஆத்திரேயனிற்கு. ஆனால் இம்முறை அதை சந்தோசமாகவே பார்த்திருந்தான். அவளை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. 

அப்பாவிற்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து அவன் அவர்களின் படுக்கையறையில் இருந்தான். பின்னோடே வந்தவள் நாலே எட்டில் அவனை எட்டியிருந்தாள். அப்படியே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தாள். அவன் கன்னத்தில் அழுகையுடன் அழுந்த முத்தமிட்டாள் அவள்.

ஏன் இப்படி பண்ணீங்க??” என்றாள் விசும்பலான குரலில்.

என்ன பண்ணேன்??” என்றான் அவளின் அன்புக்கணவன்.

நீங்க அப்பாவாக போறீங்கன்னு நான் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க என்னோட அப்பாவை எனக்கு அடையாளம் காட்டி என்னை அழ வைச்சுட்டீங்கல்லஎன்றவளின் அழுகை கட்டுப்படுத்த முடியாது பொங்கி பெருகியது இன்னும் இன்னும்.

ஆத்திரேயன் அவளின் அழுகையை நிறுத்த முயற்சிக்காது அவள் கொடுத்த இன்ப அதிர்ச்சியிலேயே களித்திருந்தான். அவனுக்கு முன்பே  ஒரு ஊகம் இருந்தது அப்படியும் இருக்குமோ என்ற நினைத்திருந்தாலும் மனைவி அவள் வாய் மொழியால் அதைச் சொல்லவும் அவன் கொண்ட மகிழ்ச்சிக்கு தடையேது.

தானும் அவள் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினான் அவளிடத்தில்.

மெல்லினாவின் அழுகை இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை ஆனால் சற்று மட்டுப்பட்டிருந்தது. அவளுக்கு ஆத்திரேயனை நினைத்து அப்படியொரு பெருமிதம் அக்கணம்.

அப்பாவை எப்படி கண்டுப்பிடிச்சீங்க?? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை??”

மாமா சொல்லலையா உன்கிட்ட??”

சொன்னாங்க ஆனாலும் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. என்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவங்களோட அறிமுகமே எனக்கு இல்லாம போயிடுமோ, அவங்களை நான் தெரிஞ்சுக்காமலே போய்டுவனோன்னு நினைச்சிருக்கேன்”

ச்சீய் லூசு அப்படியெல்லாம் பேசாத

அவங்களை தெரிஞ்சுக்காம போயிருந்தா என் கட்டை வெந்திருக்காதுங்க

அடி தான்டி வாங்கப் போறே நீ, எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கே??”

நீங்க தான் நான் எதுவும் பேச முடியாம செஞ்சுட்டீங்களே. நான் என்ன தவம் செஞ்சேனோ நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க??” என்றாள் ஆத்மார்த்தமாய்.

ஹ்ம்ம் அப்புறம்

பார்மாலிட்டியா சொல்றேன்னு நினைக்கறீங்களா… உள்ள இருந்து சொல்றேன். அப்பாகிட்ட அம்மாவோட போட்டோ இல்லையாம் ஆனா அங்க ஒருத்தர்கிட்ட சொல்லி படம் வரைஞ்சு வைச்சிருக்காங்களாம் அதை எனக்கு காட்டினாங்கஎன்றாள் கலங்கிய விழிகளுடன்.

சந்தோசமா இருக்கியா

ரொம்ப… ரொம்ப… ரொம்ப…என்று சொல்லி கையை பெரிதாய் விரித்துக் காட்டினாள்.

“சரி நீ அழுதது எல்லாம் போதும் போய் அவர்கூட பேசு. நான் லஞ்ச் வெளிய வாங்கிட்டு வந்திடறேன்” என்றான்.

“வேண்டாம் நான் செய்யறேன்”

“உனக்கு அவர்கிட்ட பேச ஆயிரம் விஷயம் இருக்கும் போ” என்றவன் மனைவியுடன் வெளியில் வர அம்மனிதர் “தம்பி” என்றவாறே நெடுஞ்சாண்கிடையாக அப்படியே அவன் காலில் விழுந்துவிட பதட்டமாக தள்ளி நின்றவன் “அச்சச்சோ என்ன பண்றீங்க நீங்க?? எழுந்திருங்க மாமா ப்ளீஸ்” என்று அவரை தூக்க முயன்றான்.

காட்டில் வளர்ந்தவராயிற்றே அவரை அசைக்கவே முடியவில்லை அவனால். 

“நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. என் உசுரை பிடிச்சுட்டு நான் இன்னமும் உயிரோட இருக்கறதுக்கு ஒரு அர்த்தம் கொடுத்திருக்கீங்க. உங்களை நான் எங்க கடவுளாவே பார்க்கறேன்” என்றார் அவர்.

ஆத்திரேயன் மெல்லினாவை பார்த்தான். ‘ப்ளீஸ் அவருக்கு சொல்லேன்’ என்ற பார்வை அது.

மெல்லினா கீழே குனிந்து அவரை தொட நிமிர்ந்து பார்த்தவர் எழுந்து அமர்ந்தார். அவள் அவரருகே அமர்ந்து கொள்ள அவளின் உச்சில் ஆதரவாய் கை வைத்தார் அவர்.

அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவளே “அப்பா” என்றழைத்திருக்க அவர் கண்களில் அருவி குளம் கட்டி நின்றது உடைப்பெடுக்க தயாராய் இருக்கும் நிலையில்.

“கூப்பிடு தாயி இத்தனை வருஷமா இதை கேட்கத்தான் நான் உசுரோடவே இருந்தேன். கூப்பிடு நல்லா கூப்பிடு, நான் சாகறதுக்குள்ள உன்னை பார்த்திடுவேன்னு எனக்கு ஒரு ஓரத்தில நம்பிக்கை இருந்துச்சு”

“அதனால தான் இன்னமும் நான் இருக்கேன். இல்லைன்னா உங்கம்மா போயிட்டான்னு தெரிஞ்ச அன்னைக்கே நானும் அவ கூடவே போயி சேர்ந்திருப்பேன்” என்றார் அவர்.

ஆம் ஆத்திரேயன் மெல்லினாவிற்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி அவளின் தந்தையே. மெல்லினா ஒரு நாள் அவனிடத்தில் தன் தாயையும் தந்தையையும் பார்த்ததேயில்லை என்று வருத்தமாய் சொல்லியிருந்த போதே அவன் முடிவெடுத்துவிட்டான் அவர்களை அவளுக்கு காட்டுவதென்று.

அவளின் அன்னையை அவனால் உயிர்ப்பிக்க முடியாது. தந்தையை அவளிடம் காட்ட முடியுமாவென அவன் அன்று தொடங்கிய முயற்சி தான் இதோ அவள் முன் தகப்பனை கொண்டு வந்து நிறுத்தியது.

தந்தையும் மகளும் தனியேவிட்டு அவன் வெளியே சென்றவனின் நினைவு முழுதும் அவரை கூட்டி வந்ததிலேயே நின்றது.

மெல்லினாவின் தந்தையை தேடுவதென்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலத்தான். மகேஸ்வரியிடம் பேசியவனுக்கு கிடைத்த ஒரு சிறு தகவல் தான் அவரை கண்டுப்பிடிக்கவே உதவியது அவனுக்கு.

அவரிடம் பேசியதை நினைவு கூர்ந்தான் அவன். “அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்”

“சொல்லுங்க”

“மெல்லினாவோட அம்மாப்பத்தி” என்றதும் சட்டென்று அவர் முகத்தில் தோன்றிய உணர்வை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

“கேளுங்க”

“அவங்களை நீங்க பார்த்ததைப்பத்தி எனக்கு சொல்றீங்களா??”

“அன்னைக்கே உங்ககிட்ட சொன்னேனே… அதைத்தவிர வேற புதுசா எனக்கு எதுவும் தெரியாதே…”

“இல்லை அத்தை நல்லா யோசிச்சு பாருங்க. அவங்களோட பேரு உங்களுக்கு தெரியலைன்னு சொன்னீங்க. எதாச்சும் குறிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கா”

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் அவருக்கு அதிகம் நினைவில் இல்லை இப்போது. ஆத்திரேயன் சொன்னதால் அவர் யோசித்து பார்க்க சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.

“அவங்க கையில பச்சை குத்தியிருந்தாங்க”

“பேரா??”

“இல்லை பேரில்லை அது ஒரு நாகம். அவங்க ரெண்டு கையிலயும் பச்சை குத்தி இருந்தாங்க. அது வேற எதுவும் இருந்திருந்தா எனக்கு ஞாபகம் இருந்திருக்காது. நாகம் அப்படிங்கறதால தான் எனக்கு நினைவில வந்துச்சு.. ” என்றார் அவர்.

ஆத்திரேயனுக்கு அந்தவொரு குறிப்பே போதுமானதாக இருந்தது. மெல்லினாவின் தந்தை போலீஸ் என்பதால் அவர் கண்டிப்பாய் ஏதாவது கண்டுப்பிடிக்க முயன்றிருப்பார் என்றொரு எண்ணம் அவனுக்கு.

“அத்தை இன்னொரு விஷயம்??”

“சொல்லுங்க”

“மாமா அவங்க பேமிலி அதாவது மெல்லினாவோட அப்பாவை கண்டுப்பிடிக்க எதுவும் முயற்சி செஞ்சாங்களா??”

“பண்ணாங்க மாப்பிள்ளை ஆனா கண்டுப்பிடிக்க முடியலை”

“மாமாவோட திங்க்ஸ் ஏதாச்சும் இன்னும் வீட்டில இருக்கா இருந்தா எனக்காக கொஞ்சம் அதுல தேடிப் பார்க்க முடியுமா” என்று அவரிடம் சொல்லிவிட்டு போனை வைத்தவன் நித்தேஷிடம் பேசியிருந்தான்.

நித்தேஷின் மற்றொரு நண்பன் ஊட்டியில் தான் பணியிலிருக்கிறான். அவனிடம் அங்கிருக்கும் மலைவாசிகள் பற்றிய தகவலை சேகரிக்க முயற்சி செய்தான்.

இரண்டு நாட்கள் கழித்து மகேஸ்வரி அவனுக்கு மீண்டும் அழைத்தார். “சொல்லுங்க அத்தை”

“மாப்பிள்ளை நீங்க உடனே இங்க கிளம்பி வர முடியுமா??” என்றார் அவர் எடுத்தவுடனே.

Advertisement