Advertisement

“ஆரம்பத்துல அந்த அக்கா அப்படி ஆனதும் அவங்க வீட்டில எல்லாரும் அவங்களை ஒதுக்கி வைச்சாங்க. அதுனால தான் அவங்க அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டாங்க”

“இப்போ அதே அக்கா தான் அந்த குடும்பத்தை தாங்கி நிக்கறாங்க. கூட பிறந்த தம்பிக்காக அப்படியொரு காரியமும் செஞ்ச அவங்களை அவங்க குடும்பம் இப்போ கடவுளா தான் பார்க்குது. அவங்களோட மனசை புரிஞ்சு அவங்களை சேர்த்துக்கிட்டாங்க. இப்போ அவங்க அந்த ஊர்ல இல்லை வேற ஊருக்கு போய்ட்டாங்க” என்று முடித்தாள்.

“ஏன் மெல்லினா எல்லா கதையும் சொல்றே. என்னைப் பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையா??” என்றவன் திரும்பி அவளைப் பார்த்தவாறே படுத்தான்.

அவன் சாதாரணமாக சொன்னது போல இருந்தாலும் அவன் குரலில் மெய்யான வருத்தமிருந்ததை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. சட்டென்று அவள் எழுந்து அமர்ந்துவிட அவனும் எழுந்திருந்தான்.

“என்னாச்சு??”

“ஒண்ணுமில்லை”

சட்டென்று அவள் கையில் அவன் கிள்ளிவிட “ஸ்ஸ்ஸ்!! ஆ!! வலிக்குது எதுக்கு இப்போ கிள்ளினீங்க??”

“நான் கிள்ளினது உனக்கு வலிக்குதா அச்சோ இனிமே கிள்ள மாட்டேன்” என்று சொல்லி அவன் கரத்தினால் தடவிக்கொடுக்க அதை தட்டிவிட்டாள் அவள்.

“இப்போ நான் கிள்ளினது உனக்கு வலிச்சுது அதை நீ எப்படிச் சொன்னே??”

“ஹ்ம்ம் சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்”

“சொல்லுடி”

“வலிச்சா வலிக்குதுன்னு சொல்லாம என்ன சொல்வாங்களாம்”

“உனக்கு வலிக்குதுன்னு நீ சொன்னா தான் எனக்கு தெரியும். உனக்குள்ள எல்லாத்தையும் ஒளிச்சு மறைச்சுட்டு அதை நான் தெரிஞ்சு வைச்சுக்கணும்ன்னா எப்படி என்னால முடியும்” என்றுவிட்டு அவள் கண்ணைப் பார்த்தான்.

பதிலுக்கு அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். அவனின் கேள்வி நியாயம் தானே என் மனம் நான் சொல்லாமல் அவனெப்படி அறிவான். தன் மனம் நான் அதைச் சொன்னால் அவன் நம்புவானா?? நம்பாமல் இருக்க மாட்டான் ஆனால் தன்னை சிறுபிள்ளையாய் எண்ணிவிட்டால் என்ற தயக்கம் வேறு.

“ப்ளீஸ் இன்னும் ஒரு வாரம் இருக்குமா அதுவரைக்கும் காத்திட்டு இருப்பீங்க தானே” என்றாள் கெஞ்சல் போல்.

“நீ இப்போவே சொல்லித்தான் ஆகணும்ன்னு நான் கட்டாயப்படுத்தலை. எனக்கு அதை தெரிஞ்சுக்கவும் வேணாம். நான் ஏன் தெரியுமா அதை தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறேன். உன்னோட அன்பை முழுசா நான் உணர்றதுக்காக தான்”

“அப்படின்னா இப்போ என்னோட அன்பு உங்களுக்கு புரியலையான்னு கேட்குற உன்னோட மைன்ட் வாய்ஸ் எனக்கு புரிஞ்சிடுச்சு”

“நேசிக்கறதை விட நேசிக்கப்படுறது ரொம்பவும் சுகம். அதை நான் முழுசா அனுபவிக்கணும்” என்று கண்களில் ஏக்கம் மின்ன அவன் சொல்லச் சொல்ல இவனுக்குள் இப்படியொரு எண்ணமா என்று தான் தோன்றியது அவளுக்கு.

ஆத்திரேயனை பற்றிய நினைவுகளை அசைப்போட்டு அவள் படுத்திருக்க அவ்வெண்ணத்தின் நாயகனே அவளுக்கு அழைத்திருந்தான்.

“ஹலோ” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

“என்ன மேடம் பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா?? இவ்வளவு மெதுவா பேசறீங்க??”

“இல்லை ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன் சாரி” என்றவள் இயல்பான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“நான் இல்லைன்னு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல”

“பார்த்தா அப்படியா தெரியுது”

“கொஞ்சம் குண்டாகிட்ட மாதிரி தெரியுது”

“ஹ்ம்ம் உங்களை”

“பேபி” என்று அவன் அழைக்கவும் ஜிவ்வென்று ஒரு உணர்வு அவளுக்குள் பரவியது. சில நாட்களாக இப்படித்தான் அவளை அழைக்கிறான் அவளின் ஆருயிர் கணவன்.

இந்த ஏகாந்த நேரத்தில் அவனின் பேபி என்ற அழைப்பு அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. “ஹ்ம்ம்” என்றாள் சத்தமேயில்லாமல்.

“என்ன வேறு காத்து தான் வருது?? நீ சரியில்லை எனக்கு இப்போவே உன்னை பார்க்கணும் வீடியோ கால் வா” என்று அவன் சொல்லவும் முகம் சிவந்தது அவளுக்கு.

அவள் அழைப்பாள் என்று அவன் காத்திருக்க அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றதும் அவனே போன் செய்துவிட்டான்.

அதை அட்டென்ட் செய்வதற்குள் அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது. நேற்று தான் அவனை திருமணம் செய்து வந்தது போல வெட்க உணர்வு எழுந்தது.

“பேபி” என்றான் அவள் அழைப்பை ஏற்றதும். அவளோ அவன் முகம் பார்க்காது வேறெங்கோ பார்வையை பதித்திருக்க அவன் முகத்தில் மோகனப் புன்னகை எழுந்தது.

“அடியேய் என் போலீஸ்காரி உனக்கு இப்படியெல்லாம் கூட வெட்கம் வருமா” என்று கேட்டு அவளையே அவன் உற்று நோக்க முகம் அதிகமாய் சிவந்தது.

“போலீஸ்ன்னா வெட்கம் வரக்கூடாது. நானும் ஒரு பொண்ணு தான்” என்றாள் வீம்பாய்.

“அது எனக்கு தெரியும் ஆனா உன் முகத்துல இன்னைக்கு தான் இப்படியொரு வெட்கத்தை நான் பார்க்கறேன்” என்றவன் இன்னுமே ரசனையாய் அவளை கூர்ந்து நோக்கினான்.

“போதும் போதும் என்னைப் பார்த்தது” என்றாள்.

“எனக்கு போதவே போதாது. நேர்ல இதுல உன்னோட வெட்கத்தை நான் பார்க்கணும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் பேபி, இங்க செம குளிர் தெரியுமா. பக்கத்துல நீ வேற இல்லை, டிவியில வேற எஸ்பிபி பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லைன்னு பாடி என்னை ரொம்ப உசுப்பேத்திட்டார்…”

அவனின் ஏக்கம் புரிந்தவளாய் பேச்சை மாற்றினாள். “அங்க வேலை எல்லாம் முடிஞ்சதா, ஏதோ கேஸ் விஷயமா போறேன்னு சொன்னீங்களே”

“ஹ்ம்ம் கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சது”

“நல்லது” என்றவள் “ஏங்க??” என்று அழைத்துவிட்டு அமைதியானாள்.

“என்ன பேபி??”

“இல்லை வந்து…”

“என்னன்னு சொல்லு??”

“அம்மாவை வரச்சொல்றீங்களா இங்க. எனக்கு அவங்களை பார்க்கணும் போல இருக்கு. பக்கத்துல இருந்தா கொடுங்களேன்”

“பேபி நான் ஒண்ணும் உங்க வீட்டில இல்லை. இங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன். அத்தையை உன்கிட்ட பேசச் சொல்றேன் சரியா. வரும் போது அவங்களை கூட்டிட்டு வர்றேன், ஓகேவா பை பேபி” என்றுவிட்டு அவளுக்கு முத்தத்தை அலைபேசியிலேயே வாரி வழங்கிவிட்டு போனை வைத்தான்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க அன்று மாலையில் ஆதவனும் பார்கவியும் அவளைப் பார்க்க வந்திருந்தனர்.

“மெல்லினா நாளைக்கு நாம திருவேற்காடு கோவிலுக்கு போறோம்” என்றாள் பார்கவி.

“என்னக்கா விசேஷம்??”

“விசேஷம் எல்லாம் ஒண்ணுமில்லை. வருஷத்துக்கு ஒரு தரம் அங்க கோவில்ல நம்ம அபிஷேகம் பண்ணுற வழக்கம். இந்த வருஷம் இன்னும் போகலை அதான் நாளைக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்”

“நாளைக்கா??” என்றுவிட்டு சொன்னவளின் மனமோ ‘நாளைக்கு அவரோட பிறந்தநாள் ஆச்சே. அவர் வந்திடுவேன்னு சொல்லியிருக்காரே. கோவிலுக்கு எப்படி போக’ என்று யோசித்தாள்.

“என்ன மெல்லினா யோசனை??” 

“இல்லைக்கா வந்து நாளைக்கு அவரு…”

“நீ ஆதிகிட்டவே ஒரு வார்த்தை சொல்லிடு. அவர் வேணாம்ன்னு சொல்ல மாட்டார்” என்று சொல்ல அவளுக்குமே ஆதியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவோம் அவன் முடிவே தன் முடிவு என்று எண்ணியவாறே அவனுக்கு அழைத்தாள்.

“சொல்லு பேபி” என்றவாறே அவன் போனை அட்டென்ட் அவனிடம் விஷயத்தை சொன்னாள்.

“நீ போயிட்டு வா பேபி”

“நீங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா??” என்றாள் முடிக்காமல்.

“ஹ்ம்ம் தெரியும் நாளைக்கு என்னோட பிறந்தநாள் நான் அங்க வருவேனான்னு உனக்கு டவுட்டே வேணாம். கண்டிப்பா வந்திடுவேன், என்ன வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடும்”

“என்னோட பிறந்த நாளைக்கு தான் அபிஷேகத்துக்கு கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் அங்க இல்லை, சோ நீ கண்டிப்பா போயிட்டு வா. நான் வர்றதுக்கு மதியம் ஆகிடும்” என்றுவிட்டான் அவன்.

பார்கவியிடமும் ஆதவனிடமும் அவள் மறுநாள் கோவில் வருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். பார்கவியை மெல்லினாவிடம் விட்டுவிட்டு அதிகாலை ஐந்தரை மணிக்கே அவர்களை தயாராய் இருக்குமாறு சொல்லிவிட்டு ஆதவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

எப்போதும் இரவு அழைக்கும் ஆத்திரேயன் அன்று அவளுக்கு போன் செய்திருக்கவில்லை. அவளாலும் அவனுக்கு போன் செய்ய முடியவில்லை, அருகே பார்கவி வேறு இருந்தாள்.

தன் கவலையை அவள் சொல்லிக்கொண்டிருக்க அவளுக்கு ஆறுதல் சொல்வதும் கருத்து சொல்வதும் என்று பேசி ஒரு வழியாக இருவருமே கண்ணயர்ந்தனர். அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து மெல்லினா கிளம்பியிருக்க அலாரம் சத்தம் கேட்டு பார்கவியும் எழுந்திருந்தாள். ஆதவன் சொன்ன நேரத்திற்கு வந்துவிட இருவரும் கிளம்பி வந்தனர்.

காரில் வாசவியும் சுசிந்திரமும் அமர்ந்திருக்க ஒரு நொடி தயங்கிய மெல்லினா பின் இயல்பாகி பின்னிருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளருகே தான் அமர்ந்திருந்தார் வாசவி லேசாய் ஒரு புன்னகையை மட்டும் அவருக்கு கொடுத்தவள் “நல்லாயிருக்கீங்களா மாமா” என்று தன் மாமனாரிடம் விசாரித்துக் கொண்டாள்.

————————

ஆத்திரேயன் முதல் நாளே சென்னைக்கு கிளம்பியிருந்தான். அவன் வரும் வேளையில் மெல்லினாவை அங்கிருக்கவிடாமல் அப்புறப்படுத்தியவன் அவனே. 

அவளிருந்தால் அவளுக்காய் அவன் செய்த சர்பிரைஸ் என்னாவது. அதனாலேயே தன் அண்ணனிடம் பேசி அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வைத்திருந்தான்.

இதோ வீட்டிற்கு வந்தும் விட்டிருந்தான். மனைவி வரும் நொடிக்காய் அவன் காத்திருக்க வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அவன் குடும்பத்தினர் அவளை அங்கேயே விட்டுவிட்டு செல்வதும் சன்னல் வழியே கண்டிருந்தான். எல்லாம் அவன் ஏற்பாடே அவர்கள் தற்சமயம் அவர்கள் வீட்டிற்கு வருவதை அவன் விரும்பவில்லை.

மெல்லினா வீட்டுக்கதவு திறந்திருப்பதை தூரத்தில் இருந்தே கண்டுவிட்டிருந்தவளுக்கு உள்ளே அப்படியொரு துள்ளல் ஓட்டமும் நடையுமாய் எட்டிப்போட்டு வீட்டிற்குள் நுழைந்தவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

விழிகள் நீரினால் நிரம்பிவிட்டிருக்க அவளின் தவிப்பைக் கண்டு மனைவியின் அருகே வந்து நின்றுவிட்டிருந்தான் ஆத்திரேயன். அவள் கரத்துடன் தன் கரத்தை அவன் ஆதரவாய் பிணைத்துக்கொள்ள ஓவென்று அழ ஆரம்பித்தவளை தாங்கிக் கொண்டது நான்கு கரம்.

Advertisement