Advertisement

25

வாசலில் அழைப்பு மணி ஒலிக்க மெல்லினா சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்தாள். அங்கு நின்றிருந்தவர்களை கண்டதும் முகம் மலர்ந்தவள் “என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க. ஏன் பார்கவி அக்கா நீங்க நேரே உள்ள வரவேண்டியது தானே. நீங்க என்ன வேற ஆளா” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.

அப்போது தான் அவள் கவனித்தாள் பார்கவியின் முகம் சரியில்லாததை, உடன் ஆதவனும் வேறு வந்திருந்தான் இறுக்கமான முகத்துடன். அவர்களுடன் பிரசாத்தின் குடும்பமும் வந்திருந்தது.

“உள்ள வாங்க” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவள் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“நீ வந்து உட்காரும்மா” என்ற ஆதவன் அந்த வீட்டை கண்களால் அளந்தான். 

‘அங்கே அவ்வளவு பெரிய மாளிகையாய் வீடிருக்க இவ்வளவு சிறிய வீட்டில் அவர்கள் வந்து இருப்பதற்கு தாங்கள் தான் காரணம் என்று அவனுக்கு சங்கடமாக இருந்தது.

ஆதவனுக்கு பார்கவியின் தமக்கை விபரம் அப்போது தான் தெரியும். பிரசாத் அவர்கள் வீட்டிற்கு வந்து சொல்லிய பிறகு  தான் அறிவான் என்பதால் மனைவியின் மீது கண் மண் தெரியாத அளவிற்கு அவனுக்கு கோபமிருந்தது.

பிரசாத் குடும்பத்தினரை வெளியில் இருக்க வைத்துவிட்டு உள்ளே மனைவியை வைத்து விளாசிவிட்டான் வார்த்தைகளால். நடந்ததெல்லாம் நினைத்து பார்க்கவே அவனுக்கு கசந்தது.

“உனக்கு எவ்வளவு நாளா விஷயம் தெரியும்” என்றான் மனைவியை முறைத்தவாறே.

அவள் நடந்ததை அப்படியே அவனிடத்தில் ஒப்பிக்க “அப்போ ஏன் நீ எனக்கு முன்னாடியே சொல்லலை. உனக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லைல. உன் அக்கா நல்லா இருக்கணும்ன்னு அந்த பொண்ணுக்கு துரோகம் பண்ணியிருக்க”

“உன் கூட பிறந்த தங்கச்சியா இருந்தா இப்படித்தான் செய்வியா” என்று அவன் சொல்ல அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் மளமளவென்று இறங்கியது.

“இல்லை வந்து எனக்கு என்ன செய்யன்னு”

“பேசாத எதுவும் பேசாத. உன்னால தான் இன்னைக்கு என் தம்பியும் அந்த பொண்ணும் இந்த வீட்டை விட்டு போயிருக்காங்க. எங்கம்மாக்கு ஆரம்பத்துல இருந்து மெல்லினாவை பிடிக்கலை”

“அதை உன்னோட சுயநலத்துக்காக நீ யூஸ் பண்ணிக்கிட்ட, அவங்களும் இதான் சாக்குன்னு அந்த பொண்ணு மேல இன்னும் அதிகமா வெறுப்பை வளர்த்துக்கிட்டு அன்னைக்கு வீட்டை விட்டு போகச் சொல்லிட்டாங்க”

“எல்லாத்துக்கும் நீ தான் காரணம்” என்று அவன் குற்றம் சாட்ட ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். இவள் குரல் கேட்டு மற்றவர்கள் உள்ளே வந்துவிட ஆதவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு பல்லை கடித்தவாறே நின்றிருந்தான்.

“ஆதவன் பார்கவி பண்ணது தப்பு தான் அதுக்காக இப்படி திட்டணுமா சொல்லுங்க. ஆரம்பத்துல சித்து மேல கூட எனக்கு கோபம் இருந்துச்சு. எப்படிப்பட்ட விஷயம் என்கிட்ட கூட சொல்லலையேன்னு. மெல்லினா பேசினப்போ தான் எனக்கே நெறைய விஷயம் புரிஞ்சது”

“இல்லை பிரசாத் இவ பண்ணது தப்பு. இதனால மெல்லினாவோட வேலையே போச்சு, என் தம்பி இந்த வீட்டைவிட்டு போய்ட்டான்”

“இவங்க எதுவும் செய்யலைன்னா கூட மெல்லினாவோட வேலை போயிருக்கும் ஆதவன். எதுவும் நம்ம கையில இல்லை எல்லாம் நடக்கணும்ன்னு இருக்கு, நடந்திடுச்சு, விட்டிருங்க. நடந்ததை இனி சரிப்பண்ண பார்ப்போமே”

“பார்கவியால தான் இன்னைக்கு சித்து உயிரோட இருக்கா. அதுக்கு நான் உங்களுக்கு எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கேன் தெரியுமா” என்று பேசி சற்று அவனை சமாதானம் செய்திருந்தான்.

இதோ பிரசாத் மெல்லினாவையும் ஆத்திரேயனையும் நேரில் கண்டு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்க அவர்களுடன் தான் கிளம்பி வந்திருந்தனர் அவர்கள்.

“மாமா காபியா?? டீயா??”

“வீட்டுக்கு வந்திட்டு எதுவும் வேணாம்ன்னு சொல்வீங்களா” என்றவள் “நானே கொண்டுட்டு வர்றேன்” என்று சமையலறையில் நுழைய ஆதவனின் பார்வை தன் மனைவியின் மீது விழுந்தது.

சட்டென்று எழுந்தவள் மெல்லினாவின் பின்னோடு சமையலறைக்கு சென்றாள். “என்னாச்சுக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” என்று திரும்பி பார்க்காமலே அவள் வரவை உணர்ந்தவளாய் கேட்டிருந்தாள் மெல்லினா.

“என்னை மன்னிச்சிடு மெல்லினா” என்றவள் அவள் காலிலேயே விழப்போக “அக்கா அக்கா என்ன பண்றீங்க நீங்க” என்று பதறியவள் சற்று தள்ளி நின்றாள். பின் அருகே வந்து பார்கவியை நிமிர்த்த அவள் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

“மாமா சத்தம் போட்டாங்களா”

“நான் பண்ணது தப்பு தானே என் கூடப்பிறந்தவளுக்காக என் கூடப்பிறக்காத தங்கச்சி உன்னை கஷ்டப்படுத்திட்டனே மெல்லினா. அக்காவோடஉயிரும் மானமும் மட்டும் தான் அந்த நேரத்துல கண்ணுல தெரிஞ்சது”

“எனக்கு தான் குழந்தை இன்னும் உண்டாகலை. எங்கக்காவோட குழந்தை அநாதை ஆகிடக்கூடாதுன்னு அப்படி செஞ்சிட்டேன். என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு”

“அக்கா ப்ளீஸ்”

“நீங்க இதெல்லாம் நினைச்சு பீல் பண்ண வேண்டியதில்லை. நான் அன்னைக்கு சொன்னது தான் நீங்க எதுவும் செய்யலைன்னாலும் என்னோட வேலை போயிருக்கும்”

“நான் என் வேலையில நேர்மையா தான் இருந்திருக்கேன். போன வேலை எனக்கு திரும்ப கிடைக்கும்ன்னு எனக்கு தெரியும். நீங்க கண்டதும் யோசிச்சு குழம்ப வேண்டாம்” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதவன் உள்ளே நுழைந்தான். 

“வாங்க மாமா”

“மன்னிச்சிடும்மா எங்களால தான் உங்களுக்கு கஷ்டம். இவ முதல்லயே என்கிட்ட சொல்லியிருந்தா நான் ஆதிக்கு சொல்லியிருப்பேன். விஷயம் இவ்வளவு தூரம் வந்திருக்காது”

“அதெப்படி மாமா சொல்ல முடியும். நீங்க அவங்க இடத்துல இருந்து யோசிக்கணும்”

“என்னால அப்படியெல்லாம் யோசிக்க முடியாது மெல்லினா. நான் அவளுக்கான சுதந்திரத்தை எப்பவும் கொடுத்திருக்கேன். எனக்கு அவ சொல்லலைங்கறது ஏத்துக்கவே முடியலை. இதுல நீங்க வேற பாதிக்கப்பட்டிருக்கீங்க, என்னால இவளை மன்னிக்கவே முடியலை” என்று அவன் வெகு சீரியசாய் சொல்ல பார்கவியை நினைத்து கவலையாக இருந்தது அவளுக்கு.

இது கணவன் மனைவி அன்னியோன்யம் சம்மந்தப்பட்ட விஷயம் இதில் தான் ஒரு அளவிற்கு மேல் தலையிட முடியாது என்று அவள் அறிவாள். அப்படியே அவள் சமாதானம் செய்ய முனைந்தாலும் ஆதவனை அது அசைக்குமா என்பது கேள்வி தான்.

சில விஷயங்கள் ஆறப்போடுவதில் தான் சரியாகும் என்றுணர்ந்தவள் “சரி விடுங்க மாமா. அதே பேசாதீங்க, உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். அதை நல்லா மனசுல வைங்க”

“அக்கா தன் சம்மந்தப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் உங்ககிட்ட இருந்து எப்பவும் மறைச்சதில்லை தானே. இது இன்னொருத்தரோட பர்சனல் விஷயம் அதை உங்ககிட்ட சொல்ல தயங்கி இருக்கலாம்ல. தவிர இதுவரை அவங்க மேல நீங்க தப்பு சொல்ற அளவுக்கு எதுவும் செஞ்சிருப்பாங்களா இல்லை நடந்திருப்பாங்களா”

“அதெல்லாம் கொஞ்சம் யோசிங்க. உங்க மனசை ஆறப்போடுங்க கோபத்தை வார்த்தையால காட்டிறாதீங்க. போங்க வெளியா காத்தாட உட்காருங்க” என்றாள்.

“ஆதி எங்கேம்மா வர்றதுக்கு லேட் ஆகுமா”

“இல்லை மாமா அவங்க காலையில தான் ஊருக்கு கிளம்பி போனாங்க. ஏதோ முக்கியமான வேலையாம்”

“அப்படியா அப்போ நீ மட்டும் தனியாவா இங்க இருக்கே” என்றான் அவன்.

“ஏன் மெல்லினா ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா. நான் வந்திருக்க மாட்டேனா” என்றாள் அதுவரை கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த பார்கவி.

“அக்கா இன்னைக்கு தான் அவர் ஊர்க்கு போயிருக்கார். தவிர நான் இதுக்கு முன்னாடி தனியா இருந்ததில்லையா என்ன. அதெல்லாம் இருந்துக்குவேன்” என்றாள்.

“இல்லை நாங்க இருக்கோம் இங்கவே”

“அவ தான் சொல்றால்ல விட்டிருங்க. அவளுக்கு நாம இங்க இருக்கறது தொந்திரவா இருக்கும்” என்றாள் பார்கவி.

“அக்கா நான் அப்படி சொல்ல வரலை”

“நான் ஆதிகிட்ட பேசறேன்” என்ற ஆதவன் போனோடு வெளியே சென்றுவிட்டான்.

மெல்லினா அனைவர்க்கும் காபி கலந்து கொண்டு வந்திருந்தாள். பிரசாத்தும் சித்ராவும் அவளுக்கு நன்றி கூறினர். 

ஆதவன் போன் பேசிவிட்டு உள்ளே வர மெல்லினா அவனைப் பார்த்தாள். “ஆதி சீக்கிரமே வந்திடுவேன்னு சொன்னான். நீ தனியா இருந்துக்குவேன்னு உன்னை மாதிரியே தான் அவனும் சொல்றான். என்ன தான் பிடிவாதமோ ரெண்டு பேருக்கும்” என்று சலித்தான்.

வந்தவர்கள் மேலும் சில மணி நேரம் இருந்துவிட்டு இரவு உணவை வெளியில் இருந்து வாங்கி வந்து அங்கேயே அருந்திவிட்டு பின் அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்ல வீடே அமைதியாகியது.

ஆதியும் இல்லாததால் மெல்லினாவிற்கு அவன் நினைவே சுற்றி சுற்றி வந்தது. முதல் நாள் இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அசைப்போட்டாள் அவள்.

“பேபி” என்றான்.

“ஹ்ம்ம்…”

“என்னன்னு கேட்க மாட்டியா??”

“சொல்லுங்க”

“நீ தான் சொல்லணும். என்கிட்ட எதையுமே நீ சொல்லலை” என்று அருகே படுத்திருந்தவன் கேட்கவும் வேறுபுறம் திரும்பி படுத்திருந்தவள் அவன் புறம் படுத்தாள்.

அவள் பார்வை அவன் கண்களில், பதிலுக்கு அவனும் அசராது பார்க்க அவள் தான் வேறுவழியில்லாமல் பார்வையை தழைத்தாள்.

“என்ன சொல்லணும்??”

“தயாளன் கேஸ்ல நீ ஏன் அவங்களை காப்பாத்தினே??”

“எனக்கு அவங்க உதவி பண்ணியிருக்காங்க. என்னை எப்படி உங்க இன்ஸ்பெக்டர்கிட்ட இருந்து நீங்க காப்பாத்தினீங்களோ அப்படி அவங்க என்னை காப்பாத்தியிருக்காங்க”

“இல்லைன்னா அவங்களோட இருந்த என்னையும் அவங்களை மாதிரியே நினைச்சி என் கையை பிடிச்சு இழுத்திருப்பாங்க எல்லாம்”

“அதுக்காக மட்டும் தான் நீ அவங்களை காப்பாத்தினியா” என்றான் நம்பாது.

“இல்லை அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். அவங்களோட சொந்த தம்பிகிட்ட கூட அந்த தயாளன்” என்று அவள் முடிக்கவில்லை ஆத்திரேயனுக்கு புரிந்து போனது.

“அவங்களுக்கு நான் எதாச்சும் ஒரு வகையில உதவி பண்ணனும்ன்னு எப்பவும் நினைச்சிருக்கேன். இப்படியொரு உதவி செய்வேன்னு நானே நினைக்கலை. தவிர தயாளன் ஒண்ணும் உத்தமன் இல்லைன்னு தோணிச்சு”

“அதான் அவங்களை தப்பிக்க வைச்சேன். அந்த அக்காவை நம்பித்தான் இப்போ அவங்க குடும்பமே இருக்கு. அவங்களுக்கு ஒரு இடத்தில வேலை வாங்கி கொடுத்திருக்கேன், அவங்க தங்கையும் இப்போ வேலைக்கு போறாங்க” என்றாள்.

Advertisement