Advertisement

24

“இங்க தனியா உட்கார்ந்திட்டு நேத்து நடந்ததை யோசிச்சுட்டு இருக்கியா”

ஆத்திரேயன் குரல் கேட்டதும் சட்டென்று இருந்த இடத்தில் இருந்து அவள் எழப் போக சோபாவில் சென்று அமர்ந்தவன் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.

“ஹ்ம்ம் சொல்லு”

“சொல்ல என்ன இருக்கு பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க. நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் அவள் கண்களில்.

“நீ இருந்திருந்தாலும் அதே தான் செஞ்சிருப்பே நான் புதுசா எதுவும் செய்யலையே” என்றான் அவன்.

“என்னை விடுங்க அதான் என்னால எதுவுமே செய்ய முடியலையே” என்றாள் அவள் பதிலுக்கு.

“யாரு நீ எதுவும் செய்ய முடியலை அதை நான் நம்பணுமா??” என்றான் புருவத்தை மெல்ல உயர்த்தி.

“என்னால என்ன செய்ய முடியும்??” என்றாள் அவள்.

“ஹ்ம்ம் நம்பிட்டேன், நீ எதுவும் செய்யாம தான் அவினாஷ் எங்ககிட்ட சிக்கினானா”

“எனக்கு புரியலை, சரி அதை விடுங்க. எனக்கு இதை சொல்லுங்க”

“எதை??”

“உங்களுக்கு எப்படி விக்ரம் விஷயம் தெரியும். நான் தான் உங்ககிட்ட எதுவுமே சொல்லலையே”

“நீ தான் கல்லுளிமங்கியாச்சே. எதையுமே என்கிட்ட சொல்லக் கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இருக்க”

“ப்ச் ஏன் இப்படி பேசறீங்க. நான் ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க??”

“நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பேச்சை மாத்துவ நான் பேசாம இருக்கணும். அதே நான் பண்ணா என்னை குறை சொல்வியா நீ” என்றான் அவன்.

“நான் எதுவும் கேக்கலை போங்க” என்று சொல்லி திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.

அவளை பின்னிருந்து அணைத்தவன் அவள் காதோரத்தில் “அப்போ எதுவும் தெரிய வேணாமா உனக்கு” என்றான் மெல்லிய குரலில்.

அவள் பதில் பேசாது மெல்ல அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள். “சரி நானே சொல்றேன்”

—————————

நித்தேஷிடம் பேசியிருந்த ஆத்திரேயனுக்கு சிக்கலின் நுனி பிடிப்பட்டிருந்தது. ஆனால் சிக்கல் எதனால் என்பது மட்டும் பிடிபட்டிருக்கவில்லை.

விக்ரம் தான் நூலின் நுனி என்றறிந்தவனை தேடி சிக்கலுக்கான காரணத்தை சொல்ல வந்துக் கொண்டிருந்தான் பிரசாத். ஆத்திரேயனுக்கு யோசித்து யோசித்து தலைவலி வரும் வேளை அவன் அலைபேசி ஒலியெழுப்பியது.

“ஆத்திரேயன்” என்றவாறே போனை எடுத்து காதில் வைத்தான்.

“நான் பிரசாத் பேசறேன்” என்றது எதிர்முனை.

ஆதிக்கு சட்டென்று பிரசாத் யாரென்று பிடிப்படவில்லை. “பிரசாத்” என்று யோசித்தவாறே சொன்னவன் “ராயபேட்டை எஸ்ஐ தானே” என்றான்.

“ஆதி நான் பார்கவியோட மாமா பேசறேன். ஹோப் யூ நோ மீ நவ்”

“சாரி சாரி சொல்லுங்க. நீங்க எனக்கு போன் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கலை, சொல்லுங்க”

“உங்க அண்ணாவோட வயசு தான் எனக்கும்” என்றான் அவன்.

பிரசாத் சொல்ல வருவது புரிந்ததுமே “சொல்லுங்கண்ணா” என்றான் அவன்.

“தேங்க்ஸ் ஆதி” என்றவன் நேரே விஷயத்திற்கு வந்துவிட்டான். “ஆதி எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“எங்க வரணும்ன்னு சொல்லுங்க”

“அண்ணா நகர் பார்க் ஓகே வா ஆதி உனக்கு”

“ஓகே தான் எப்போ வரணும்”

“இப்போவே வந்தாலும் எனக்கு ஓகே தான் ஆதி. உங்க வேலையும் பார்க்கணும்ல நீங்க டைம் சொல்லுங்க நான் வந்திடறேன்”

“எனக்கொண்ணும் பிரச்சனையில்லை அண்ணா இப்போவே வந்திடறேன்”

“தேங்க்ஸ் ஆதி” என்றவன் போனை வைத்துவிட ஆத்திரேயனின் தலைவலி அவனைவிட்டு சற்று தள்ளி நின்றதை போல உணர்ந்தான் அவன்.

பிரசாத் இம்முறை அமைதியாயிருக்கவில்லை. மெல்லினா அவனிடம் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதால் மட்டுமே பேசாமாலிருந்தான். இப்போதோ அவன் பேசுவதை தெரிந்தும் அவர்களின் மிரட்டலும் தேவையும் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.

மெல்லினாவிடம் சொல்ல வேண்டும் என்று தான் முதலில் எண்ணியிருந்தான். ஏனோ ஆதியிடமும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அதன் பொருட்டே இதோ அவனை வெளியே சந்திக்கும் முயற்சி.

சொன்ன நேரத்திற்கு சரியாகவே இருவரும் வந்திருந்தனர். சில நொடி நல விசாரிப்பு பின் சிறு மௌனம் என்று கழிந்த நொடியை ஆதி தான் உடைத்தான்.

“சொல்லுங்கண்ணா என்ன பிரச்சனை??”

“உன் புத்திக்கூர்மை பத்தி பார்கவி சொன்னப்போ அதிகப்படின்னு தோணுச்சு. எனக்கு போலீஸ் மேலே எல்லாம் பெரிசா எப்பவும் மரியாதை இருந்ததில்லை, அதனால அவ மிகைப்படுத்தி சொல்றான்னு நினைச்சேன்”

“மெல்லினாவையும் உன்னையும் பார்க்கும் போது பார்கவி சொன்னது தப்பே இல்லைன்னு தோணுது”

மெல்லினா என்று பிரசாத் சொன்னதும் ஆத்திரேயன் முழுதும் தெளிந்திருந்தான். சிக்கல் அவிழப் போகும் நேரம் அது என்று புரிந்தது அவனுக்கு. காதுகளை தீட்டி கண்ணிமைகள் சிமிட்டாது பிரசாத்தை பார்த்தான் என்ன சொல்வானோ என்று.

பிரசாத் நடந்தவைகளை அப்படியே சொல்லியிருக்க ஆதியின் முகம் கோபத்தில் சிவந்தது. விக்ரமிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று மெல்லினா அவனிடம் பேசும் போது எண்ணியிருந்தான்.

பிரசாத் சொல்லச்சொல்ல அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. வியாபாரத்தில் இருப்பவன் முன்னே பின்னே இருப்பான் போல அதைக் கண்டுவிட்டு மெல்லினா படபடக்கிறாள் என்று கூட நினைத்திருக்கிறான்.

அவனால் தாங்கிக்கொள்ளவே இயலாத உண்மை கசந்து வழிந்தது, ஜீரணிக்க முயற்சி செய்தான். விக்ரமை நண்பனாய் அறிவானே அதனால் தான் அப்படியிருந்ததோ?? என்னவோ??

“அண்ணா நீங்க மெல்லினாகிட்ட சொல்லிட்டீங்களா அவங்க மறுபடியும் போன் பண்ணதை”

“இல்லை உன்கிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சு முதல்ல அதான் வந்திட்டேன்”

“நீங்க அவகிட்ட சொல்லிடுங்க. என்கிட்ட நீங்க சொன்னதை சொல்ல வேண்டாம். அவ சைடுல இருந்து என்ன செய்யறாளோ அதை அவளே செய்யட்டும்”

“ஆதி அப்போ நீ…”

“இன்னும் இரண்டு நாள் நான் அவன் வெளிய இருக்க மாட்டான். நீங்க கவலைப்படாம போங்க நான் பார்த்துக்கறேன். அந்த வீடியோ பத்தி நீங்கயோசிக்க வேண்டாம். அதை டெலிட் பண்ணிடறேன் எங்க சோர்ஸ் வைச்சு. நிம்மதியா போங்க சந்தோசமா இருங்க”

“தேங்க்ஸ் தேங்க்ஸ் ஆதி” என்று உணர்ந்து சொன்னான் பிரசாத்.

“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் அண்ணா”

“நீங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க”

“உண்மையிலேயே நீங்க தான் கிரேட் மனைவி மேல சந்தேகம் படாம அதை நீங்க ஹேண்டில் பண்ண விதம் எனக்கு பிரமிப்பாவே இருக்கு அண்ணா” என்று சிலாகித்தான் அவன்.

————————-

“அவரா உங்ககிட்ட சொன்னாரு”

“அவர் சொல்லியிருக்க மாட்டார்ன்னு நினைச்சேன்”

“ஏன்டி யாரும் சொல்லாம நான் எப்படி கண்டுப்பிடிக்கறதாம். நீயும் சொல்ல மாட்ட வேற யாரும் சொல்ல கூடாதுன்னா எப்படி??”

“இல்லை நான் அப்படி சொல்லலை. உங்களுக்கு சந்தேகம் வந்ததுமே நீங்க விசாரணையில இறங்கிடுவீங்கன்னு தெரியும். யாரும் உங்ககிட்ட சொல்லணும்ன்னு அவசியம் கூட இருந்திருக்காது அதான்”

“உண்மை தான்… நித்தேஷ்கிட்ட ஒரு பக்கம் அவனைப்பத்தி டீடைல்ஸ் கேட்கச் சொல்லிட்டு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் அவர் எனக்கு போன் பண்ணாரு”

“ஆனா பேபி நீ பெரிய பெரிய வேலை எல்லாம் பார்த்திருக்க இந்த விஷயத்துல”

“நான் எதுவும் செய்யலைங்க” என்றாள் மீண்டும்.

“நானும் போலீஸ் தான்டி, நீ என்னெல்லாம் பண்ணேன்னு எனக்கு தெரியும். அந்த அவினாஷை விக்ரம்கிட்ட இருந்து விலக்கி வைச்சது தான் நீ பண்ணதுலையே ஹைலைட்”

“அந்த அவினாஷை அவனோட கேர்ள்பிரண்ட் வைச்சு தான் பிடிச்சேன். நேரடியா நான் தான் இறங்கியிருக்கேன்னு தெரிஞ்சா அவன் உஷாராகிடுவான்னு தெரியும். அதான் அந்த பொண்ணை வைச்சு விக்ரமை அவன்கிட்ட இருந்து தனியா இருக்க வைச்சேன். அவன் கேர்ள்பிரண்ட் கூட வெளியூர் போய்ட்டான். அவ்வளவுதான் நான் செஞ்சது”

“அது சாதாரண விஷயமா என்ன. ஒருத்தன் தனியா யோசிக்கறதுக்கும் ரெண்டு பேரு கூட்டா சேர்ந்து யோசிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கே. நீ அவங்களை பிரிச்சதுனால தான் எல்லாமே சாத்தியமாச்சு”

“எங்க பர்மனென்ட்டா பிரிக்க முடியலையே”

“இனிமே எதுக்கு பிரிக்கணும் அவங்க சேர்ந்தே பர்மனென்ட்டா உள்ள இருக்கட்டும்”

“ஒரு வேளை அவங்க வெளிய வந்திட்டா”

“அவங்க வந்திட கூடாதுன்னு தான் போதை மருந்து கேஸ்ல உள்ள வைச்சேன். பெயில் கூட கிடைக்காது, எதுவும் செய்ய முடியாது, கேஸ் ரொம்ப ஸ்ட்ராங் ஆகிட்டு”

“அவ்வளவு போதை மருந்தும்…”

“நல்லது செய்யக்கூட தப்பு செய்யலாம்”

“அவன் அதை உடைச்சுட்டு வெளிய வர முயற்சி செஞ்சா”

“முடியவே முடியாது, கையும் களவுமா பிடிப்பட்டிருக்கான். அப்படியும் வெளிய வர முயற்சி பண்ணா இருக்கவே இருக்கு இந்த வீடியோ மேட்டர். போதை மருந்து கொடுத்து பொண்ணுங்களை தப்பா வீடியோ எடுத்திருக்கான்னு சொல்லி அதுக்கு உள்ள வைக்க வேண்டியது தான்”

“அவன் வெளிய வர்ற மாதிரி தெரிஞ்சா அவனுக்குன்னு புதுசு புதுசா கேஸ் வரும். ஜென்மத்துக்கு அவனெல்லாம் வெளிய வரவே கூடாது” என்றான் ஆத்திரேயன்.

“போதும் அவன் பேச்சு இனிமே வேணாம்”

“என்னால பேசாம இருக்க முடியலை மெல்லினா. எவ்வளவு வேலை பார்த்திட்டான். உன்னோட வேலையும் போச்சே, அதை வாங்கணுமே”

“அதெல்லாம் சிம்பிளான விஷயம் நான் பார்த்துக்கறேன்”

“நானே எல்லாம் பண்ணிட்டேன் மேடம் சீக்கிரமே ஆர்டர் வந்திடும்”

“எப்படி??”

“எந்த ஆளை நீ அடிச்சியோ அவன் மாட்டிக்கிட்டா அவன் வாயால உண்மையை ஒப்புகிட்டா உன் வேலை கிடைக்கும் தானே”

“அவன் மாத்தி பேசுறான் அவன் பேச்சை நம்புவாங்களா”

“கையோட பிடிப்பட்டவனை சும்மா விடுவாங்களா என்ன”

“நிஜமாவா!!” என்றாள் ஆச்சரியத்தோடு.

“நிஜம் தான்” என்று அவன் சொல்லவும் உற்சாகம் போங்க சந்தோசத்துடன் எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் அவள்.

“இங்க வேணாம் இங்க தான் வேணும்” என்று அவன் அதரத்தை தொட்டுக் காட்ட தாமதியாது அவன் இதழை முற்றுகை செய்தாள் அவள்.

——————

“மெல்லினா நான் ஊருக்கு போறேன்”

“ஊருக்கா?? கேஸ் விஷயமாவா??”

“ஹ்ம்ம்”

“கண்டிப்பா நீங்க தான் போகணுமா??”

“ஏன் அப்படி கேட்கறே??”

“இல்லை அடுத்த வாரம் உங்க பிறந்தநாள் வருது”

“அன்னைக்கு இங்க இருப்பேன் உன்னோட எல்லா கேள்விக்கும் பதிலோட போதுமா” என்றவனுக்கு கண்களால் பதில் கொடுத்தாள் அவள்.

“எனக்கு அது மட்டும் போதாது என் பிறந்த நாளுக்கு நீ என்னை சர்பிரைஸ் பண்ணுறேன்னு சொல்லியிருக்க அதை மறந்திடாதே” என்று அவளுக்கு ஞாபகம் செய்தான்.

“நான் மறக்க மாட்டேன்”

‘உனக்கும் ஒரு சர்பிரைஸ் நான் வைச்சிருக்கேன். ஊருக்கு போயிட்டு வந்து சொல்றேன் மை டியர் பொண்டாட்டி’ என்று மனதோடு சொல்லிக்கொண்டவன் உதகையை நோக்கி பயணம் செய்தான்.

Advertisement