Advertisement

24

“எதுக்கு அடிக்கறேன்னு நான் சொல்லவா விக்ரம். நீ சொல்லு நான் என்ன செய்யணும்ன்னு, நீ சொல்லச் சொன்னா நான் சொல்றேன்” என்றுவிட்டு விக்ரமை இகழ்ச்சியாய் பார்த்தான் ஆத்திரேயன்.

விக்ரமிற்கு அடிவாங்கிய ஆத்திரம் ஒரு புறம் தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் முன்னே வேறு அவமானமாகிப் போனதில் ஆத்திரேயனை கொன்றுவிடும் வெறி வேறு ஏறிப் போயிருந்தது. அவன் எண்ணம் அப்பட்டமாய் அவன் கண்களின் வழியே தெரிய அதை மற்றவன் சொல்லாமலே புரிந்துக் கொண்டான்.

“சார் நாங்க உங்ககிட்ட கேட்டா நீங்க எங்க சாரை கேட்கறீங்க. பாக்க நல்லா டீசன்ட்டா இருக்கீங்க. இப்படி பண்ணுறீங்க, ஏன்பா யாராச்சும் போலீஸ்க்கு போன் பண்ணுங்கப்பா, அவங்க வந்தா தான் தெரியும் இந்தாளுக்கு” என்று கூட்டத்தில் ஒருவர் வாய் சவடால் அடிக்க ஆத்திரேயன் சிரித்தான்.

சரியாய் அந்நேரம் போலீஸ் கார் ஒன்று வாசலில் வந்து நிற்க நித்தேஷ் இறங்கி வந்தான் சீருடையில். “ஆதி” என்று தூரத்தில் இருந்தே அழைத்துக் கொண்டு வந்தான்.

“என்னாச்சு” என்றான் மற்றவன்.

“முடிஞ்சது, என்னாச்சு இவன் என்ன சொல்றான்??” என்று அவன் தோரணையோடு கேட்க அங்கிருந்த மற்றவர்கள் கப்பென்று வாயை மூடிக் கொண்டனர்.

“இங்க என்ன கூட்டம்?? நீங்கலாம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. எதுக்கு ஆதி இவ்வளவு கூட்டம்??” என்றான் அவன் ஆத்திரேயன் புறம் திரும்பி.

“அவங்க முதலாளியை நான் அடிச்சிட்டேனாம். அதான் என்னை இவங்கலாம் சேர்ந்து போலீஸ்ல பிடிச்சு கொடுக்க போறாங்களாம்”

“என்னது உன்னை பிடிச்சி கொடுக்க போறாங்களா. என்ன இவனை யாருன்னு நினைச்சீங்க” என்று அவர்களின் புறம் குரலுயர்த்தி பேசியவன் “இதுக்கு தான் உன்கிட்ட சொன்னேன் யூனிபார்ம்ல வாடான்னு” என்று அவன் சொல்லவும் கூட்டத்தில் துளி சத்தம் எழவில்லை.

“ஏன் அண்ணே ஏதோ விவகாரமா இருக்கும் போல. பேசாம வாயை மூடிட்டு இருந்திடுவோம், நீங்க எல்லாரையும் போய் வேலை பார்க்கச் சொல்லுங்க. இங்க இருந்தா நம்மளை எதுவும் கேள்வி கேட்டாலும் கேட்பாங்க” என்று ஒருவன் மற்றவனின் காதில் கிசுகிசுத்தான்.

“மன்னிச்சுருங்க சார் இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம பேசிட்டோம். ஆனாலும் எங்க சார் மேலே நீங்க கையை வைச்சிருக்க கூடாது சார். அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா” என்றான் ஒருவன் விடாது.

“உங்க சார் பெரிய ஆளு தான் அதை ஒத்துக்கறேன். அவர் மேலே நான் கையை வைக்கணுமா வைக்கக் கூடாதான்னு நீங்க சொல்லத் தேவையில்லை. போங்க போய் உங்க வேலையை பாருங்க” என்று அவர்களை விரட்டினான் ஆத்திரேயன்.

அவர்கள் ஆதியை முறைத்தவாறே தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர். நித்தேஷ் தன் நண்பனிடம் “எதுக்கு ஆதி அவங்களை இப்போ போகச் சொன்னே?? அவங்க முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தானே”

“அப்போ தான் அவங்களுக்கும் தெரியும் இவனோட லட்சணம் என்னன்னு. அவங்க எல்லாருமே சேர்ந்து மொத்தமா இவனை மொத்தி எடுத்திருப்பாங்க”

“தேவையில்லை நித்தேஷ்” என்றவன் எதையோ யோசித்தவாறே விக்ரமை பார்க்க அவன் திமிராய் நின்றிருந்தான் இவன் முன்.

“என்னடா ரொம்ப திமிரா பார்க்கறே??”

“உனக்கு நேரம் சரியில்லைன்னு பார்க்கறேன்”

“என் நேரம் சரியா இல்லையான்னு பார்க்க நீ என்ன ஜோசியக்காரனா நான் உன்கிட்ட ஆருடம் கேட்க வரலையே”

“நான் உனக்கு ஆருடம் சொல்றவன் இல்லைடா. உன் ஜாதகத்தை எழுதினவன்”

“டேய் பாருடா நண்பர் என் ஜாதகத்தை எழுதினவராம். இந்த டயலாக் ஏதோ படத்துல வந்தது தானேடா நித்தேஷ்” என்று வாய்விட்டு சிரித்தான் ஆத்திரேயன்.

“சிரிக்காதடா என் மேலே கை வைச்சதுக்கு நீ பதில் சொல்லியாகணும். அதுக்கு முன்னாடி இப்போ என்ன வேணும் உனக்கு அதை சொல்லு”

“அப்போ நீ என்ன பண்ணேன்னு உனக்கு தெரியாதா, இல்லை மறந்திட்டா. ஒரு வேளை உனக்கு தூக்கத்துல நடக்குற வியாதியா இருக்குமோ” என்ற ஆத்திரேயன் ஓங்கி அவன் கன்னத்தை நோக்கி கையை நீட்ட அதை எதிர்பார்த்தவன் போல மற்றவனின் கரத்தை பிடித்து நிறுத்தினான் விக்ரம்.

“ஹேய் கையை எடுடா” என்றான் நித்தேஷ்.

“எடுக்கலைன்னா என்னடா செய்வீங்க??”

“நித்தேஷ் நீ பேசாம இரு” என்றவன் அவனுக்கு ரகசியமாய் கண்ணை காட்ட அதை கவனித்திருந்தான் விக்ரம்.

அவன் அதை கவனித்து ஒரு புண்ணியமும் இல்லை அவர்கள் பரிமாறிக் கொண்டதை அவனால் எப்படி அறிய முடியும். ஏதோ செய்யப் போகிறார்கள் என்பது வரை மட்டுமே கணித்திருந்தவன் அடுத்தடுத்த நிகழ்வுகளை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை.

சில நாட்களாகவே தாங்கள் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி வெளியே வரவேண்டும் எப்படி நடந்ததை நடக்காதது போல செய்ய வேண்டும் என்று தீவிரமாய் யோசித்து அவன் செய்து வைத்த அத்தனையும் வீணாகப் போகும் தருணமாகிற்றே. அதெப்படி அவனறிய முடியும்.

விக்ரம் என்ன ஏதென்று யோசித்து முடிக்கக் கூட அவகாசமில்லை. திபுதிபுவென்று ஆட்கள் அங்கு வர கட்டி வைத்திருந்த அபார்ட்மெண்ட் சாவியை அவனிடத்தில் இருந்து பிடிங்கியவர்கள் உள்ளே சென்று வெளியே வரும் வேளையில் கையில் போதை மருந்து அடங்கிய பாலிதீன் பைகளை மூட்டை போல தூக்கி வந்தனர்.

“சார் எல்லாம் தண்ணி டேங்க்குள்ள ஒளிச்சு வைச்சிருக்கான்” என்றான் ஒருவன்.

மற்றவனோ “சார் யாரும் கண்டு பிடிக்கக் கூடாதுன்னு டிரைனேஜ்ல வைச்சிருக்கான்” என்று மூட்டையை தூக்கி வந்தான்.

“ஆதி என்ன நடக்குது இங்க?? இதெல்லாம் அநியாயம் ஆதி” என்று கத்தினான் விக்ரம். நடக்கும் நிகழ்வுகள் அடுத்து நடக்கப் போவதை அவனுக்கு படமாய் காட்டியிருக்க எப்படி எப்படி தப்பிக்க போகிறோம் என்ற கேள்வி அவனுக்குள்.

“ஆதி என்ன பண்ணப் போறே சொல்லுடா?? டேய் நீயாச்சும் சொல்லுடா” என்று கத்தினான்.

“என்ன சொல்றதுக்கு இருக்கு நீ போதை மருந்து கடத்துறவன் உன் இடத்துல இருந்து இவ்வளவு போதை மருந்து எடுத்திருக்கோம். உள்ள போனா நீ வெளியவே வர முடியாது தெரியுமா” என்றான் அங்கிருந்தவர்களில் ஒருவன்.

“ஆதி அவன் சொல்றது எல்லாம்”

“உண்மை தான்”

“அதை எதுக்கு அவர்கிட்ட கேட்குறே. உன் இடத்துல இருந்து எடுத்த பிரவுன் சுகர் எவ்வளவு வேல்யூ தெரியுமா. இவ்வளவு டன் அதை விக்கறவன் கூட கையில வைச்சிருக்க மாட்டான் உன் இடத்துல இருந்து அவ்வளவு பொருள் எடுத்திருக்கோம்”

“சார் இவன்கிட்ட என்ன சார் கொஞ்சிட்டு இருக்கீங்க. அவனை என் கையில விடுங்க, கைமா பண்ணிடறேன்” என்று வரிந்துக் கட்டிக்கொண்டு முன்னே வந்தவனை தடுத்தான் ஆத்திரேயன்.

“காம் டவுன் கார்த்திக். நித்தேஷ் நீ உன் வேலையை பாரு” என்று தன் நண்பனுக்கு சொல்ல அவன் விக்ரமின் கழுத்தில் கையை வைத்து தள்ளிக்கொண்டு போக விக்ரம் பெருத்த அவமானமாக உணர்ந்தான்.

“அவன் எதுக்கு இங்க வந்தான்??” என்றான் அப்போதும் விக்ரம்.

“ஏன்னா அவன் தான் இந்த டீம்க்கு ஹெட்”

“என்ன அவன் சிட்டி போலீஸ் தானே”

“இங்க பாரு உனக்கெல்லாம் விளக்கம் சொல்லணும்ன்னு எனக்கு அவசியமில்லை. வாயை மூடிட்டு வரலை அடுத்து நீ பேசுறதுக்கும் சாப்பிடுறதுக்கும் உனக்கு வாயே இருக்காது” என்றான் நித்தேஷ்.

அவனை வண்டியில் ஏற்றியிருக்க அங்கு அவினாஷும் இருந்தான் மயக்கத்தில். எந்த காயமுமில்லை ஆனால் அவன் அடிவாங்கியிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது மற்றவனுக்கு.

ஆத்திரேயன் அவினாஷ் என்று சொன்ன போது தன்னை பேச வைக்கவே அப்படி சொல்லி போட்டு வாங்குகிறானோ என்ற சந்தேகம் அவனுக்கு அதனால் தான் அப்போது அவ்விஷயத்தை பெரிதாய் எடுத்திருக்கவில்லை.

அனால் இப்போது அவினாஷ் அவர்களிடத்தில் சிக்கியிருக்கிறான் என்பது அவனுக்கு பதட்டத்தை உண்டு பண்ணியது. அவினாஷை பற்றி அவனறிவான், லேசில் அவனை மாட்ட வைத்திருக்க முடியாது என்று மட்டும் புரிந்தது.

எதையோ தெரிந்து கொண்டு தான் ஆதி தன்னை இதில் சிக்க வைத்திருக்கிறான். அப்போதும் கூட அவனுக்கு இறுமாப்பு தான் தன்னைப் பற்றி முழுதாய் எதுவும் தெரிந்திருக்க முடியாது என்று.

மெல்லினாவிற்கு வேலை போனதிற்கு தான் ஏதோ ஒரு வகையில் காரணம் என்று தான் ஆதி தன்னை அடித்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான். ஏனெனில் அவினாஷ் நிச்சயம் வீடியோ விஷயம் பற்றி சொல்லியிருக்க முடியாது என்று உறுதியாய் நம்பினான் அவன்.

அவனின் நம்பிக்கை மெய்யே ஆனால் ஆத்திரேயன் விஷயமறிந்தது அவினாஷின் கூற்றை வைத்து அல்லவே. விக்ரமின் எண்ணம் இப்படியிருக்குமா அப்படியிருக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆத்திரேயனும் அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்திருந்தான்.

“என்ன நண்பா உன் பார்ட்னர் ஏன் இப்படியிருக்கான்னு யோசிக்கறியா??”

“என்ன செஞ்சடா அவனை??”

“ரொம்ப வீக் பாடியா இருக்கான். வெறும் உள்காயத்துக்கே இப்படி மயங்கி கிடக்குறான். வெளிக்காயமாகியிருந்தா அவ்வளவு தான் போல”

“ஆதீ!!” என்று கத்தினான் விக்ரம்.

“சும்மா சும்மா கத்தாதடா நீ செஞ்ச வேலைக்கு உங்க ரெண்டு பேரையும் நடுரோட்ல வைச்சு அரபு நாட்டுல கொடுக்கற பனிஷ்மெண்ட்டை கொடுக்கணும்ன்னு எனக்கு ஆத்திரம் வருது”

“நான் என்ன பண்ணேன்னு தெரிஞ்ச மாதிரி பேசறே”

“தெரிஞ்சுகிட்டு தான் பேசறேன் விக்ரம்”

“என்ன?? என்ன தெரியும் உனக்கு??”

“நீ வீடு கட்டுறேன்னு எத்தனை பொண்ணுங்களோட பாவத்தை வாங்கியிருக்கேன்னு தெரியும். எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி செய்வடா. கேட்க ஆளில்லாத ஆளுங்களா தேடி பிடிச்சு செஞ்சிருக்கீங்க”

“கடைசில எங்க வீட்டு பொண்ணுகிட்டவே உன் வேலையை காட்டியிருக்க”

“சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டாம் ஆதி. நான் கவுரவமானவன், நான் ஏன் நீ சொல்ற மாதிரி எல்லாம் செஞ்சிருக்க போறேன்”

“வேண்டாம் விக்ரம் நடிக்காத. நீ இதுவரைக்கும் என்கிட்ட நடிச்சதில்லை அதனால தான் என்கிட்ட நீ சிக்கினதில்லை. இப்போ நீ பொய் சொல்ற நடிக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியுது”

“ஆதி உன் பொண்டாட்டி உன்கிட்ட என்னைப்பத்தி ஏதோ தப்பு தப்பா சொல்லியிருக்கான்னு நினைக்கிறேன் அதான் நீ இப்படி பேசிட்டு இருக்கே. நீயும் நானும் எவ்வளவு நல்ல நண்பர்களா இருந்தோம். அதெல்லாம் மறந்திட்டியா ஆதி”

ஆத்திரேயனால் அவன் பேசுவதை பொறுக்கவே முடியவில்லை. “என்னடா சொல்லிட்டே இருக்கேன் மேலே மேலே பொய் பேசுறே. என்ன நண்பன் அது இதுன்னு சொன்னா நான் நம்பிடுவேனா” என்றவன் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட அருகில் அமர்ந்திருந்தவன் எதிரில் விழுந்தான் தொம்மென்ற சத்தத்துடன்.

“என்னடா நான் உண்மையை சொன்னா உனக்கு பொய் மாதிரி இருக்கா. உன் பொண்டாட்டி மாதிரி ஒண்ணுமில்லைடா நானு. அவ தான் பொய்க்காரி இல்லைன்னா அவ வேலை போயிருக்குமா”

“வாயை மூடு விக்ரம் நீ பேசி பேசி என்கிட்ட அடிவாங்கிக்காத. கொலைவெறியில இருக்கேன் உன் மேல கொன்னாலும் கொன்னு போட்டிருவேன். என் பொண்டாட்டி பத்தி உனக்கென்னடா தெரியும் அவளை தப்பா பேச உனக்கென்ன தைரியம்” என்றவன் கீழே விழுந்திருந்தவனை எட்டி உதைவிட்டான்.

“டேய் ஆதி அவன்கிட்ட பேச்சை கொடுக்காதடா அவன் வேணுமின்னே பேசி உன்னை ஏதோ செய்ய வைக்க பாக்குறான். நீ டென்ஷன் ஆகாதேடா. நீ முன்னாடி வா நான் பின்னாடி இருக்கேன்” என்று குரல் கொடுத்தான் நித்தேஷ்.

ஆத்திரேயனுக்கும் அவன் சொல்வதே சரியென்று பட மறுபேச்சின்றி இறங்கினான். “என்ன ஆதி நீ அவ்வளவு தானா?? உன் பிரண்டு சொன்னதும் கிளம்பிட்ட”

“என்னடா வேணும் உனக்கு உன்னை நான் அடிச்சே கொல்லணுமா இப்போ. நித்தேஷ் இவன் இப்போ வாயை மூடலைன்னா என்னை நீ கண்ட்ரோல் பண்ணவே முடியாது. இவங்கப்பா தான் இவனுக்கு கொள்ளி போடுவார் அடுத்து” என்றுவிட்டு அந்த வண்டியின் கதவை ஓங்கி அறைந்து சாத்தினான்.

இவர்கள் வந்த போலீஸ் கார் முன்னே செல்ல வேன் பின்னேயே சென்றது. அடுத்து சில மணி நேரங்களில் விக்ரமும் அவினாஷும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நடந்த காட்சிகள் அனைத்தும் நிழற்படம் போல் அவள் மனக்கண்ணில் ஓடியிருந்தது. ஆத்திரேயன் அப்போது தான் கண் விழித்தவன் விழிப்போடு உறைந்திருக்கும் தன் மனைவியைத் தான் பார்த்தான். அவள் எண்ணம் எங்கிருக்கும் என்றுணர்ந்தவனாய் மெதுவே எழுந்து வந்தான் அவளை நோக்கி.

Advertisement