Advertisement

23 (2)

காலையில் வந்திருந்த செய்தித்தாள் தாங்கி வந்திருந்த செய்தியை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மெல்லினா.

ஆத்திரேயனை நினைத்து பெருமிதமாக உணர்ந்தாள் அக்கணம். தான் நினைத்ததை விட ஒரு படி மேலேயே சென்று விக்ரம் சிறையில் இருந்து வெளியே வரவே முடியாத அளவு செய்திருந்தவனின் புத்திசாலித்தனம் கண்டு இன்னமும் வியப்பு தான் அவளுக்கு.

எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவனின் மீது அவளின் பார்வை சென்றது. இதழோரம் மெல்லிய புன்னகை கசிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் நாள் நடந்த நிகழ்வுகள் அவள் மனக்கண்ணில் படமாய் விரிந்தது.

——————–

மெல்லினாஎன்ற அழைப்பில் அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தவள் மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.

இன்னைக்கு உனக்கு முக்கியமான வேலை எதுவும் இருக்கா??”

ஏன் என்னாச்சு??”

சொல்லு

எனக்கென்ன வேலை இருக்கப் போகுது. எனக்கு தான் வேலையே இல்லையே இப்போஎன்றாள் விரக்தி புன்னைகையோடு.

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் “சரி வா வெளிய போவோம் ஒரு முக்கியமான வேலை இருக்குதுஎன்றான்.

என்ன வேலை??”

அதை நேர்ல வந்து தெரிஞ்சுக்கோ

பால் இருக்கு அடுப்புல காபி வேண்டாமா உங்களுக்கு

“ஆப் பண்ணிட்டு வா, நான் போய் ரெடி ஆகறேன்”

“எங்கன்னு சொல்லாம கிளம்பச் சொல்றாரு. காபி குடிக்காம சார்க்கு எந்த வேலையும் ஓடாதே. இவ்வளவு காலையில கிளம்பணும்ன்னு சொல்றாரு” என்று அவள் தனக்குத்தானே தனியே முணுமுணுக்க “அதெல்லாம் அங்க வந்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்ல” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

“பாம்பு காது” என்று அவள் சத்தமாய் சொல்ல “போலீஸ்க்காரன்டி எட்டுத்திசை பக்கமும் காதை வைச்சிருக்கணும்”

“நாலு திசை தானே, அதெப்படி எட்டுத்திசை”

“வெறும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மட்டும் தான் திசைன்னு நினைச்சியா. வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு இதெல்லாமும் சேர்த்துக்கணுமே மறந்திட்டியா” என்று அவன் சொல்லவும் மேற்கொண்டு வாயை திறக்கவில்லை அவள். அடுப்பை அணைத்துவிட்டு பாலை மூடி வைத்துவிட்டு தானும் வெளியே செல்ல தயாராகினாள்.

ஆத்திரேயன் தன் வண்டியில் தான் அவளை ஏற்றிக் கொண்டு கிளம்பியிருந்தான். “என்னங்க எதுவும் பேசாம வர்றீங்க” என்றாள் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து.

“அப்போ பாட்டு கேட்போமா” என்றவனின் நினைவில் அவர்கள் திருமணம் முடிந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வுகள் ஓடியது.

“என்ன மலரும் நினைவுகளா?? என்னைக் கொஞ்சம் மாற்றின்னு பாட்டு பாடிட்டே போகப் போறோமா”

“சரி தான்ல என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே” என்றான் மெதுவாய் பாடினான்.

“என்னாச்சு உங்களுக்கு செம பார்ம்ல இருக்கீங்க போல”

“ஹ்ம்ம் பார்ம்ல தான் இருக்கேன்” என்றான் சாலையில் கவனம் வைத்து.

“எங்கேன்னு??” என்று மீண்டும் ஆரம்பித்தவளை இடை நிறுத்தினான்.

“வெயிட் பார் மினிட்ஸ்” என்றவன் சொல்லவும் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாதவள் அமைதியாக பயணித்தாள். அவள் தான் பேசாமலே இருந்தாலேயொழிய அவள் யோசனை முழுதும் எங்கெங்கோ பயணித்தது.

வண்டி வந்து நின்ற இடத்தை ஒரு புருவச்சுளிப்புடன் பார்த்தவள் அருகிருந்தவனை திரும்பி பார்த்தாள் ‘இங்கே எதற்கு வந்திருக்கிறோம்’ என்ற பார்வை அது. அதற்கு பதில் சொல்லாதவன் அசராது அவளை பார்க்க கோபம் வந்தது அவளுக்கு.

“இங்க எதுக்கு வந்தோம்” என்றாள் வாய்விட்டே

“இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுல நமக்கு ஒரு வீடு பார்த்திருக்கேன்”

“வாட்!!” என்றாள் அதிர்ந்து.

“உனக்கு பிடிக்கும் வா” என்றவன் சட்டையில் வைத்திருந்த கூலர்சை எடுத்து மாட்டிக்கொண்டு அவள் கரத்துடன் தன் கரத்தை பிணைத்தவாறே உள்ளே செல்ல தன் பிடித்தமின்மையை முகத்தில் அப்பட்டமாய் காட்டியவாறே அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மெல்லினா.

ஏனெனில் ஆத்திரேயன் அவளை பேசவே விடவில்லையே. அதில் அவளுக்கு அவன் மீது பெரும் வருத்தம்.

“ஏய் ஆதி என்ன இந்த பக்கம்” என்று அப்போது தான் உள்ளிருந்து வந்துக் கொண்டிருந்த விக்ரம் கேட்க அவனைக் கண்டுவிட்டவளின் கண்களில் அப்படியொரு வெறுப்பு.

“உன்னைப் பார்த்திட்டு போகலாம்ன்னு தான் வந்தோம் விக்ரம். ஏன் நாங்க வரக்கூடாதா??”

“உன்னைப் போய் அப்படிச் சொல்வேனா. திடீர்ன்னு வந்திருக்கியே அதான்… என்ன… என்ன விஷயம் ஆதி” என்று சாதாரணமாய் கேட்ட விக்ரமிற்கு ஆயிரம் கேள்விகள் ஓடியது மனதில்.

“இங்க ஒரு பிளாட் புக் பண்ணலாம்ன்னு தான் மெல்லினாவையும் கூட்டிட்டு வந்தேன் விக்ரம். செகண்ட் பிளோர்ல நாலு வீடு இருக்குல்ல. அதுல ஒண்ணை பைனல் பண்ணலாம்ன்னு”

“ஹேய் ஆதி உனக்கு பிளாட் வேணும்ன்னு முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா நானே ஸ்பெஷலா ரெடி பண்ணியிருப்பேனே” என்று ஆத்திரேயனில் ஆரம்பித்து மெல்லினாவின் முகத்தை பார்த்து முடித்தான்.

“இங்கலாம் பிளாட் எதுவும் வேண்டாம்” என்றாள் மெல்லினா பட்டென்று.

“ஏன்??” என்று இருவேறு குரல்கள் போட்டியிட்டது. ஒன்று விக்ரம் மற்றொன்று ஆத்திரேயன்.

“வேணாம்ன்னா வேணாம் தான்”

“அதான் எதுக்கு??” என்றான் ஆத்திரேயன்.

“எனக்கு பிடிக்கலை”

“அப்போ வேற இடம் வேணா காட்டட்டுமா மேடம்” என்று இடையிட்டான் விக்ரம்.

“இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினஸ்” என்றாள் அவன் முகத்தை பார்த்து.

“தட்ஸ் மை பிசினஸ் மேம்” என்றான் அவனும் விடாது.

“மெல்லினா எனக்கு தெளிவான காரணம் வேணும். அதை சொல்லு நான் விட்டிர்றேன்” என்றான் ஆத்திரேயன்.

“சொல்லிட்டா விட்டிருவீங்களா இல்லை பிடிப்பீங்களா”

“என்ன??”

“இல்லை நான் காரணம் சொல்லிட்டா நீங்க விட்டிருவீங்களா இல்லை இந்த இடம் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பீங்களான்னு கேட்க வந்தேன்” என்றாள்.

இப்போது மெல்லினாவின் பார்வை விக்ரமின் மீதே. ‘என்ன சொல்லிடவா’ என்பது போல. அதில் லேசாய் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

‘அவள் சொல்லிவிடுவாளா மாட்டாளா அதை ஆதி நம்புவானா இல்லையா’ எதையும் அவன் மனம் யோசிக்கும் மனநிலையில் இல்லை.

“அவங்க தான் வேணாம்ன்னு சொல்றாங்களே ஆதி விட்டிறேன். நான் என்னோட பிரண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ல சொல்லி வைக்கிறேன், அங்க மேடம்க்கு பிடிச்சா பாரு” என்று அவன் தொடர மெல்லினா அவனை முறைத்தாள்.

“ஆக என்ன காரணம்ன்னு ரெண்டு பேருமே சொல்ல மாட்டீங்க அப்படித்தானே” என்ற ஆத்திரேயனின் குரலில் இருந்த பேதத்தை விக்ரமின் உணராது இருக்க மெல்லினாவிற்கு ஏதோ புரிவது போல்.

“ஓகே லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம். என்ன விக்ரம் ஆர் யூ ரெடி”

“பார் வாட்”

“அதான் சொன்னேனே விளையாடலாம்ன்னு”

“ஆதி என்ன பேசறே நீ??” என்றான் விக்ரம்.

“அவினாஷ்” என்றான் ஒற்றைச் சொல்லாய்.

“அதுக்கு” என்றான் விக்ரம் அசராது.

“அதுக்கென்னப்பா நீ பெரிய ஆளு உனக்கு நான் சொல்ற பாஷை எல்லாம் புரியாது. உனக்கு வேற மாதிரி சொல்லி புரிய வைக்கிறேன். அதுக்கு முன்னாடி என் பொண்டாட்டி அவளோட சின்ன கண்ணை ரொம்ப கஷ்டப்பட்டு விரிச்சு என்னை பார்த்திட்டு இருக்கா அவளுக்கு பதில் சொல்லிட்டு வர்றேன்” என்றான் ஆத்திரேயன் நிதானமாய்.

“என்ன டியர் உனக்கு புரியலையா??” என்றான் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்து.

“புரியுது”

“சரி என்ன புரியுதுன்னு சொல்லு”

“இவனை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்”

“உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா”

அவள் இல்லையென்பதாய் தலையாட்டினாள். “நீ என்ன நடக்கணும்ன்னு நினைச்சியோ அது இங்க நடக்கப் போகுது. அதை நீ தெரிஞ்சுக்கணும்ன்னு தான் கூட்டிட்டு வந்தேன்”

“உன்கிட்ட இதை முன்னாடியே சொல்லியிருந்தா சுவாரசியமா இருந்திருக்காதுன்னு தோணுச்சு. அதான் உன்னை நேர்லவே கூட்டிட்டு வந்தேன். தவிர உன் வேலை போனதுக்கு காரணமானவங்களை நான் சும்மாவிட மாட்டேன்னும் தெரிஞ்சுக்கணும் அதுக்கு தான்”

“பேபி இனி நீ கிளம்பலாம். உன்னை இங்க கூட்டிட்டு வந்தது அன்அபிஷியல். வேலையில இல்லாத உன்னை கூட்டிட்டு வந்தா தேவையில்லாத பேச்சு வரும். நடக்கறதை நீ வீட்டில போய் டிவி நியூஸ்ல பாரு. காரை எடுத்திட்டு நீ வீட்டுக்கு போ, பை டியர்” என்றான் ஆத்திரேயன் அவளை பேசவிடாது.

“இல்லை நானும்…”

“ப்ளீஸ்” என்றவன் கார் சாவியை அவளிடத்தில் நீட்டி அதை வாங்கிக்கொண்டவள் இருவரையும் திரும்பி பார்த்தவாறே சென்றாள்.

என்ன நினைத்தாலோ மீண்டும் அவர்களை நோக்கி அவள் வர “என்ன” என்றான் ஆத்திரேயன்.

விக்ரமின் புறம் திரும்பியவள் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைவிட்டாள். “இனி எந்த பொண்ணு வாழ்க்கையிலும் நீ விளையாடக் கூடாது” என்றவள் அவன் உயிர்நாடியில் தன் கால் முட்டியால் வேகமாய் ஒரு எத்து எத்துவிட வலியில் துடித்து போனான் விக்ரம்.

மெல்லினா அடித்ததையே அவன் உள்வாங்கிக் கொள்ளும் முன்னே அடித்த அடி விழவும் அவனுக்கு யோசிக்கவும் திராணியில்லை.

“மெல்லினா” என்றான் ஆத்திரேயன் கண்டிப்பாய். குரலில் மட்டுமே அந்த கண்டிப்பு இருந்தது அவன் முகமோ அவள் செயலில் சிரிப்பில் விரிந்தது.

“எப்படியும் இவன் எதாச்சும் பண்ணி வெளிய வந்திடுவான். என் திருப்திக்கு இவனை எதுவும் செய்யலைன்னு இருக்கக்கூடாது அதுக்கு தான் இது. இப்போ எனக்கு சந்தோசம் நான் கிளம்பறேன்” என்றவள் ஆத்திரேயனை பார்த்து லேசாய் கண்சிமிட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

“அடி பலம்ல” என்ற ஆத்திரேயன் விக்ரம் எழுவதற்கு தன் கையை கொடுக்க அவன் முறைத்தான் மாற்றவனை.

“என்னடா நடக்குது இங்க?? உன் பொண்டாட்டி என்னை அடிக்கிறா, நீ அதை வேடிக்கை பார்க்கிறே, நீயெல்லாம் ஒரு நண்பனா” என்றான் விக்ரம்.

“அதே தான் நான் கேட்கறேன் நண்பன்னா யாரு?? அவினாஷ் மாதிரி இருக்கவன் தான் நண்பனா இல்லை உன்னோட தப்பை சுட்டிக் காட்டுறவன் நண்பனா”

“நீயெல்லாம் ஒரு நண்பனான்ன்னு நான் தான் உன்னை பார்த்து கேட்கணும் நீ கேட்கிறே?? உன்னையெல்லாம் நட்பா நினைச்சதுக்கு தான் எனக்கு தண்டனை கிடைச்சிருக்கு”

விக்ரம் மற்றவனின் பேச்சில் விழித்தவன் “உனக்கு நான் இதுவரைக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லையே”

“அப்படியா நம்பிட்டேன்ப்பா. என்னை ஆக்சிடென்ட் பண்ணி சாகடிக்கணும்ன்னு நீ நினைக்கவே இல்லை. மெல்லினாக்கு வேலை போக காரணம் நீ இல்லைன்னு நான் நம்பிட்டேன்”

“அது… அது…”

“நிறைய தப்பு பண்ணிட்ட விக்ரம் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட”

“என் வீட்டு பொண்ணுங்ககிட்டவே நீ விளையாட ஆரம்பிச்சுட்டல்ல. சோ உன்னைப் பொறுத்தவரை எனக்கு எதுவுமே தெரியாது அப்படித்தானே”

“டேமிட் எப்படிடா உனக்கு இப்படியொரு புத்தி போச்சு. நல்லாத்தானே இருந்த, நல்லா தானே உங்க வீட்டில உன்னை வளர்த்தாங்க. உனக்கு மட்டும் எப்படிடா இப்படியொரு ஈனப்புத்தி வந்துச்சு” என்ற ஆத்திரேயனின் வலக்கரம் உயர்ந்து விக்ரமை அடிக்கத் துவங்கியது.

“நீ எங்க தெரியுமா தப்பு பண்ணே” என்றான் ஆத்திரேயனை நிமிர்ந்து பார்த்தான் மற்றவன்.

“எப்போமே மாட்டிக்க மாட்டோம்ன்னு தப்பு பண்ணுறவன் அவ்வளவு சீக்கிரம் மாட்டிக்க மாட்டான். நீயும் அப்படித்தான் இருந்தே, ஆனா மெல்லினா உனக்குள்ள ஒரு விதையை விதைச்சா. அது பயம்ங்கற விதை உன்னை மாட்ட வைப்பேன்னு சொல்லி சொல்லியே உன்னை தப்பு பண்ண வைச்சா”

“எந்த தடயமும் இல்லாம தப்பு பண்ண நீ அங்க இருந்து தான் தடுமாறவே ஆரம்பிச்ச. ஒவ்வொரு இடத்துலயும் உன்னை சொல்லி சொல்லி அடிச்சிருக்கா என் பொண்டாட்டி. அவ ரொம்ப புத்திசாலில” என்றான்.

“இதெல்லாம் எனக்கெப்படி தெரியும்ன்னு பார்க்கறியா. உன் கூடவே சுத்திட்டு இருந்தானே உன்னோட கூட்டாளி, சேச்சே அப்படிச் சொல்லக்கூடாது உன்னோட கூட்டு களவாணி அவினாஷ் அவனை துவைச்சு காயப்போட்டதுல அவன் மனசுல உள்ள அழுக்கு மொத்தத்தையும் வெளிய தள்ளிட்டான்”

“எப்படிடா உனக்குள்ள இவ்வளவு அழுக்கு வந்துச்சு. இந்த மாதிரி ஒரு வக்கிரம் உன் மனசுல எப்படி வந்துச்சு சொல்லு சொல்லுடா” என்றவன் விடாது அவனை அடிக்க சைட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

“சார் யார் சார் நீங்க எதுக்கு சார் எங்க முதலாளியை அடிக்கறீங்க” என்றுவிட்டு ஆத்திரேயனை வளைத்துக் கொண்டனர் அவர்கள். அப்போது வாசலில் மாற்றுமொரு வண்டி வந்து நின்றது.

Advertisement