Advertisement

23

ஆத்திரேயன் அப்போது தான் குளித்து வெளியில் வர மெல்லினா எதையோ தீவிரமாய் யோசித்தவாறே அமர்ந்திருந்தாள்.

‘என்ன யோசிக்கிறா’ என்றவனும் யோசனையாகவே அவள் மேல் ஓரப்பார்வை விடுத்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

மெல்லினா இவனிடம் ஏதோ கேட்க வருவதும் பின் அமைதியாவது போலவும் அவனுக்கு தோன்றியது. அன்று ஒரு முக்கிய மீட்டிங் இருப்பதால் அவன் முழு சீருடையில் கிளம்பியிருந்தான்.

“மெல்லினா” என்று அவன் அழைக்கவும் அரக்கப்பரக்க எழுந்து வந்தாள் அவன் முன்.

“என்னங்க??”

“டிபன் கொடுக்கற ஐடியா இருக்கா?? இல்லையா??”

“அச்சோ ஒரு நிமிஷம் இருங்க” என்றவள் டிபனுடன் வந்தாள்.

“ரெடி பண்ணிட்டு தான் இங்க உட்கார்ந்து யோசனை பண்ணிட்டு இருக்கியா” என்றவாறே அவளிடமிருந்த தட்டை வாங்கி உணவருந்த ஆரம்பித்தான்.

மெல்லினாவாக எதுவாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க அவளாக வாயே திறக்கவில்லை. ஆத்திரேயனும் உணவருந்தி முடித்திருந்தான்.

கிளம்புமுன் அவளிடம் வந்தவன் “என்ன கேட்கணும் உனக்கு என்கிட்ட??” என்றான்.

“ஒண்ணுமில்லை”

“நிஜமாவே ஒண்ணுமில்லையா??”

“இல்லை…”

ஆத்திரேயன் தோள்களை குலுக்கி “சரி கிளம்பறேன்” என்று அவளுக்கு தலையசைக்க “ஒரு நிமிஷம்” என்றிருந்தாள்.

“இல்லை வந்து நீங்க இந்த வருஷம்” என்று நிறுத்தினாள்.

“இந்த வருஷம்??”

“வந்து நீங்க ரைபிள் ஷூட்டிங்ல கலந்துக்கலையா. அதைப்பத்தி அனவுன்ஸ்மென்ட் பார்த்தேன். அதான் கேட்டேன், சமீபமா நீங்க அதுல கலந்துக்கறது இல்லையே”

“உனக்கு இதெல்லாம் யார் சொன்னாங்க??”

“தெரியும்”

“எப்படி?? ஓகே யாராச்சும் சொல்லியிருப்பாங்க” என்று அவனே சொல்லிக் கொண்டவன் “அதெல்லாம் ஒரு காலம் ரைபிள் ஷூட்ன்னா எனக்கு அப்படியொரு பேஷன். ஐபிஎஸ் எக்ஸாம், ட்ரைனிங்ன்னு பிசி ஆனதுல நடுவுல ஒரு கேப்”

“அகைன் போஸ்டிங் ஆனபிறகு ஒரு வருஷம் கண்டினியூ பண்ணேன். அப்புறம் முடியலை வேலை என்னை இழுத்திடுச்சு. இப்போ அதுக்கெல்லாம் நேரமே இல்லை மெல்லினா” என்றான் ஒரு பெருமூச்சுடன்.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க. நீங்க ஒரு ஸ்டேட் பிளேயர் தானே, நீங்களே இப்படி சொல்லலாமா. நேரமெல்லாம் நாம உருவாக்கிக்கறது தான். நம்மோட கனவுகளை எப்பவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. அப்புறம் உங்க இஷ்டம்” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட ஆத்திரேயன் அவளை திரும்பி யோசனையாய் பார்த்துக் கொண்டே அலுவலகம் கிளம்பியிருந்தான்.

——————–

சித்ராவின் அலைபேசி விடாது ஒலிக்க முகம் முழுதும் சந்தோசத்துடன் வந்தவள் சார்ஜில் போட்டிருந்த போனை யார் அழைத்தது என்று பாராமலே எடுத்து ஆன் செய்திருந்தாள்.

ஆம் அவள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் அப்பட்டமாய் தெரிந்தது. மெல்லினாவிடம் பேசிவிட்டு வந்திருந்த பிரசாத்திடம் பெரும் மாறுதல். மனைவியிடத்திலும் மகளிடத்திலும் அவன் பெரும்பாலான நேரத்தை செலவழிக்க மகிழ்ந்தனர் இருவரும்.

ஒவ்வொரு நொடியும் தானிருக்கிறேன் அவளுக்காய் என்று அது முதல் அவளிடத்தில் தன் செயலால் அவன் உணர்த்தியிருக்க அதில் வந்த மலர்ச்சி தான் அவளுக்கு. தன் பிரச்சனையும் அவள் அவனிடத்தில் சொல்லியிருந்தாள்.

அணுவணுவாய் அவள்பட்ட சித்திரவதையை அவள் வாய் மொழியால் கேட்டறிந்தவனுக்கு தன் மனைவியை துடிக்க வைத்தவனை துடிக்க துடிக்க கொன்றுவிடும் ஆத்திரம் வந்திருந்தது அவனுக்கு.

மெல்லினா தான் பார்த்துக் கொள்வதாக கூறியிருந்ததால் பேசாமலிருந்தான். சித்ராவினிடத்தில் தான் பார்த்துக் கொள்வதாக மட்டும் கூறியிருந்தான்.

சித்ரா போனை எடுத்து ஹலோ என்றிருக்க எதிர்முனை பேசியதை கேட்டதும் முகம் மாறியது அவளுக்கு. 

“சித்து” என்று அழைத்துக் கொண்டே வந்த பிரசாத் மனைவியின் முகம் மாறியிருப்பதை பார்த்ததும் விழிகளால் என்னவென்று கேட்க  கண்கள் கலங்கியது அவளுக்கு.

“என்ன சித்து??”

“அவன் தான்”

“பேசு” என்றான் அவன்.

“எனக்கு பயமாயிருக்கு”

“எதுக்கு பயம்?? நான் கூட இருக்கேன்ல என்ன வேணும்ன்னு கேளு. எனக்கு எல்லாம் தெரியும்ன்னு சொல்லு அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம். போனை ஸ்பீக்கர்ல போடு” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

சித்ரா போனை ஸ்பீக்கரில் போட “ஹலோ மேடம் எங்க போயிட்டீங்க நான் பேசிட்டே இருக்கேன் பதிலே இல்லை. பயம் விட்டுப் போச்சா, அவ்வளவு தைரியமா உனக்கு. இவன் எதுவும் பண்ண மாட்டான்னு நினைச்சுட்டியா” என்றான் அவன்.

“என்ன வேணும் உனக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ எனக்கு பயமில்லை” என்று பயத்துடன் சொன்னாள்.

எதிர்முனை வாய்விட்டு சிரித்தது. “உனக்கு யாரோ குருட்டு தைரியம் கொடுத்திருக்காங்க போல. யாரா இருக்கும் அந்த மெல்லினாவா, இருக்காதே. நீ தான் அவ வேலை போக காரணம்ன்னு தெரிஞ்சா அவ உன்னை சும்மாவா விட்டிருவாளா என்ன… அவளா இருக்காது”

“ஓ!! உன் தங்கச்சியா அவளுக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா… அவ கொடுக்கற குருட்டு தைரியத்துல தான் என்கிட்ட திமிரா பேசுறியா. உனக்கு பயம் விட்டு போச்சுல” என்று மிரட்டியது எதிர்முனை.

சித்ராவின் அருகில் நின்றிருந்த பிரசாத் அவளிடம் பேசு என்று சைகை செய்தான். “நான் உன் கூட இருக்கேன்னு சொல்லு” என்றான் அவளிடம்.

“எனக்கு என் புருஷன் கூட இருக்கார்டா அந்த தைரியம் தான் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. எதையும் பேச பண்ண நான் தயாரா இருக்கேன்” என்றாள் அவளும்.

“ஓ!! புருஷனா அப்போச்சரி ஆமா அவனுக்கு நீ இன்னொருத்தன் கூட போன விவகாரம் தெரியுமா”

“ஹேய் என்ன என்ன சொல்றே நீ அங்க எதுவுமே நடக்கலை”

“நடக்கலைன்னு அவன் நம்பணுமே”

“என் பொண்டாட்டி உன் வீட்டு பொண்ணு மாதிரி கிடையாதுடா. அவளை நான் நம்புவேன்” என்று வாயை திறந்தான் பிரசாத் சற்று கோபமாக.

“என் வீட்டு பொண்ணைப்பத்தி உனக்கென்ன தெரியும் அதிகமா பேசாத” என்றது மறுமுனை.

“என் பொண்டாட்டி உனக்கென்ன தெரியும் நீயும் அதிகமா பேசாத” என்றான் இவனும்.

“உங்க ரெண்டு பேருக்கும் கொழுப்பு கூடிப்போச்சு இப்போ இறக்கறேன்” என்ற மறுமனை போனை வைத்துவிட அடுத்த ஐந்து நிமிடத்தில் வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வர அதைக்கண்ட சித்ரா வாய் பொத்தி அழ பிரசாத்தின் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது.

அதில் வந்த வீடியோவில் சித்ரா வேறு ஒருவனுடன் இருப்பதுபோல இருக்க அதைக்கண்டு தான் அவள் அழுகையே. அந்த வீடியோ காட்சியில் உண்மையில் அவளுடன் இருந்தது பிரசாத். ஆனால்முகம் மாற்றப்பட்டு வேறு ஒருவருடன் இருப்பது போல சித்தரித்திருந்தது அதில்.

“சித்து அழாதே இதை சீக்கிரமே சரி பண்ணிடறேன்” என்றவன் அதே எண்ணுக்கு அழைத்து பேசினான். அவர்களின் தேவை என்ன என்று கேட்டறிந்தவன் “சித்து நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன். நீ பயப்படாதே. நான் உன்கூடவே இருக்கேன், யாரும் எதுவும் செஞ்சிட முடியாது”

“பாப்பாவை பார்த்துக்கோ சீக்கிரம் வந்திடறேன்” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.

————–

வாசலில் அழைப்பு மணி அடித்துக் கொண்டிருக்க கதவை திறந்த வாசவி அப்படியே நின்றுவிட்டார் எதிரில் நின்றவளை பார்த்து. வாவென்ற அழைப்பில்லை நேரே திரும்பி அவர் வீட்டுக்குள் நடக்க “ஒரு நிமிஷம்” என்றாள் மெல்லினா.

அவர் திரும்பி இவளை பார்க்க “உங்ககிட்ட பேசத்தான் வந்தேன்”

அவர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் நின்றார். வந்தவளை உட்கார் என்றும் சொல்லியிருக்கவில்லை. மெல்லினாவும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் அமரவுமில்லை நின்றவாறே தான் அவரிடம் பேசினாள்.

“ஒரு விஷயத்தை உங்ககிட்ட பேசி முடிச்சிட்டு போயிடலாம்ன்னு தான் வந்தேன்” என்றுவிட்டு அவரை கூர்ந்து பார்க்க அவர் எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை.

“சரி நான் வந்த விஷயத்தை சட்டுன்னு சொல்லிட்டு கிளம்பிடுறேன். உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், ஆனா எந்தளவுக்கு என்னைப் பிடிக்காதுன்னு எங்களை வீட்டைவிட்டு போகச் சொன்னீங்களே அன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்”

“உங்களுக்கு என்னை பிடிக்கலை அது போக போக சரியாகிடும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்து புரிஞ்சுக்கலாம் பின்னால எல்லாம் சரியாகும்ன்னு நான் நம்பினேன். என் வேலை போக நீங்க காரணம்ன்னு தெரிஞ்ச பிறகு கூட அது நீங்க தெரிஞ்சு செய்யலைன்னு நான் நம்பினேன். ஏன் தெரியுமா”

“நான் இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து உங்களை பார்க்கறேன். நீங்க எப்படின்னு நான் தெரிஞ்சுகிட்டதை வைச்சு தான் அப்படியொரு உறுதி எனக்கு”

“எனக்கு உங்க மேல வந்த அந்த நம்பிக்கை உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட இல்லைல. அப்படியென்ன அவநம்பிக்கை உங்களுக்கு என் மேல. அதும் நான் உயிரா நினைக்கிற அவரை நானே கொலை முயற்சி பண்ணியிருப்பேன்னு நீங்க நம்பியிருக்கீங்க பாருங்க. அப்போ எந்தளவுக்கு உங்களுக்கு என் மேல வெறுப்பு இருந்திருக்கணும்” என்றவளின் விழிகள் லேசாய் கலங்கிப் போனது. விரக்தியில் அவள் இதழ்கள் வளைந்தது.

“சரி அந்த பேச்சை விட்டிருவோம். இங்க நான் வரவே கூடாதுன்னு தான் நினைச்சேன். ஏன் வந்தேன் தெரியுமா உங்களுக்கு சில விஷயத்தை தெளிவு படுத்திடலாம்ன்னு தான் வந்தேன்”

“உங்க மகன் என்னை விரும்பி கட்டிக்கிட்டது மட்டும் தானே உங்களுக்கு தெரியும், நானும் விரும்பித்தான் அவரை கட்டிக்கிட்டேன்னு உங்களுக்கு தெரியாதுல. தெரிஞ்சுக்கோங்க இப்போ அவரை நானும் விரும்பறேன். அவர் தான் எனக்கு எல்லாமே. அவரை நான் கொல்லணும்ன்னு நினைச்சா அது என் கண்ணையே நான் குத்திக்கறது மாதிரி தான்”

“உங்க பிள்ளையை நான் கொள்ள வரலைன்னு உங்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுக்க நான் இப்போ இங்க வரலை”

“ஏன்னா நீங்க என்னை நம்ப மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். உங்களுக்கு அதை புரிய வைக்கவும் நான் நினைக்கலை. இதை உங்களுக்கு சொல்றதுக்கு காரணம் நீங்க என்னை புரிஞ்சுக்கறதுக்காக இல்லை, நடந்ததை நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான்”

“உங்க மகனே மனசு மாதிரி இந்த வீட்டுக்கு வரணும்ன்னு நினைச்சாலும் நான் இனிமே நிரந்தரமா இங்க வரவே மாட்டேன். மருமகளா என்னோட கடமையை கண்டிப்பா நான் செய்வேன்”

“உங்க மகனை நான் உங்ககிட்ட இருந்து பிரிக்கலை. அதுக்கு காரணம் நீங்க தான். அம்மா பிள்ளைக்கு நடுவுல நான் என்னைக்குமே குறுக்க வரமாட்டேன். அவர் உங்க கூட வந்து இருக்கணும்ன்னு நினைச்சா நான் அவரை தடுக்க மாட்டேன்”

“ஆனா இனி இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன். நீங்க பண்ணதுலையே ரொம்பவே நல்ல விஷயம் ஒண்ணு இருக்கு. அது என்னை பிடிக்கலைன்னு நீங்க வெளிப்படையா சொன்னது தான்”

“என்னைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு சொன்னீங்க பாருங்க அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஓகே கிளம்பறேன்” என்று இவள் கிளம்ப அப்படியே இறுகிப் போய் நின்றிருந்தார் வாசவி.

“வாசவி” என்றவாறே சுசிந்தரம் வந்தவர் வாசலை தாண்டிச் செல்லும் மருமகளைத் தான் பார்த்தார். “மெல்லினாவா அது… மெல்லினா… மெல்லினா…” என்று அவர் அழைக்க வாசலுக்கு வெளியே சென்றவள் நின்று அவரை திரும்பி பார்த்தாள்.

“என்னம்மா இவ்வளவு தூரம் வந்திட்டு என்னை பார்க்காமலே கூட கிளம்பறே” என்றார் அவளிடம் குறையாய்.

“மன்னிச்சிருங்க மாமா நான் அத்தைகிட்ட சில விஷயம் சொல்லணும்ன்னு தான் வந்தேன். உங்களை பார்க்கணும்ன்னு எனக்கு விருப்பம் தான். நீங்க வெளிய வந்தா உங்களை பார்க்கறேன் மாமா”

“நீங்க அடிக்கடி எங்க வீட்டுக்கு வரணும் மாமா. நான் போயிட்டு வர்றேன்” என்றவள் அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்துவிட்டாள்.

“என்ன வாசவி அந்த பொண்ணு எப்படியோ பேசிட்டு போகுது” என்றவாறே அவர் மனைவியை பார்க்க வாசவியின் விழிகளில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது.

சுசிந்திரத்திற்கு ஏதோ புரிவது போல இருந்தது. “அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன் அவசரப்படாதே. எல்லாம் சரியாகிடும்ன்னு இது நீயா தேடிக்கிட்டது தானே அதுக்கு எதுக்கு அழறே. இனி எதுவும் மாறிடாது” என்றவர் விரக்தியாய் வாசலைப் பார்த்தவாறே அதை சொல்லியிருந்தார்.

———–

போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனும் கூட்டாளிகளும் கைது என்று கொட்டை எழுத்தில் தலைப்பு பக்கத்தில் விக்ரமும், அவினாஷும் இன்னும் சிலரின் புகைப்படமும் பெரிதாய் வந்து அந்த முதல் பக்கத்தையை நிறைத்திருந்தது.

Advertisement