Advertisement

அவன் இம்முறை சற்று நிதானமாகவே இருந்தான். போனை எடுத்தவன் ஆர்ப்பாட்டமில்லாமல் “ஹலோ” என்றிருந்தான்.

“ஐ வில் கேட்ச் யூ சூன்”

“ஓகே”

“என்ன சுரத்தேயில்லை உன் குரல்ல. நான் சொன்னது உனக்கு புரியலையா இல்லை இங்கிலீஷ் தெரியலையா. வேணா தமிழ்ல சொல்லட்டுமா” என்று அவள் நக்கல் குரலில் சொல்லவும் இவன் பொறுமை சிறிது சிறிதாய் குறைந்துக் கொண்டிருந்தது.

“எனக்கு புரிஞ்சது இப்போ நான் அதுக்கு என்ன பண்ண முடியும்”

“உனக்கு பயமாயிருக்கா??” என்று அவள் கேட்கவும் அவ்வளவு தான் அவன் பொறுமையுடைந்தது.

“என்னடி பயமுறுத்தப் பார்க்கறியா. எனக்கு உன்னைப் பார்த்து பயமா?? காமெடி பண்றியா??”

“என்னைப் பார்த்து உனக்கு பயம்ன்னு நான் எப்போ சொன்னேன். நான் சொன்னதை கேட்டு உனக்கு பயம் வந்திருக்கும்ன்னு தான் சொன்னேன்”

“நீ சொன்னா நான் பயந்திருவேனா. நோபடி வில் கேட்ச் மீ, முடிஞ்சா பிடிச்சிப்பாரு” என்றான் சவாலாய்.

“நீ மாட்டத்தான் போறே ஸ்ட்ராங் எவிடென்ஸ் ஒண்ணு வசமா சிக்கியிருக்கு. நீயா வந்து மாட்டப் போறே” என்றுவிட்டு அவனை மேற்கொண்டு பேசவிடாது அவள் போனை வைத்துவிட விக்ரம் பயங்கரமாய் கத்திக்கொண்டிருந்தான் கோபத்தில்.

——————-

“ஆதி நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா” என்றான் நித்தேஷ்.

“எஸ் ஐ நோ”

“நீ சந்தேகப்படுறியா??”

“இல்லை ஆனா தெரிஞ்சுக்கறதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன்”

“யோசிச்சு செய்”

“யோசிக்க எதுவுமில்லை நான் போறது சரியான வழி தான்னு எனக்கு உறுதியா தெரியும். நான் தப்பா இதுவரை எதையும் செஞ்சதில்லை. யோசிக்காமலும் எதுவும் செஞ்சதில்லை, பல முறை யோசிச்சதுக்கு அப்புறம் தான் சொல்றேன்டா”

“சரி ஓகேடா நான் பார்த்துக்கறேன் இனி”

“தேங்க்ஸ்டா” 

“உன் மாமா உன்னை வரச்சொன்னாரு போய் என்னன்னு பாரு”

“டேய் ஐஜிடா”

“அது ஆபீஸ்க்குள்ள இருக்கும் போது மனுஷன் இப்போ வெளிய தானே இருக்காரு. அப்போ உன் மாமா தான் போய் என்னன்னு பாரு” என்றுவிட்டு நித்தேஷ் நகர்ந்துவிட்டான்.

ஆத்திரேயன் அவன் மாமாவின் முன் நின்றான். “வா ஆதி எங்கே வீட்டுக்கு கிளம்பிட்டியா??”

“ஆமா மாமா”

“என்னோட வர்றியா??”

“வண்டி??” என்று யோசித்தவன் “சரி மாமா ஒரு நிமிஷம்” என்றுவிட்டு நித்தேஷுக்கு போன் செய்தான். “சொல்லுடா என்ன சொல்றார் உன் மாமா??” என்றான் அவன் எடுத்த எடுப்பிலேயே.

“கொஞ்சம் வா” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.

“நம்மளை உருப்படியா ஒரு வேலை பார்க்க விடமாட்டாங்களே. அவன் மாமா என்னடான்னா அந்த கேஸ் என்னாச்சு இதென்னாச்சுன்னு குடையுறார் இவன் என்னடான்னா இங்க வா அங்க வான்னு படுத்துறான்” என்று புலம்பிக்கொண்டே வந்தவனிடத்தில் வண்டி சாவியைக் கொடுத்தான் ஆத்திரேயன்.

“வண்டியை வீட்டில விட்டிருடா நித்தேஷ். நான் மாமாகூட போறேன்”

“நீ சொகுசா போவே நான் உன் வண்டியை வீட்டில விடணும். அப்போ என் வண்டியை நான் தலையில தூக்கி வைச்சுட்டு போறதாடா”

“அது உன்னிஷ்டம் மச்சான் பைடா” என்று கையாட்டிவிட்டு அவன் காரில் ஏறியிருந்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்கே ஆதி??”

“புரியலை மாமா”

“நீ பண்ணிட்டு இருக்கறது தெரிஞ்சு தான் கேட்கறேன். என்ன செய்யறே??”

“மாமா அது வந்து…”

“நீ தப்பா எதையும் செய்ய மாட்டேன்னு தெரியும் ஆதி. அதுக்காக எங்கயும் போய் சிக்கிடாத. இது போலீசா சொல்லலை உன் மாமனா தான் சொல்றேன். உனக்கு எப்பவும் என்னோட சப்போர்ட் உண்டு”

“மெல்லினாவுக்கு திரும்ப வேலை கிடைக்கிறது இனி உன்னோட பொறுப்பு”

“அது என்னோட கடமை மாமா”

“எப்படிடா இப்படி தலைக்குப்புற விழுந்தே”

“புரியலை மாமா”

“புரிஞ்சாலும் புரியலைன்னு சொல்லுவே போல. மெல்லினாவை எப்படி உனக்கு பிடிச்சுதுன்னு கேட்டேன்”

“இந்த கேள்வியை நீங்க அவகிட்ட கேட்கணும் மாமா. அவளோட அன்பு தான் என்னை அவகிட்ட சேர்த்து வைச்சிருக்கு. அது தான் அவ மேல எனக்கு அன்பு பெருகவும் வைச்சிருக்கு” என்றவனின் பதிலை ஒரு புருவசுருக்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவர் “லக்கி மேன்” என்றுவிட்டு அவன் தோளில் தட்டிக்கொடுத்தார்.

————–

காலையில் கண்விழித்த ஆத்திரேயன் அருகில் கை நீட்டி துழாவ மெல்லினா எப்போதோ எழுந்து சென்றிருந்தாள். இவனும் எழுந்திருந்தவன் அவளைத் தேட அவள் சமையலறையில் இருந்தாள்.

அங்கு சென்று அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டவன் அவள் கழுத்தில் முகம் வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டான் உறங்கும் பாவனையில்.

“இன்னைக்கு என்ன சீக்கிரம் எழுந்திட்டே” என்றான்.

“முழிப்பு வந்திடுச்சு”

“ஏன்??”

“தெரியலை”

“காபி குடிக்கறீங்களா உங்களுக்கு இப்போ போடவா”

“அதெல்லாம் இப்போ வேணா எனக்கு இப்போ ஒரு காலைக்காட்சி தான் வேணும்” என்றவன் அவள் எதிர்பாராது அவளை தன் புறம் திருப்பி சட்டென்று தன் கைகளில் ஏந்திக் கொள்ள “அச்சோ விடுங்க” என்றாள் அவள்.

“விடலாம் முடியாது”

“பால் அடுப்புல இருக்குங்க”

“அப்போ அதை ஆப் பண்ணிட்டு வந்தா உனக்கு ஓகேவா” என்றான் மெல்ல சிரித்து.

“அச்சோ ஆளைவிடுங்க” என்றவள் சட்டென்று துள்ளி குதித்து இறங்கிவிட அவளை துரத்தினான் ஆத்திரேயன். அடுப்பை அணைத்துவிட்டு அவள் அவனுக்கு போக்கு காட்டி ஓடினர்.

இருவருமே விடாக்கண்டர்கள் கொடாகண்டர்கள் ஆகிற்றே. அவனால் பிடிக்க முடியவில்லை அவளாலும் அவனுக்கு வெகு நேரம் போக்கு காட்டவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் இருவருக்கும் மூச்சிறைக்க ஓய்ந்து போய் கட்டிலில் சாய ஆத்திரேயன் அது தான் சாக்கென்று அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“எங்கே ஓடுற என்னைவிட்டு??”

“உங்களால பிடிக்க முடியலைல”

“பிடிக்க முடியாம எல்லாம் இல்லை. ஆனா இந்த விளையாட்டு நல்லா இருந்துச்சேன்னு தான் பேசாம இருந்தேன்”

“அய்யே போங்க போங்க பிராடு பிடிக்க முடியலை இவரு கதைவிடுறாரு”

“ஏய் நிஜமா தான்டி சொல்றேன். இந்த மாதிரி ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் நான். காலையில நேரத்துல பரபரப்பில்லாம நீ இருக்கும் போது இப்படி சின்ன சின்ன ரொமான்ஸ் அழகு தான்ல”

“அப்படின்னா என்ன சொல்ல வர்றீங்க. நான் வேலைக்கு போகாம இருக்கறது தான் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றீங்களா”

“ஹேய் நான் எப்போ அப்படி சொன்னேன். அதுக்கு மீனிங் அதில்லை. இவ்வளவு நாளா ஏதேதோ வேலையில நம்மோட சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்காம விட்டுட்டோம்ன்னு எனக்கு தோணுது”

“சாதாரண கணவன் மனைவியாய் நாம அதிகம் பேசிக்கவுமில்லைன்னு எனக்கு தோணுச்சு. இனிமே இதெல்லாம் நான் மிஸ் பண்ண தயாராயில்லை”

“அதுக்கு??”

“அதுக்கெல்லாம் இல்லை. எல்லாம் இதுக்கு தான்” என்றவன் அவள் இதழ்களை முற்றுகையிட்டு அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான்.

ஆத்திரேயன் குளித்துவிட்டு வர மெல்லினா அவனுக்கு காலை டிபனை தயார் செய்து முடித்திருந்தாள். தொலைக்காட்சியை இயக்கி ஒவ்வொரு சேனலை மாற்றிக்கொண்டு வந்தவள் அந்தப்பாடலை கேட்டதும் மெய் மறந்து அதை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

“ஹேய் கண்ணம்மா என்ன கூப்பிட கூப்பிட திரும்பாம இருக்கே??”

“எனக்கு பிடிச்ச பாட்டும் படமும் ஓடுது” என்றாள் அவனிடத்தில்.

“இந்த பாட்டா உனக்கு பிடிக்கும்” என்றவன் அதைக்கேட்க பாடல் முடிந்து படம் ஓட ஆரம்பித்தது.

“அடிப்பாவி என்ன படம்டி இது” என்றவனை முறைத்தாள் அவன் மனைவி.

“உங்களுக்கு இதெல்லாம் புரியாது” என்றுவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.

“உனக்கு பாக்கியராஜ் படம்ன்னா ரொம்ப பிடிக்குமா”

“அப்படியெல்லாம் இல்லை”

“அப்படியென்ன ஸ்பெஷல் இந்த படத்துல அவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்றே” என்று அவன் கேட்கும் போது விளம்பர இடைவேளை வர அப்போது தான் அவன் புறம் பார்வையை திருப்பினாள் அவன் மனைவி.

“பிடிக்கும் ஏன் பிடிக்கும்ன்னு நீங்க கண்டுப்பிடிங்க”

“ஹேய் என்ன விளையாடுறியா திருடனை கண்டுப்பிடிக்கற போலீசைப் பார்த்து உன் மனசுல உள்ளதெல்லாம் கண்டுப்பிடிக்க சொல்றே. அது தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட கேட்கப் போறேன்”

மெல்லினா அவனருகே வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்தவனின் தொடை மீது அமர்ந்துக்கொண்டு அவன் கழுத்தில் இரு கைகளையும் மாலையாய் போட்டுக் கொண்டவள் அவன் கண்களை நேருக்கு நேராய் நோக்கினாள்.

ஆத்திரேயன் ஆச்சரியப்பட்டு போனான் அதில் தெரிந்த எல்லையில்லா காதலில். அவள் முகத்தில் அவன் மீதான அளவில்லா நேசம் தெரிய அவள் கண்கள் கனிந்து முகம் அவ்வளவு பொலிவாய் இருந்தது. அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவில்லை.

அவளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்பது போல அவன் விழிகளும் அசையாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. 

“எனக்கு ஏன் பிடிக்கும்ன்னு நீங்க கண்டுப்பிடிங்க. ரொம்ப நாளா என்கிட்ட நீங்க கேட்டுட்டு இருந்த கேள்விக்கு பதில் அதில இருக்கு. நீங்க கண்டுப்பிடிச்சிட்டா உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திட்டு இருக்கு” என்றவள் எழப்போக அவள் இடைப்பற்றி தடுத்தான் ஆத்திரேயன்.

“இன்ப அதிர்ச்சின்னு சொன்னியே அதை இப்போவே சொல்லு”

“அதுக்கெல்லாம் கால நேரமிருக்கு, நீங்க கண்டுப்பிடிங்க நான் சொல்றேன்”

“எப்போ??”

“நீங்க கண்டுப்பிடிச்சதும்”

“அப்பவும் நீ சொல்ல மாட்டியா??”

“சொல்வேன் நீங்க கண்டுப்பிடிக்கலைன்னா. இன்னும் இருபது நாளிருக்கு அதுக்குள்ள கண்டுப்பிடிங்க”

“இருபது நாளா அதென்ன கணக்கு??”

“உங்க பிறந்தநாள் வருதே”

Advertisement