Advertisement

22

“எக்ஸ்க்யூஸ் மீ எனக்கு பிரசாத்தை பார்க்கணும்”

“நீங்க யாரு மேடம்??”

“அவரோட கசின்”

“மே ஐ நோ யூவர் நேம் ப்ளீஸ்”

“மெல்லினா” என்று மெல்ல இதழ் வளைத்து சொன்னவளுக்குள் லேசாய் குறுகுறுப்பு.

‘இந்த பொண்ணுக்கு என்னைப் பத்தி தெரியலை போல. டிவி நியூஸ் எல்லாம் பார்க்க மாட்டா போல. பார்த்திருந்தா இவளும் என்னை ஏளனமா பார்த்திருப்பா’ என்று எண்ணிக் கொண்ட மெல்லினா அந்த வரவேற்பை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் வரவேற்பு பெண் போனில் பேசிவிட்டு இவளிடம் திரும்பியவள் “மேம் சார் ஒரு பைவ் மினிட்ஸ்ல வர்றேன்னு சொன்னாங்க. உங்களை வெயிட் பண்ண சொன்னாங்க” என்று சொல்ல இருக்கையை சுட்டிக்காட்ட மெல்லினா அங்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் இவள் முன் வந்து நின்றவனின் முகம் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார் தான் வந்ததும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தார், அவ்வளவு கூட்டத்தில் அவள் அவனை கவனித்து பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

“ஹலோ” என்றவாறே அவள் முன் வந்து நின்றிருந்தான் பிரசாத்.

“என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு??”

“ஞாபகத்துல வைச்சுக்கற அளவுக்கு என்ன இருக்கு. தெரியும் சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க??” என்றான் அவன் ஒட்டாத குரலில்.

“கொஞ்சம் வெளிய போய் பேசலாமா??”

“எதுக்கு?? உன்கிட்ட வெளிய போய் பேசவெல்லாம் எனக்கு டைமில்லை”

“ஓஹோ அப்புறம்”

“என்ன நான் கதையா சொல்லிட்டு இருக்கேன்”

“பின்ன நான் நேர்ல உங்களை பார்க்க வந்திருக்கேன். அதுவும் உங்க ஆபீஸ்க்கு அப்போவே தெரியலையா ஏதோ முக்கியமா பேச வந்திருக்கேன். வீட்டில உங்களை வந்து பார்க்க முடியாமையா இங்க வந்திருக்கேன். ரொம்ப ஓவரா பண்றீங்க” என்று இவள் திருப்பிக் கொடுத்தாள்.

“இப்போ என்ன பேசணும் பேசுங்க??”

“உங்க குடும்ப விஷயத்தை உங்க ஆபீஸ்லவே பேசணுமா??”

“என் குடும்ப விஷயத்தை பத்தி பேச நீ யாரு??”

“ஹலோ அதெல்லாம் அப்புறம் சொல்றேன். உங்க ஆபீஸ்ல சொல்லிட்டு வரணும்ன்னா சொல்லிட்டு வாங்க நான் வெயிட் பண்ணுறேன்”

“நீ வந்தது ஆதிக்கு தெரியுமா??” என்றான் அவன் சம்மந்தமேயில்லாமல்.

“தெரியாது”

“அவனுக்கு தெரியாம நீ என்னை எதுக்கு பார்க்க வந்தே??”

“சித்ராக்காவோட ஹஸ்பன்ட் நீங்க தானே. பேசாம வாங்க சார் உங்களை யாரும் எதுவும் செஞ்சிட போறதில்லை” என்று கடுப்பாய் மொழிந்துவிட்டு அவள் நின்றிருக்க அவன் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு வெளியில் வந்தான்.

“எதிர்ல ஒரு பார்க் இருக்கு அங்க போய்டுவோம்”

“ஹலோ என்னை என்ன நினைச்சுட்டு இருக்கே நீ??”

“பேசாம நீங்க வரலை அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை” என்று அவள் சொல்ல அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.

மெல்லினாவின் வேலை போனவிதம் எல்லாம் அவனுமே அறிவான். தொலைக்காட்சி செய்தியில் எல்லாம் பார்த்திருந்தான் தானே. அதன் பொருட்டு தான் அவளை அவனுக்கு பிடிக்கவில்லை.

பார்கவியின் வீட்டினரை முன்பே அவனுக்கு அவ்வளவாக பிடிக்காது. போலீஸ்க்கார சம்மந்தம் வேண்டாம் என்று அப்போதே சொல்லியிருந்தான். நல்ல குடும்பம் அது இதென்று சொல்லிவிட்டிருந்தார் பார்கவியின் தந்தை. தவிர மாப்பிள்ளை ஒன்றும் அந்த உத்தியோகத்தில் இல்லையே என்று வேறு சொல்லியிருக்க அதன்பின் அவன் அதில் பெரிதாய் தலையிட்டிருக்கவில்லை.

“உட்காருங்க”

“அதுக்கு தான் இங்க வந்தோமோ??” என்றான் காலில் சுடு தண்ணீர் ஊற்றியது போல தையத்தக்கா என்று குதித்துக் கொண்டு.

“உங்க வீட்டில என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா”

“என் வீட்டைப்பத்தி உனக்கென்ன தெரியும். அதைப்பார்த்துக்க தான் நான் இருக்கேன். உனக்கு என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போ”

“இப்படித்தான் பேசுவீங்களா நீங்க எப்பவும். ஆமா சித்ராக்கா யாரு உங்களுக்கு”

“என்ன தெரியணும் உனக்கு??”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“என் பொண்டாட்டி”

“நீங்க அவங்களோட புருஷன் தானே”

“நான் சொன்னதுக்கும் அர்த்தம் அதான்னு நினைக்கிறேன்” என்றான் அவன் நக்கலாய்.

“வீட்டுக்கு போனா உங்களை யார் பார்த்துக்குவாங்க”

“நான் என்ன சின்ன குழந்தையா என்னை யார் பார்த்துக்கணும். என்னை நானே பார்த்துக்குவேன்”

“ஓ!! அப்போ உங்களுக்கு தேவையான சாப்பாடு, டிபன் எல்லாம் நீங்களே தான் செஞ்சு சாப்பிடுவீங்களா. துணி நீங்களே துவைச்சுப்பீங்களா”

“அதெல்லாம் நான் ஏன் செய்யணும் அதுக்கு தான் என் பொண்டாட்டி இருக்காளே. நான் என்ன சும்மாவா இருக்கேன், வேலைக்கு போயிட்டு நானே டயர்டா வருவேன் இதுல இதெல்லாம் வேற நான் செய்யணுமா”

“உங்க வைப் எப்படி?? உங்க மூடை பார்த்து நீங்க எப்படி இருப்பீங்கன்னு அவங்களுக்கு புரியுமா??”

“உங்களுக்கு என்ன தான் வேணும் எங்களோட அன்னியோன்னியத்தை பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கற. எங்களுக்கு நடுவுல எதுவும் ப்ளே பண்ண நினைக்கறியா. பார்கவி உன்னைப்பத்தி நல்லவிதமா சொன்னா நீ என்ன இப்படி இருக்கே??”

“என்னைப்பத்தி நீங்க என்ன வேணும்ன்னா நினைச்சுக்கோங்க, ஐ டோன்ட் மைன்ட் உங்க வீட்டில என்ன நடக்குதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். அதைச் சொல்லத்தான் வந்தேன்” என்றவள் பார்கவி தன்னிடம் சொன்னதை அப்படியே அவனிடத்தில் சொல்ல அதை கேட்டிருந்தவன் முகத்தில் ஈயாடவில்லை.

தன் மனைவி எதுவும் தன்னிடம் சொல்லவில்லை என்ற கோபம் வேறு. இப்படியொரு விஷயத்தை அடுத்தவரிடம் சொல்லும் தைரியம் இருந்தவளுக்கு தன்னிடம் சொல்ல முடியவில்லையா என்ற ஆதங்கம் பெரும் கோபத்தை கிளறிவிட்டிருந்தது அவனிடத்தில்.

“அவளுக்கு அவ்வளவு கொழுப்பு ஆகி போய்டுச்சுல்ல. வீட்டில நான் ஒருத்தன் இருக்கேன் என்கிட்ட எதையும் சொல்லாம இப்படி ஊரெல்லாம் சொல்லி என் மானத்தை வாங்கியிருக்கா. எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சிருக்கா” என்று கத்தியவன் வேகமாய் எழ “உட்காருங்க” என்று அதட்டினாள் மெல்லினா.

“இங்க பாருங்க உங்ககிட்ட அவங்க ஏன் மறைச்சாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா எதுக்காக மறைச்சாங்கன்னு எனக்கு கெஸ் பண்ண முடியுது. ஏன் சார் நீங்க வீட்டுக்கு போனதும் உங்களை கவனிச்சுக்கற பொண்டாட்டியோட முகம் சந்தோசமா இருக்கா, கவலையா இருக்கா, அவ சிரிக்கிறாளா இல்லை அழறாளான்னு கூட தெரிஞ்சுக்காத நீங்கெல்லாம் என்ன புருஷன்”

“உங்க முகம் பார்த்து அவங்க நடந்துக்கணும் ஆனா நீங்க அப்படி நடந்துக்க மாட்டீங்க என்ன நியாயம் உங்க நியாயம். கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் உருகி உருகி லவ் பண்ண வேண்டியது இல்லை கடலை போட வேண்டியது நீ இல்லாம நான் இல்லை நீ தான் எல்லாமேன்னு”

“ஆனா அதுவே கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகு அதே பொண்ணு கூட பேசக்கூட உங்களுக்கு நேரமிருக்கறதில்லை. பிரண்ட்ஸ் கிரிக்கெட்ன்னு போய்டுவீங்க”

“எனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. வேலை முடிஞ்சா வீட்டுக்கு தானே போறேன். சண்டே ஒரு நாள் தான் என் பிரண்ட்ஸ் பார்க்க முடியுது. அது ஒரு தப்பா”

“கெட்ட பழக்கத்தைவிட ரொம்ப தப்பானது மனைவி குழந்தைகளை கவனிக்காம இருக்கறது”

“நான் அப்படியில்லை அவங்களுக்கு என்ன தேவையோ அதை நான் தான் பார்த்துக்கறேன்”

“அப்படி நீங்க பார்த்திருந்தா விஷயம் இந்த அளவுக்கு வந்திருக்காது”

“எனக்கு புரியலை இதுல என் மேல என்ன தப்பிருக்கு. எந்த xxxxxx செஞ்ச வேலைக்கு நானும் என் குடும்பமும் என்ன பண்ணுவோம்”

“ரொம்ப நல்லா ஒண்ணு சொன்னீங்களே. என்னது அது சண்டே ஒரு நாள் தான் என் பிரண்ட்ஸ் பார்க்க முடியுதுன்னு. அந்த ஒரு நாள் முழுக்க தான் நீங்க வீட்டில இருக்கறதும் அன்னைக்கும் நீங்க வெளிய போய்ட்டா எப்படி சார்”

“மத்த ஆறு நாளும் அம்மாவும் பொண்ணும் தான் வீட்டில இருப்பாங்க. சண்டேவும் அதே தான் அவங்களுக்கு நிலைமை. கல்யாணம் பண்ணா மட்டும் போதாது குடும்பத்தோட நேரத்தை செலவழிக்கணும்”

“ஒரு வாரம் லீவு போட்டு அவங்களை வெளியூர் கூட்டிட்டு போய் சந்தோசப்படுறது மட்டும் போதாது. அந்த சந்தோசத்தை வீட்டில இருக்கும் போதும் கொடுக்கலாம். அவங்களோட நீங்க இருக்கற நேரம் தான் அவங்களோட சந்தோசமே அது உங்களுக்கு புரியலையா”

எல்லாம் பேசி முடித்தவள் இறுதியாய் “ஒரு விஷயம் சொன்னேனே அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க. ஐ மீன் உங்க வைப்”

அவன் கைக்காட்டி அவள் பேச்சை நிறுத்தினான். “எனக்கு அவளை நல்லா தெரியும். அவ தப்பானவ இல்லை. இந்த ஏன் என்கிட்ட மறைச்சான்னு எனக்கு தெரியலை. நான் வீட்டுக்கு போகணும் அவளை பார்க்கணும்” என்று ஒரெட்டு வைக்கப் போனவனை நிறுத்தினாள் மெல்லினா.

“நான் அதிகமா பேசிட்டேன் ஆனா தப்பா எதையும் நான் சொல்லிடலை. உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சிருங்க. அந்த வீடியோ பிரச்சனையை பத்தி இனி நீங்க கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கறேன்”

“நீ பேசினது எனக்கு கோபத்தை வரவழைச்சாலும் நீ சொன்னதுல உண்மை இருந்துச்சு. நீ எனக்கு பண்ண உதவிக்கு நன்றிமா. அந்த வீடியோ ப்ரோப்ளத்தை இனி நானே பார்த்துக்கறேன், அவனை கொன்னு போடணும்” என்று அவன் பல்லைக்கடிக்க “வேணாம் விட்டிருங்க”

“உங்களுக்கு குடும்பமிருக்கு நீங்க அவங்களை பாருங்க. உங்க கல்யாணம் ஆன புதுசுல நீங்க வெளிய போய் இருக்கும் போது சித்ராக்கா இடுப்புல ஒருத்தன் கைய வைச்சுட்டான்னு நீங்க அவனை புரட்டி போட்டு அடிச்சதும் அந்த விஷயம் போலீஸ் கேஸ் ஆனதும் அப்புறம் நீங்க வெளிய வந்ததும் பார்கவி அக்கா சொல்லி எனக்கு தெரியும்”

“ஒரு வேளை சித்ராக்கா அதெல்லாம் யோசிச்சுக்கூட உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லாம விட்டிருக்கலாம். அதே மாதிரி இப்பவும் எதையாச்சும் நீங்க செஞ்சு வைச்சுடாதீங்க”

“எனக்கு செஞ்சவங்க யாருன்னு தெரியும். அவங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி நான் கவனிச்சுக்கறேன்”

“தெரியுமா யார்ன்னு உனக்கு தெரியுமா. சொல்லுமா யாரு அவங்க”

“வேணாம் விட்டிருங்க உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். ப்ளீஸ் உங்க குடும்பத்தோட நீங்க சந்தோசமா இருங்க”

“எப்படிம்மா திரும்ப அந்த வீட்டில நாங்க இருக்கறது. அவங்க எங்க வீடியோ வைச்சிருக்காங்கன்னு தெரியலையே”

“அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க. அவங்களோட தேவை முடிஞ்சு போச்சு”

“எனக்கு புரியலை”

“என் வேலை போகணும் அது அவங்க நினைச்ச மாதிரி நடந்திருச்சு. இனி அக்காவை அவங்க தொந்திரவு செய்ய மாட்டாங்க. அதுக்கும் மேல அவங்க அதை தொடர நானும் விட மாட்டேன். நீங்க வீட்டுக்கு போங்க” என்று அவனை அனுப்பிவிட்டவள் விக்ரமிற்கு அழைத்தாள்.

Advertisement