Advertisement

“ஏன்க்கா இப்படி பண்ணுறே?? பயப்படுறியா நீ??எனக்கே ஆறுதல் சொல்றவ நீ இப்படி பயப்படலாமா??”

“இல்லை கவி பயப்படலை என்னோட வீடியோவை ஊரே பார்க்கும் கவி அதை நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு கவி”

“அக்கா ஊரே பார்க்கும்ன்னு பயப்படுற, அப்போ அந்த பரதேசி பார்த்ததுக்கு என்ன பண்ணுவே”

“அதனால தான் நான் செத்து போகணும்ன்னு நினைச்சேன்”

“நீ செத்திட்டா எதுவும் இல்லைன்னு ஆகிடுமா. முட்டாளாக்கா நீ??”

“ஐயோ கவி அது மட்டுமில்லை அவங்க என்னை வித விதமா வீடியோ எடுத்து வைச்சிருக்காங்கடி. நான் பயந்து பயந்து தான் இந்த வீட்டுக்குள்ளவே இருக்கேன். தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறேன் தெரியுமா. உங்க மாமாவை கூட என் பக்கத்துல நான் விடுறதில்லை கவி” என்று கண்கள் கலங்க சொன்னவளை பரிதாபமாகப் பார்த்தாள் மற்றவள்.

“இந்த ரெண்டு மாசமா எனக்கு டார்ச்சர் தான் கவி. அவங்க சொன்ன எதையும் நான் கேட்கலை, அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா எனக்கு… எனக்கு ஒரு லிங்க் அனுப்பினாங்க. அதை ஓபன் பண்ணா என்னோட பார்ன் வீடியோவை அந்த சைட்ல அப்லோட் பண்ணிட்டாங்கா கவி”

“அக்கா!!” என்று அதிர்ந்தாள் அவள்.

“இது வெறும் சாம்பிள் தான் நீ சரின்னு சொன்னா இதை இப்போவே தடம் இல்லாம அந்த சைட்ல இருந்து ரிமூவ் பண்ணிடறேன்னு சொன்னாங்க. நானும் வேற வழியில்லாம சரின்னு சொல்லிட்டேன் கவி”

“எதுக்கு சரின்னு சொன்னே??”

“வேற வழி எனக்கு தெரியலை கவி. அங்க சைட்ல வீடியோ போட்ட ரெண்டே நிமிஷத்துல எனக்கு லிங்க் வந்திடுச்சு ஆனா அதுக்குள்ளே அதை எவ்வளவு பேர் பார்த்திட்டாங்க தெரியுமா. கீழ அசிங்க அசிங்கமான கமெண்ட்ஸ் வேற செத்துட்டேன் கவி நான் அப்போவே செத்துட்டேன்”

“பொம்பளைபிள்ளைய பெத்து வைச்சிருக்கேன் கவி. அவளோட வாழ்க்கையை நினைச்சு பார்த்தேன். எவ்வளவு அசிங்கம்ன்னு யோசிச்சு பாரு. அதான் சரின்னு சொல்லிட்டேன்”

“நேத்து அவங்க சொன்ன இடத்துக்கு போயிட்டேன். வே… வேற ஒரு ஆளு அங்க வந்தான்…” என்றவள் அந்த தருணத்தை நினைத்து நினைத்து அவமானத்தில் அழுதாள்.

“அக்கா ப்ளீஸ்க்கா”

“என் மேல அவன் கை வைச்சப்போ சத்தியமா முடியலை கவி. நான் அங்க இருந்து ஓடி வந்திட்டேன். நைட் எல்லாம் யோசிச்சு தான் செத்து போகணும்ன்னு முடிவு பண்ணேன். நீ வந்தே, குழந்தையை விட்டு என்ன பண்ணுறேன்னு நீ கேட்டது என் காதுல விழுந்துச்சு”

“அச்சோ இந்த உலகத்துல என் குழந்தையை தனியாவிட்டு போக போறேனே அவளை கூட்டிட்டு போய்டலாம்ன்னு தோணிச்சு” என்று அவள் சொல்லவும் “வாயை மூடுக்கா என்ன பேசறே நீ??” என்றுவிட்டு தமக்கையின் வாயை மூடினாள் பார்கவி.

சரியாய் அப்போது சித்ராவின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவளின் முகம் பல கோணங்களுக்கு சென்றதை பார்த்ததுமே புரிந்து போனது பார்கவி. அவளிடமிருந்து போனை வாங்கியவள் அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஹலோ என்ன மேடம் அப்படியே தப்பிச்சு ஓடிறலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா??” என்றது எடுத்ததுமே.

“ஹலோ நான் பார்கவி சித்ராவோட தங்கை”

“ஹேய் வாவ் ஒரே கல்லுல ரெண்டு மாங்காவா??” என்று எக்காளமிட்டது எதிர்முனை.

“செருப்பு பிஞ்சிடும்”

“ரொம்ப பழசு தான் ஆனாலும் சொல்றேன் புதுசா பல ஜோடி செருப்பு வாங்கித் தர்றேன் சரியா” 

“உனக்கு என்ன வேணும்??”

“ரெண்டு பேரும் வந்தாலும் ஓகே தான்”

“உனக்கு நேரம் சரியில்லை எங்க அக்காவை மிரட்டின மாதிரி என்கிட்ட பேசாதே. என் புருஷனோட தம்பி ஏசியா இருக்கார்”

“ஸ்பிலிட் ஏசியா இல்லை விண்டோ ஏசியா”

“ஹேய்”

“ஓ!! அப்படி கேட்கக் கூடாதோ அப்போ இப்படி கேட்கவா… வேர்பூலா, வோல்டாஸா இல்லை சாம்சங்கா” என்றுவிட்டு அவனே சிரித்துக்கொண்டான்.

“ஓகே ஜோக்ஸ் எல்லாம் தள்ளி வைச்சிடுவோம். உன் பேரு என்ன சொன்னே??”

“எதுக்கு??”

“எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டல்ல நான் பதில் சொல்லணுமா வேணாமா??”

“சொல்லு”

“அப்போ உன்னோட பேரை சொல்லு??”

“பார்கவி”

“அட்ரஸ்”

“அது எதுக்கு உனக்கு??” என்றாள் அவள்.

“கவி ப்ளீஸ் எதையும் சொல்லாத” என்று சித்ரா அவளை தடுத்தாள்.

“என்ன சித்ரா எல்லாம் மறந்து போச்சா உனக்கு. வீடியோஸ் எல்லாம் ஒரே கிளிக்ல உன் புருஷனுக்கு அனுப்பிடவா. சூட சூட நேத்து எடுத்த போட்டோவும்” என்று அவன் சொல்ல பார்கவி தமக்கையை பார்த்தாள்.

“என்னடா சொல்றே??”

“நேத்து எதுவும் நடக்கலை தான் ஆனா அதுக்கு முன்னாடி வரைக்கும் நீ ஒருத்தனோட அதே ரூம்ல தானே இருந்தே. அவன் உன்னை தொட்ட வரைக்கும் நடந்ததெல்லாம் இருக்கே அதை எதுக்கு சும்மா வேடிக்கை பார்க்க வைச்சிருக்கோம்ன்னு நினைச்சியா” என்றான் அவன்.

சித்ரா அதைக்கேட்டதும் படீர் படீரென தன் தலையில் அடித்துக்கொண்டு அழ “ஏய் உனக்கு என்ன வேணும் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணுறே??” என்று கத்தினாள் பார்கவி.

“உன்னைப்பத்தி சொல்லு உன் புருஷன் தம்பி போலீஸ்ன்னு சொன்னியே அவன் எங்க இருக்கான் அவன் பேரென்ன” என்று அவர்கள் கேட்க இவள் எல்லாம் சொன்னாள்.

அதன்பின் தன் தமக்கையை காப்பாற்ற அவர்கள் சொன்னதனைத்தும் செய்திருந்தாள் பார்கவி. நடந்ததை மெல்லினாவிடம் சொல்லி முடித்திருந்தாள்.

—————-

“மெல்லினா என்னை தப்பா நினைக்காத எனக்கு வேற வழி தெரியலை. அக்கா செத்திடுவேன்னு அழறா, அவங்க என்கிட்டவே ரொம்ப மோசமா பேசுனாங்க. எனக்கே அதை கேட்டு பயமா தான் இருந்துச்சு. நான் பண்ணது தப்பு தான் ஆனாலும் செஞ்சிட்டேன்” என்றவளின் கண்கள் கலங்கிப் போனது.

“மெல்லினா இந்த விஷயம் எதுவும் அவருக்கு தெரியாது. தெரிஞ்சா என்னை கொன்னே போட்டிருவாரு” என்று அழுதாள் அவள்.

“அக்கா எதுக்கு அழறீங்க?? நல்லது தானே செஞ்சிருக்கீங்க தப்பில்லை விடுங்க”

“உனக்கு… உன்னோட வேலை போனதுக்கு நான் தானே காரணம்”

“அதுக்கு நீங்க காரணமில்லை என்னை வேலையைவிட்டு அனுப்பணும்ன்னு அவங்க எப்பவோ முடிவு பண்ணிட்டாங்க. அதுக்கு நீங்க ஒரு கருவியா மட்டும் தான் இருந்திருக்கீங்க. நீங்க இல்லைன்னா வேற யாராச்சும் வைச்சு அதை செஞ்சிருப்பாங்க”

“அத்தை எப்படி கையெழுத்து போட்டாங்க?? அவங்களுக்கு எல்லாம் தெரியுமா??”

“இல்லை அவங்ககிட்ட பேங்க் அக்கவுன்ட் இன்ட்ரோவுக்கு லெட்டர் வேணும்ன்னு சொல்லித்தான் கையெழுத்து வாங்கினேன். பிரச்சனை நடந்ததும் அவங்க கண்டுப்பிடிச்சிட்டாங்க. என்னை கூப்பிட்டு கேட்டாங்க, அப்போ தான் எல்லாம் அவங்ககிட்ட சொன்னேன்”

“ஆஸ்பிட்டல் வைச்சு பேசுனீங்களா” என்று யூகித்தவளாய் கேட்டாள். 

“ஹ்ம்ம்” என்று மற்றவள் சொல்லவும் அதை உள்வாங்கிக் கொண்டாள் மெல்லினா.

அவளுக்குமே அங்கு தானே பார்கவியின் மீது சந்தேகம் ஆரம்பித்தது. முதல் இரண்டு நாட்கள் அவளுக்கு உடம்பு சரியில்லாததாலும் ஆதியின் உடல்நிலை குறித்த எண்ணத்திலுமே உழன்றிருந்த மெல்லினாவுக்கு எதுவுமே கண்ணிலோ கருத்திலோ படவேயில்லை.

ஆதி சற்று தெரிய பின்பு தான் அவள் பார்கவியையும் வாசவியையும் கவனிக்கவே ஆரம்பித்தாள். யதேச்சையாக தான் கவனித்தாள். பின்பு அதுவே தொடர்ந்து அவளின் சந்தேகம் வலுப்பெற்று இதோ அது பார்கவியின் வாய் மொழியாலே ஊர்ஜிதமாகியிருன்தது.

“மெல்லினா…”

“எதுவும் ஆகாதுக்கா நான் பார்த்துக்கறேன். எனக்கு தெரியும்ன்னு அவங்களுக்கு தெரிய வேணாம்”

“அக்காவுக்கா”

“இல்லை அவனுங்களுக்கு” என்று யோசித்தவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்ற அடுத்து அதை முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

ஆதி அன்று தான் வேலைக்கு சென்றிருந்தான். அவன் யோசனை முழுதும் சில புள்ளிகளை இணைப்பதிலேயே இருந்தது. புள்ளிகளாய் அவன் யோசித்தது மெல்லினாவிற்கு வேலை போனது, அவனுக்கு நடந்த ஆக்சிடென்ட் மற்றும் வாசவி மெல்லினா உறவின் பிளவு. இதெல்லாம் அவன் வைத்த புள்ளிகள்.

நடந்ததில் மெல்லினாவின் வேலை போனதிற்கு காரணம் வாசவிக்கும் அவளுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் என்று காரணம் வைத்துக் கொண்டாலும் அவனுக்கு நடந்த ஆக்சிடென்ட் அவனை உறுத்திற்று. அது தற்செயலாய் நடந்த விபத்தில்லை என்பதை அவன் நன்கறிவான்.

அவனுக்கு கட்டம் கட்டி தெளிவாய் அவனை தூக்கும் பொருட்டே செய்த செயல் அது என்பதை உணர்ந்திருந்தான். அவன் எப்படி திருப்பியிருந்தாலும் அவ்விபத்து நிகழ்ந்திருக்கும் ஒரு புறம் கார் மறுபுறம் லாரி என்று அணைக்கட்டிதான் நின்றிருந்தது.

அவன் முன்பே சுதாரிக்காது விட்டிருந்தால் அவன் உயிர் இந்நேரம் உடலில் இருந்திருக்காது. யோசித்து யோசித்து தலையை வலித்தது அவனுக்கு. புள்ளிகள் தொடர்பில்லாதது போல தோன்றினாலும் அதை இணைக்கும் கோடு ஒன்று தான் என்று மட்டும் அவனுக்கு உறுதியாய்.

“மே ஐ கமின்” என்ற குரலில் நிமிர்ந்தான் ஆத்திரேயன்.

எதிரில் அவன் நண்பன் நித்தேஷ் நின்றிருந்தான். “என்னடா புதுசா உள்ள வரலாமான்னு கேட்கறே??”

“நீ ஏதோ தீவிரமா யோசிச்சுட்டு இருந்தே. அதான் உன் கவனத்தை கலைக்க அப்படி கேட்டேன்” என்றான் மற்றவன்.

“சரி என்ன யோசனை??”

“ஒண்ணுமில்லை”

“அப்போ நிறைய இருக்கும். சரி அதைவிடு வா ஒரு காபி குடிச்சுட்டு வருவோம்”

“எனக்கு வேணாம்”

“உனக்கு தலைவலிக்குதுன்னு நினைக்கிறேன் ரொம்ப யோசிக்காதே வா” என்று நித்தேஷ் மீண்டும் அழைக்கவும் மறுக்கத் தோன்றவில்லை ஆத்திரேயனுக்கு. எழுந்து அவனுடன் சென்றான்.

“ஆர் யூ பீல் பெட்டர்” என்று காபியை அருந்தி முடித்தவுடன் கேட்டான் நித்தேஷ்.

“எஸ்”

“சொல்லு என்ன யோசனை??”

“அதான் அப்போவே ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே??”

“ஆக்சிடென்ட் பத்தி யோசிக்கறியா??” என்று கேட்டு தானும் போலீஸ் தான் என்று நிரூபித்தான் நித்தேஷ்.

“ஹ்ம்ம்”

“அது யாருன்னு யோசிக்கறியா??”

“ஆமா என் மேல யாருக்கு விரோதம் இருக்கும்ன்னு யோசிக்கறேன்”

“விரோதம் உன் மேல தான் இருக்கணும்ன்னு என்ன அவசியம்” என்ற நித்தேஷின் பதில் ஒரு தெளிவை கொடுத்தது ஆத்திரேயனிடத்தில்.

“எஸ் யூ ஆர் ரைட்” என்றான் ஆத்திரேயன் உற்சாகமாய்.

Advertisement