Advertisement

21

“பிரச்சனை எனக்கில்லை”

“என்ன உங்களுக்கு இல்லையா?? அப்போ யாருக்கு??” என்று ஒரு நொடி யோசித்தவள் சட்டென்று “அப்போ உங்க சம்மந்தப்பட்ட யாருக்கோ தான் பிரச்சனை சரி தானேக்கா??” என்று சரியாய் கணித்து கேட்க பார்கவி ஆமென்றாள். மேலே சொல்லுங்க என்பதாய் அவள் கையசைக்க பார்கவி தொடர்ந்தாள்.

——————-

அது ஒரு அழகிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதி, புதிதாய் கட்டப்பட்டிருந்தது. சில மாதங்கள் தான் ஆகியிருக்கும் அந்த கட்டிடம் கட்டப்பட்டு, அந்த குடியிருப்பின் உள்ளே நுழைந்த பார்கவி பக்கவாட்டில் இருந்த லிப்ட்டுக்குள் புகுந்திருந்தாள். பதினான்கு எண் வரை இருந்த பொத்தான்களில் எண் எட்டை அழுத்த அது மெல்ல மேல் நோக்கிநகர ஆரம்பித்தது.

லிப்ட்டில் இருந்து வெளிப்பட்டவள் இடது புறம் எதிரெதிரே அமைந்திருந்த இரு வீட்டின் புறம் சென்றவள் 8Bயின் காலிங்பெல்லை அழுத்தினாள். கதவு திறக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லை.

உடனே தன் கைபேசியில் குறிப்பிட்ட அந்த எண்ணைத் தேடி எடுத்தவள் அவ்வெண்ணிற்கு அழைப்பு விட முழு அழைப்பும் அடித்து ஓய்ந்தது.

“இந்த அக்கா எங்கே போச்சு?? ரிங் போயிட்டே இருக்கு, திரும்பவும் ட்ரை பண்ணுவோம்” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவள் மீண்டும் தன் உடன்பிறந்தவளின் எண்ணுக்கு அழைப்பு விட அந்நேரம் “சித்தி” என்றவாறே ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஓடிவந்து இவளை கட்டிக்கொண்டது.

“ஹேய் காருண்யா குட்டி எப்படிடா செல்லம் இருக்கீங்க?? ஸ்கூல்ல இருந்து வர்றீங்களா??”

“ஆமா சித்தி”

“யார் கூட வந்தே?? தனியா நீ பாட்டுக்கு வர்றே?? அம்மா உன்னைக் கூப்பிட தான் வந்தாங்களா??”

“இல்லை சித்தி அம்மா வரலை. நான் எதிர்வீட்டு அத்தை கூட வந்தேன்” என்று குழந்தை சொல்லி முடிக்கும் தருவாயில் எதிர்வீட்டு பெண்மணி தன் வீட்டு குழந்தைகளுடன் வந்தார்.

“குட்டி இங்க தான் இருக்கீங்களா. லிப்ட் திறக்கவும் ஓடி வந்துட்டாங்க” என்றவர் அப்போது தான் இவளை கவனித்துவிட்டு “நீங்க சித்ரான்னு நினைச்சுட்டேன் சாரிங்க…”

“பரவாயில்லை இருக்கட்டுங்க”

“நீங்க சித்ராவோட தங்கையா??”

“ஆமா”

“குழந்தையை பார்த்துக்கறீங்களா அவங்கம்மா எங்கயோ வெளிய போறதுனால என்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க”

“நான் பார்த்துக்கறேன்ங்க ரொம்ப தேங்க்ஸ்” என்று பார்கவி சொல்ல “இருக்கட்டுங்க” என்றவர் எதிர்வீட்டை நோக்கிச் சென்றார்.

“அம்மா எங்கே போறேன்னு சொன்னாளா பாப்பா??”

குழந்தை தெரியவில்லை என்பது போல் அவளைப் பார்க்க மீண்டும் தன் தமக்கைக்கு போன் செய்தாள் அவள். சற்று ஊன்றி கவனித்த போது அழைப்பு மணி உள்ளே கேட்கும் சத்தம் இவள் காதில் தெளிவாய் விழ “இந்தக்கா உள்ள தான் இருக்குதா, அப்புறம் ஏன் கதவை திறக்க மாட்டேங்குது. ஒரு வேளை தூங்குதா” என்று தனக்குத்தானே பேசியவள் குழந்தையை பார்த்து “பாப்பா அம்மா தூங்குறாளா என்ன ஆளே காணோமே” என்றாள்.

தமக்கையின் வீட்டு பால்கனி சுவர் பக்கவாட்டில் இருக்க எட்டிப் பார்த்தவள் உள்ளே ஏதும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்தாள். நல்ல வேளையாய் பால்கனி கதவு திறந்தே தானிருந்தது.

“அக்கா… அக்கா என்ன பண்ணுறே கதவை திறக்கா… பாப்பா இருக்கான்னு கூட உனக்கு ஞாபகம் இல்லாம அப்படியென்ன தூக்கம் உனக்கு” என்று இவள் குரல் கொடுக்க சில நிமிடங்கள் கழித்து கதவு திறக்கப்பட்டது.

“அம்மா” என்று குழந்தை பார்கவியின் தமக்கையை கண்டதும் தாவிக்கொள்ள அப்படியே அணைத்துக் கொண்டாள் அவள்.

பார்கவி தமக்கையை பார்க்க அவள் முகம் ஏதோ போலிருந்தது. “என்னாச்சுக்கா ஏன் ஒரு மாதிரியா இருக்கே?? உடம்பு சரியில்லையா” என்று தமக்கை ஊன்றி கேட்கவும் சுதாரித்துக் கொண்டவள் “ஒண்ணுமில்லை” என்றாள்.

“சரி வா” என்று இவள் உள்ளே செல்லப் போக “நீ… நீ இங்க எதுக்கு வந்தே??” என்றாள் அவள்.

“என்னக்கா கேள்வி இது உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்”

“பார்த்தாச்சுல கிளம்பு” என்று அவள் பட்டென்று சொல்ல பார்கவி தன் உடன்பிறந்தவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள்.

“சரி சரி வா” என்றவள் முன்னே சென்றாள்.

சோபாவில் சென்று அமர்ந்தவள் குழந்தைக்கு உடையை கூட மாற்றாது அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“அக்கா என்னாச்சு என்ன யோசனை உனக்கு?? காருண்யாக்கு டிரஸ் மாத்தலையா??”

“ஹான் இதோ மாத்துறேன்” என்றவள் அதே இடத்திலேயே குழந்தையின் உடையை கழற்ற “அம்மா இங்க வேணாம் உள்ள” என்றாள் குழந்தை.

“என்னக்கா என்னாச்சு அவளை விடு நான் பார்த்துக்கறேன் நீ போய் அவளுக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டு வா” என்றவள் சோபாவிலேயே கிடந்த மடிக்காத துணிகளில் இருந்து குழந்தையின் உடையை எடுத்து அவளுக்கு மாற்றிவிட்டாள்.

பின் முகம் கை கால் கழுவிவிட்டவள் “அம்மா உனக்கு சாப்பாடு எடுத்து வைச்சுட்டு இருக்கா, போய் சாப்பிடு” என்று அனுப்பிவிட்டு சோபாவிலேயே உட்கார்ந்து துணிகளை மடித்து வைத்தாள்.

சமையலறையில் இருந்த உணவு மேஜையில் குழந்தையை அமர வைத்து தமக்கை உணவூட்டுவதை அங்கிருந்தவாறே பார்த்திருந்தாள் பார்கவி. மடித்து வைத்த துணிகளை எடுத்து பெட்ரூமில் வைக்க சொல்லலாம் என்று கதவை திறந்தவள் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அங்கு மின்விசிறியில் சுருக்கிட்ட புடவை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் குழந்தைக்கு உணவளித்து முடித்திருந்த சித்ரா சமையலறையில் இருந்து வெளிப்பட்டவள் தங்கையை தேட பார்கவி படுக்கையறையில் இருந்து வெளியில் வரவும் கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டாள் அவள்.

“குழந்தை தூங்குவா தானே, தூங்க வை…”

“இல்லை விளையாடுவா…”

“அப்போ எதிர்வீட்டுக்கு அனுப்பி வை, கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டும்” என்று சொல்ல சித்ரா குழந்தையை கூட்டிச்சென்று அங்கு விட்டு வரவும் முடிச்சிட்டிருந்த புடவையை அவிழ்த்து முடித்திருந்தாள் பார்கவி.

“சாப்பிட்டியா??” என்று சோர்ந்திருந்த தமக்கையை பார்த்து கேட்க ஒரு விரக்தி புன்னகையை பரிசாகக் கொடுத்தாள் அவள்.

“வா” என்றவள் அவளை அமர வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று இருவருக்குமாய் காபியை போட்டு கொண்டு வந்தாள்.

“குடிக்கா” என்றவள் உடன் தான் வாங்கி வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அதையும் அவள் முன் வைத்தாள்.

“எனக்கு வேணாம் கவி”

“சொன்னா கேளு குடி அப்புறம் தெம்பா பேசு”

“எனக்கு தெம்பு வேணாம் எதையும் நான் பேசுற நிலைமையில இல்லை கவி என்னைவிட்டிரு. நானெல்லாம் உயிரோடவே இருக்கக்கூடாது” என்று முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அவள் அழ பார்கவியின் கண்கள் வாசல் புறம் சென்றது பூட்டியிருக்கிறதா என்று.

கதவு பூட்டியிருக்கவும் தான் நிம்மதி கொண்டவள் எழுந்து வந்து சித்ராவின் அருகே அமர்ந்துக் கொண்டாள். ”அக்கா என்னாச்சுன்னு சொல்லுக்கா. எதுக்கு இப்படி அழறே?? மாமா எதுவும் சொன்னாரா?? உங்களுக்குள்ள எதுவும் சண்டையா??”

“இல்லை” என்று அழுகையினூடே சொன்னாள்.

“அப்புறம் எதுக்குக்கா அழறே?? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா?? இல்லை உங்களுக்கு பணப்பிரச்சனை எதுவுமா?? எதுவா இருந்தாலும் சொல்லுக்கா”

“சொந்தமா வீடு வாங்கப் போறேன்னு சந்தோசமா சொன்னியேக்கா. அதுனால எதுவும் பணமுடையா??”

“வீடு… அந்த வீடு தான் எல்லாத்துக்கும் காரணம்… எப்போ இந்த வீட்டுக்கு வந்தோமோ அப்போ ஆரம்பிச்சது எங்களுக்கு சனி” என்று ஆவேசமாய் கத்தினாள் இப்போது.

“அக்கா மெதுவா பேசு எதுக்குக்கா இப்படி டென்ஷன் ஆகுறே”

“முடியலை கவி என்னால. வீடு வாங்கிட்டோம் ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டோம்ன்னு நினைச்சு சந்தோசப்படுறதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சுடி”

“என்னன்னு சொல்லுக்கா எனக்கு தலையும் புரியலை வாலும் புரியலை”

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு வீடியோ வந்துச்சு கவி”

“சரி”

“அந்த வீடியோவுல நானும் உங்க மாமாவும் பெட்ரூம்ல இருந்த வீடியோ இருந்துச்சு”

“என்ன?? என்னக்கா சொல்றே?? யார் எடுத்திருப்பா அதை?? மாமாவா??”

“அவர் ஏன் அதெல்லாம் செய்யணும் கவி?? அவர் அப்படி ஆளில்லை. எடுத்தது யாரோ எப்படி எடுத்தாங்கன்னு எனக்கு தெரியலை”

“சரி அதைவைச்சு உன்னை மிரட்டினாங்களா என்ன??”

“மிரட்ட தான் செஞ்சாங்க ஆனா முதல்ல நான் பயப்படவே இல்லை”

“நல்லதுக்கா அப்படித்தான் இருக்கணும். மாமாவோட இருந்த வீடியோவை எடுத்து வைச்சுட்டு மிரட்டுறதுக்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். நீ பயப்படாம இருந்தது தான் சரிக்கா”

“முழுசா கேளு கவி. நானும் உன்னை மாதிரி தான் அவங்ககிட்ட பேசினேன், என் புருஷனோட இருந்ததை எடுத்தேன்னு நான் போலீஸ் போவேன் நீ தான் மாட்டுவேன்னு மிரட்டவும் செஞ்சேன்”

“அதுக்கு முன்னாடி நீ வேற யாரோடவோ இருந்த மாதிரி நாங்க இதை மாத்தி இன்டர்நெட்ல போட்டிருவோம்ன்னு சொன்னவங்க கொஞ்ச நேரத்துல வேற ஆளோட முகத்தை மாத்தி அதே வீடியோவை எனக்கு அனுப்பிவிட்டாங்க”

“பார்த்த எனக்கு எப்படி இருக்கும்ன்னு சொல்லு. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. உங்க மாமா வந்ததும் சொல்வோம்ன்னு நினைச்சுட்டு இருக்கேன் எனக்கு மறுபடியும் ஒரு போன்”

“உன் புருஷன் வந்ததும் அவன்கிட்ட சொல்லிடலாம் எல்லாம் சரியாகிடும்ன்னு மனக்கணக்கு போடுறியா. உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டிருவோமா, நீ வேற ஆள் கூட இருக்கற மாதிரி வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்புவோம். அதைப் பார்த்தா அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு யோசிச்சு பாருன்னு சொல்லி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க”

“உங்களுக்கு என்ன தான்டா வேணும். என்னை ஏன் இப்படி படுத்தறீங்கன்னு கேட்டேன்”

“அதுக்கு அவங்க சொன்ன பதில் என்ன தெரியுமா” என்றவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

“அக்கா அழாதேக்கா என்னன்னு சொல்லு. என்ன பண்ண முடியும்ன்னு பார்க்கலாம்க்கா”

“ஒண்ணுமே பண்ண முடியாது கவி இனிமே ஒண்ணுமே பண்ண முடியாது. போச்சு எல்லாமே போச்சு, அவங்க என்ன கேட்டாங்க தெரியுமா, என்னையே கேட்டாங்க கவி என்னையே கேட்டாங்க. அதுவும்… அதுவும்… நான்… என்னை… இன்னொருத்தர் கூட ப…” என்று திக்கியவள் முடிக்க முடியாமல் கதறி அழ அவளை எழுந்து சென்று தன் மீது சாய்த்துக் கொண்டாள் பார்கவி.

“ஏதோ பணம் காசு கேட்கறாங்க போலன்னு நினைச்சேன். இப்படி எப்படி கவி என்னைப் பார்த்து அவங்க அப்படி கேட்டாங்க. என்னால முடியலை நான்… நான் இதை செய்யலைன்னா என்னோட வீடியோவை அவர்க்கு அனுப்பிடுவேன்னு சொல்றாங்க”

“அக்கா நீ சொல்றது தானே எங்க வீட்டில போலீஸ் இருக்காங்கடா அவங்ககிட்ட சொன்னா என்னாகும்ன்னு தெரியுமான்னு சொன்னியா நீ”

“கவி என்னை மாதிரியே நீயும் அப்பாவியா இருக்கே கவி. அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு, தெரிஞ்சே தான் செஞ்சிருக்காங்கடி. நீ போலீஸ்கிட்ட போனா புதுசா எதுவும் நடக்காது உன்னோட வீடியோ இந்தியாவுல மட்டுமில்லை கடல் கடந்தும் போய்டும்ன்னு சொன்னாங்க”

“அக்கா அப்படியெல்லாம் செய்ய முடியாதுக்கா நாம போலீஸ்கிட்ட போனா அவங்க எல்லாம் பார்த்துப்பாங்க இதெல்லாம் நடக்கவே விடாம அவங்க செஞ்சிடுவாங்கக்கா. நான் இப்போவே ஆதிகிட்ட பேசறேன்” என்று தன் போனை எடுக்கப் போனவளிடமிருந்து போனை பிடுங்கினாள் சித்ரா.

Advertisement