20

விஸ்வநாதன் அவளிடம் பிட்னஸ் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அவளுக்கு சங்கடமாக இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது.

அவளைப்பற்றிய தகவலை வெளியே கசியவிடவும் இல்லை. அதற்காக தன் வேலையை அவர் பார்க்காமலும் இல்லை. விஸ்வநாதன் எளிதில் ஒருவரை நம்பிவிடுவதில்லை என்பதை அவள் அறியாள்.

அவள் உறவினள் என்பதால் அவர் அதை செய்திருக்கவில்லை. அவள் வேலைக்கு கொடுக்கும் மரியாதையும் தொழில் மீதான அவளின் பக்தியும் அக்கறையும் அவரை கவனிக்க செய்திருந்ததால் மட்டுமே அவர் அவளுக்கு சலுகைகளை கொடுத்தார்.

உறக்கம் வராது அமர்ந்திருந்தவளின் எண்ணம் விக்ரமை நோக்கிச் செல்ல அந்த இரவு நேரத்திலும் அவள் முகம் கோபத்தில் தணலாய் தகித்தது.

செய்தித்தாளில் வந்த செய்தியை பார்த்த பின்னர் அவளால் எங்குமே வெளியில் செல்ல இயலவில்லை. ‘உன் புருஷனை நீயே கொலை பண்ண முயற்சி பண்ணியாமே’ என்று நேரடியாக சிலரும் அவளின் முதுகுக்கு பின்னே பலருமாக பேசியது அவளை காயப்படுத்தவே செய்தது.

அவளை மட்டுமல்லாது வீட்டினரையும் அது பாதிக்க மேலும் இரண்டு வாரங்கள் சென்றது. ஆத்திரேயன் முன்பைவிட நன்றாகவே தேறியிருந்தான். அவனின் காயங்கள் ஆறி தழும்பாகியிருந்தது.

வாசவி ஏதோ முடிவுக்கு வந்திருந்தவராக வீட்டினர் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டியிருந்தார். அன்றைய நிகழ்வுக்கு பிறகு அவர் மெல்லினாவிடம் எதுவும் பேசுவதில்லை. இருவரும் சேர்ந்தே சமையலறையில் இருந்தால் கூட அவர் பேச முயன்றதில்லை.

“என்னம்மா பேசணும்ன்னு சொல்லி எங்க எல்லாரையும் வரச்சொல்லிட்டு எதை யோசிச்சுட்டு இருக்கீங்க. அடுத்து என்ன கம்பிளைன்ட் பண்ணுறதுன்னா” என்று சும்மாயில்லாமல் வாயைவிட்டான்.

ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறுக்காய் வருந்திக் கொண்டிருக்கும் வேளையில் மற்றவர் அதைச் சொல்லி சொல்லே காயப்படுத்துவர். அவரும் அதை வேண்டுமென்று செய்வதில்லை ஒரு வேகத்தில் பேசிவிடுவர். வாசவியும், ஆத்திரேயனும் அந்நிலையில் தானிருந்தனர்.

மெல்லினா திரும்பி தன் கணவனை முறைக்க பேசிய பின்பே உணர்ந்தவன் அதற்காய் பெரிதாய் வருந்திக்கொள்ளவில்லை.

“ஆதவா நீ உன்னோட தனிக்குடித்தனத்தை எல்லாம் மூட்டைக்கட்டிட்டு இங்கவே வந்து சேர்”

“எதுக்கும்மா??”

“சொல்றதை கேளு ஆதவா அது தான் எல்லாருக்கும் நல்லது. நீ என்ன சொல்றே பார்கவி” என்று குறிப்பாய் தன் மருமகளைப் பார்த்தார் அவர்.

அது புரிந்தது போல அவளும் “அத்தை சொல்றது சரித்தானே நாம இங்கவே இருக்கலாம்” என்று அவளும் சொல்லிட ஆதவன் தோளைக் குலுக்கினான்.

“இதை சொல்றதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா. நான் கூட நீங்க ஏன் கம்பிளைன்ட் பண்ணீங்கன்னு சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்” என்று சொல்ல மெல்லினா அவள் கையில் இடித்தாள் நன்றாகவே.

“அண்ணனை கூப்பிட்டு சொல்லியிருந்தா போதுமே நாங்கலாம் எதுக்கு??” என்று அடுத்தொரு கேள்வியை எழுப்பினான் அவன்.

“ஹ்ம்ம் சொல்றேன் அதைச் சொல்லத்தானே கூப்பிட்டேன். தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த தப்புக்கு நான் காரணமாகிட்டேன். அதுக்கு காரணம் எனக்கு மெல்லினாவை இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க முடியலை”

“இனிமேலும் அதை வளரவிட எனக்கு விருப்பமில்லை. அதனால நீயும் அவளும் தனியா போய்டுங்க. பக்கத்துல இருந்தா வெறுப்பு கோபம்ன்னு எல்லாமே அதிகமாகும். எட்ட இருந்தா புரிஞ்சுக்க முடியலாம்”

“நாங்க ஏன் தனியா போகணும்?? போக முடியாது” என்றான் ஆத்திரேயன் திட்டவட்டமாய்.

“போகலாம்” என்றிருந்தாள் அவனின் நாயகி.

“நான் என்ன பேசினாலும் அதுக்கு ஆப்போசிட்டா தான் நீ பேசுவியா??” என்று அவளை முறைத்திருந்தான் அவன்.

“எதிர்த்து பேசறேன்னு நினைக்காதீங்க. அத்தை ஏதோ முடிவு பண்ணித்தான் சொல்றாங்க, அதை நாம மாத்த வேண்டாம்”

“ஆமாம்மா அவனை எதுக்கு தனியா போகச் சொல்றீங்க. என்னை நீங்க வரச் சொன்னதுல எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனா அவனை போகச் சொல்றதுல எனக்கு உடன்பாடில்லைமா” என்றான் ஆதவன்.

“நீங்க என்ன சொல்றீங்க??” என்றுவிட்டு தன் கணவரை பார்த்தார் வாசவி.

“நீயே சொல்றன்னா அது சரியாத்தான் இருக்கும். எனக்கு புரியுது நீ ஏன் அப்படிச் சொன்னேன்னு” என்றுவிட்டு மனைவியை ஆழமாய் பார்க்க கண்களால் தன் கணவருக்கு நன்றியுரைத்தார் அவர்.

“சோ நீங்களும் என்னை வெளிய போகச் சொல்றீங்களாப்பா??”

“அப்படி சொல்லலை ஆதி. வீணான மனக்கசப்பில்லாம இருக்கலாம்ன்னு தான் சொல்ல வர்றேன். உங்கம்மா வெளிப்படையா அவ என்ன நினைக்கிறான்னு சொல்லிட்டா இதுக்கு மேல நீ புரிஞ்சுக்கலைன்னா நான் என்ன சொல்ல”

“உன்னை வெளியப் போகச் சொல்லலை. தள்ளியிருக்கலாம்ன்னு தான் சொல்றோம். மத்தப்படி நீ எப்பவும் போல இந்த வீட்டுக்கு வரலாம் போகலாம்” என்றார் சுசிந்தரம்.

“அப்பா, அம்மா தான் ஏதோ கண்டதும் யோசிச்சு குழம்பறாங்கன்னா நீங்களும் அவங்களுக்கு தகுந்தா போல பேசறீங்க. அவன் தான் போக மாட்டேன்னு சொல்றான்ல எதுக்கு இப்படி பண்றீங்க. ஆதி நீங்க எங்கயும் போக வேண்டாம் இங்கவே இருடா” என்ற ஆதவன் தன் தம்பிக்கு ஆதரவாக பேசினான்.

“நாங்க போறோம்  நீங்க எல்லாரும் சொல்றீங்க அப்படிங்கறதுக்காக இல்லை. என் பொண்டாட்டி மேல விழுந்த அனாவசிய பழியை தீர்க்கவும் அவளுக்கு திரும்ப வேலைக் கிடைக்கறதுக்காகவும் தான் போறோம்”

“நீங்களே வருந்திக் கூப்பிட்டாலும் ஏன் மெல்லினாவே இனி இந்த வீட்டுக்கு வரலாம்ன்னு சொன்னாலும் நான் வரமாட்டேன். போனா போனது தான் அதையும் சொல்லிட்டே கிளம்பறேன்”

“நான் சொன்னது அவங்களுக்கு மட்டுமில்லை உனக்கும் தான். எந்த காரணத்துக்காகவும் இனி இங்க திரும்பி வரணும்ன்னு நீ என்கிட்ட சொல்லவே கூடாது. கிளம்பு போகலாம்” என்றுவிட்டு யாரையும் பார்க்காது மேலேறி சென்றுவிட்டான் அவன்.

“அவனுக்கு நாங்க சொல்றது புரியலைம்மா நீ சொல்லி புரியவைம்மா” என்று பாவமாய் பார்த்தார் அவளின் மாமனார்.

“அவர் சொன்னது தான் மாமா நாங்க திரும்பி வர்ற பேச்சுக்கே இடமில்லை. இங்க இருந்து போகறதை நானுமே விரும்பலை, அத்தைக்காக தான் சரின்னு சொன்னேன். அவரே என்னை திரும்ப இங்க கூப்பிட்டாலும் நான் வந்திருக்க மாட்டேன்”

“வாய்விட்டு சொல்லிக்கலைன்னாலும் என்னோட எண்ணமும் அது தான்” என்று அவரிடம் சொன்னவள் “அக்கா எல்லாரையும் பார்த்துக்கோங்க. எப்போ என்ன உதவி தேவைப்பட்டாலும் ஒரு வார்த்தை சொல்லுங்க நான் வர்றேன்” என்றுவிட்டு ஆதவனிடமும் சொல்லிக்கொண்டு படியேறி இருந்தாள்.

இதோ அவர்கள் தனிக்குடித்தனமும் வந்து ஒரு வாரம் ஓடியிருந்தது. வாசவி சொன்ன அன்றே தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவ்வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான் ஆத்திரேயன்.

ஹோட்டல் ஒன்றில் தங்கிக்கொண்டனர். நித்தேஷ் பலமுறை தன் வீட்டிற்கு வருமாறு அழைப்புவிடுத்தும் ஆத்திரேயன் மறுத்துவிட்டான் அங்கு செல்வதற்கு.

விஸ்வநாதன் கூட தன் வீட்டிற்கு வந்து தங்கிக்கொள்ள சொல்ல அவன் அதையும் ஏற்றிருக்கவில்லை. தங்கையின் மீதான வருத்தம் அதிகமாகிக் கொண்டே சென்றது விஸ்வநாதனுக்கு.

எத்தனை நாளைக்கு ஹோட்டலில் தங்க முடியும் ஒரு முடிவெடுத்தவனாய் ஆத்திரேயன் மறுநாளே காவல்துறை அலுவலகக் குடியிருப்புக்கு விண்ணப்பித்திருக்க இரண்டே நாளில் அவர்கள் அவ்வீட்டுக்கு குடியேறியிருந்தனர்.

மகேஸ்வரி விஷயம் கேள்விப்பட்டு நேரே வந்திருந்தவர் அவர்களுக்கு தேவையானதை கொண்டு வந்து அவ்வீட்டை நிறைத்துச் சென்றார்.

ஆத்திரேயன் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான். மெல்லினா வீட்டில் தானிருந்தாள், அவள் எல்லாம் முழுதும் வேலையை மீட்பதிலேயே இருந்தது. அப்படியொரு யோசனையில் இருந்தவளை கலைத்தது அவளின் அலைபேசியின் அழைப்பு.

அழைத்தவரின் பெயரை பார்த்ததுமே அட்டென்ட் செய்தவள் “சொல்லுங்கக்கா எப்படியிருக்கீங்க??” என்றாள் மென்மையான குரலில்.

“ஹ்ம்ம் இருக்கேன்” என்றவளின் குரலின் பேதத்தை உணர்ந்தவளாய் “என்னாச்சுக்கா எதுவும் பிரச்சனையா குரலே என்னவோ போல இருக்கு” என்றிருந்தாள் மற்றவள்.

“நான் உன்னை நேர்ல பார்க்கணும் பேசணும்”

“வீட்டுக்கு வாங்கக்கா”

“இல்லை அங்க ஆதி இருப்பார்ல”

“அவர் தான் ஆபீஸ் போய்டுறாரே” என்றவளின் யோசனை எதற்கு என்னிடம் தனியாய் பேச நினைக்கிறார் என்று தான் ஓடியது.

“அப்போ நான் உடனே கிளம்பி வர்றேன்” என்றுவிட்டு போனை வைத்திருந்தாள் அவள்.

மெல்லினாவின் யோசனை பார்கவியை சுற்றி ஓடியது. முன்பு கருத்தில் பதியாது கவனத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தாள். மருத்துவமனையில் இருந்த பொழுதில் இருந்தே பார்கவி அவளிடம் அதிகம் பேசியிருக்கவில்லை என்பதை நினைத்து பார்த்தது அவளின் மனம்.

மெல்லினா பேசினால் மட்டுமே பேச்சு இருந்தது அவளிடத்தில். அதுவும் பதில் பேச்சாக மட்டுமே இருந்தது. அவளாகப் பேசியது உணவருந்தும் வேளையில் மட்டுமே, அதை சாப்பிடு இதை வைத்துக்கொள் இப்படித்தான்.

‘சரி வரட்டும் என்னன்னு பார்ப்போம்’ என்றவளின் எண்ணம் அப்போது கூட விக்ரம் அவளின் மூலமாய் தான் தன் வேலையை பறித்திருக்கிறான் என்று நினைத்திருக்கவில்லை.

வாசலில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்க அரைமணி நேரத்திற்கும் மேலாய் கடந்திருப்பதை நேரம் பார்த்து தெரிந்துக் கொண்டவள் வேகமாய் சென்று கதவைத் திறக்க ஆத்திரேயன் நின்றுக் கொண்டிருந்தான்.

‘இவர் என்ன இந்த நேரத்துல’ என்று உள்ளே யோசனை ஓடிய போதும் “வாங்க” என்றழைத்தாள்.

“மேடம் நான் இந்த நேரத்துல வந்திருக்கனே. அப்படியே ஆசையா ஓடிவந்து கண்டிக்கலாம்ன்னு உனக்கு தோணாதா??” என்றான் அவன்.

“என்ன இந்த நேரத்துல வந்திருக்கீங்க?? என்னாச்சு??”

“நான் கேட்டது உன் காதுல விழலை அப்படித்தானே. சரி போகட்டும் விடு, நீ பதட்டப்பட எதுவுமில்லை. இந்த பக்கம் ஒரு வேளையா வந்தேன், அதான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்”

“ஹ்ம்ம்”

“சாப்பிடறீங்களா??”

“என்ன ஸ்பெஷல்??”

“கொஞ்ச நேரத்துல சமைச்சிடறேன்” என்று சமையலறை பக்கம் செல்லப் போனவளின் கைப்பிடித்து நிறுத்தினான் அவன்.

“இந்நேரம் போய் சமைக்கப் போறியா. ஆமா உனக்கென்ன சமைச்சே??”

“இல்லை வந்து…

“என்னன்னு சொல்லு??”

“காலையில செஞ்ச உப்புமா மிச்சமிருக்கு. அதையே சாப்பிட்டுக்கலாம்ன்னு எதுவும் செய்யலை” என்றவளைப் பார்த்து “சோம்பேறி” என்றான் அவன்.

“இல்லை அது வேஸ்ட்டா போகும்ல. நீங்க சாப்பிடுற மாதிரி இருந்தா எதுவும் செய்யலாம். என் ஒரு ஆளுக்கு என்னத்தை செய்ய??நைட்டுக்கு உங்களுக்கு சூடா எதுவும் செஞ்சுக்கலாம்ன்னு தான் அப்படியே விட்டுட்டேன்”

“இப்படித்தான் எல்லா பொண்ணுங்களும் செய்வீங்களா. உங்களுக்குன்னு தனியா எதுவும் செஞ்சுக்க மாட்டீங்களா. நாங்க என்ன ஸ்பெஷல் அப்படி?? முதல்ல உன்னை கவனி என்னை கவனிக்க நீ இருக்க, உன்னை கவனிக்க நான் இங்க இல்லை”

“நம்மளை நம்பி நம்ம புருஷன் இருக்கானே அவனுக்காக நம்மளை நல்லா பார்த்துக்கணும்ன்னு நினைச்சா உனக்கு பிடிச்சதை செஞ்சு சாப்பிடு”

“இல்லைன்னா??”

“இல்லைன்னா உன்னை நம்பி அந்த புருஷன் இருக்க மாட்டான் சிம்பிள் அவ்வளவு தான்”

“அவ்வளவு தானா… அப்போ யாரை நம்பியிருப்பீங்களாம்??”

“இருந்தா தானே…”

“என்ன பேசறீங்க நீங்க?? இனிமே இப்படி பேசுனீங்க அப்புறம் என்கிட்டே பேசவே பேசாதீங்க”

“நான் அப்படி பேசாம இருக்கணும்ன்னா என்னை நீ அப்படி பேச வைக்காம இருக்கணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை நீ செய். நான் கிளம்பறேன் நல்லா மூடோட வீட்டுக்கு வந்தேன், ப்ச்” என்று சலித்தவனாய் வெளியேறி சென்றுவிட்டான் அவன்.

அவன் சென்ற சில நிமிடங்களில் பார்கவி வந்து சேர்ந்தாள் சோர்ந்த முகத்துடன். உள்ளே வந்ததும் கதவை அடைத்து அவளே தாழிட்டாள்.

அவளின் செயல்கள் வித்தியாசமாய் இருப்பதை குறித்துக்கொண்டாள் மற்றவள். “தண்ணிக் கொடு மெல்லினா” என்று கேட்டு வாங்கி ஒரு முழுப்பாட்டில் தண்ணீரையும் தொண்டையில் சரித்துக் கொண்டிருந்தாள் அவள். அதன் பின்பும் அவளாய் எந்த பேச்சு வார்த்தையும் ஆரம்பிக்கவில்லை.

“அக்கா பேசணும்ன்னு சொல்லிட்டு என்னை கூப்பிட்டு எப்படி தொடங்கறதுன்னு யோசிச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம். சொல்லுங்க உங்களை என்னன்னு சொல்லி மிரட்டினாங்க”

“அத்தைகிட்ட நீங்க எப்படி கையெழுத்து வாங்கினீங்க??” என்று மெல்லினாவே பேச்சை ஆரம்பிக்க பார்கவி குற்றவுணர்வுடன் அவளை பார்த்தவள் தன் மனதில் இருந்ததை அவளிடம் கொட்ட ஆரம்பித்தாள்.

“அவினாஷ் எங்கே இருக்கே??”

“நம்ம சைட்ல தான் இருக்கேன் விக்ரம்”

“எல்லாம் ரெடியா இருக்கா??”

“ஹ்ம்ம் ரெடி நீ நேர்ல வா பேசிக்கலாம்” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட்டான்.