Advertisement

இரவு மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தின் வெளியே இருந்த நிறுத்தத்தில் மோகனும் மெல்லினாவும் தனித்தனியே வந்திறங்கினர். மோகன் பெண் வேடம் அணிந்திருந்தார், பார்க்க அச்சு அசலாய் பெண்ணாகவே இருந்தார்.

“அண்ணே நான் ஓகே நீங்க எதுக்குண்ணே??” என்று கேட்டே விட்டாள் மெல்லினா.

மோகனின் முகமே சரியில்லை. “நான் தான் சொன்னேன்ல மெல்லினா தயாளன் சார் சரியில்லைன்னு”

“நம்ம இன்ஸ்பெக்டரையா சொல்றீங்க??”

“வேற யாரை சொல்லப் போறேன்”

“என்ன பிரச்சனை??”

“நாம இப்போ வந்த வேலையை பார்ப்போம்” என்றவன் ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டான்.

அங்கு மற்றொரு அழகிய பெண்ணும் நின்றிருந்தாள். அவர்கள் வெகு நேரமாய் அங்கு நின்றிருந்தனர். வாலிபன் ஒருவன் இவர்களுக்கு அருகில் நின்றிருந்த பெண்ணிடம் சென்று பேச அவள் சிரித்து பேசி அவனை அனுப்பிவிட்டாள்.

“மெல்லினா இன்னும் யாரும் வரலையே??” என்றான் மோகன்.

“தெரியலையே அண்ணா அந்த ரவுடி இங்க தான் வருவான்னு சொன்னாங்க. இன்னைக்கு வருவானான்னு தெரியலையே??”

“நீ அவங்ககிட்ட கேட்டுப் பாரேன்” என்றான் அவன்.

“சரி” என்றவள் அருகே நின்றிருந்த அந்த பெண்ணை நோக்கிச் சென்றாள். மெல்லிய குரலில் “அக்கா” என்று இவள் அழைக்க “சொல்லும்மா” என்ற அப்பெண்ணின் குரலில் ஆச்சரியம் அவளுக்கு.

அவர் ஒரு திருநங்கை என்பதே அந்த குரலில் தான் அவளால் அடையாளம் காணவே முடிந்தது. அவ்வளவு அழகாய் நளினமாய் இருந்தார் அவர்.

“இல்லை ஒண்ணு கேட்கலாமா??”

“அதுக்கு தானேம்மா வந்தே கேளு”

“லோடுமேன் லோகு இங்க தினமும் வருவார்ன்னு சொன்னாங்க. அக்கா நான் ஒரு பெண் போலீஸ் அவரை பிடிக்கத்தான் இங்க வந்திருக்கோம்க்கா. அவர் தினமும் இங்க வருவார்ன்னு ஒரு தகவல் கிடைச்சது. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா??” என்று அப்பெண்ணிடம் கேட்டாள்.

மெலிதாய் ஒரு புன்னகை அவரிடத்தில். “அவரைப்பத்தி எனக்கு தெரியாதும்மா” என்றார்.

“நிஜமாவே நீங்க அவரை பார்த்ததில்லையா” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு மத்திம வயதுக்காரன் மெல்லினாவின் கைப்பிடித்து இழுக்க தூக்கிவாரி போட்டது அவளுக்கு.

“கையை விடுங்க” என்று சொல்லி உருவிக்கொள்ள அவள் முயல அவனின் பிடி இரும்பு பிடியாக இருந்தது.

“கணேசு கையை விடு உனக்கு தான் நாங்க இருக்கோம்ல. இது வேற” என்று சொன்னார் அந்த திருநங்கை. இருந்தும் அவன் பிடி விடாமல் இருக்க “சொல்றேன்ல” என்று சொல்லி ஓங்கி ஒரு அறைவிட்டார் அவனை.

“அக்கா என்னக்கா பண்றீங்க நான் செய்ய வேண்டியது எல்லாம் நீங்க செய்யறீங்க??” என்று ஆச்சரியமாய் பார்த்தாள் அவள் மற்றவளை.

“உன்னை பார்த்தாலே தெரியுது நீ வேலைக்கு புதுசுன்னு. சின்ன பொண்ணா இருக்கே, அனுபவம் இல்லைன்னு நல்லா தெரியுதும்மா. நீ கெஞ்சிட்டு இருந்தா இவங்க எப்பவும் மிஞ்சிட்டு தான் இருப்பாங்க. எதிர்த்து பாரு அடங்கிப் போவாங்க” என்றார் அவர்.

அந்த கணேஷ் என்பவர் அந்த திருநங்கை அடித்த அடியில் இன்னும் கீழே தான் விழுந்து கிடந்தார். குடித்திருப்பார் போல அப்படியே கிடந்தார்.

“அக்கா இவருக்கு…”

“ஒண்ணும் ஆகாது குடிச்சிருக்கான் வேற அதான்… விடு தெளிஞ்சதும் எந்திச்சு வீட்டுக்கு போய்டுவான்”

“உங்க பேருக்கா”

“தீபா”

“நல்லா பேருக்கா. நிஜமாவே லோகு இங்க வரமாட்டானா”

“வருவான் எப்போ வருவான்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன். நீ வந்த வேலையை பாரு உன்னை யாரு இந்த வேலை செய்ய சொன்னாங்கம்மா. பொம்பளை பிள்ளைய இங்க நிக்கவிட்டு என்ன விளையாட்டு இது”

“நாளைக்கு என்னோட உன்னை பார்த்தவன் என்னைக்காச்சும் ஒரு நாள் உன்னை வெளிய பார்த்திட்டு கையை பிடிச்சு இழுத்தா தப்பாகிடாது”

“அக்கா…”

“உன்னை பயமுறுத்தலை. இதெல்லாம் நடந்தா என்னாகும் யோசிச்சு பாரு”

“நான் பார்த்துக்குவேன்க்கா”

“பார்ப்போம்…” என்றுவிட்டு அவர் சற்று தூரச்சென்று நின்றுக் கொண்டார்.

மோகன் இவளருகில் வந்தான். “என்ன சொன்னாங்க??”

“அவங்களுக்கு தெரியலை”

“ஹ்ம்ம். இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்க நிக்கறது, ஒருத்தன் குடிச்சுட்டு வந்து என் இடுப்பை கிள்ளிட்டு போறான்” என்றான் மோகன்.

“இன்ஸ்க்கு போன் பண்ணுங்க அண்ணா”

“நான் பண்ண மாட்டேன் நீயே பண்ணு”

“எதுக்குண்ணா அவரைப்பத்தி பேசினாலே அரண்டு போறீங்க” என்றவள் அவளே இன்ஸ்பெக்டருக்கு அழைத்தாள்.

“சார்”

“என்ன மெல்லினா??”

“இன்னும் வரலையே சார்”

“எனக்கு தெரியாதா நானும் தூர இருந்து பார்த்திட்டு தானே இருக்கேன்” என்றவர் “செம அழகா இருக்கே இன்னைக்கு” என்று வேறு சொல்ல “நான் வைச்சுடறேன்” என்று வைத்துவிட்டாள் அவள்.

“என்ன சொல்றாரு??”

“அவர் பார்த்திட்டு தான் இருக்காராம்” என்று அவள் சொல்லவும் தன் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டான் மோகன்.

“அண்ணா என்ன பண்றீங்க நீங்க??”

“உனக்கு தெரியாது மெல்லினா அந்த இன்ஸ்பெக்டர் என்னை பார்க்கற பார்வையே சரியில்லை” என்று அவன் சொல்லவும் என்ன என்று பார்த்தாள் மற்றவள்.

“என்னை வேணும்ன்னே தான் இந்த டிரஸ் பண்ணிட்டு வரச்சொல்லி இருக்காரு. என்னை நேரா ஸ்டேஷன்க்கு வர சொன்னாருன்னு போனா. என் இடுப்பை பிடிச்சு என்னென்னவோ செய்யறாரு”

“ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி கன்னத்தை கிள்ளி முத்தம் வைக்குறாரு. வெளிய பார்க்கவங்களுக்கு பொம்பளைங்களை தான் பார்ப்பாருன்னு அப்படிங்கற மாதிரி காட்டிட்டு இவர் பண்ணுறதெல்லாம் வேற”

“போன வருஷம் இந்த ஸ்டேஷன்ல வேலை பார்த்த கார்த்திக் அப்படிங்கற பையன் செத்து போய்ட்டான். அதுக்கு இவர் தான் காரணம்ன்னு கேள்வி பட்டேன். அவனும் என்னை மாதிரி தான் பிடிக்காம வேலைக்கு வந்தானாம்”

“பார்க்க ரொம்ப அழகா இருந்தான். எம்பிளாயி லிஸ்ட்லபோட்டோ பார்த்தேன். நல்லா படிச்ச பையன் இங்க வந்த நாலு மாசத்துல செத்து போய்ட்டான். காரணம் கேட்டா இவர் டார்ச்சர்ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ புரியலை இப்போ புரியுது இவர் என்ன பண்ணி இருப்பார்ன்னு” என்று அவன் சொன்னதை அவளால் சுத்தமாய் நம்ப முடியவில்லை.

ஒரு ஆண் இன்னொரு ஆணை ச்சே நினைக்கவே முடியவில்லை அவளால். அப்படியும் கூட இருப்பார்களா என்ற எண்ணம் தான் ஓடியது அவளுக்கு. சற்று முன்பு கூட அவளை அழகு என்று இன்ஸ்பெக்டர் சொன்னது அவளில் நினைவிற்கு வந்தது.

அவன் சொன்னதை நம்பாமல் போனவளுக்கு அடுத்த நான்கு நாட்களில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான் என்ற தகவல் வந்ததும் அப்படியொரு அழுகை வந்தது.

இன்ஸ்பெக்டரின் பெயரில் அவள் பெயரிடாமல் மேலிடத்திற்கு கம்பிளைன்ட் செய்ய இறுதியில் அவர் இவளின் முன்னே வந்து நின்றிருந்தார்.

“உன்னை ரொம்ப ஈசியா நினைச்சுட்டேன். என் பேருலவே கம்பிளைன்ட் பண்றியா?? நான் நினைச்சா உன்னை என்ன வேணா பண்ணுவேன்”

“பண்ணிக்கோங்க” என்று அசட்டையாய் சொன்னாள் அவள். அவளின் துணிவில் தயாளனின் ஈகோ சீண்டப்பட்டது.

வேலையில் அவளை பிழிந்தெடுத்தார். பெண்களுக்கு இரவு நேரப்பணி எப்போதும் கிடையாது. ஆளில்லை என்று சொல்லி அவளை மூன்று மாதமாக இரவு நேரப்பணி பார்க்க வைத்தார்.

அவள் முன்பே ட்ரான்ஸ்பர் விண்ணப்பித்திருந்தாள். அதையும் கேன்சல் செய்துவிட்டிருந்தார். அவள் ஒரு முடிவெடுத்து உடல்நலம் சரியில்லை என்று சொல்லி மூன்று மாத விடுப்பெடுக்க அவரால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

இன்று

“பாடியை யாரு முதல்ல பார்த்தது??”

“சார் நான் தான் பார்த்தேன்”

“இவரு யாருன்னு தெரியுமா”

“பெரிய போலீஸ்ங்க”

“அவ்வளவு தான் தெரியுமா”

“ஆமா சார்”

“இவரை கடைசியா எப்போ உயிரோட பார்த்தே??”

“நேத்து நைட் சார்க்கு சமைச்சு வைச்சுட்டு என்னை கிளம்பிட சொன்னாங்க அய்யா. அப்போ பார்த்தது தான்”

“எப்பவும் சமைச்சுட்டு நீங்க கிளம்பிடுவீங்களா??”

“இல்லைங்க எப்பவாச்சும் தான் அப்படி நடக்கறது”

“எப்போலாம் நடக்கும்??”

“அதெல்லாம் ஞாபகமில்லைங்க”

“பாடியா அவரை எப்போ பார்த்தீங்க??”

“காலையில எப்பவும் போல வேலைக்கு வந்தேங்க. என்கிட்டே வீட்டு சாவி ஒண்ணு இருக்கு. அதைப்போட்டு திறந்து வந்து பார்த்தா சார் ஹால்ல செத்து கிடந்தாருங்க. உடனே நான் உங்களுக்கு போன் பண்ணிட்டேங்க”

இவர்கள் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அந்த இடம் பரபரப்பானது. என்னவென்று பார்க்க ஆத்திரேயன் வந்துக் கொண்டிருந்தான். இவர்களை கை நீட்டி அருகே அழைக்க சென்றனர்.

“எப்போ??”

“தெரியலை சார், கொலை நடந்து ஒரு ஆறு மணி நேரம் இருக்கலாம்ன்னு தோணுது. ரத்தம் உறைஞ்ச விதத்தை பார்த்தா அப்படித் தான் தோணுது”

“கைரேகை எதுவும் மாட்டிச்சா??”

“எடுத்திருக்காங்க சார். புதுசா எதுவும் கிடைக்கலைன்னு மணி சொன்னாரு. இன்னும் எதாச்சும் ரேகை கிடைக்குத்தான்னு பார்த்திட்டு இருக்காரு”

“சீக்கிரம் முடிச்சுட்டு பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்புங்க. எப்போ டெத் நடந்துச்சுன்னு தெரியணும்,கொலையா தற்கொலையா எல்லாம் பார்க்கணும்”

“சார் இது கொலை தான்”

“நீங்க நேர்ல பார்த்தீங்களா??” என்ற அவனின் கேள்வியில் வாயை மூடிக் கொண்டார் அவர்.

ஆத்திரேயன் தயாளனின் உடல் கிடந்த இடத்தை சுற்றி ஆராய்ச்சி செய்தான். அந்த வீட்டையே ஒரு சுற்று சுற்று வந்தான். வெளியில் வந்த போது பக்கவாட்டு காம்பவுண்ட் சுவருக்கு கீழே இருந்த செடிக்கருகில் விழுந்து கிடந்த காது தொங்கட்டானை கையில் கிளவுஸ் அணிந்துக்கொண்டு எடுத்தவன் ஒரு கவரில் இட்டான் அதை.

வேறு எதுவும் தடயம் சிக்குறதா என்றவனின் பார்வையில் வேறொன்றும் அகப்படவில்லை அதன்பின். தயாளனின் சட்டை பட்டனில் ஒரு பெண்ணின் முடி இருந்ததாக சற்று முன்பு தான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வந்து அவனிடம் சொல்லிச் சென்றார்.

————

“மெல்லினா உனக்கு விஷயம் தெரியுமா??”

“என்ன தயாளன் செத்துட்டானா??”

“உனக்கெப்படி தெரியும்”

“அந்தாளு எப்பவோ செத்திருக்க வேண்டியது. இதெல்லாம் ரொம்ப லேட்டு” என்றவளின் இதழ்கள் வளைந்தது.

“இல்லை மெல்லினா உன் மேல”

“போனை வை” என்றவள் தன் ஷூ லேசை கட்டினாள். வெளியே கிளம்பி வந்தவள் வாசலில் நின்றிருந்த காரில் ஏறி அலுவலகம் கிளம்பியிருந்தாள்.

Advertisement