Advertisement

2

அன்று

“அம்மா எதுக்கு இப்படி உம்முன்னு உட்கார்ந்து இருக்கீங்க??”

“பின்ன என்ன பண்ண சொல்றே என்னை, நீ ஒரு ஊர்ல நாங்க ஒரு ஊர்ல இருக்கறதா” என்று பேசிக்கொண்டே ஸ்வெட்டரை அவள் எடுத்து செல்ல வேண்டிய பெட்டியில் வைத்தார் அவளின் அன்னை மகேஸ்வரி.

“அம்மம்மா ஸ்வெட்டர் எதுக்கும்மா எடுத்து வைக்கறீங்க?? அதெல்லாம் வேணாம் மதுரைல எல்லாம் இது தேவைப்படாதும்மா” என்றாள் அவள்.

“அட ஆமாமில்லை” என்று தலையில் தட்டிக்கொண்டவர் அதை எடுத்து வெளியில் வைத்தார்.

“ஏன் மெல்லினா நீ இங்க இருந்து வேலை செய்ய முடியாதாம்மா”

“அம்மா, அப்பா வேலை தான் நீ பார்க்கணும்ன்னு சொல்லி அதை எனக்கு எதுக்கு வாங்கி கொடுத்தீங்க??”

“உங்கப்பாவுக்கு நீ போலீஸ் வேலையில இருக்கணும்ன்னு ரொம்ப ஆசை. உன்னை ஐபிஎஸ் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டார். என்னால உன்னை ஒரு டிகிரிக்கு மேல படிக்க வைக்க முடியலை. அவர் ஆசைப்படி உன்னை இந்த வேலையில சேர்த்திட்டேன்”

“அப்போ அவங்க என்னை எங்க ட்ரான்ஸ்பர் பண்ணாலும் நான் போகத்தானேம்மா வேணும்”

“போக வேணாம்ன்னு யார் சொன்னது?? நாங்களும் வர்றோம்ன்னு தானே சொல்றேன்”

“அம்மா இது தான்ம்மா நம்ம ஊரு. அப்பா வாழ்ந்த இடம் இங்க தான், நம்ம வீடு இங்க தான் இருக்கு. இதைவிட்டு நாம ஏன்மா வேற இடத்துக்கு போகணும். நீங்க எப்பவும் சொல்வீங்கல்ல பொண்ணுங்களுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடுன்னு ரெண்டு வீடு இருக்கு”

“புகுந்த வீட்டுக்கு போன பிறகு பிறந்த வீடுங்கறது நாம தங்கி போற இடமா தான் ஆகிடும். நம்மோட அடையாளம் நம்மோட புகுந்த வீடு தான்னு. அதைவிட்டு ஏன்மா போகணும் சொல்லுங்க. தவிர வெண்பா படிச்சிட்டு இருக்கா. அவளோட படிப்பு பாழாகும்”

“நான் வாராவாரம் இங்க வர்றேன். அப்படி முடியலைன்னா மாசம் மாசம் வந்து இங்க வந்து தங்கிட்டு போறேன்”

“பார்த்தியா பார்த்தியா வாராவாரம்ன்னு சொல்லிட்டு அடுத்து மாசத்துக்கு ஒரு தரம் வர்றேன்னு சொல்றே”

“அம்மா ப்ளீஸ்ம்மா” என்று அவரின் தாடை பிடித்து அவள் கொஞ்ச கண்ணில் துளிர்த்த நீரை புறங்கையால் மெல்ல துடைத்துவிட்டுக் கொண்டார் அவர்.

“சரி போயிட்டு வா” என்று முழு மனதாய் சம்மதம் கொடுத்தார்.

“தேங்க்ஸ்ம்மா”

“வெண்பாகிட்ட பேசு அவளை நினைச்சா தான் கவலையா இருக்கு எனக்கு. சரியா படிக்க மாட்டேங்குறா, என்னமோ தப்பு இருக்கு அவகிட்ட” என்றார் தாயாய் கவலையாய்.

“நான் பேசுறேன்ம்மா” என்றவள் வெளியில் ஹாலில் அமர்ந்திருந்த தங்கையிடம் வந்தாள்.

“வெண்பா”

“அக்கா”

“வாயேன் கடைக்கு போயிட்டு வருவோம்” என்று தமக்கை அழைக்க அவளுடன் வெளியே சென்றாள் மற்றவள்.

“சூடா எதாச்சும் சாப்பிடறியா??”

“அக்கா அக்கா அந்த கார்னர் ஷாப்ல ஷவர்மா போடுறாங்க. என் பிரண்ட்ஸ்லாம் சொன்னாங்க அது செமையா இருக்குமாம். இங்க வேற எந்த கடையிலையும் அது கிடைக்காதுக்கா எனக்கு அது வாங்கி தர்றியா” என்று ஆவலாய் கேட்கும் தங்கையை மறுக்க முடியவில்லை அவளால்.

“சரி வா” என்று அழைத்துச் சென்றவள் கடைக்கு சென்று ஷவர்மாவை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள்.

“உனக்கு??”

“எனக்கு வேணாம், சரி வா பேசிட்டே போவோம்” என்றவள் உடன் நடக்க “என்கிட்டே எதாச்சும் பேசணுமாக்கா” என்று நேரடியாய் விஷயத்திற்கு வந்த தங்கையின் அறிவை அவளால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

“ஹ்ம்ம் ஆமா வெண்பா பேசணும் தான். நான் சாயங்காலம் ஊருக்கு கிளம்பறேன் தெரியும்ல”

“ஹ்ம்ம் அம்மா சொன்னாங்களே. எதாச்சும் அறிவுரை சொல்லப் போறியாக்கா. அம்மா சொல்ல சொன்னாங்களா??” என்று இப்போதும் தெளிவாய் கேட்டவளை மெச்சுதலாய் பார்த்தாள்.

“நான் எதுக்கு உனக்கு அட்வைஸ் பண்ணப் போறேன். உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நீ தப்பா பண்ணுறே” என்றுவிட்டு தங்கையாய் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள் மற்றவள்.

தமக்கையை திரும்பி பார்த்தவளுக்கு சங்கடமாகிப் போக பார்வையை வேறு புறம் திருப்பினாள். அதுவே சொன்னது அவள் ஏதோ தவறு செய்கிறாள் என்று.

“எனக்கு தெரியும் வெண்பா உன்னை ரெண்டு மூணு தரம் ஒரு பையனோட நெருக்கமா நானே பார்த்தேன்”

“நீ என்னை சந்தேகப்படுறியா??” என்று வெடுக்கென்று திரும்பி பார்த்து கேட்டாள் தங்கை.

“என்னைப் பேச விடு வெண்பா” என்று சொல்லவும் தான் அமைதியானாள் மற்றவள்.

“உன் மேல இப்போவரை எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உன் மேல நம்பிக்கை எனக்கு அதிகமா இருக்கறதுனால தான் அம்மா அவ்வளவு சொல்லியும் உன்னையும் அம்மாவையும் இங்கவிட்டு நான் தனியா மதுரைக்கு போறேன்”

“உன் படிப்பு எனக்கு முக்கியம். அது உனக்கும் முக்கியம்ன்னு எனக்கு தெரியும் வெண்பா. நீ அதுல கவனத்தை செலுத்துவேன்னு நான் நம்புறேன். நீ நல்லா படி, அம்மாவை உன்னை நம்பித்தான் விட்டு போறேன். பார்த்துக்கோ…”

“உன் வாழ்க்கையை நீ முடிவு பண்ண எல்லா உரிமையும் உனக்கிருக்கு. ஆனா நீ எடுக்கற முடிவு சரியானதான்னு யோசிக்கற தகுதி உனக்கு வந்தப்பிறகு அதை எடு… உன் முடிவை நான் எப்பவும் மதிப்பேன்” என்று முடித்தாள் அவள்.

தமக்கையிடம் பேசும் போது குழப்பமான மனநிலையில் இருந்த வெண்பாவின் முகம் தெளிந்ததை கண்டுக்கொண்ட மெல்லினா மெல்லிய புன்னகையை இதழ்களில் தவழவிட்டாள். தங்கைக்கு புரியும் விதமாய் சொல்லியதில் மனத்திருப்தி வந்திருந்தது. வெண்பாவின் செயலை அவள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.

கண்ணை மூடி தன் மனவோட்டத்தை எண்ணினாள். தங்கைக்கு அறிவுரை கூற தனக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை என்பதினாலேயே அதை மேலோட்டமாய் கூறியிருந்தாள். தான் பேசியதை தங்கை சரியாகவே புரிந்திருப்பாள் என்பது அவளின் முகத்திலேயே கண்டிருந்ததால் அந்த எண்ணத்தை விடுத்து ஊருக்கு செல்வது பற்றிய யோசனை சென்றது அவளுக்கு.

வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு உதகையில் இருந்து கிளம்பும் கடைசிப் பேருந்தில் கிளம்பி மதுரைக்குச் சென்றாள் அவள்.

அவளுக்கு ஊட்டியில் இருந்து மதுரைக்கு மாற்றலாகி இருந்தது. அவளின் உடன் பயின்ற தோழி ஒருத்தியுடன் தங்கிக்கொண்டாள். மதுரையில் அப்பெண் தனியாகத்தான் வீடெடுத்து தனித்திருந்தாள். உடன் மெல்லினாவும் சேர்ந்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் வேலைக்கு கிளம்பினாள். அவள் இருந்த இடத்தில் இருந்து நான்கைந்து நிறுத்தம் தாண்டி இருந்தது அவளின் ஸ்டேஷன். உள்ளே வந்தவளை ஒரு கோணல் புன்னகையுடன் வரவேற்றது உதகையில் அவள் பார்த்த இன்ஸ்பெக்டரே.

அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அவரை முன்பே தெரிந்தது போலக் கூட அவள் காட்டிக்கொள்ளவில்லை.

“வாங்க மேடம் வேலைக்கு முதல் நாளே லேட்டாவா வர்றது” என்றார் அவர்.

அவள் பத்து நிமிடம் முன்பே தான் வந்திருந்தாள். “சாரி சார் இனிமே சீக்கிரம் வர்றேன்” என்று முடித்துக் கொண்டாள்.

அவள் அங்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. பெரிதாய் எந்த வேலையும் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. சமயத்தில் டீ வாங்கி வா, ஸ்டேஷனை பெருக்கு, அலமாரியை சுத்தம் செய் இப்படியான வேலைகளை கொடுக்க நொந்து போனாள் அவள்.

அவள் தந்தை கண்ட கனவென்ன தான் இருக்கும் நிலையென்ன என்று தான் அவள் மனம் அடித்துக் கொண்டது. எப்படியாவது படித்து மேலே வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உறுதியாய் மனதில் எடுத்துக் கொண்டாள். 

அவளின் தந்தை இருக்கும் போதே பிரிலிமினரி எழுதியிருந்தாள். மெயின் எக்ஸாமின் போது தான் அவளின் தந்தை இறந்திருந்தார். எந்த பரிட்சையும் அவளால் எழுத முடியாமல் போனது அப்போது தான்.

“என்னம்மா பண்ணுறே??” என்று அருகே வந்தார் மோகன் அவளுடன் வேலைப் பார்ப்பவர்.

“டீ கிளாஸ் கழுவிட்டு இருக்கேன் அண்ணா” என்றாள் நிமிர்ந்து அவனைப் பார்த்து.

அவன் சுற்று முற்றும் ஒரு முறை பார்க்க அவனை திரும்பி பார்க்காமலே அவன் செய்கைகளை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள் இவன் என்ன செய்கிறான் என்பது போல.

யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீ வேற இடத்துக்கு மாற்றல் வாங்கிட்டு போய்டும்மா. இங்க எதுவும் சரியில்லை” என்றான் அவன்.

“அதுக்குள்ளே எப்படி மாற்றல் கொடுப்பாங்க அண்ணா. நான் வந்தே ஒரு வாரம் தான் ஆகுது. எப்படியும் கொஞ்ச நாளாகுமே, குறைஞ்சது ஆறு மாசமாச்சும் ஆகும் தானே”

“இப்போவே அப்பிளை பண்ணிடு”

“எதுக்குண்ணா அப்படி சொல்றீங்க இங்க என்ன பிரச்சனை??” என்று அவள் கேட்கும் போதே உள்ளே ஆள் வரும் அரவம் கேட்டது.

“இன்னொரு நாள் பேசுவோம்மா” என்று நகர்ந்துவிட்டான் அவன். 

இவள் கல்லூரி முடித்ததும் வேலைக்கு வந்திருந்தாள். மோகன் இவளைவிட ஒரு இரண்டு வயது மூத்தவனாக இருக்கலாம். மீசை கூட இன்னும் அரும்பாகவே இருந்தது அவனுக்கு.

என்ன நடந்திருக்கும் எதற்கு இப்படி பேசி செல்கிறார் என்று யோசித்துக் கொண்டே அடுத்த வேலையை பார்க்கச் சென்றாள் அவள். 

ஆரம்பத்தில் மாற்றல் என்றதும் சற்றே அவளுக்கு உதறல் தான். ஒரு வருடமாக உதகையிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று மாற்றல் எனவும் கொஞ்சம் பயம் இருந்த போதும் தன்னை சரி செய்துக் கொண்டாள்.

மேலும் ஒரு மாதம் கடந்திருக்க அன்று ஸ்டேஷன் மிகுந்த பரபரப்பாக இருந்தது. ஏட்டு காபி வாங்கி வந்திருக்க இவள் அதை எடுத்துக்கொண்டு மீட்டிங் நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றாள் அனைவருக்கும் கொடுக்க.

“மெல்லினா வா வா நீயும் இதுல கலந்துக்கோ காபி கொடுத்திட்டு நீயும் இங்க உட்காரு. உன்னால ஒரு காரியம் ஆகணும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

அவளும் அவர் சொன்னது போல செய்துவிட்டு “சொல்லுங்க சார்” என்றவாறே அமர்ந்தாள். இன்ஸ்பெக்டர் பேசப்பேச என்ன என்ற ரீதியில் அவள் வாயடைத்து அமர்ந்திருந்தாள்.

‘இவருக்கு என்ன பிரச்சனை எப்போ பார்த்தாலும் என்னையே எதுக்கு இழுத்துவிடுறாரு’ என்று தான் ஓடியது அவளுக்குள்.

இதற்கு முன்பு உதகையில் இப்படித்தான் அவளை ஒருவனுடன் பேச வைத்து அவனை பிடிப்பதாக சொல்லி அவளை ஒருவழி செய்தார். இப்போதும் அது போலவே தான் புதிதாய் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

“எல்லாம் புரிஞ்சது இல்லை, மோகன் நீயும் மெல்லினாவும் தான் மெயின். நாங்க பின்னாடி தான் இருப்போம் ஓகே வா. இப்போ நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, தயாராகிட்டு நைட் வந்திடுங்க” என்று அவர் சொல்ல மோகன் இவளைப் பார்த்தான்.

Advertisement