Advertisement

19

“மெல்லினா மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை. அப்படி அவ மத்த பொண்ணுங்க மாதிரி இருந்திருந்தா இந்நேரம் வீட்டில சமையல் பண்ணிட்டு இருந்திருப்பா, இல்லையோ ஏதோ ஒரு வேலைக்கு போய் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பா”

“அப்படியென்ன அவ ஸ்பெஷல்” என்றான் விக்ரம் அவளை தெரிந்தும்.

“அவ ஸ்பெஷலா இருக்கப் போய் தான் இந்த வேலைக்கு வந்திருக்கா, அதுவும் ஐபிஎஸ் முடிச்சிட்டு. அவ ட்ரைனிங் முடிச்சுட்டு போஸ்டிங் ஆனது கேரளாவுல. அவளைப்பத்தி நல்லா விசாரிச்சுட்டேன்”

“அந்த ஏரியால மட்டும் அவ பண்ண என்கவுன்ட்டர் மூணு. இவ்வளவு ஷார்ட் பீரியட்ல அதெல்லாம் பெரிய விஷயம்ன்னு சொன்னாங்க. அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாம்  அவ”

“அதெல்லாம் முதல்லையே நமக்கு தெரிஞ்சது தானே”

“அப்படி தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தானா அவகிட்ட போய் சிக்குனே. பணம் திருட்டு போச்சு அவ்வளவு தானே அதை நம்மால கண்டுப்பிடிக்க முடியாதா. இல்லையா போயிட்டு போகுதுன்னு விட்டிருக்கணும், நமக்கு பணம் பெரிய விஷயம் இல்லை தானே. அதுக்காக போலீஸ்கிட்ட போய் இப்போ பாரு நமக்கு எல்லாம் வினையா வந்திருக்கு”

“பணம் பெரிய விஷயம் இல்லை தான். ஆனா நம்மகிட்டவே ஒரு திருடன் இருந்தா அது தப்பு தானே. அதை அப்படியே விட்டிற முடியுமா. அவகிட்ட போகப்போய் தான் அதுக்கு காரணம் யார்ன்னு நமக்கு தெரிஞ்சது. தவிர அந்த சீக்ரெட் ரூம் பத்தி விஷயம் என் மாமாக்கு தெரியும்கறதும் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அவளைப்பத்தி தெரிஞ்சு இருந்தும் நான் தான் கொஞ்சம் கவனமில்லாம இருந்துட்டேன்”

“இனி யோசிச்சு என்ன பிரயோஜனம். எனக்கென்னமோ அவ உன்னை சிக்க வைக்கத்தான் பிளான் பண்ணி உன்னை நல்லா உசுப்பேத்தி இருக்கான்னு தோணுது. நீயும் அவளுக்கு தக்க நல்லா ரியாக்ட் பண்ணியிருக்க. இதுவரைக்கும் அவகிட்ட இல்லாத எவிடென்சை அவளுக்கு நீயே கொடுத்திட்ட இப்போ”

“இல்லை அவளுக்கு நம்மைப்பத்தி எந்த எவிடென்ஸ் கிடைக்காது, கிடைக்கக்கூடாது” என்று கத்தினான் விக்ரம்.

“இப்போ கத்தி எதுவும் நடக்கப் போறதில்லை. அந்த ஆதி செத்திருந்தா உனக்கு ஆபத்து அவளால மட்டும் தான். இப்போ அவன் உயிரோட இருக்கான், இனி ஆபத்து அந்த ஆதியால கூட வரும்”

“மெல்லினாவுக்கு மட்டும் ஆதியை கொலை முயற்சி பண்ணது நீ தான்னு தெரிஞ்சது அவ்வளவு தான்”

“தெரியாது, ஒரு வேளை கண்டுப்பிடிச்சிட்டா??” என்று அவனே சொல்லிக்கொள்ள “என்னடா சொல்றே??” என்றான் மற்றவன்.

“அவ வேலை போன அன்னைக்கு நான் தான் அவளுக்கு போன் பண்ணேனே??”

“எப்போ?? எதுக்கு பண்ணே??”

“அவளுக்கு வேலை போகவும் உள்ள இருந்த நம்மாளு எனக்கு போன் பண்ணி சொன்னான். அதான் அவளை வெறுப்பேத்த அவளுக்கு போன் பண்ணேன்”

“இவ்வளவு சொன்னே அதை சொல்லவே இல்லை நீ… என்ன தான் அவகிட்ட சொன்னே அதை முழுசா சொல்லித்தொலைடா??” என்று கேட்டவனிடம் அன்று நடந்ததை சொன்னான்.

“அப்போ அவ வேலை போனதுக்கு காரணம்ன்னு நீ தான்னு நீயே போன் பண்ணி சொல்லிட்டியா அவகிட்ட”

“நான் தான்னு சொல்லலை. அவளை டீஸ் பண்ணத்தான் பேசினேன். ஆனா அவ என்னை கெஸ் பண்ணிட்டா. அதான் சொன்னேனே ஈவினிங் போன் பண்ணி பேசினப்போ, ஆதியால தான் எனக்கு சாவு அது இதுன்னு பேசினா”

“நீ அவளுக்கு கால் பண்ணி பேசினதே தப்பு முதல்ல”

“அவளுக்கு இதெல்லாம் நான் தான் செஞ்சேன்னு தெரிய வேண்டாமா??”

“எதுக்கு தெரியணும்?? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு நீயே போய் சொல்வியா அவளுக்கு. இப்போ வைச்சால்ல உனக்கு ஆப்பு. இனி ஆதி, அவன் மாமன் மெல்லினான்னு அத்தனை பேரோட பார்வையும் உன்னை நோக்கித் தான் திரும்பும்”

“ஆதிக்கு நான் தான் அதுன்னு தெரியாது”

“இதுவரைக்கும் தெரியாது ஆனா தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவான் தானே”

“அப்போவும் அவனால நம்மை கண்டுப்பிடிக்க முடியாது” என்றான் உறுதியாய்.

“அந்த நம்பிக்கை உனக்கிருந்தா சந்தோசம் தான்” என்றான் அவினாஷ்.

“நம்மளை யாரும் கண்டுப்பிடிக்க கூடாதுங்கறதுல நான் கவனமா இருப்பேன்னு உனக்கு தெரியும் தானே அவினாஷ்”

“தெரியும் இருந்தாலும் நாம கவனமா இருக்கணும். மெல்லினா தெளிவா ஏதோ பிளான் பண்ணித்தான் மூவ் பண்றான்னு தோணுது. என்னோட கெஸ்ஸிங் தப்பாகாது விக்ரம்”

“ஹ்ம்ம் புரியுது அவினாஷ். இனி இப்படி நடக்காது, நான் கவனமா இருப்பேன்”

“முதல்ல…” என்று அவினாஷ் ஆரம்பிக்க “அந்த ஆக்சிடென்ட் பண்ணவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்புமே இல்லை. நேரடியா இதுல நானுமே இறங்கலை”

“அப்படியே கண்டுப்பிடிச்சு வந்தாலும் என்னை கைக்காட்ட மாட்டாங்க. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றான் விக்ரம்.

“ஹ்ம்ம் அப்போச்சரி, பீ கேர்புல்டா” என்று முடித்தான் அவினாஷ்.

“ஷ்யுர் அவினாஷ். ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான், எனக்கு நீ எப்பவும் ஒரு நல்ல கைடன்ஸ் கொடுக்கற” என்றவன் மேற்கொண்டு சிறிது நேரம் அவனிடம் பேசினான்.

திருடன் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று எவ்வளவு கவனமாக இருக்கிறானோ அதே கவனம் அவனை கண்டுப்பிடிப்பதில் முனைப்புடன் இருக்கும் காவல்துறைக்கு பல மடங்கு இருக்கும் தானே.

இவர்கள் கவனத்தை மெல்லினா சிதற விடுவாளா?? அல்லது சிக்கிக்கொள்வாளா??

——————-

மெல்லினாவிற்கு உறக்கமே வரவில்லை. அருகில் ஆத்திரேயன் மருந்தின் தீவிரத்தில் நன்றாய் உறங்கிக் கொண்டிருக்க அவனை தொந்திரவு செய்யாது மெல்ல எழுந்து சென்று அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

நீல நிற இரவு விளக்கையே கண்கொட்டாது பார்த்தவளின் நினைவுகளில் மருத்துவமனையில் ஆத்திரேயனை கண்ட நினைவும் அதை தொடர்ந்த நிகழ்வுகளும் காட்சிகளாய் ஓடியது.

மெதுவாய் கண்களை திறந்த மெல்லினாவிற்கு தான் எங்கிருக்கிறோம் என்றே முதலில் புரியவில்லை. கண்களை நாலாபுறமும் சுழலவிட்டவளின் கண்களில் ட்ரிப்ஸ் பட மருத்துவமனையில் இருக்கிறோம் என்று புரிந்தது.

சற்று தள்ளியிருந்த நீளமான ஒற்றை பெஞ்சில் பார்கவி படுத்திருப்பது கண்ணில் விழவும் என்ன நடந்தது என்று நினைவில் கொண்டு வர முயன்றவளுக்கு ஆத்திரேயனின் நினைவு வரவும் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

ட்ரிப்ஸ் ஏற்கனவே முடிந்திருந்ததால் வெறும் ஊசி மட்டுமே அவள் கைகளில் இருந்தது. இவள் எழும் சத்தம் கேட்டு அவசரமாய் எழுந்து வந்தாள் பார்கவி.

“இரு மெல்லினா என்ன வேணும் என்கிட்டே சொல்லு” என்றாள் அவள்.

“அக்கா அவர்… அவர்க்கு என்னாச்சு, ஆக்சிடென்ட்ன்னு சொன்னாங்களே, எங்க இருக்காங்க?? எப்படி இருக்காங்க??” என்றாள் அவள்.

“இதே ஆஸ்பிட்டல்ல தான் இருக்காங்க” என்று அவள் சொன்னது தான் தாமதம் மெல்லினா கட்டிலைவிட்டு இறங்கி நின்றிருந்தாள்.

“நான் இப்போவே அவரை பார்க்கணும்”

“இரு நான் கூட்டிட்டு போறேன்” என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டியூட்டி டாக்டர் உள்ளே நுழைந்தார்.

“என்னம்மா கண்ணு முழிச்சிட்டியா?? எங்கே கிளம்பிட்ட, வீட்டுக்கா??”

“இல்லை டாக்டர் என் ஹஸ்பன்ட் பார்க்க”

“உன் ஹஸ்பன்ட்டா??” என்றவர் பார்கவியை பார்க்க அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“மிஸ்டர் ஆத்திரேயனை பார்க்கணுமா, அவர் நல்லா இருக்கார்”


“நான் பார்க்கணும்” என்றாள்.

“சரி உட்காருங்க ஒரு அஞ்சு நிமிஷம் நான் உங்களை செக் பண்ணதுக்கு அப்புறம் நீங்களே நேர்ல போய் அவங்களை பாருங்க”

“நான் நல்லா தானே இருக்கேன், எதுக்கு செக்கப் எல்லாம்??”

“நீங்க எப்படி இருக்கீங்கன்னு இப்போ நாங்க தானே சொல்லணும். நேத்து இங்க வரும் போது உங்க நிலையே வேற” என்றவர் திரும்பி பார்கவியை வெளிய போகுமாறு சைகையில் சொல்ல அவள் மெல்ல நகர்ந்தாள்.

“என்ன நிலைமை?? மயக்கம் போட்டு விழுந்திருப்பேன் அவ்வளவு தானே”

“ஹ்ம்ம் அப்படியும் சொல்லிக்கலாம். உங்களுக்கு பிட்ஸ் வந்திடுச்சு, அளவுக்கதிகமான பிரஷர் எல்லாத்தையும் உள்ளவே போட்டு அழுத்தி வைக்காதீங்க. எதுவா இருந்தாலும் மனசுவிட்டு பேசுங்க. மனசுக்குள்ளவே போட்டு வைச்சா ஒரு கட்டத்துக்கு மேல அது தாங்க முடியாம  இது போல பிரச்சனைகளை நமக்கு உடல் ரீதியா கொடுக்கும். இனி இது போல உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுத்துக்காதீங்க. அது உங்களோட உடலை தான் பாதிக்கும்”

“நீங்க டியூட்டி டாக்டர் மாதிரி தெரியலையே, மனோத்தத்துவ மருத்துவரா??” என்று அவள் கேட்க மனதிற்குள் அவளை சற்று மெச்சிக் கொண்டார் அவர்.

“திடிர்னு உங்களுக்கு எதுக்கு இந்த சந்தேகம்??”

“சந்தேகம் இல்லை உறுதியாவே சொல்லுறேன்”

“நீங்க எப்படி வேணா சொல்லிக்கோங்க. நானும் இங்க மத்த டாக்டர்ஸ் மாதிரி தான். நேத்து உங்களை அட்மிட் பண்ணும் போது நான் தான் உங்களை அட்டென்ட் பண்ணேன். சோ எனக்கு தெரியும் உங்க கண்டிஷன் என்னவா இருந்துச்சுன்னு”

“அதான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணேன். என்னோட பேஷண்ட்ஸ்  உடல் நலம் எனக்கு முக்கியம் தானே” என்றார் அவர் நீண்ட விளக்கமாக.

“ஹ்ம்ம்” என்றவள் அவர் சொன்னதை முழுமனதாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவளின் முகமே சொன்னது.

விஸ்வநாதனின் முதல் நாளே மருத்துவரை பார்த்து மெல்லினாவின் நிலையை கேட்டறிந்தவர் செய்திருந்த ஏற்பாடே அது. மனநல மருத்துவராய் அவளை அணுகாது சாதாரண மருத்துவர் போல வந்து அவளிடம் இயல்பாய் பேச்சுக் கொடுக்க சொல்லியிருந்தார்.

விஸ்வநாதன் சொன்னது போலவே வந்திருந்தவர் முதலில் அவளை நோட்டம் பார்த்து பின் தான் சொல்ல வேண்டியதை அவளிடம் சொல்லியிருந்தார். மெல்லினா அவரை வெகுசுலபமாய் கணித்ததை தான் அவரால் நம்ப முடியவில்லை.

“ஓகே ஏசி மேடம் யூவர் பர்பெக்ட்லி ஆல்ரைட் நீங்க போய் உங்க கணவரை பார்க்கலாம்” என்றார்.

“கொஞ்சம் நேரம் முன்னாடி தான் எனக்கு அட்வைஸ் பண்ணீங்க டாக்டர். இப்போ நான் நல்லாயிருக்கேன்னு சொல்றீங்க”

“ரெண்டுமே உண்மை தானே மேடம். உங்களை நீங்களே பிரஷர் பண்ணிக்கிட்டதால உங்களுக்கு உடம்பு முடியாம போனது உங்களுக்கே தெரியும். இங்க வந்து ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு நல்லாகிட்டீங்க”

“இனிமேலும் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கணும்ன்னா அதுக்கு நீங்க தான் உங்களோட முழு ஒத்துழைப்பையும் கொடுக்கணும்”

“ஷ்யூர் டாக்டர் வில் டூ” என்றாள் எதையோ யோசித்தவாறே.

“இப்படி ரொம்ப யோசிக்காம சாதாரணமா இருங்க. உங்க வேலையில அது சாத்தியம் இல்லை தான் எனக்கு தெரியும், இருந்தாலும் முடிஞ்சவரை ட்ரை பண்ணுங்க” என்றுவிட்டு அவர் நகரவும் பார்கவி உள்ளே வர இருவரும் வெளியே வரும் தருணம் ஆதவனும் வந்து சேர்ந்தான் அங்கு.

ஆத்திரேயனும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருக்க அதே நேரத்தில் மெல்லினா அவ்வறையில் வேகமாய் நுழைந்திருந்தாள்.

தன் கணவனை பார்த்ததும் அவளும் பேச்சே வரவில்லை. பார்வையால் அவனை வருடினாள் முழுவதுமாய். ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரிகளும், கட்டும் பார்த்தவளுக்கு தன்னையுமறியாமல் கண்கள் மழை பொழிய மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்ததை இருவருமே உணரவில்லை.

மெல்லினாவின் பார்வை தன்னவனின் மீதென்றால் அவனின் பார்வை அவளின் மீதே. அவன் வலக்கரத்தை மெதுவாய் அவளை நோக்கி நீட்டியவன் வாவென்பது போல் அழைப்பு விடுக்க ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டவள் அவன் தலையில் முகம் பதித்து அழுகை கூட்டினாள்.

“மெல்லினா” என்றான் ஆத்திரேயன் மெதுவாய்.

சற்று விலகி அவன் முகம் பார்த்தாள். “நீ எப்படி இருக்கே??” என்று அவன் கேட்கவும் இன்னும் அழுகை வந்தது.

“எதுக்கு அழறே?? நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டியா??”

“எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன். உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகவிட்டு நான் நல்லா தான் இருக்கேன்”

“மெல்லினா என்ன பேச்சு இது முட்டாள்த்தனமா??”

“என்னால தானே நீங்க வெளிய போனீங்க அப்போ அது என்னால தானே நடந்துச்சு”

“ஏன் அப்படி நினைக்கிறே?? தப்பு என் மேலயும் தானே இருக்கு. நீ சொன்னதை நானும் கொஞ்சம் யோசிச்சு பார்த்து இருக்கணும். அந்த நேரம் எதையும் யோசிக்க முடியலை”

“எனக்கு மனசு ஆறலை, என்னால என்னை மன்னிக்கவே முடியலை” என்றவளை தன் அருகே அமர வைத்தவன் பேசிப்பேசி அவளை குற்றவுணர்வில் இருந்து வெளியே கொண்டு வந்தான்.

மீண்டும் ஏதோ ஒரு செக்கப் இருக்கிறது என்று சொல்லி அவளை அழைத்திருக்க அதை முடித்து வந்தவளின் எதிரே வந்து நின்றார் விஸ்வநாதன்.

“எப்படிம்மா இருக்கே??”

“நல்லாயிருக்கேன் சார்”

“அப்பான்னு கூப்பிடும்மா நான் உனக்கு அந்த முறை தான் வர்றேன்” என்று சொன்னதும் கண்களில் ஈரம் கசிந்தது.

“ஹ்ம்ம்” என்று மட்டும் தலையாட்டினாள்.

“நீ உன்னை நிரூபிக்க உனக்கு அவகாசம் இருக்கு தெரியும் தானே” என்றவருக்கு தலையாட்டினாள் தெரியும் என்பது போல்.

“ஓகே அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ எப்போ ஜாயின் பண்ணுறதா இருந்தாலும் எனக்கு உன்னோட பிட்னஸ் சர்டிபிகேட் கண்டிப்பா வேணும்”

“என்னடா இப்படி கேட்குறானேன்னு பார்க்காதம்மா. எல்லாம் காரணமா தான். உனக்கு பிட்ஸ் வந்து நீயும் இங்க அட்மிட் ஆகியிருக்கேன்னு யாருக்கும் தெரியாது. ஐ மீன் டிபார்ட்மென்ட் அண்ட் பத்திரிகைக்காரங்க இவங்களுக்கு”

“என்னோட அதிகாரத்தை நான் யூஸ் பண்ணியிருக்கேன். இதுவரை யாருக்கும் இப்படி செஞ்சதில்லை, ஆதிக்கும் கூட செஞ்சதில்லை. முதல் முறையா இப்படி செஞ்சிருக்கேன். உன்னோட பிட்னஸ் நீ கொடுக்க வேண்டியது எனக்கு மட்டும் தான். என்னோட மனத்திருப்திக்காக உனக்கு புரியும் நினைக்கிறேன்” என்றவர் அவ்வளவு தான் முடிந்தது என்பது போல அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

Advertisement