Advertisement

19

ஆத்திரேயனும் மெல்லினாவும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்திருந்தனர். கீழே இருந்த ஒரு அறையில் தான் மெல்லினாவின் தான் தங்கியிருந்தார். மகளும் மருமகனும் மருத்துவமனையில் இருக்கும் சேதி அறிந்து அன்றே கிளம்பி வந்திருந்தார் அவர்.

வாசவிக்கு தான் அவரை எதிர்க்கொள்ள அப்படியொரு தயக்கம். மகேஸ்வரி அதற்கு நேர்மாறாய் இருந்தார், வாசவியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் எதையும் கேட்கவில்லை அவர்.

இதோ மருத்துவமனையில் இருந்து இருவரும் வந்த பிறகும் அவர் ஊருக்கு கிளம்பியிருக்கவில்லை. ஆதி இன்னமும் நன்றாய் எழுந்து நடமாடியிருக்கவில்லை. அதனாலேயே அங்கே தங்கியிருந்தார் அவர்.

அன்னையின் அறைக்கதவை மெல்ல தட்டினாள் மெல்லினா. “உள்ள வாம்மா” என்று அவர் சொல்லவும் கதவை திறந்து உள்ளே சென்றாள்.

“சாப்பிட வாங்கம்மா மாத்திரை போட்டீங்களா சாப்பிடுறதுக்கு முன்னாடி போடணுமே”

“இப்போ தான் போட்டேன்ம்மா, நீ அவருக்கு சாப்பாடு கொடுத்திட்டியா??”

“எடுத்திட்டு போகப் போறேன்மா. அதுக்கு முன்னாடி உங்களுக்கு சாப்பாடு வைச்சுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்”

“நீ போய் அவரைப்பாரு நான் போய் சாப்பிட்டுக்கறேன்”

“ஹ்ம்ம் சரிம்மா” என்றவள் எழுந்துக்கொள்ளப் போக மெல்லினாவின் கரம் பிடித்தார் மகேஸ்வரி.

“என்னம்மா??”

“அம்மா நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன்”

“அதுக்குள்ளயா”

“எனக்கு இங்க இருக்க என்னவோ மாதிரி இருக்கு”

“ஏன்மா??”

“ஒரு நேரம் கோவமா வருது, ஒரு நேரம் இனி பேசி என்னாகப் போகுதுன்னு தோணுது. இந்த நேரத்துல பேசிட்டா ரொம்பவும் சங்கடமா போகுமேன்னு தான் அமைதியா இருக்கேன்”

“என்னமா இப்படி பேசறீங்க??”

“அம்மா உன்னை பொறுத்து தான் போக சொன்னேன் மெல்லினா. அதுக்காக யார் என்ன பண்ணாலும் நீ அமைதியா போகணும்ன்னு இல்லை. நீ இவ்வளவு பொறுமையா இருக்கணும்ன்னு அவசியம் இல்லைம்மா”

“அம்மா என்னைப்பத்தி எல்லாரையும் விட உங்களுக்கு தெரியும் தானே. நீங்க சொன்னதுக்காக மட்டும் தான் நான் பேசாம இருக்கேன்னு நினைக்கறீங்களா. அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான்”

“இருந்தாலும் இந்த கம்பிளைன்ட்”

“வேணாம்மா அதைப்பத்தி பேச வேணாம். அத்தை அதை தெரிஞ்சு செய்யலை, அதை என்னால உறுதியா சொல்ல முடியும். அவங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு பார்த்ததுமே புரிஞ்ச எனக்கு, அவங்களோட எண்ணம் எப்படி இருக்கும்ன்னு கூடவா யோசிக்க முடியாது”

“என்னவோ எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. இங்க இருந்தா ஏதாச்சும் பேசிடுவோமோன்னு இருக்கு. மருமகன் எழுந்து நடமாடுறதை பார்த்திட்டு தான் கிளம்பணும்ன்னு இருந்தேன். என்னால முடியலை”

“சரி நீங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புங்க. நான் அவர்கிட்ட பேசிக்கறேன். இப்போ நான் போய் அவரை கவனிக்கறேன்” என்றுவிட்டு எழுந்தவள் கையில் உணவை எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்குத் தான் சென்றாள்.

அங்கிருந்த மேஜையில் உணவை வைத்துவிட்டு மேஜை இழுவையை திறந்து அவன் உணவிற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரையை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

“வேணாம்”

“ஏன்??”

“நான் என்ன பேஷன்டா??”

“அப்போ யாராம்??”

“போடி”

“என்ன விளையாட்டு இது மாத்திரை போடுங்க” என்றவள் அவனருகே அமர்ந்து அவன் தலைகோத அவள் மடி மீது தலைவைத்துக் கொண்டான் வசதியாய்.

“எனக்கு இந்த ரூம்ல இருக்கவே முடியலை. இந்த கட்டை எல்லாம் பிரிச்சு தூக்கி போட்டிறணும் போல இருக்கு”

“விழுகறதுக்கு முன்னாடி அதெல்லாம் யோசிச்சிருக்கணும்”

“ஆமா வேணும்ன்னே போய் விழுந்தாங்க. வேணும்ன்னே வந்து அவன் ஆக்சிடென்ட் பண்ணான் நான் என்ன செய்வேன், லாஸ்ட் மினிட்ல சுதாரிச்சு நான் திருப்பலைன்னா இன்னைக்கு உன் மடியில நான் படுத்திருக்க மாட்டேன். என்னோட போட்டோ தான் படுத்திருக்கும்” என்று அவன் சொல்ல உள்ளுக்குள் திக்கென்றிருந்தது அவளுக்கு.

ஏதோ தெரியாமல் நடந்த விபத்து என்று தான் அவள் நினைத்திருக்க ஆத்திரேயனோ தெரிந்தே நடந்தது என்று சொல்லவும் அவள் உடல் தகிக்க ஆரம்பித்தது கோபத்தில். விபத்திற்கு காரணம் யாராக இருக்கும் என்று அவள் பெரிதாய் ஊகம் செய்ய தேவையே இருக்கவில்லை.

“யாரு செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா அவங்களை அடையாளம் தெரியுமா??” என்று அவள் கேட்கவும் தான், தான் உளறிவிட்டோம் என்றே ஆத்திரேயனுக்கு புரிய “என்ன கேட்கறே நீ??”

“உங்களுக்கு நடந்த விபத்து தற்செயலா இல்லை திட்டமிட்டதான்னு கேட்டேன்” என்றுவிட்டு அவனை அழுத்தமாய் பார்த்தாள்.

“யாராச்சும் வேணும்ன்னே செய்வாங்களா. தற்செயலா நடந்தது தான். நான் தான் அப்போ சரியா கவனிக்காம இருந்திட்டேன், எதிர்ல வந்தவனுக்கும் அப்படித்தான்”

“ஓ!!” என்று அவள் சொன்னதிலேயே அவனுக்கு புரிந்து போனது அவள் நம்பவில்லை என்று. மேற்கொண்டு பேச்சை வளர்த்த அவன் விரும்பவில்லை. அவனுக்கு முதலில் அது யார் என்று தெரியாமல் மெல்லினாவிடம் கூற அவன் விரும்பவில்லை.

அதனாலேயே விஸ்வநாதனிடம் கூட தானே பார்த்துக்கொள்வதாக கூறியிருந்தான். மெல்லினாவிடம் பேச்சை மாற்றும் பொருட்டு “பசிக்குது” என்று அவன் சொல்லிட அவன் தேவையை கவனிக்க எழுந்திருந்தாள் அவள்.

—————

“யாருடா??” என்ற அவினாஷிடம் “பார்கவி” என்றிருந்தான் விக்ரம்.

“என்னடா பண்ணி வைச்சிருக்கே நீ??”

“ஏன்டா கோபப்படுறே?? அந்த மெல்லினாவை மாட்ட வைக்க எனக்கு வேற வழி தெரியலை அதான் அவளை யூஸ் பண்ணிக்கிட்டேன்”

“உனக்கு எதுக்கு இந்த அவசரம் அந்த மெல்லினாவை பழி வாங்கியே தீரணும்ன்னு அப்படியென்ன வெறி உனக்கு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க. நீ அவ மேல உள்ள கோபத்துல என்னென்னவோ பண்ணி நம்மளை சிக்க வைக்கப் போறியோன்னு எனக்கு தோணுது”

“என்ன?? என்ன சொன்னே?? திரும்ப சொல்லு”

“என்னடா சொல்றே எதை சொல்லணும்??”

“இப்போ சொன்னியே கோபத்துல”

“கோபத்துல நீ பண்ணுற வேலையால மாட்டிக்கப் போறோம்ன்னு சொன்னேன்”

“அவினாஷ் நான் சில விஷயம் சொல்றேன். அதுல நான் என்ன தப்பு பண்ணேன்னு சொல்றியா??”

“விக்ரம் நீ என்ன சொல்றே??”

“நான் சொல்றதை கேளு” என்றவன் மெல்லினாவிடம் பேச ஆரம்பித்ததில் இருந்து ஒன்றுவிடாமல் அனைத்தும் சொல்லி முடித்தான் மற்றவனிடம்.

“முட்டாள்!! முட்டாள்!! முட்டாள்!! போச்சு நல்லா மாட்டிக்கிட்டோம்”

“எதை வைச்சுடா அப்படிச் சொல்றே??”

“நான் கேட்குறதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு??”

“என்ன??”

“அந்த ஆதிக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கும் உனக்கும் எதுவும் சம்மந்தம் இருக்கா??”

“ஹ்ம்ம்”

“பைத்தியமாடா நீ… என்ன பண்ணி வைச்சிருக்கே விக்ரம்”

“டேய் எதுவா இருந்தாலும் சொல்லு இப்படி பேசினா எனக்கு எதுவும் புரியலை”

“இதெல்லாம் போன்ல பேசுற விஷயமில்லை நேர்ல வர்றேன்” என்றுவிட்டு போனை வைத்த அவினாஷ் அடுத்த அரைமணியில் நண்பனின் முன் நின்றிருந்தான்.

இருவர் மட்டுமே அவ்வறையில், அவினாஷ் கடுங்கோபத்தில் இருந்தான் விக்ரமின் மீது. “என்னடா நேர்ல பேசறேன்னு சொல்லிட்டு வந்தே. ஒண்ணுமே பேசாம இருக்கே. அதான் ஆபீஸ் விஷயம் எல்லாம் சொல்லி முடிச்சாச்சுல மத்ததை பேசு. போன்ல எதுக்கு என்னை திட்டினே??”

“திட்டாம என்ன செய்யன்னு சொல்லு. இதுவரைக்கும் நாம எப்போவாச்சும் மாட்டியிருக்கோமா??”

“இல்லை”

“இப்போ நல்லா மாட்டப்போறோம்”

“என்ன சொல்றே நீ தெளிவா சொல்லு அவினாஷ்”

“நீ எப்படி விக்ரம் யோசிக்காம விட்டே?? தெளிவா  யோசிக்கற நீ எப்படி இதுல கோட்டை விட்டே?? கோபம் சத்ருன்னு சும்மாவா சொன்னாங்க. பாரு மெல்லினா மேல உள்ள கோபத்துல நீ செஞ்ச வேலை தான் நம்மளை காட்டிக் கொடுக்கப் போகுது”

“டேய் ப்ளீஸ் புரியற மாதிரி சொல்லு. நான் எங்க தப்பு செஞ்சேன்னு எனக்கு தெரியணும்”

“இன்னும் கூட உனக்கு புரியலையா நீ என்ன பண்ணேன்னு. அந்த மெல்லினா பொண்ணே இல்லை ராட்சசி”

“அவளுக்கு உன்னைப்பத்தி அரசல்புரசலா மட்டும் தான் தெரிஞ்சு இருந்துச்சு. ஆனா உனக்கெதிரான ஆதாரம் எதுவும் இதுவரைக்கும் அவகிட்ட இல்லை”

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே??”

“அவகிட்ட ஆதாரம் இருந்திருந்தா உன்னை எப்பவோ நொங்கெடுத்து இருப்பா. சோ அவகிட்ட எந்த துப்பும் இல்லை. ஆனா இனி அப்படியில்லைன்னு எனக்கு தோணுது”

“என்ன சொல்றே நீ??”

“அந்த ஆதி உன்னோட பிரண்ட் தானே இவ்வளவு வருஷமா அவனுக்கு நீ எப்படின்னு தெரிஞ்சுதா??”

“இல்லை”

“ஏன்??”

“நாம ரொம்ப கவனமா இருந்தோம். அவன் என் பிரண்டா இருந்தாலும் அவன்கூட நான் ரொம்ப டச் வைச்சுக்கறது இல்லையே, என்னன்னா என்னன்னு தானே இருக்கேன் சில வருஷமா”

“எஸ் அதைத்தான் சொல்றேன் அவ்வளவு கவனமா இருந்தவன் அந்த மெல்லினா பேசுறதை கேட்டு எதுக்கு கோபப்பட்டே”

“ஒரு பொம்பளை என்னைப் பேசுறதா”

“பேசினா என்ன தப்பு. நாம என்ன மகாத்மாவா நம்மளை பத்தி உசத்தி சொல்ல. அவ பேசினா பேசிட்டு போறான்னு விடாம வேலியில போற ஓணானை தூக்கி வேட்டியில விட்டக்கதையா என்ன செஞ்சி வைச்சிருக்கே தெரியுமா”

விக்ரமிற்கு ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் புரிவது போல இருந்தது நண்பனின் பேச்சு. “மெல்லினா பண்ணதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணது பத்தாததுன்னு அவ புருஷன் மேல வேற கை வைச்சிருக்கே. எதுக்குடா இப்படி பண்ணே??”

“அவன் தான் என் உயிரை எடுக்கப் போறான் அது இதுன்னு என்னை ரொம்ப பேசினாடா. அவன் உயிரோட இருந்தா தானே என் உயிரை எடுக்கறது பத்தி யோசிப்பான்னு தான் அவன் உயிரை எடுக்க பிளான் பண்ணேன்”

“அதையாச்சும் உருப்படியா பண்ணியா??”

“அவன் பிழைப்பான்னு எனக்கு தெரியாதே. எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான்”

“அவன் செத்திருந்தாலும் ஆபத்து நமக்கு தான்”

“அவன் செத்திருந்தா மெல்லினா உடைஞ்சி போயிருப்பா நமக்கு அது தானே வேணும். அவளை பலவீனப்படுத்தணும்ன்னு தான் அப்படி செஞ்சேன்”

“நல்ல செஞ்சே, அவ நம்மளை மாதிரி கிரிமினல் இல்லை. கிரிமினலை கண்டுப்பிடிக்கிற போலீஸ். அப்போ எந்தளவுக்கு கிரிமினலா இறங்கி யோசிப்பாங்கன்னு தோணலையா உனக்கு”

Advertisement