Advertisement

18

“ஆதவா மெல்லினா வீட்டுக்கு சொல்லியாச்சா??” என்று மருமகனிடம் கேள்வியை வைத்து பார்வையை தங்கையும் அவள் மருமகளும் சென்ற திசையில் வைத்திருந்தார்.

“சொல்லியாச்சு மாமா… அவங்க மதுரைக்கு ஏதோ விசேஷத்துக்கு போயிருப்பாங்க போல, உடனே கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க…”

“நல்ல வேளை மாமா நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லவும் நான் நேரா வீட்டுக்கு தான் போனேன். மெல்லினாவுக்கு இப்படி ஆகும்ன்னு நாங்க எதிர்பார்க்கலை”

“பாவம் அம்மாவும் அப்பாவும் நாங்க சரியான நேரத்துக்கு போகலைன்னா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்” என்றான் அவன்.

“சரி தான் ஆதவா நீ நேரா ஆஸ்பிட்டல் கிளம்பி வராம அங்க போனதும் நல்லது தான்” என்று மருமகனின் பேச்சை ஆமோதித்தார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த பார்கவியின் முகமும் வாசவியின் முகமும் சொல்லுபடியாய் இல்லை. வாசவி பொதுவாய் “கிளம்புகிறோம்” என்றுவிட்டு முன்னே நடக்க ஆரம்பிக்க சுசிந்தரம் மற்றவர்களிடம் காலையில் வருவதாக சொல்லி விடைப்பெற்றார். வாசவியின் பார்வை விஸ்வநாதனின் கண்களை மருந்துக்கும் கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. 

அவர்கள் கிளம்பவும் “நான் போய் மெல்லினாவை பார்த்திட்டு டாக்டரையும் பார்த்துட்டு கிளம்பறேன் ஆதவா. ஆதி முழிக்கவும் நீ எனக்கு உடனே போன் பண்ணு எந்நேரம் ஆனாலும் பரவாயில்லை. நான் முழுச்சுட்டு தான் இருப்பேன்” என்று அவர் சொல்ல தலையாட்டினான் அவன்.

மெல்லினாவை சென்று பார்க்க அவள் வெகுவாய் துவண்டு களைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உறக்கத்திற்கு மருந்து கொடுத்திருப்பார்கள் என்று புரிந்தது.

மருத்துவரிடம் ஓரிரு வார்த்தை பேசியவர் ஆத்திரேயனையும் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார். காலையில் பத்திரிக்கை செய்தியை பார்த்ததும் அப்படியொரு கோபம் அவருக்கு.

இதை ஆதி பார்த்தால் என்னாகுமோ என்ற யோசனை வேறு ஓடியது அவருக்கு. நேரமாகவே மருத்துவமனைக்கு விரைந்து வந்திருந்தார். ஆறரை மணிக்கெல்லாம் மருத்துவனைக்கு வந்திருந்தார் அவர்.

ஆதவன் ஆதியின் அறையில் ஒரு ஓரமாய் உறங்கிக் கொண்டிருந்தவன் அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்தான் போலும். உள்ளே அவசரமாய் நுழைந்த விஸ்வநாதனை பார்த்ததும் எழுந்து வந்தான்.

“என்ன மாமா காலையிலேயே வந்துட்டீங்க??”

“இந்த பேப்பரை பாரு, நேத்து அவ்வளவு தூரம் சொன்னேன் அந்த ரிப்போர்ட்டர்ஸ்க்கு ஆனாலும் இப்படி ஒரு நியூஸ்” என்றவரின் முகத்தில் சினம் மிகுந்திருந்தது.

“ஆதி நைட் கண்ணு முழிச்சான்னு சொன்னியே, எதுவும் பேசினானா??”

“இல்லை மாமா ஒரு அஞ்சு நிமிஷம் போல முழிச்சான் சுத்தி சுத்தி பார்த்திட்டு திரும்ப கண்ணு மூடிக்கிட்டான் மாமா. டாக்டரை கூட்டிட்டு வந்தேன், இன்ஜெக்ஷன் போட்டாங்க அதுக்கு பிறகு எழுந்திருக்கலை”

“மெல்லினா??”

“நைட் முழிச்ச மாதிரி தெரியலை மாமா. கவிகிட்ட சொல்லித்தான் வைச்சிருந்தேன் மெல்லினா கண் முழிச்சா எழுப்பச்சொல்லி. நான் எதுக்கும் அங்க போய் பார்த்திட்டு வர்றேன்” என்று நகர்ந்தான் அவன்.

விஸ்வநாதன் சற்று தள்ளி கட்டிலில் படுத்திருந்த ஆத்திரேயனை கவலையோடு பார்க்க அவரின் செல்ல மருமகன் சரியாய் கண் விழித்தான் அப்போது.

“மாமா” என்றவாறே சாவகாசமாய் எழுந்து அமரப் போனவனை நோக்கி வேகமாய் ஓடிவந்தார் அவர். “ஆதி பேசாம படு” என்றார்.

“இருக்கட்டும் மாமா” 

“கையில ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு, சொல்றதை கேளு”

“ஹ்ம்ம்”

“இப்போ எப்படி இருக்கு??”

“ஓகே தான் மாமா லேசா அடி அவ்வளவு தான், மத்தபடி நான் நல்லாவே இருக்கேன்” என்று மிகச்சாதாரணமாய் சொன்னவனை மேலிருந்து கீழாய் முழுதாய் பார்த்தார். இரு கைகளிலும் முழங்கையில் நன்றாக தேய்த்திருந்தது.

ஒரு கையில் தோல் நன்றாக தேய்ந்து காயம் பெரிதாகவே தோன்றியிருந்தது. ஒரு காலில் நன்றாகவே அடிப்பட்டிருந்தது. அங்கங்கு மருந்து வைத்து கட்டப்பட்டிருந்தது.

“என்ன மாமா அப்படி பார்க்கறீங்க??”

“கீழே விழுந்திட்டேன் அவ்வளவு தான்னு ஈசியா சொல்றே?? அதான் பார்த்தேன்”

“அது தானே மாமா உண்மை, விழுந்தா எழுந்து தானே ஆகணும்”

“நல்லா பேச கத்துக்கிட்ட”

“உங்ககிட்ட கத்துக்கிட்டது தான் மாமா”

“சோ இப்போ நீ நல்லாயிருக்கே அப்படித்தானே”

“பர்பெக்ட்லி”

“வலி ஒண்ணுமில்லையே”

“அதெல்லாம் இருக்கத்தானே செய்யும். தாங்கிக்க கூடிய வலி தான் ஒண்ணும் பிரச்சனையில்லை. டாக்டர் தான் ஹெவி டோஸ் மருந்து கொடுத்திட்டாங்க போல. இவ்வளவு நேரம் ஆகியிருக்கு நான் எழுந்திருக்க”

“வலி தெரியாம இருக்கணும்ல அதுக்கு தான் தூக்கத்துக்கு மருந்து கொடுத்திருப்பாங்க. அப்புறம் ஆதி”

“சொல்லுங்க மாமா”

“இது ஆக்சிடென்ட்டா இல்லை??” கேள்விக்குறியிட்டு நிறுத்தினார் அவர்.

“எதுவா இருக்கும்ன்னு நினைக்கறீங்க??” என்று பதில் கேள்வி கேட்டான்.

“யாரு??” என்று அவன் கேள்வியில் பதிலை கண்டுக்கொண்டு மற்றொரு கேள்வியை முன் வைத்தார் தன் மருமகனிடம்.

“யாரா இருக்கும்ன்னு நினைக்கறீங்க??” என்று பதிலை சொல்லாது அடுத்தொரு கேள்வியை கேட்டான் அவன்.

மனதிற்குள் அவனை பாராட்டிக் கொண்டாலும் அவன் பதில் அவருக்கு திருப்தியில்லை என்பதை அவரின் முகமே காட்டிக்கொடுக்க ஆத்திரேயன் அவருக்கு பதில் சொல்ல தயாரானான்.

“மாமா” என்று அவன் அழைக்க பதில் சொல்லாது அவன் முகம் பார்த்தார்.

“விட்டிருங்க மாமா இதை நானே பார்த்துக்கறேன்”

“எப்படி விட முடியும்??”

“நீங்க எனக்கு மாமா மட்டுமில்லை. எல்லாமே நீங்க தான்”

“அப்போ யாருன்னு சொல்லு”

“நானே என்னை பார்த்துக்க மாட்டேனா மாமா. என்னை அவ்வளவு கோழையாவா வளர்த்தீங்க நீங்க”

“நல்லா சமாளிக்கறேடா”

“நான் பார்த்துப்பேன் மாமா என்னை நம்புங்க”

“அப்போ இது??”

“ஆக்சிடென்ட் தான்”

“எந்த மாதிரி??”

அவர் முடிப்பதற்கு முன்பே “தெரிஞ்சு பண்ணது தான்” என்றான் அவன்.

அதைக்கேட்டவரோ “எவ்வளவு தைரியம் இருக்கணும்??” என்று சொல்லும் போது அவர் கை முஷ்டி இறுகியது, முகத்தில் கோபத்தின் சாயல் அப்பட்டமாய்.

“தைரியம் இருக்கப்போய் தானே மாமா நடந்திருக்கு. அதை விடுங்க அது எப்படி டீல் பண்ணணுமோ நான் பண்ணிக்குவேன்”

“வலிக்குதா ஆதி” என்றார் மீண்டும் அவன் முகம் பார்த்து.

“இதெல்லாம் ஒரு வலியா மாமா. நீங்க இதைவிட அதிகமா அடிப்பட்டு கிடந்திருக்கீங்க அதெல்லாம் மறந்திட்டு என்னைப் போய் கேட்கறீங்க”

“என்னைவிடு அது வேற விஷயம்??”

“என்ன வேற விஷயம், எல்லாம் ஒண்ணு தான்”

“போடா” என்று செல்லமாய் சலித்துக் கொண்டார் தன் மருமகனிடம்.

ஆத்திரேயன் மெதுவாய் சுற்றிப்பார்த்தவன் “எல்லாரும் எங்கே மாமா??” என்றான்.

“ஆதவனும் அவன் பொண்டாட்டியும் வெளிய இருக்காங்க. வாசவியும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு போகச் சொல்லி நான் தான் அனுப்பி வைச்சேன்”

ஆதி அவர் சொன்னதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு தேவையான பதில் இன்னமும் வரவில்லை அவரிடத்தில் இருந்து. மேலும் எதுவாவது சொல்வாரென்று அவரின் முகமே பார்த்தான்.

“நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரவா ஆதி”

“எதுக்கு மாமா??”

“நீ கண்ணு முழிச்சிட்டல்ல அதான்”

“அப்புறம் பார்க்கலாம் மாமா” என்று முடித்துவிட்டான்.

“நீ இரு நான் ஆதவனை கூட்டிட்டு வர்றேன்” என்று அவர் வெளியே செல்லப் போக அவர் கைப்பிடித்து தடுத்தான் அவன்.

“மாமா”

“சொல்லு ஆதி”

“மெல்லினா எங்கே?? என் மேல கோபமா இருக்காளா??”

“இல்லை”

“அப்போ ஏன் அவ வரலை?? எனக்கு ஒண்ணுன்னா கூட வரமாட்டாளா??”

“அப்படியெல்லாம் இல்லை ஆதி??”

“அவ்வளவு பிடிவாதமா அவளுக்கு”

“பிடிவாதமில்லை உன் மேல உள்ள பிடித்தம் உனக்கு ஒண்ணுன்னதும் தாங்க முடியாம பிட்ஸ் வந்திடுச்சு அவளுக்கு. இதே ஆஸ்பிட்டல் தான் அட்மிட் பண்ணியிருக்கோம்”

“என்ன மெல்லினாக்கு என்ன?? நான் பார்க்கணும் மாமா” என்று மீண்டும் அவன் எழப் போக “பார்க்கலாம் ஆதி அவ எழுந்திட்டா நானே கூட்டிட்டு வர்றேன்”

“நான் போய் பார்க்கணும்” என்றான் அவன் பிடிவாதமாய்.

“ஆதி” என்று அவர் சற்று குரல் உயர்த்த அமைதியானான்.

“ஆதி இன்னோரு விஷயம்”

“என்ன மாமா??”

“இந்த பேப்பரை பாரு” என்று அவன் முன் அந்த செய்தி வந்திருந்த பக்கத்தை பிரித்துக் காட்ட அவன் முகம் ரவுத்திரமாகியது.

“யாரு மாமா இவன்??”

“தெரியலை இவன் மட்டும் எழுதலை, ஆல்மோஸ்ட் எல்லா நியூஸ்லயும் இப்படித்தான் வந்திருக்கு”

“என்ன பைத்தியக்காரத்தனம் இது??” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மெல்லினா பார்கவியின் துணையுடன் உள்ளே வந்துக் கொண்டிருந்தாள் உடன் ஆதவனும்.

——————

“நான் சொன்ன மாதிரி நியூஸ் வந்திடுச்சா இல்லையா”

“எல்லாம் பர்பெக்ட் விக்ரம் அந்த நியூஸ் பேஜ் ஸ்க்ரீன்ஷாட் உனக்கு வாட்ஸ் அப் பண்ணியிருக்கேன் பாரு” என்றான் அவன் நண்பன் அவினாஷ்.

“அவினாஷ் நாம இனிமே தான் கவனமா இருக்கணும். கொஞ்ச நாளைக்கு எந்த வேலையும் வேண்டாம், ஒரு இம்மியளவு விஷயம் வெளிய தெரிஞ்சாலும் அவ்வளவு தான்”

“விக்ரம் அதுக்கெல்லாமா நீ பயப்படுற”

“இல்லை இது பயம் இல்லை. ஏன் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உங்க வீட்டில உனக்கு கோவில் கட்டி கும்பிடுவாங்களா என்ன” என்றான் அவன்.

“அதெப்படி செருப்பால அடிப்பாங்க”

“அதே தான் எல்லாருக்கும்”

“அதுக்காகவெல்லாம் நான் பயப்படலை. அந்த மெல்லினாகிட்ட நான் தோத்துட்ட மாதிரி ஆகிடக் கூடாது. அவளுக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு, கேரளாவுல நாம எங்க என்ன மிஸ் பண்ணோம்ன்னு புரியலை. என்னை அங்க தான் பார்த்ததா அவ சொன்னா…”

“அங்க கொஞ்சம் நஞ்சமா வேலை பார்த்தோம். இப்போ வரைக்கும் எல்லாம் வீடியோஸ் நம்மகிட்ட தான் இருக்கு, பாதி வெளிநாட்டுக்கு வித்தாச்சு மீதியும் விக்கத்தானே பிளான் பண்ணிட்டு இருக்கோம்”

“இப்போ எதுவும் செய்ய வேண்டாம்”

“சரி விக்ரம் எதுவும் செய்யலை. எனக்கு ஒரு விஷயம் தெரியணும்டா”

“என்ன சொல்லு??”

“எப்படி மெல்லினா மேல கம்பிளைன்ட் கொடுக்க வைச்சே”

“நாம எப்பவும் செய்யற அதே வேலை தான். அதை வைச்சு மிரட்டித்தான் காரியத்தை சாதிச்சேன்”

“யாருடா??”

——————-

“அக்கா பேசணும்ன்னு சொல்லிட்டு என்னை கூப்பிட்டு எப்படி தொடங்கறதுன்னு யோசிச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம். சொல்லுங்க உங்களை என்னன்னு சொல்லி மிரட்டினாங்க”

“அத்தைகிட்ட நீங்க எப்படி கையெழுத்து வாங்கினீங்க??” என்று மெல்லினாவே பேச்சை ஆரம்பிக்க பார்கவி குற்றவுணர்வுடன் அவளை பார்த்தாள்.

Advertisement