Advertisement

18

மறுநாள் காலைய செய்தித்தாள் தாங்கி வந்த செய்தி மனைவியே கணவனை கொலை செய்ய முயற்சி என்பதே. கணவனும் மாமியாரும் எதிர்த்து கேள்வி கேட்டதால் கணவனை மனைவியே கொலை செய்ய முயற்சி செய்தாள் என்று தங்கள் கற்பனை வளத்தையும் கூட்டி செய்தியை வெளியிட்டிருந்தது செய்தித்தாள்கள்.

மெல்லினாவையும் ஆத்திரேயன் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையிலேயே சேர்த்திருந்தனர் குடும்பத்தினர். ஆத்திரேயன் விஷயம் கேள்விப்பட்டதும் முதல் ஆளாய் அங்கு வந்திருந்தார் அவன் மாமா ஐஜி விஸ்வநாதன்.

ஆத்திரேயன் அடிப்பட்ட சிறிது நேரம் சுயநினைவில் தானிருந்தான். அவனாய் எழுந்திருக்கவும் முயற்சியும் செய்தான். ஆனால் அவனால் முடிந்திருக்கவில்லை. அருகிருந்தோர் அவனைப் பார்த்துவிட்டு உடனே போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

அதிக ரத்தம் வெளியேறியதாலேயே அவனுக்கு மயக்கம் வந்திருந்தது. விஸ்வநாதன் வந்து அவனை முழுதாய் ஆராய்ந்து முடித்திருந்தவர் அந்த பகுதி காவல்துறை அதிகாரியிடம் அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தார்.

“சிசிடிவி பூட்டேஜ் எல்லாம் பார்த்தாச்சா அந்த டிரைவர் அர்ரெஸ்ட் பண்ணிட்டீங்க தானே”

“எல்லாம் பார்த்தாச்சு சார், ஆத்திரேயன் சார் தான் வண்டியை சட்டுன்னு திருப்பி இருக்கார், அதுல எதிர்ல வந்த வண்டியில மோதி இப்படி ஆகிடுச்சு சார்”

“இருந்தாலும் அந்த வண்டி டிரைவர் அரெஸ்ட் பண்ணியாச்சு சார். அவனையும் விசாரிக்க சொல்லிட்டு நான் இங்க வந்திருக்கேன் சார்”

“ஓகே நீங்க போய் அவனை பாருங்க. ஆதி கண் முழிச்சதும் என்னாச்சுன்னு மீதியை விசாரிச்சுக்கலாம்” என்று முடித்து அவரை அனுப்பி வைத்தார்.

அடுத்து அவர் போன் செய்தது நித்தேஷுக்கு தான். “ஹலோ சார் சொல்லுங்க சார்??”

“சீக்கிரம் கிளம்பி ஆஸ்பிட்டல் வா” என்று விட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

ஆத்திரேயனுக்கு விபத்தாகியிருந்த செய்தி அவனுக்குமே அப்போது தான் வந்திருந்தது. சற்று முன்பு தான் மெல்லினாவிற்கு அழைத்து அவன் சொல்லிக் கொண்டிருக்க சத்தமேயில்லாதிருந்தது எதிர்முனை.

போனை கட் செய்துவிட்டு அவன் மீண்டும் அவளுக்கு முயற்சி செய்யும் முன் விஸ்வநாதன் அழைத்துவிட அங்கு கிளம்பியிருந்தான்.

வாசலிலேயே அவனை எதிர்க்கொண்டார் அவர். “சார்” என்று அவருக்கு மரியாதை செய்ய “ஆதியோட மாமாக்கு இதெல்லாம் தேவையில்லை” என்றவர் அவன் தோளில் கைப்போட்டு உள்ளே சென்றார்.

“என்னாச்சு ஆதிக்கு??” என்றார் எடுத்த எடுப்பிலேயே.

“சார்” என்று விழித்தான் அவன்.

“ஆக்சிடென்ட் ஆனது உங்க ரெண்டு பேரோட வீட்டுக்கு இடைப்பட்ட ஒரு இடத்துல தான், சோ அவன் உன்னை தான் பார்க்க வந்திருக்கணும், என்ன சொன்னான் உன்கிட்ட, அந்த நேரத்துல எதுக்கு உன்னை பார்க்க வந்தான்” என்றார் அவர்.

‘ஆதிக்கு மாமான்னு சொல்லிட்டு இப்படி போலீசா கேள்வி கேட்குறாரே. சும்மாவா ஐஜியாகி இருப்பார், எவ்வளோ யோசிக்குறார்ப்பா’ என்று தனக்குள் அவரை வியந்துக் கொண்டான் நித்தேஷ்.

“நித்தேஷ்” என்று அவர் மீண்டும் அழைக்கவும் தான் அவன் நினைவுகள் ஒதுக்கி அவருக்கு பதில் சொல்லவாரம்பித்தான்.

ஆத்திரேயன் வந்தது முதல் நடந்தது அனைத்தும் சொல்லி முடித்திருந்தான். “சோ இது யாரும் திட்டமிட்டு எல்லாம் செய்யலை அப்படித்தானே”

“அப்படித்தான் இருக்கணும் சார்”

“ஹ்ம்ம் ஓகே” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதவன் வேகமாய் உள்ளே ஓடிவருவதை கண்டு இவர்கள் எழுந்துச் சென்று அவனை எதிர்க்கொண்டனர்.

“மாமா… நல்ல வேளை நீங்க இங்க வந்துட்டீங்களா…” என்றான் ஆதவன் பரபரப்பாய்.

“என்னாச்சு ஆதவா எதுக்கு டென்ஷன்??”

“மெல்லினாக்கு பிட்ஸ் வந்திடுச்சு மாமா. போன் பேசிட்டே இருந்தவ வண்டியோட கீழே விழுந்திட்டா. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்” என்று அவன் உள்ளே செல்லவும் பின்னால் ஸ்ட்ரெச்சரில் மெல்லினாவை அழைத்து வந்தனர்.

பார்கவி, வாசவி, சுசிந்திரம் என்று அனைவருமே அங்கிருந்தனர். ஆத்திரேயனைப் பற்றி அவர்கள் விசாரிக்க விஸ்வநாதன் அவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மெல்லினாவையும் அங்கேயே அட்மிட் செய்திருந்தனர். மற்றவர்கள் ஆத்திரேயனையும் மெல்லினாவையும் பார்க்கச் செல்ல விஸ்வநாதன் திரும்பி நித்தேஷைப் பார்த்தார்.

‘இவர் எதுக்கு ஸ்லோ மோஷன்ல என்னை பார்க்குறாரு’ என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே அவரைப் பார்க்க “நீ தான் மெல்லினாக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னியா??” என்றார் அவர் குற்றம் சாட்டும் குரலில்.

‘இது ஏதடா வம்பு’ என்று பார்த்தவன் “சார் கொஞ்சம் முன்னாடி தான் மெல்லினா ஆதியைப் பத்தி என்கிட்டே கேட்டா, அதான் சார் போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். தைரியமான பொண்ணு சார் அவங்க” என்றும் சேர்த்து சொன்னான்.

அவர் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்தவர் மீண்டும் அவனருகே வந்தார். ‘இப்போ என்ன கேட்கப் போறாரோ’ என்று ஆசிரியரை கண்ட மாணாக்கன் போல விழித்துக் கொண்டிருந்தான் நித்தேஷ்.

“நித்தேஷ் மெல்லினாக்கு பிட்ஸ் வந்த விஷயம் டிபார்ட்மென்ட்க்கு தெரிய வேணாம்” என்று சொல்லவும் அவனுக்கு அவர் சொல்ல வந்ததின் சாராம்சம் புரிய அவர் மீது அளவில்லா மரியாதை வந்து அமர்ந்தது.

“ஸ்யூர் சார்” என்றிருந்தான்.

ஆத்திரேயனுக்கு அடிப்பட்ட செய்தி மீடியாவிற்கு தெரிந்து அவர்கள் அங்கு ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர். ஆத்திரேயனின் குடும்பம் மொத்தமும் அங்கிருக்க மெல்லினா மட்டும் காணவில்லை ஏன் என்று அவர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர்.

விஸ்வநாதன் தான் அவர்களிடம் பேசி அனுப்பி வைத்தார். “இங்க பாருங்க இட்ஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடென்ட், டிரைவரை கைது பண்ணியாச்சு. விசாரணை நடந்திட்டு இருக்கு, நீங்க இப்போ இங்க இருந்து கிளம்புங்க” என்றார் அவர்.

“சார் அதெப்படி சார் கிளம்ப முடியும். ஆதி சாரோட வைப்பை காணோமே. எங்க சார் போய்ட்டாங்க அவங்க” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

“உள்ள தான் இருக்காங்க நீங்க கிளம்புங்க”

“எதுக்கு சார் இப்படி அவசரப்படுத்தறீங்க?? விஷயம் இல்லாமலா நீங்க இங்க வந்திருக்கீங்க??”

“ஆமாமா ஐஜியே நேர்ல வந்திருக்கார்ன்னா சும்மாவா என்ன நெருப்பில்லாம புகையாதே…” என்றார் மற்றுமொருவர்.

“இங்க பாருங்க நான் இங்க ஐஜி அப்படிங்கற முறையில வரலை. ஆதியோட மாமாவா தான் இங்க வந்திருக்கேன். சோ ப்ளீஸ் உங்க இஷ்டத்துக்கு கேள்வி கேட்கறேன்னு சங்கடப்படுத்தாதீங்க. உங்க வீட்டில எல்லாம் இப்படி நடந்தா நின்னு பதில் சொல்லிட்டு இருப்பீங்களா, இல்லை உடம்பு முடியாதவங்களை பார்ப்பீங்களா”

“உங்களோட கேள்விக்கு எல்லாம் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பதில் சொல்வார்”

“எப்போ சார்??”

“அவரே உங்களை கூப்பிடுவாரு அப்போ அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்று கையெடுத்து கும்பிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

நித்தேஷ் ஆத்திரேயனையும் மெல்லினாவையும் உள்ளே சென்று பார்த்துவிட்டு விஸ்வநாதனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிச் சென்றிருந்தான்.

ஆதவன் தன் மாமனிடம் தம்பியின் நலன் குறித்து விசாரித்துக் கொண்டான். “ஆதவா இங்க கூட யாரு இருக்கப் போறது. அப்பாவையும் வாசவியையும் வீட்டுக்கு அனுப்பு, ரெண்டு பேருக்கும் பிரஷர் வேற இருக்கு”

“சரிங்க மாமா” என்று அவர் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டினான் அவன்.

விஸ்வநாதனின் பார்வை வந்ததில் இருந்து அவர் தங்கையின் மீதே அவ்வப்போது படிந்தது. மெல்லினா விஷயத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அனுபவம் வாய்ந்த அவருக்கு புரியாமலா இருக்கும்.

சூழ்நிலை சாட்சிக்கு தக்கப்படி நடந்துக்கொள்ள வேண்டியதாய் இருக்க அதன்படியே நடந்தார். இருந்தாலும் அதில் மெல்லினாவிற்கு சாதகமாய் அவரால் செய்ய முடிந்தது அவள் தன்னை நிரூபிக்க கொடுத்த கால அவகாசமே.

மனித உரிமைகள் நல அதிகாரியிடம் இருந்த புகாரில் தங்கையின் கையொப்பத்தை அவருமே உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

டைப் செய்யப்பட்டிருந்த புகார் கடிதத்தில் வாசவி கையெழுத்திட்டிருந்தார் அவ்வளவே. அவரை யாரும் கட்டாயப்படுத்தி போட வைத்தார்களா, இல்லை தங்கையே மெல்லினாவை சிக்க வைக்க அப்படி செய்தாரா அல்லது அவரே அறியாது அதில் கையொப்பம் இட்டுவிட்டாரா என்ற தலையாய யோசனை தான் அவருக்கு ஓடியது. 

வாசவியின் முகம் அவ்வளவாக சரியில்லாதது நன்றாக கவனித்துக் கொண்டிருந்தார். தமையனின் பார்வையை நேருக்கு நேராக அவர் சந்திக்கவே முயலவில்லை.

“அம்மா நீங்களும் அப்பாவும் வீட்டுக்கு கிளம்புங்க நானும் கவியும் இங்க இருக்கோம்” என்றான் ஆதவன் தன் அன்னையிடம்.

“இல்லை நா… நானும் இங்க இருக்கேன்” என்றார் அவர்.

“வேணாம்மா இங்க படுக்கவெல்லாம் முடியாது. நீங்களும் அப்பாவும் மாத்திரை போட்டு இருக்கீங்க வேற, பேசாம வீட்டுக்கு கிளம்புங்க”

“இல்லை ஆதவா ப்ளீஸ் நான் இங்கவே இருக்கேன்”

“அம்மா உங்களை இங்க பார்த்தா மாமா என்னைத் தான் சத்தம் போடுவாங்க. அவங்க தான் சொன்னாங்க உங்களை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி, நீங்க போகலைன்னா நான் மாமாகிட்ட என்ன பதில் சொல்வேன்” என்று அவன் சொல்லவும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் சட்டென்று எழுந்தார்.

“அண்ணன் தான் கிளம்பச் சொன்னாங்களா?? வேற… வேற எதுவும் சொன்னாங்களா??”

“வேற எதுவும் சொல்லலைம்மா”

“சரி அப்போ நாங்க கிளம்பறோம்” என்றவர் தன் மூத்த மருமகள் பார்கவியை பார்த்தார்.

“பார்கவி கொஞ்சம் வா” என்று அவர் அழைக்க “எங்கேம்மா கூப்பிடுறீங்க அவளை” என்றான் ஆதவன்.

“கொஞ்சம் பேசிட்டு அனுப்பறேன் ஆதவா” என்றவர் மருமகளை முறைத்திருக்க பார்கவி முன்னே செல்லும் அவர் பின்னேயே சென்றாள்.

விஸ்வநாதனின் பார்வை எதையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொன்றையும் அலசிக் கொண்டுதானிருந்தார். தன் ஆசை மருமகன் ஆத்திரேயனுக்காய் ஓடோடி வந்திருந்தாலும் அவருக்குள் இருந்த காவலதிகாரி மேலேழும்பி தன் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தார்.

Advertisement