Advertisement

மெல்ல அதை மறைத்துக்கொண்டு குளித்து கீழே வந்தவள் மாமனாருக்கும் மாமியாருக்கும் காபியை போட்டுக் கொடுத்தாள். காலையில் இருந்து அவள் உணவருந்தாமல் இருந்ததால் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

ஊரில் இருந்து வந்ததுமே அலுவலகத்தில் இருந்து அழைப்பு உடனே வருமாறு. ஆதலால்  வந்ததும் குளித்துவிட்டு அங்கு ஓடத்தான் அவளுக்கு நேரமிருந்தது.

இரவு உணவிற்கு தயார் செய்து வைத்துவிட்டு இவள் மாடியேற மகேஸ்வரி அழைத்துவிட்டார். “சொல்லுங்கம்மா”

“மெல்லினா டிவி நியூஸ்ல உன்னைப்பத்தி ஏதோ சொல்றாங்க, என்னாச்சும்மா??” என்றவரின் குரல் உடைந்திருந்தது.

“அம்மா அதெல்லாம் பார்த்து வருத்தப்படாதீங்க. டிவியை ஆப் பண்ணி வைங்க”

“என்னாச்சுன்னு சொல்லு மெல்லினா??”

“ஒண்ணுமில்லைம்மா சின்ன பிரச்சனை தான்” என்றவள் அன்று நடந்ததை அப்படியே அவரிடம் சொல்லி முடித்திருந்தாள்.

“இவ்வளவு நடந்திருக்கு நீ ஏன் எனக்கு முன்னாடியே சொல்லலை??”

“ம்மா என் வேலையை பத்தி நான் அதிகம் வீட்டில பேசினதில்லை தானே. இதும் அப்படித்தான்”

“இருந்தாலும் உன் மாமியாரே கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்கன்னு…”

“அம்மா அவங்களைப் பத்தி என்கிட்ட பேசுனது நீங்க. நீங்களே சொல்லுங்க உங்களுக்கு அப்படி தோணுதாம்மா??”

“இல்லை ஆனாலும்…”

“மீடியாவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நான் தான் ஹாட் நியூஸ்ம்மா. புதுசா நியூஸ் கிடைக்கிற வரைக்கும் என்னைப்பத்தி தான் பேசுவாங்க. உங்ககிட்ட கூட பேச முயற்சி செய்வாங்கம்மா…”

“என்ன என்கிட்டயா நான் என்ன பண்ணேன்??”

“என்னைப்பத்தி உங்ககிட்ட விசாரிக்கறதுக்கு தான்ம்மா” என்றவள் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு கீழே வந்தாள்.

சுசிந்திரமும் வாசவியும் இன்னும் உணவருந்தியிருக்கவில்லை. அவர்களை சாப்பிட வைத்து இவள் ஆத்திரேயனுக்காய் காத்திருந்தாள்.

—————

“என்னடா இங்க வந்திருக்கே??” என்றவாறே நண்பனின் தோளில் கைப்போட்டான் நித்தேஷ்.

“மனசு சரியில்லை” என்றவன் எங்கோ வெறித்திருந்தான்.

“எப்படி??”

“தெரியலை”

“எல்லாம் சரியாகிடும், அம்மா அப்படி செய்யற ஆளில்லை”

“தெரியும்”

“இந்த நேரத்துல நீ மெல்லினா கூட தானே இருக்கணும்”

“எனக்கு இப்போ தனியா இருக்கணும்” என்றவன் மெல்லினாவின் மேல் கோபத்தில் கிளம்பி வந்திருப்பதை நண்பனிடத்தில் கூறவில்லை.

ஆனால் நட்பாயிற்றே சொல்லாமலே புரிந்து கொள்ளுமே. “வீட்டில என்ன பிரச்சனை இருந்தாலும் அதைவிட்டு ஓடி ஒளிஞ்சி வந்திட கூடாது ஆதி. நமக்கு பிடிச்சது நடந்தா மட்டும் தான் நாம அங்க இருக்கணும்ன்னா, நமக்கு பிடிக்காம இந்த உலகத்துல நிறைய நடக்குது அப்போ நாம என்ன செய்வோம் சொல்லு”

“பேமிலிக்குள்ள ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். எல்லாத்தையும் நாம அட்ஜஸ்ட் பண்ணி வாழக் கத்துக்கணும். வெளிய இருக்கற மாதிரியே வீட்டிலையும் இருக்கணும்ன்னா அது கஷ்டம்”

“இப்போ என்ன தான் சொல்ல வர்றே??”

“யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்கறே குடும்பத்துக்காக தானே. அவங்களுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுத்தா என்ன தப்பு சொல்லு??”

“அப்போ நான் தப்புன்னு சொல்றியா??”

“நான் அப்படி சொல்ல வரலை”

“என்ன நடந்துச்சுன்னே தெரியாம பேசாத நித்தேஷ்??”

“எனக்கு அது தெரிய வேண்டாம் ஏன்னா அது உன் குடும்ப விஷயம். ஆனா உன் முகம் சொல்லுது நீ வீட்டில கோவிச்சுட்டு வந்திருக்கேன்னு. எப்போ கோபம் வரும் அவங்க நம்ம பேச்சை கேட்கலை, இல்லை நமக்கு பிடிக்காததை செஞ்சாங்க இந்த மாதிரியான விஷயங்களுக்கு தானே. அதுல ஏதோ ஒண்ணு நடந்திருக்கு. அதான் நீ கிளம்பி வந்திருக்கே”

ஆத்திரேயன் பதில் ஏதும் சொல்லவில்லை. அதுவே சொன்னது நித்தேஷின் கணிப்பு சரியென்று. 

“என்ன பதில் சொல்லாம இருக்கே?? சோ நான் சொன்னது சரி தான்”

“எனக்கு புரியலை நித்தேஷ் என்ன நடக்குதுன்னு. கல்யாணம் ஆனா நாள்ல இருந்து ஒரு நாள் நிம்மதியான பொழுதா போகலை. ஏதாச்சும் ஒரு பிரச்சனை என்னால அதை பேஸ் பண்ணவே முடியலை” என்றான் ஆத்திரேயன் ஆற்றாமையாய்.

“வெளிய எவ்வளவு ப்ரச்சனையியா அசால்ட்டா சமாளிக்கறே வீட்டு பிரச்சனை எல்லாம் தூசிடா”

“எனக்கும் அது தான் புரியலை. கொலைக்காரன் கொள்ளைக்காரனை கூட சமாளிச்சுடுவேன் போல என்னால வீட்டுல இருக்கவங்களை புரிஞ்சுக்க முடியலை”

“வெளிய நீ சொல்றதும் செய்யறதும் சரியா இருக்கலாம். ஆனா வீட்டில மனைவி சொல்றது தான், தப்பாவே இருந்தாலும்” என்றவனை மேலிருந்து கீழாக பார்த்தான் ஆத்திரேயன்.

“சத்தியம்டா இதை நான் அனுபவிச்ச பிறகு தான் சொல்றேன். வெளியா நாம ராஜாவா ராஜாங்கம் பண்ணலாம், ஆனா வீட்டுக்குள்ள ராஜாவா இல்லையில்லை மகாராணியா அவங்க தான் ராஜாங்கம் பண்ணுவாங்க”

ஆத்திரேயனின் முகம் நண்பனின் பேச்சில் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது. “அப்போ அவங்களுக்கு அடிமையா இருக்கணும்ன்னு சொல்ல வர்றியா” என்றான் நண்பனை முறைத்து.

“இல்லை, குடும்பத்தை பொறுத்தவரை பெண்களோட முடிவை இறுதி முடிவா இருந்தா நம்ம வாழ்க்கை சொர்க்கமா இருக்கும்”

“அவங்க தப்பாவே முடிவெடுத்தாலும் நாம எதுவும் சொல்லக் கூடாதா”

“தாராளமா சொல்லலாம் தப்பு நடந்த பிறகு”

“என்னடா இது முட்டாள்த்தனம்??”

“ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ரகம் ஆதி. நம்ம எத்தனை குற்றவாளிகளை பார்த்திருப்போம். எல்லாரையும் ஒரே மாதிரியா ட்ரீட் பண்றோம். ஆளுக்கேத்த மாதிரி தானே நாம நடத்துறோம்”

“ஒருத்தனுக்கு அடி உதைன்னா இன்னொருத்தன் சொன்னாலே கேட்கற ரகமா இருப்பான். அப்படித்தான் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதம். சிலர் நாம சொல்றதை கேட்டுப்பாங்க. சிலர் பட்டு தான் தெரிஞ்சுப்பாங்க”

“உனக்கு நான் சொல்றது ஒண்ணு தான். வீடு அமைதியா இருக்கணும்ன்னா அவங்க போக்குலவே விட்டிரு அப்போ தான் நீ நிம்மதியா வெளிய வேலை பார்க்க முடியும். நீ வீட்டு விஷயத்துல தேவையில்லாம தலையிட்டா உன் நிம்மதி மட்டுமில்லை எல்லாரோட நிம்மதியும் போய்டும். உனக்கு நான் சொல்லி புரிய வேண்டியதில்லை” என்று நீளமாய் பேசி முடித்திருந்தான் நித்தேஷ்.

——————-

நேரம் செல்லச்செல்ல மெல்லினாவிற்கு பதட்டம் கூடியது. ஆத்திரேயனுக்காய் காத்திருக்க சட்டென்று காலையில் நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் ஓட ஆரம்பித்தது. விக்ரம் எதற்காய் தனக்கு அழைத்து பேச வேண்டும் என்ற இடத்தில் அவள் எண்ணம் தடைபட உடனே அவனுக்கு அழைத்துவிட்டாள்.

“ஹாய் மெல்லினா உனக்கு தான் வெயிட் பண்ணேன். இருந்தாலும் நீ ரொம்ப லேட்டு, ஆனாலும் புத்திசாலி தான்”

“தப்பு பண்ணிட்டே??”

“ரொம்ப சரியான தப்பு” என்றான் அவன் பதிலாய்.

“கண்டிப்பா சரியான ஆப்பு தான்”

“என்ன?? என்ன சொன்னே??” என்றவன் சொல்ல “சரியான தப்பு தான்னு சொன்னேன்”

“பயந்துட்டியா”

“பயந்தது நான் இல்லைன்னு நினைக்கிறேன்”

“அப்போ எதுக்கு எனக்கு போன் பண்ணியாம்”

“நீ தானான்னு சந்தேகம் வந்துச்சு உறுதிப்படுத்திக்க தான் பண்ணேன். சந்தோசம் இனி நடக்கறது நல்லதாவே நடக்கும்”

“உனக்கு பயமே இல்லையா. உன் வேலை போய்டுச்சு இனி உன்னால என்னை என்ன பண்ண முடியும்ன்னு நினைக்கிறே”

“பதறிய காரியம் சிதறும், இப்பொத்தானே பதறியிருக்க, இனி சிதறிப் போவே”

“என்னடி பழமொழி சொல்றே?? அவ்வளவு பயம் உனக்கு என் மேலே??”

“டின்னு சொன்னே நாக்கை அறுத்திடுவேன். யாருக்குடா பயம் எனக்கா?? சொல்லுடா எனக்கா?? பயந்தவன் தான்டா முதுகுல குத்துவான், நான் பயப்படுறவ இல்லை நேராவே தான் அடிப்பேன்”

“ஓ நேரா அடிப்பியா என்ன செய்வே?? என்ன செய்ய முடியும் உன்னால இனி. உனக்கு பதவியே இல்லை செய்வாளாம் செய்வா” என்று நக்கலடித்தான் அவன்.

“நான் செய்வேன்னு எப்போ சொன்னேன். இதுவரைக்கும் நீ என் புருஷனை நண்பனா தானே பார்த்திருக்கே, இனிமே அவரோட இன்னொரு முகத்தை நீ பார்ப்பே. உன் நெஞ்சுல தொலைக்கப் போறது என் துப்பாக்கி தோட்டா இல்லை என் புருஷனோடது” என்று அவள் கர்வமாய் சொல்லி போனை வைக்க கையில் இருந்த போனை தூக்கி அடித்தான் விக்ரம்.

————-

நித்தேஷிடம் பேசிவிட்டு சிறிது நேரம் அவனுடன் இருந்துவிட்டு தன் போனை தேடியவனுக்கு அதை வீட்டில் விட்டுவிட்டு வந்தது ஞாபகத்தில் வர “சரி நித்தேஷ் நான் கிளம்பறேன். ரொம்ப நேரமாச்சு என்னை தேடுவாங்க” என்று எழுந்தான் ஆத்திரேயன்.

“நான் சொன்னதை யோசி” என்றான் நண்பன்.

“கண்டிப்பா” என்றவன் வண்டியை கிளம்பினான் வீட்டிற்கு.

நண்பனின் பேச்சை அசைப்போட்டவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் கடைசி நொடியில் தான் அருகே அவனை இடிக்க வந்த லாரியை பார்த்து வண்டியை திருப்ப எதிரில் வந்த மற்றொரு வாகனத்தில் மோதி சிறிது தள்ளிப்போய் விழுந்திருந்தவன் முழுவதுமாய் மயங்கிருந்தான்.

நித்தேஷின் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தவன் “சொல்லும்மா” என்றான்.

“அண்ணா நான் மெல்லினா பேசறேன்”

“தெரியும் சொல்லும்மா”

“அவர் வீட்டில இருந்து கோபமா கிளம்பினார் எங்க போனார்ன்னு தெரியலை. போனை கூட வீட்டில வைச்சுட்டு போய்ட்டார்” என்றவளின் குரலில் அப்பட்டமான கவலை தெரிந்ததை உணர்ந்தான் மற்றவன்.

“கொஞ்ச நேரம் முன்னாடி வரை என் கூட தான்மா இருந்தான். இந்நேரம் வீட்டுக்கிட்ட வந்திருப்பான், நீ வெயிட் பண்ணுமா வந்திருவான்” என்று அவன் சொல்லவும் தான் அவள் சற்று ஆசுவானமானாள்.

மேலும் ஒரு மணி நேரம் அவள் வாயிலிலேயே நின்றிருந்தும் ஆத்திரேயன் வராது போக அவளின் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. ஏதோவொரு பதட்டம் மொத்தமாய் ஆட்கொண்டது.

நெருகியவர் யாருக்கோ எதுவோ நடக்கப் போகும் முன் ஒருவித பயம் வரும் அவளுக்கு. ஆனந்தனின் இறப்பிற்கு முன்பு அது போல உணர்ந்திருக்கிறாள், பின்பு அவளின் நெருக்கமான தோழியின் மரண தருணத்திலும் அது போன்று உணர்ந்திருக்கிறாள்.

இப்போதும் அது போல ஒரு பயம் வர மீண்டும் அழைத்துவிட்டாள் நித்தேஷுக்கு. அழைப்பு சென்றுக் கொண்டிருந்ததே தவிர அவன் எடுக்கவேயில்லை. அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை, ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அவள் வெளியில் வர அவளின் அலைபேசி அடித்தது.

சுசிந்தரம் அவள் வேகமாய் செல்வதைப் பார்த்துவிட்டு பின்னேயே வர அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் தான் எதையோ கேட்டு அதிர்ந்தவளாகி நிற்க அவளுக்கு பிட்ஸ் வந்துவிட்டது.

கைகால் ஒரு பக்கம் இழுக்க பதறிப்போனார் பெரியவர். “வாசவி” என்று அவர் உள்பக்கமாய் குரல் கொடுத்தவர் மெல்லினாவின் அருகே செல்ல ஆதவனும் அவன் மனைவியும் வீட்டுக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்துக் கொண்டிருந்தார்கள்.

Advertisement