Advertisement

17

ஆத்திரேயன் மெல்லினாவிடம் எங்கிருக்கிறாள் என்று கேட்டிருக்க அவளோ “வெளிய இருக்கேன்” என்றாள் மொட்டையாய்.

“எங்கே குவார்ட்டஸ்ஸா??”

“இல்லை அதான் காலி பண்ணியாச்சே போன வாரமே”

“எங்க இருக்க சொல்லு முதல்ல”

“பீச்ல”

“நான் வர்றேன்”

“வேணாம் நானே வீட்டுக்கு வந்திடுவேன்”

“மெல்லினா நான் உன்னை உடனே பார்க்கணும்”

“எனக்கு மனசு சரியில்லை கொஞ்ச நேரத்துல நானே வீட்டுக்கு வர்றேன்” என்றுவிட்டு அவள் போனை வைத்துவிட ஆத்திரேயனுக்கு இருப்பு கொள்ளவில்லை. வேலையைவிட்டு விட்டு கிளம்பவும் முடியவில்லை. 

முக்கியமான கேஸ் விஷயமாய் உயர் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது அவனுக்கு. வேறு வழியில்லாது அவன் அங்கு கிளம்பிச் சென்றான்.

கோர்ட் வேலை முடிந்ததும் மீண்டும் மெல்லினாவிற்கு அழைக்க அழைப்பு சென்றுக் கொண்டிருந்ததே தவிர அவள் எடுக்கவேயில்லை. அவளின் மனநிலையை அவனால் உணர முடிந்தது. 

உடனே அவன் தந்தைக்கு அழைத்து மெல்லினா வீட்டிற்கு வந்துவிட்டாளா என்று விசாரிக்க அவரோ இன்னும் வரவில்லை என்று சொல்ல இவன் கடற்கரைக்கு விரைந்துவிட்டான்.

சென்னை மெரீனா கடற்கரை என்ன சிறிய இடமா அண்ணா சதுக்கத்தில் ஆரம்பித்து கலங்கரை விளக்கம் வரை நீண்டிருக்கிறதே. உலகின் இரண்டாம் நீளமான கடற்கரை என்ற பெயரையும் வேறு பெற்றிருக்கிறதே. மெரீனாவில் அவன் அவளை எங்கு தேடுவான், ஆனாலும் அவளைத் தேடித்தான் சென்றான்.

வண்டியை நிறுத்திவிட்டு காலாற நடந்து அலைகள் கரை தொடும் இடம் வரை வந்துவிட்டவன் அப்படியே பொடி நடைப்போட்டான் தன் மனைவியை தேடி, அலைபேசியில் அவளுக்கு விடாது அழைப்பு விடுக்கவும் தவறவில்லை.

நடக்க நடக்க பாதை நீண்டுக் கொண்டு தான் சென்றதே தவிர மெல்லினா இன்னும் அவன் கண்ணில்படவில்லை. ஒரு வேளை கிளம்பியிருப்பாளோ வந்த வழியே திரும்பி நடப்போமா என்று தோன்றிய மனதை அடக்கி இன்னும் நடந்தவன் பார்வையில் விழுந்தாள் அவள்.

கிட்டத்தட்ட கலங்கரை விளக்கமே வெகு அருகில் தெரியும் தூரம். அடிக்கும் வெய்யிலில் அங்கு வந்து கடலை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் கோலம் அவன் மனதை பிசைந்தது.

அருகே சென்றவன் அவள் தோளை உலுக்க திடுக்கிட்டு திரும்பியவள் இவனை கண்டதும் ஆசுவாசமானாள். “மெல்லினா” என்று அவன் அழைக்கவும் அவள் மீண்டும் கடலைத் தான் வெறித்தாள்.

“மெல்லினா”

“ஹ்ம்ம்”

“கிளம்பு போகலாம்”

“ஹ்ம்ம்” என்றவள் எழுந்துக் கொண்டாள். அதிகமாய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

“வண்டி எங்கே இருக்கு??”

“அங்கே??” என்று அவள் தூரத்தே கைக்காட்ட “சரி வா” என்றவன் அவளுடன் சென்றான். அவள் வண்டியில் ஏறிக்கொண்டவன் தன் வண்டி இருக்குமிடத்தில் இறங்கிக் கொண்டு அவளை வீட்டிற்கு செல்ல சொல்லி தானும் பின்னோடு விரைந்தான்.

வண்டியை நிறுத்திவிட்டு வந்த மெல்லினா நேரே படியேற செல்ல பின்னால் வந்த ஆத்திரேயன் அவளை அழைத்தான். “கொஞ்சம் நில்லு மெல்லினா” என்று.

அவள் அதே இடத்திலேயே நின்று திரும்பிப் பார்த்தாள். “இங்க வா” என்று அவன் சொல்லவும் இயந்திரம் போல் நடந்து வந்தாள்.

“அம்மா” என்று அவன் அழைக்கவும் வாசவி அழுது வீங்கிய முகத்துடன் அவன் முன் வந்து நின்றார்.

“ஆதி” என்று அவன் தந்தை குறுக்கே ஏதோ சொல்ல வர “என்னம்மா நடந்துச்சு” என்றான் மீண்டும்.

முதல் நாள் அவன் மாமா விஷயத்தை சொன்னதில் இருந்தே இப்படித்தான் கேள்வியாய் கேட்டு குடைந்து எடுத்துவிட்டான் வாசவியை. அவர் தானில்லை என்றதை தவிர வேறெதுவும் சொல்லவில்லை.

“என்னங்க” என்று மெல்லினா இடையிட்டாள்.

“நீ கொஞ்சம் பேசாம இரு” என்றவன் அன்னையை ஏறிட்டான்.

“சொல்லுங்கம்மா இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். ஏன் அப்படி செஞ்சீங்க?? மெல்லினா மேலே உங்களுக்கு அப்படியென்ன கோபம்?? நமக்குள்ள எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அதை நாம பேசி தீர்த்துக்கணுமே தவிர இப்படித்தான் அவளை பழி வாங்குவீங்களா” என்று அவன் பேச “கொஞ்சம் நிறுத்துங்க” என்று சத்தம் போட்டாள் அவன் மனைவி.

“எதுக்கு நிறுத்தணும்??”

“நீங்க பேசுறதே அபத்தமா இருக்கு”

“என்ன அபத்தத்தை கண்டுட்டே நீ?? இன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி நீ எந்தளவுக்கு கூனிக்குறுகி நின்னேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதுக்கு இவங்க தான் காரணம்”

“அவங்க காரணம் இல்லை. அத்தை அப்படியெல்லாம் செய்யக்கூடிய ஆளில்லை. என்னை அவங்களுக்கு பிடிக்கலை அவ்வளவு தான் அதைத்தவிர அவங்களுக்கு என் மேல வேற எந்த கோபமும் இல்லை”

“பிடிக்கலைங்கற ஒரே வார்த்தையிலேயே எல்லாமே அடங்கிருச்சே” என்றான் ஆத்திரேயன் விடாது.

“பிடிக்காது அவ்வளவு தான் அதுக்காக நான் செய்யற செயல்ல, என் பேச்சுலன்னு குறை சொல்வாங்க. அதைத்தவிர வேற எதுவும் அவங்க செஞ்சிருக்க மாட்டாங்க” என்று சொன்ன மெல்லினாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த வாசவி இன்னுமே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்.

“ஆதி” என்று இடையிட்டார் அவன் தந்தை.

“என்னப்பா??”

“மெல்லினா சொல்றதும் சரி தானேப்பா”

“எனக்கு மட்டும் அம்மாவை குறை சொல்லணும்ன்னு வேண்டுதலாப்பா. அம்மா அதை செய்யலைன்னு நானும் நம்பறேன், ஆனா அந்த கம்பிளைன்ட் லெட்டர்ல இருக்கற கையெழுத்து அவங்களோடது தான்னு அவங்களே ஒத்துக்கிட்டாங்க. அதுக்கு எனக்கு பதில் தெரிஞ்சாகணும்ப்பா”

“என்னங்க விட்டிருங்க, எது நடக்கணுமோ அது நடந்திடுச்சு. இனி இதை நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்” என்று மெல்லினா சொல்ல ஆத்திரேயனின் ஈகோ அங்கு அடிவாங்கியது.

“ஓ!! நீயே பார்த்துப்பியா பார்த்துக்கோ. எல்லாமே நீயே பார்த்துக்கோ. நான் தான் தேவையில்லாம உன் விஷயத்துல தலையிடறேன் போல. நான் எப்போ என்ன சொன்னாலும் அதுக்கு ஆப்போசிட்டா தான் பண்ணணும்ல”

“சத்தியமாவே எனக்கு புரியலை நான் எங்க தப்பு பண்ணுறேன்னு. வெளிய நான் எடுக்கற ஒவ்வொரு முடிவும் என் பேச்சும் அதுக்கான செயலும் நான் நினைச்ச மாதிரியே தான் நடக்குது”

“ஆனா நம்ம வீட்டில நான் என்ன பேசினாலும் எங்கம்மாக்கு பிடிக்கலை, உனக்கும் பிடிக்கலை. என்னடி பண்ணேன் நான் இப்போ?? உன்னை என்னைக்கு கட்டினேனோ அன்னைக்கு ஆரம்பிச்சது வீட்டிலையும் வெளியவும் எனக்குன்னு ஒரு தனி மரியாதை இருந்துச்சு. இன்னைக்கு எல்லாமே போச்சு”

“எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம். உன்னை எனக்கு பிடிக்காமலே இருந்திருக்கலாம்” என்று அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளை காயப்படுத்தியது.

அவன் மிகவும் வலியோடு தான் அதை பேசுகிறான் என்பதை அவளும், தன் பேச்சு அவளுக்கு வலிக்கும் என்று உணராமல் அவனும் இருந்தனர்.

“எல்லாம் நீயே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டல்ல, செய் நீயே செய்ம்மா செய். என்னை ஒவ்வொரு விஷயத்துலயும் அசிங்கப்படுத்துறதே உனக்கு வேலையாப் போச்சுல. இனிமே உன் விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்” என்றவன் அங்கிருந்த சிறு மேஜையை எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

மெல்லினாவின் மீது அப்படியொரு கோபம் அவனுக்கு. இரவெல்லாம் ஒரு பொட்டு உறங்காது அவன் தவித்த தவிப்பு அவன் மட்டுமே அறிவான். ஊருக்கு சென்றிருப்பவள் நிம்மதியாய் இருக்கட்டும் எதையும் சொல்லி அவளின் சந்தோசத்தை கெடுக்கக் கூடாது என்று எண்ணியே அவன் பேசாதிருந்தான்.

அவளோ ஒரு நிமிடம் கூட அவனைப்பற்றி யோசிக்காது பேசிவிட்டாளே என்ற ஆதங்கம் எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. வண்டி எங்கு செல்கிறது என்ற எண்ணம் இல்லாது அவன் அதை செலுத்திக் கொண்டிருந்தான்.

‘என் அம்மா மேல அவளுக்கு இருக்கற நம்பிக்கை எனகில்லாமலா நான் அவங்களை கேள்வி கேட்கப் போறேன். அதைக்கூட புரிஞ்சுக்காம நானே பார்த்துக்கறேன்னு சொல்றா’ என்று நினைத்து நினைத்து வெம்பினான் அவன்.

—————

“அத்தை அழாம போய் ரெஸ்ட் எடுங்க. எதுவும் மாறிடப் போறதில்லை, இது நடக்கணும்ன்னு இருந்துச்சு, நடந்திருச்சு. இதுல இருந்து எப்படி வெளிய வரணும்ன்னு நான் பார்த்துக்கறேன். தப்பு செஞ்சவங்க தான் பயப்படணும், எனக்கு எந்த பயமும் இல்லை”

“என் பக்கம் நியாயம் இருக்கு நான் அதுல இருந்து வெளிய வந்திடுவேன். மாமா அவங்களை கூட்டிட்டு போங்க” என்றாள் மெல்லினா.

“எப்படிம்மா இதெல்லாம் நடந்துச்சு. உங்க அத்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டாம்மா”

“செஞ்சிருந்தாலும் அவங்க மேல நான் கோபப்பட மாட்டேன் மாமா. ஒரு விஷயம் நிச்சயம் அவங்க தெரிஞ்சு இதை செய்யலை அது மட்டும் உண்மை” என்றவள் திரும்பி நடக்க மாமனாரின் குரல் அவளை நிறுத்தியது.

“மெல்லினா ஆதி கோபமா போறான்”

“சரியாகிடுவார் மாமா வந்திடுவார்”

“அவன் கேட்டதும் தப்பில்லையேம்மா”

“நானும் தப்புன்னு சொல்லலை மாமா. ஒருத்தர் ஏற்கனவே குற்றவுணர்வுல இருக்கும் போது நாம மேல மேல பேசி அவங்களை கஷ்டப்படுத்துறது சரியில்லையே மாமா. அதுக்காக தான் அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன் மாமா”

“எதுக்கும் அவன்கிட்ட பேசிடும்மா. அவன் போறதை பார்த்தா ரொம்ப கோபமா போற மாதிரி தெரியுது. இந்த மாதிரி இருக்கும் போது அவன் முன்னாடி ஒருத்தர் போக முடியாது. எல்லாரையும் வருத்தெடுத்திடுவான்” என்று அவர் சொன்ன பின்னே தான் அவள் தன் கணவனின் கோபத்தை உணர்ந்தாள்.

“நான் பார்த்துக்கறேன் மாமா நீங்க அவங்களை பாருங்க” என்றுவிட்டு இவள் படியேறினாள். ஆத்திரேயனுக்கு அழைப்பு விடுக்க அது விடாது அடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் முயற்சிக்க இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது “அம்மா மெல்லினா ஆதி போனை இங்கவே வைச்சுட்டு போய்ட்டான் போலம்மா” என்று அவளின் மாமனார் பேசவும் அவளுக்கு உள்ளுக்குள் திக்கென்றிருந்தது.

அவனிடம் பேசி சமாதானம் செய்துவிடலாம் என்று இவள் எண்ணியிருக்க அது உடனே முடியாது போனது. இனி எப்போது வீட்டிற்கு வருவான் என்று வேறு தெரியவில்லையே, லேசாய் பதட்டம் வந்தது.

Advertisement