Advertisement

“மெல்லினா உங்களோட சஸ்பென்ட் லெட்டர் வாங்கிட்டு போய்டுங்க” என்று சொல்ல அவள் முகத்தை ஆதியால் பார்க்க முடியவில்லை.

“சார் ஷால் ஐ லீவ்” என்று கேட்டேவிட்டிருந்தான் அவன்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றிருந்தவர் “நீங்க போகலாம் மெல்லினா” என்று சொல்ல சோர்ந்த முகத்துடன் அவள் வெளியே வந்தாள். சரியாய் அவளின் போன் அடிக்க எடுத்து பார்த்தவளின் முகம் சுருங்கியது.

“ஹாய் மெல்லினா”

“ஏய்??”

“எதுக்கும்மா சத்தம் போடுறே?? இப்போ நீ ஒண்ணும் போலீஸ் இல்லை, சும்மா கத்தாத”

“என்ன வேணும் உனக்கு??”

“நான் கேக்குறதை கொடுக்கற மாதிரியே கேட்கறே??”

“நீ கேக்குறதை இல்லைடா கேக்காததை எதிர்பார்க்காததை கண்டிப்பா கொடுப்பேன்”

“இன்னும் உன்னோட திமிர் அடங்கவே இல்லைல. தற்காலிகமா போன வேலை சீக்கிரமே நிரந்தரமா போய்டும்”

“ரொம்ப தேங்க்ஸ்” 

“என்ன உன்னையே நீ சமாதானம் செஞ்சுக்கறியா??”

“எதுக்கு அப்படி சொல்றே??”

“தேங்க்ஸ்ன்னு சொல்றே”

“உன்கூட பேசுற மூட்ல நான் இப்போ இல்லை வை போனை”

“எனக்கு உன்கூட நிறைய பேசணும்ன்னு தோணுது. ஆதியை பார்க்க வரலாமான்னு யோசிக்கறேன், உன் புருஷன் உனக்காக ரொம்ப பீல் பண்றான்னு கேள்விப்பட்டேன்”

“இங்க பாரு தேவையில்லாதது பேசாத போனை வை”

“உன் மாமியாரே உன் மேல கம்பிளைன்ட் கொடுத்திட்டாங்களாமே. ச்சே என்ன கொடுமை இது, அவங்களே கம்பிளைன்ட் கொடுக்கறாங்கன்னா அப்போ நீ அவங்களை எந்தளவுக்கு கொடுமைப்படுத்தி இருக்கணும்”

“உன் வேலையை பார்த்திட்டு போடா” என்றுவிட்டு போனை பட்டென்று வைத்துவிட்டாள் அவள்.

மெல்லினாவுக்கு பணியிடை நீக்கம் செய்ததெல்லாம் பெரிய விஷயமாகவே படவில்லை. இது போன்ற வேலையில் நேர்மையாய் இருக்க முயல்வோருக்கு கிடைக்கும் பரிசுகள் தான் இவை என்று அவளறிவாள்.

ஒன்று அடக்குவார்கள் இல்லை மாறுதல் செய்வார்கள் இதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாதே அவர்களால். அதையும் விட்டால் அடுத்த படியாய் பணியிடை நீக்கம் அவ்வளவு தானே.

இதையெல்லாம் நிரூப்பிப்பது எல்லாம் அவளுக்கு பெரிய விஷயமே இல்லை. ஆனால் இதில் சம்மந்தப்பட்டிருப்பது வாசவி என்பதால் தான் அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை.

படியிறங்கி இவள் கீழே வரவும் பத்திரிகை நண்பர்கள் அவளை சூழ்ந்துக் கொண்டனர். பதிலே சொல்ல முடியாத அளவிற்கு கேள்விகளை வாரியிறைத்தார்கள். அதற்குள் மனித உரிமைகள் நல அதிகாரி கீழே வந்திருக்கவும் அவரை பிடித்துக் கொண்டார்.

மற்ற காவல் அதிகாரிகளும் வந்திருக்க அவர்களையும் விடாது கேள்வி கேட்டனர். “மெல்லினா மேல டிபார்ட்மென்ட் ஆக்சன் எடுத்திருக்கு. சீக்கிரமே விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்” என்று முடித்துவிட்டார் ஆணையர்.

ஆத்திரேயன் ஏதோ வேலையாய் வர அவனையும் சூழ்ந்துக் கொண்டனர். “உங்க வைப் ஒருத்தனை அடிக்கும் போது பார்த்திட்டு வேடிக்கை பார்க்க உங்களால எப்படி சார் முடிஞ்சது”

“உங்கம்மா உங்களை மாதிரி இல்லை சார் வீரமங்கை. சொந்த மருமகளே ஆனாலும் தப்பு தப்புத்தான்னு காட்டிக் கொடுத்தாங்க பாருங்க அங்க நிக்கறாங்க அவங்க” என்று அவர்கள் வாய்க்கு வந்ததெல்லாம் கேள்வியாய் பதிலாய் அவர்கள் பேசினார்கள்.

அவனை கேள்வி கேட்கபதை பார்த்ததுமே மெல்லினா அங்கிருந்து நகர்ந்திருந்தாள். வீட்டிற்கு செல்ல தோன்றவில்லை வண்டியை நேரே கடற்கரையில் சென்று நிறுத்தினாள்.

வெயிலெல்லாம் அவளுக்கு உறைக்கவேயில்லை. கரையை தொடும் அலைகள் கால்களை நனைக்கும் இடைவெளியில் தான் அமர்ந்திருந்தாள். மனம் முழுதும் வாசவியை பற்றியே ஓடியது அவளுக்கு.

இவளின் வரவேற்பிற்காய் ஊரில் இருந்து வந்திருந்த மகேஸ்வரி சொன்னதும் இன்னமும் அவள் காதில் ஒலித்தது. அவள் நினைவுகள் அதை அசைப்போட்டது.

“இங்க எதுக்கு மெல்லினா கூட்டிட்டு வந்திருக்கே??”

“அம்மா அங்க எல்லாரும் வந்திருக்காங்க. நேத்துல இருந்து வீடே ஜே ஜேன்னு இருக்கு. உங்க கூட என்னால இருக்க முடியாதும்மா. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன், நாளைக்கு வெண்பாவும் வந்திடுவா அவளுக்கும் இங்கன்னா கொஞ்சம் ப்ரீயா இருக்கும்மா” என்ற மகளை அளவிடும் பார்வை பார்த்தார் அவர்.

“என்னம்மா பார்க்கறீங்க??”

“ஒண்ணும்மில்லை” என்றார்.

“நீங்க போய் குளிச்சுட்டு வாங்கம்மா, நான் இதோ வந்திடறேன்” என்ற மெல்லினா வெளியே வந்தாள்.

அன்னைக்கு காலை உணவை ஹோட்டலில் வாங்கிக்கொண்டு அவள் வீட்டிற்கு வரவும் மகேஸ்வரி குளித்து முடித்திருந்தார்.

“இந்த குவார்ட்டர்ஸ் எப்போம்மா காலிப் பண்ணப் போறே??”

“இந்த வாரம் மட்டும் தான்ம்மா அதுக்கு அப்புறம் இருக்காது”

“ஏன் இத்தனை நாளா செய்யலை??” என்று ஒவ்வொரு கேள்வியாய் அடுக்கினார் அன்னை.

“கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் எடுக்காம இருந்துச்சும்மா” என்றவள் “நீங்க முதல்ல சாப்பிடுங்க பசிக்கும்” என்றுவிட்டு அருகே இருந்து அன்னைக்கு பரிமாறினாள். அவரும் சாப்பிட்டு முடித்தார்.

“அம்மா நான் உங்க மடியில படுக்கவா??” என்று அதற்காகவே காத்திருந்தார் போல மகள் கேட்க கீழே அமர்ந்துக்கொண்டு காலை நீட்டினார் அவர். மகள் மடி மீது தலை வைக்கவும் மெதுவாய் தலையை வருடினார்.

“மெல்லினா சந்தோசமா இருக்கியாடா??” என்று அவர் கேட்கவும் அவள் விழி மலர்த்தி அன்னையை நோக்கினாள்.

“மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை நிச்சயமா சந்தோசத்தை தான் கொடுக்கும். எனக்கு தெரியும் இருந்தாலும்…” என்றுவிட்டு நிறுத்தினார் அவர்.

“எனக்கென்னம்மா நான் சந்தோசமா தான் இருக்கேன்ம்மா. நீங்க அமைச்சு கொடுத்த வாழ்க்கை அதை நான் ரொம்பவும் நிறைவா வாழுவேன்ம்மா”

“எனக்கு பிடிச்ச வாழ்க்கையை நான் அமைச்சு கொடுக்கலைடா உனக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் அமைச்சு கொடுத்திருக்கேன்” என்று அவர் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள் அவள்.

“அம்மா…”

“அம்மாக்கு எல்லாம் தெரியும்ன்னு நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன் தானே. நீ வாய்விட்டு சொல்லலைன்னா எனக்கு தெரியாதா என்ன?? நானும் படிச்சிருக்கேன், கம்பியூட்டர்ன்னா என்னன்னு கொஞ்சம் தெரியும்” என்று அவர் சொல்லவும் மற்றவளுக்கு புரிந்தது.

“அம்மா வந்து”

“எனக்கு ரொம்பவும் சந்தோசம் தான். நீ சந்தோசமா இருக்கணுங்கறது தான் எல்லாரோட விருப்பமும்” என்று அவர் சொல்லவும் அன்னையை அணைத்துக் கொண்டாள் அவள்.

“மெல்லினா அம்மா இன்னொண்ணு சொல்லணும்”

“சொல்லுங்கம்மா”

“ஒருத்தரை நேசிச்சு அவரையே கல்யாணம் பண்ணிக்கறது எல்லாம் வரம். அதுவும் பொண்ணுங்களோட விருப்பமெல்லாம் நெருப்புல போட்டு பொசுக்கற ஆளுங்க இப்பவும் இருக்காங்க”

“கல்யாணத்துக்கு முன்னாடி வரை நீ அவரை விரும்பினே. அந்த நேசத்தை அன்பை காதலை தக்க வைக்க வேணாமா” என்றுவிட்டு இடைவெளிவிட்டார் அவர்.

“அந்த அன்பை காலம் முழுமைக்கும் தக்க வைக்கணும்ன்னா நீ கொடுக்கற அன்பு பலமடங்காகணும். கணவனுக்கான நேசம் தனின்னாலும் அவங்களோட குடும்பத்தையும் சேர்த்து நேசிக்க கத்துக்கணும்”

“புதுசா உறவுகளை ஏற்கறது கஷ்டம் தான். கணவன் உறவும் கூட புது உறவு தானே அந்த உறவை காலம் முழுமைக்கும் ஏத்துக்க தயாரா இருக்கும் போது அவங்களை சார்ந்த உறவுகளையும் அப்படித்தானே ஏத்துக்கணும்” என்று மகேஸ்வரி நீளமாய் உரைக்க அன்னை சொல்ல வருவதின் உட்கருத்து அவளுக்கு புரிந்தது.

“உன் மாமியார் ஒண்ணும் கெட்டவங்க இல்லை மெல்லினா. அன்னைக்கு போன்ல உனக்கு கொடுக்க வேண்டிய சீரெல்லாம் நான் வரும் போது வண்டியில போட்டு எடுத்திட்டு வர்றேன்னு சொன்னேன்”

“உங்க மாமியார் என்ன சொன்னாங்க தெரியுமா. மருமக கொண்டு வந்து தான் எங்க வீடு நிறையணுமா எதுக்கு அதெல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க. அப்படி உங்க பொண்ணுக்கு ஏதாச்சும் செஞ்சு தான் ஆகணும்ன்னு நினைச்சா காசா அவ அக்கவுன்ட்ல போடுங்க, இல்லை பிக்ஸ்ட் டெபாசிட்ல போடுங்கன்னு சொன்னாங்க”

“அம்மா அவங்க…”

“எப்படி வேணா இருக்கட்டும் மெல்லினா. அவங்களை பொறுத்துட்டு போ, தப்பில்லை. உன்னை ஒரேடியா அடங்கி போக சொல்லலை, அவங்க இப்படித்தான்னு ஏத்துக்கிட்டு வாழப்பழகு. எதுவும் கஷ்டமா இருக்காது”

“இன்னைக்கு அங்க எல்லாரும் வந்திருப்பாங்க. எங்க சம்மந்தி வருவாங்கன்னு அவங்க எத்தனை பேருகிட்ட சொல்லியிருப்பாங்க. நான் அங்க போகாம இங்க வந்தா நல்லாவா இருக்கும்”

“எனக்கு உன்னோட தவிப்பு புரியுது. நீ இள ரத்தம் அம்மா எல்லாம் கடந்து வந்திட்டேன். ஒரு தாயாய் உன்னையும் புரியுது, சக மனுஷியா அவங்களையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. நீயும் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, இப்போ நாம அங்க கிளம்பறோம்” என்று முடித்தார் அவர்.

“அம்மா இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்க முடியாதா”

“நீ ரொம்ப தைரியமான திறமையான பொண்ணுன்னு நான் பெருமை பேசிட்டு இருக்கேன். இப்படி சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கறவ இல்லையே என் பொண்ணு” என்று அவர் சொல்லவும் அதற்கு மேல் ஒன்றுமே சொல்லியிருக்கவில்லை.

அன்னையை தன்னுடனே அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாள். அவளின் அன்னை சொன்னது உண்மையே என்பது போலத்தான் வாசவியும் நடந்துக் கொண்டார்.

மகேஸ்வரியை உறவினர்களுக்கு அறிமுகம் செய்வதில் இருந்து அவருடனே சுற்றிக்கொண்டிருந்தவரை பார்க்க சற்று ஆச்சரியமாகக் கூட இருந்தது அவளுக்கு அப்போது. தன்னை தான் அவருக்கு பிடிக்கவில்லையே தவிர தன் வீட்டில் மற்ற அனைவரிடமும் அவர் நன்றாகத்தானே பழகினார் என்று எண்ணினாள்.

தன்னை பிடிக்காது போனாலும் இப்படி மொத்தமாய் வீழ வைத்து பார்க்க அவர் எண்ணியிருப்பார் என்று அவளுக்கு தோன்றவில்லை. எப்படி நடந்திருக்கும் என்று இந்த நொடி வரை அவளுக்கு புரியாத புதிர் தான். 

மனம் இன்னும் சமனப்படவில்லை அவளுக்கு. எதிரில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலையோடு அவள் மனமும் ஆர்ப்பரித்தது. அவளின் அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க எடுத்து காதில் வைத்தாள்.

“மெல்லினா நீ இன்னும் வீட்டுக்கு வரலையா எங்கே இருக்கே??” என்றான் அவன்.

Advertisement