Advertisement

16

மெல்லினா வரும் போதே அங்கு கூட்டமாக இருந்தது. பத்திரிகையாளர்களை வரவழைத்திருக்கிறார்கள் போல என்றெண்ணிக் கொண்டே இவள் மேலே செல்லப் போக இவளை சூழப் பார்த்த கூட்டத்தை சில காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.

மனதிற்கு எதுவோ சரியாக தோன்றவில்லை அவளுக்கு. மேலே ஏறும் முன் ஒரு முறை அவர்களை திரும்பி பார்க்க “மேடம் எங்க தப்பிச்சு போறீங்க உங்ககிட்ட தான் பேசணும்” என்று ஒருவன் கத்த ‘நம்மளையா’ என்று யோசனையோடு படியேறினாள்.

அவளறைக்கு செல்ல அங்கு மதன் வேகமாய் இவளருகே வந்திருந்தான். “மேடம் மீட்டிங் ஹால்ல எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணுறாங்க. நீங்க நேரா அங்க போங்க மேடம்”

“பர்ஸ்ட் என்னோட சீட்டுக்கு போயிட்டு அங்க போறேன் மதன்” என்றாள் அவள்.

“மேடம் ப்ளீஸ் இங்க பிரச்சனை ஆகிடுச்சு நீங்க போய் அங்க பார்த்திட்டு இங்க வாங்களேன்”

“என்ன பிரச்சனை??”

“மேம் ப்ளீஸ் மேம்” என்றான் அவன் பாவமாய்.

“என்ன மேடம் இன்னும் மீட்டிங் ஹால் போகலையா” என்று இவளைப் பிடிக்காத சக அதிகாரி ஒருவர் நக்கலடித்துக் கொண்டே வர அவரை திரும்பி முறைத்தவளை பார்த்து ஏளனமாய் சிரித்தார் அவர்.

“இதெல்லாம் இனிமே செல்லாது போ போ போயிட்டே இரு வீட்டுக்கு. ஒருத்தரையும் மதிக்காம ஆடுன ஆட்டத்துக்கு இன்னையோடு வைச்சாங்கல்ல ஆப்பு” என்று அவர் சொல்ல இவள் திரும்பி மதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நேரே மீட்டிங் ஹால் சென்றாள்.

அங்கு முக்கிய அதிகாரிகள் ஒரு குழுவாய் அமர்ந்திருந்தனர். மனித உரிமைகள் நல ஆணையத்தின் பிரதிநிதியும் வந்திருந்தார். ‘இவர் எதுக்கு இங்க வந்திருக்கார்’ என்று பார்த்தவள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவிக்க ஒரு சிறு தலையசைப்பு கூட இல்லை ஒருவரிடத்திலும்.

ஐஜி இவளைப் பார்த்தவர் “சிட்டவுன் ப்ளீஸ்” என்று சொல்ல அங்கு காலியாய் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

“உங்க மேல கம்பிளைன்ட் வந்திருக்கு” என்று ஆரம்பித்தார் உயரதிகாரி ஒருவர்.

இவள் என்னவென்று கூட கேட்காது அவர் சொல்வதை ஒரு புருவசுளிப்புடன் கேட்க அவரே தொடர்ந்தார். “என்ன கம்பிளைன்ட்ன்னு தெரியுமா??” என்று கேட்க இவள் தலை இல்லையென்று ஆடியது.

“ஒரு ஆளை மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்கீங்க அதுவும் பப்ளிக்ல. எந்த காரணமும் இல்லாம உங்க விருப்பு வெறுப்புக்காக அவரை நீங்க சித்திரவதை செஞ்சிருக்கீங்க”

“சார் எனக்கு புரியலை நான் அப்படி எதுவும் செய்யலையே”

“இப்போ இதென்ன” என்று அவர் வீடியோ ஒன்றை பிளே செய்து காட்ட அது அன்றொரு நாள் சிறு குழந்தையிடம் தவறாய் நடந்துக் கொண்ட ஒருவனை அவள் கோவில் வாசல் முன் புரட்டி எடுத்த வீடியோ.

“சார் இதைப்பத்தி கேஸ் பைலாகி இருக்கு சார். நீங்க அந்த ஸ்டேஷன் எஸ்ஐய கூப்பிட்டு கேட்டிருக்கலாமே”

“நீங்க எங்களுக்கு சட்டம் சொல்லித் தர்றீங்களா. உங்களுக்கு முன்னாடியில இருந்தே நாங்க இங்க இருக்கோம். யாரை எப்போ விசாரிக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும். அவங்களை எல்லாம் விசாரிக்காமலா உங்ககிட்ட நேரா வருவோம்”

“நீங்க சொன்னதுனால தான் அவர் கேஸ் போட்டாராம். ஆனா இப்போ அந்தாளுக்கு எதிரா ஒரு சாட்சி கூட இல்லைன்னு அவர் சொல்றார்”

“அந்த குழந்தையோட அம்மா இருக்காங்க சார்”

“அவங்களே அப்படி ஒரு விஷயம் நடக்கலைன்னு இங்க வந்து சொல்லிட்டு போய்ட்டாங்க”

அவரின் பதிலை கேட்டு மெல்லினா வாயடைத்து போனாள். “சார் அங்க தான் ஆத்… ஆத்திரேயன் சாரும் இருந்தாரு, இன்பாக்ட் போலீசை கூப்பிட்டது கூட அவரு தான் நானில்லை”

“தெரியும் தெரியும்”

“சார் நீங்க அவரை கூப்பிட்டு கேளுங்க. என் மேல எந்த தப்பும் இல்லை சார்”

“சரி உங்க மேல தப்பில்லைன்னே வைச்சுக்குவோம். அதுக்காக ஒரு மனுஷனை மாட்டை அடிக்கிற மாதிரி தான் அடிப்பீங்களா. அது தப்பில்லையா அதுக்கு உங்களுக்கு யாரு பர்மிஷன் கொடுத்தது” என்றார் மனித உரிமைகள் நல ஆணையத்தில் இருந்து வந்த அதிகாரி.

“சார் நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறேன். அந்த நேரத்துல அந்த குழந்தைகிட்ட அவன் தப்பா நடந்துகிட்டது மட்டும் தான் என் மைன்ட்ல இருந்துச்சு. அதான் அவனை அடிச்சிட்டேன்”

“அப்போ உங்க குற்றத்தை நீங்க ஒப்புக்கறீங்க”

“சார் நான் அடிக்கலைன்னு பொய் சொல்லலை. ஆனா காரணமிருக்குன்னு தான் சொல்றேன்” என்று இவள் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது “மே ஐ கம்மின் சார்” என்ற பழகிய குரலில் மெல்லினாவின் தலை விருட்டென்று வாயில் புறம் சென்றது.

ஒரு நொடி தன்னவனை காண அவன் கண்களும் பல நூறு சேதிகள் சொன்னது அவளிடத்தில். ஒரு நொடிக்கும் குறைவாய் அவளைப் பார்த்தவன் அங்கிருந்தோரை பார்க்க “உள்ள வாங்க ஆதி” என்றார் ஒருவர்.

இவன் இருக்கையில் சென்று அமர்ந்தான். “எஸ்ஐ எங்கே அவரையும் வரச்சொன்னோமே??”

“பின்னாடியே வர்றார் சார்” என்று இவன் முடிக்கும் முன் வேகமாய் வந்திருந்தார் அந்த எஸ்ஐ.

அவரும் உள்ளே வந்து அமர “ஓகே சொல்லுங்க அன்னைக்கு என்ன நடந்தது??”

“சார் மெல்லினா அந்த ஆளை அடிச்சதை பார்த்தேன். என்ன விஷயம்ன்னு கேட்டேன் அவங்க பதிலே சொல்லலை, அதுக்கு அப்புறம் தான் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் பண்ணி சொன்னேன்”

“நான் சொல்லவும் ரத்னம் ஸ்பாட்டுக்கு வந்திட்டார். அப்போ தான் தெரியும் அவங்க ஏன் அந்த ஆளை அடிச்சாங்கன்னு”

“ஏன் அடிச்சாங்களாம்??”

“அந்தாளு ஒரு குழந்தைகிட்ட மிஸ் பிகேவ் பண்ணியிருக்கான். அதனால தான் அவங்க அடிச்சாங்க, ரத்னம் வரவும் அவர்கிட்ட ஒப்படைச்சுட்டோம்”

“ஆக இவங்க அடிச்சதை நீங்க பார்த்து இருக்கீங்க??”

“எஸ் சார்”

“நீங்க சொல்லுங்க ரத்னம்”

“சார் சொன்ன மாதிரி அவர் போன் பண்ணவும் நான் ஸ்பாட்டுக்கு போயிட்டேன் சார். அந்தாளை அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன்க்கும் போயாச்சு”

“அப்புறம்”

“ஆனா…”

“ஆனா என்ன??”

“அந்தாளுக்கு எதிரா யாரும் சாட்சி சொல்லலை சார். அந்த குழந்தையோட அம்மா உட்பட யாரும் சொல்லலை. சோ அப்படியொரு விஷயம் நடந்துச்சான்னு எனக்கே சந்தேகமா இருக்கு சார். மேடம் ஏன் அப்படி சொன்னாங்கன்னு தெரியலை” என்று அந்த எஸ்ஐ சொல்ல ஆத்திரேயனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

“சார் நான் சொன்னது நிஜம் தான் சார். என்னை நம்புங்க ஆத்திரேயன் சார் கூட ஸ்பாட்ல இருந்தாரு”

“அவரை எப்படி நாங்க சாட்சியா எடுக்க முடியும்ன்னு நீங்களே சொல்லுங்க மிஸ்ஸர்ஸ் மெல்லினா ஆத்திரேயன்” என்று அவர் அழுத்திச் சொல்ல அவளுக்கு புரிந்து போனது.

“உங்களுக்கு ஆதரவா உங்க கணவர் பேசுறதை நாங்க எப்படி சாட்சியா எடுத்துக்க முடியும்” என்று அவர் புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து இவளைப் பேச அனைவரின் முன்னேயும் அந்த உயரதிகாரியை முறைத்தாள் இவள்.

முன்பே அவருக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்கும். எப்போது இவளை காலி செய்யலாம் என்றிருக்கும் கூட்டத்திடம் தான் இவள் வசமாய் சிக்கிக் கொண்டிருந்தாள்.

பெருமூச்சை வெளியேற்றிவள் “யார் கம்பிளைன்ட் கொடுத்தாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்” என்று கேட்க அந்த அதிகாரி ஏளனமாய் ஒரு சிரிப்பை சிந்தினார் அவளிடத்தில்.

மெல்லினா ஆத்திரேயனை பார்க்க அவன் முகம் நிமிர்த்தவேயில்லை. “என்ன மிஸ்டர் ஆத்திரேயன் இவங்களுக்கு தெரியாதா யாரு கம்பிளைன்ட் கொடுத்தாங்கன்னு” என்று அவனை வம்பிழுத்தார் அவர்.

“சார் யாருன்னு சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு கதை சொல்றீங்க. நேராவே சொல்லிடுங்க சார்” என்று மனித உரிமை நல ஆணைய அதிகாரி சொல்ல அவளின் உயரதிகாரி “வாசவி… வாசவி சுசிந்தரம் அதாவது உங்க மாமியார்” என்று அவர் சொல்ல மெல்லினாவின் முகம் சுருங்கியது.

தலை குனிந்திருந்தவள் நிமிர்ந்து “வாய்ப்பே இல்லை” என்றாள் சத்தமாய்.

“எங்ககிட்ட கம்பிளைன்ட் காபி இருக்கு. அதுல இருக்க கையெழுத்து அவங்களோடது தான்னு ஆத்திரேயனும் கன்பார்ம் பண்ணிட்டார்”

“சார் என்ன சார் பேசறீங்க. அன்னைக்கு அத்தை அங்க வரவேயில்லையே”

“மெல்லினா எதுக்கு பொய் மேல பொய்யா சொல்றீங்க. அவங்களும் ஆத்திரேயனும் கோவிலுக்கு வந்ததை அவரே சொல்லிட்டார், என்ன ஆதி??” என்றுவிட்டு அதிகாரி அவனைப் பார்க்க அவன் பதில் சொல்லும் முன் அவள் பேசினாள்.

“சார் கொஞ்சம் முன்னாடி தான் என்னோட கணவரோட சாட்சியத்தை எடுத்துக்க முடியாதுன்னு சொன்னீங்க. இப்போ எனக்கு எதிரான சாட்சியத்தை அவர் கொடுத்தா மட்டும் அது செல்லுபடி ஆகுமா சார்” என்று இவள் திருப்பிக் கொடுக்க அந்த உயரதிகாரி அமைதியானார்.

“ஜேம்ஸ் நீங்க இனி பேச வேண்டாம்” என்ற ஐஜி “மெல்லினா நீங்க மெய்யப்பனை அடிச்சது உண்மை தானே”

“சார் அவர் பேரு கூட எனக்கு தெரியாது, இப்போ நீங்க சொல்லித்தான் அவர் பேரு மெய்யப்பன்னு எனக்கு தெரியும். அன்னைக்கு கம்பிளைன்ட் லெட்டர்ல கூட அந்த குழந்தையோட அம்மாகிட்ட தான் சைன் வாங்குனதா இன்ஸ்பெக்டர் மறுநாள் எனக்கு சொன்னாரு”

“இப்போ மட்டும் அவங்க எப்படி மாத்தி பேசுனாங்கன்னு எனக்கு புரியலை” என்றவளின் பார்வை இன்ஸ்பெக்டர் ரத்தினத்தை கூறுப்போட்டது.

“மேடம் சொன்னது சரி தான் சார். இவங்க சொன்னதை வைச்சு அந்த குழந்தையோட அம்மாவும் கையெழுத்து போட்டாங்க போல. மெய்யப்பனோட மனைவி போய் அவங்ககிட்ட உண்மையை எடுத்து சொல்லவும் அவங்க உடனே வந்து கம்பிளைன்ட் வாபஸ் வாங்கிட்டாங்க சார்” என்று முடித்தான் அவன்.

இச்செய்தி அவளுக்கு புதிது. அவனை உள்ளே தள்ளியதும் கேஸ் முடிந்தது என்று இவள் எண்ணியிருக்க அதுவே தொடக்கமாகியிருந்தது.

“ஓகே மெல்லினா உங்க மேல டிபார்ட்மென்ட் ஆக்சன் எடுக்கறோம். உங்களை தற்காலிக பணிநீக்கம் செய்யறோம்” என்று ஐஜி சொல்ல “சார் தற்காலிகமா பணிநீக்கமா நிரந்தரமாவே நீக்கிடுங்க சார்” என்று மற்றொரு அதிகாரி சொல்ல மனித உரிமைகள் நலத்தின் அதிகாரி கூட அதை ஆமோதித்தார்.

“அவர் சொல்ற மாதிரி செய்ங்க சார்”

“மிஸ்டர் ராகவேந்திரன் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் செய்ய முடியாது. எங்களுக்குன்னு சில ரூல்ஸ் எல்லாம் இருக்கு, மெல்லினாவுக்கும் ஒரு வாய்ப்பு தரணும் அவங்க தரப்பு நியாயத்தை சொல்ல”

“என்ன நியாயம் சார் ஒரே அநியாயமா இருக்கு அவங்களுக்கு போய் வாய்ப்பு தரணும்ன்னு சொல்றீங்க”

“இங்க பாருங்க நீங்க லெட்டர் கொடுத்திருக்கீங்க அவங்க மேல ஆக்சன் எடுக்கச் சொல்லி அதை நாங்க செஞ்சாச்சு. இந்த பணி நீக்கம் மூணு மாசத்துக்கு தான் அதுக்குள்ள அவங்க தன்னை நிரூப்பிக்கலைன்னா பணியில இருந்து நிரந்தரமாய் நீக்கிடுவோம். நீங்க அதை எங்களுக்கு சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இருக்காது”

“இருந்தாலும்…”

“ஐ நோ அவங்க மேல இதுவரை எந்த கம்பிளைன்ட் வந்ததில்லை. வேற ஸ்டேட்ல கூட வொர்க் பண்ணியிருக்காங்க, எல்லாருமே நல்லவிதமா தான் சொல்லியிருக்காங்க. இது அவங்களுக்கு கொடுக்கற ஒரு வாய்ப்பு, இதுக்கு மேல இதுல பேச எதுவுமில்லை” என்று மற்றவர்களுக்கு பதில் கொடுத்தார் ஐஜி.

Advertisement