Advertisement

“அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“——-“

“நான் அடுத்த வாரம் ஊருக்கு போயிட்டு வரட்டுமா??” என்று சொல்ல அவரால் தன் பேச்சை கட்டுப்படுத்த முடியவில்லை.

“எதுக்கு??”

“இல்லை வந்து அம்மா…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே இடையிட்டிருந்தார் அவர்.

“இப்போ தானே பத்து நாளைக்கு முன்னாடி அவங்க இங்க வந்திருந்தாங்க. அதுக்குள்ள அம்மாவை தேடியிருச்சா, இங்க வாழ வந்து ஒரு மாசம் முடியலை அதுக்குள்ள அம்மாவை பார்க்கணும் ஆட்டுக்குட்டியை பார்க்கணும்ன்னு ஆரம்பிச்சுட்ட” என்றார் அவர்.

மெல்லினா அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை. சமையல் முடிந்திருக்க அவள் கிளம்பிவிட்டிருந்தாள். மறுநாள் இரவு கிளம்புவதாக ஆத்திரேயனிடம் அவள் சொல்லியிருந்தாள். மறுநாளைய பொழுதும் விடிந்திருந்தது. “மெல்லினா ஊருக்கு எப்படி போறே??” என்றான் அவன்.

“ஹ்ம்ம் பார்க்கலாம் தெரியலை” என்று விட்டேத்தியாய் பதில் சொன்னாள் அவள்.

“தெரியலைன்னா ட்ரைன்ல புக் பண்ணியிருக்கியா இல்லை பஸ்ஸா??”

“எதுலயும் பண்ணலை”

“அப்போ ட்ராவல்ஸா”

“இல்லை”

“என்ன பதில் இது??”

“அடுத்த வருஷம் போய்க்கலாம் எனக்கு நெறைய வேலை இருக்கு” என்றவள் அவனிடம் நிற்காது பதில் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பியிருந்தாள்.

மெல்லினா ஊருக்கு செல்வது பற்றி வாசவியிடம் பேசியது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது என்று எதையும் அவனிடத்தில் பகிர்ந்திருக்கவில்லை.

ஆத்திரேயன் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தவன் ஏதோ தோன்ற “அம்மா” என்றழைத்தான்.

“சொல்லு ஆதி”

“மெல்லினா உங்ககிட்ட எதுவும் சொன்னாளா??”

“நான் தான் அவகிட்ட எதுவுமே பேசறேதேயில்லையே??”

“ஹ்ம்ம்” என்றவன் யோசனையானான்.

“ஊருக்கு போகறதுப்பத்தி எதுவும் சொல்லலையா??” என்று அவன் அவரை கூர்ந்து பார்க்க முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டார் அவர்.

“அம்மா உங்ககிட்ட தான் கேட்கறேன்”

“அவ எங்க போனா எனக்கென்ன??”

“அவ உங்ககிட்ட அதைப்பத்தி என்ன சொன்னா??”

“ஏன்டா அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட முழுசா முடியலை. இப்போ தான் உன் மாமியார் போன வாரம் வந்து போனாங்க. அதுக்குள்ள இவ ஊருக்கு போகலைன்னா என்ன இப்போ”

“அப்போ நீங்க அவளை போக வேணாம்ன்னு சொல்லியிருக்கீங்க” என்றான் அவரை ஆழ்ந்து நோக்கி.

“நான் அப்படி எதுவும் சொல்லலை”

“நேரடியா சொல்லலை மறைமுகமா சொல்லியிருக்கீங்க”

“உங்களுக்கு அவளோட என்னம்மா பிரச்சனை?? எதுக்கு இப்படி பண்றீங்க?? ஒண்ணு போன்னு சொல்லுங்க, இல்லையா போயிட்டு ரெண்டு நாள் வந்திடுன்னு கூட சொல்லியிருக்கலாம். அதைவிட்டு என்ன பேச்சும்மா இதெல்லாம்”

“திலோ கல்யாணம் முடிஞ்சு பத்து நாளைக்கு ஒரு தரம் இங்க வருவா. இல்லையா நீங்க அவளை போய் பார்ப்பீங்க. உங்களுக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா”

“அதுவும் அவ உங்ககிட்ட வந்து கேட்டிருக்கா அந்த மரியாதைக்காகவாச்சும் போன்னு சொன்னா உங்க மகுடம் இறங்கிடும்மான்னு சொல்லுங்கம்மா”

“ஆதி”

“அவ அன்னைக்கு ஒருத்தனை போட்டு அடிச்சதை நீங்க பார்த்ததுல இருந்து உங்களுக்கு அவளைப் பிடிக்கலை அதானே. உங்களுக்கு தெரியுமா அவ ஏன் அவனை அடிச்சான்னு. என்னைவிட்டிருந்தா நான் அந்தாளை கொன்னே போட்டிருப்பேன். அவ அடிக்க மட்டும் தான் செஞ்சா”

வாசவி பதிலே பேசவில்லை. எதுக்கு எதாச்சும் புருஷன் பொண்டாட்டி தகராறா இருக்கு. அதுக்குன்னு இவ அவனை போட்டு அடிப்பாளா என்று தான் அவருக்குள் ஓடியது.

“மூணு வயசு குழந்தை இவங்க வீட்டில பார்த்துக்க சொல்லி விட்டுட்டு போயிருக்காங்க அந்த குழந்தையோட அம்மா. இவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா எனக்கு சொல்லவே கூசுது”

“அந்த குழந்தைக்கு என்னம்மா தெரியும். தனக்கு என்ன நடந்துச்சுன்னு கூட சொல்லத் தெரியாத குழந்தைகிட்ட தப்பா நடந்துக்க பார்த்திருக்கான். கோவிலுக்கு போக அந்த வழியா வந்தவ குழந்தை அழற சத்தம் கேட்டு பார்த்திருக்கா”

“அதுக்கு அப்புறம் தான் அவனை மிதி மிதின்னு மிதிச்சிருக்கா. அவன் பண்ணது தப்புன்னு தெரிஞ்சும் அவன் பொண்டாட்டி புருஷன் அடி வாங்குறதை பார்த்து அழுது ஓவரா சீன் போட்டுச்சு”

“மெல்லினா அந்த குழந்தையோட அம்மா வர்ற வரைக்கும் இருந்து அவங்ககிட்ட குழந்தையை ஒப்படைச்சுட்டு வந்திருக்கா” என்று அவன் முடிக்க வாசவி முகத்தில் ஈயாடவில்லை. உள்ளுக்குள் பதறியது அவருக்கு.

“உங்ககிட்ட நடந்ததை நான் அப்போவே சொல்றேன்னு சொன்னேன். நடந்ததை சொல்லி தான் அவங்களுக்கு என்னை பிடிக்கணும்ன்னா அது எனக்கு வேண்டாம். அவங்களுக்கா என்னை பிடிச்சா பிடிக்கட்டும் இல்லைன்னா விட்டிருங்கன்னு சொல்லிட்டா”

“இப்போக்கூட நான் இதை சொல்லணும்ன்னு நினைக்கலை. நீங்க தான் என்னை சொல்ல வைச்சுட்டீங்க, என்கிட்ட நேத்தே ஊருக்கு போறதைப்பத்தி கேட்டா நானும் போகச் சொல்லிட்டேன்”

“உங்ககிட்ட வந்து கேட்டிருக்கான்னா அது உங்க மேல உள்ள மரியாதை. அதை நீங்களே கெடுத்துக்கிட்டீங்களேம்மா” என்றான் வருத்தமான குரலில்.

“இதுக்கு மேல நான் அவளுக்காக உங்ககிட்ட பேசவே மாட்டேன்ம்மா. இது தான் கடைசி” என்றவன் கைகழுவிட்டு கிளம்பியிருந்தான்.

மதிய உணவு இடைவேளையில் மெல்லினாவிற்கு அழைத்தான் ஆத்திரேயன் “சொல்லுங்க” என்றிருந்தாள் அவன் மனைவி.

“லீவ் சொல்லிட்டியா??”

“இல்லை”

“சொல்லிட்டு கிளம்பி கீழே வா”

“இல்லை வேணாம்”

“கிளம்பி வான்னு சொன்னேன்” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட மெல்லினா கிளம்பாது இருந்தாள். மாலை வேலை முடிந்து அவள் கீழே வர ஆத்திரேயன் கோபமாய் அங்கு நின்றிருந்தான். 

“உனக்கு என்னடி பிரச்சனை??” என்று அடிக்குரலில் சீற அவனின் கோபம் முகம் அவளை கவலைக்கொள்ள செய்தது. “என்னைப் பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா உனக்கு. நான் உனக்கு போன் பண்ணப்போ மணி ரெண்டு இப்போ மணி ஆறரை இவ்வளவு நேரமா உனக்காக இங்க காத்திட்டு இருக்கேன்”

“போறவன் வர்றவன் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்திட்டு போறான். லீவுன்னு சொல்லிட்டு இங்க நிக்கறனேன்னு. மாமா கூட வந்து கேட்டுட்டு போய்ட்டார், உனக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி வர முடியாதுன்னு கூட சொல்ல தோணலைல”

“எப்படியோ போ, ஊருக்கு போறதுன்னா போ போகலைன்னா வீட்டோடவே இரு. நானெல்லாம் உனக்கு ஒரு ஆளா கூட தெரியலைல்ல” என்றவன் தன் வண்டியில் ஏறினான்.

அவன் கோபம் மொத்தத்தையும் கிக்கரை உதைப்பதில் காட்டியவன் ஆக்சிலேட்டரை முறுக்கிக்கொண்டு சீறி பாய்ந்திருந்தான். குற்றவுணர்வு கொல்ல அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

—————-

ஆத்திரேயனின் கோபத்தை குறைக்கும் வழி தெரியாது விழித்திருந்தாள் அவள். “மெல்லினா இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோமா” என்ற மகேஸ்வரியிடம் கலக்கத்துடன் தலையாட்டினாள்.

“என்னாச்சு அம்மு”

“ஒண்ணுமில்லைம்மா”

“மாப்பிள்ளை போன் போட்டாங்களா??”

“இல்லைம்மா”

“நீ பண்ணியா??” என்றவரிடம் ஒன்றும் சொல்லாது அவள் பார்க்க “ அவர் போனை எடுக்கலையா அதான் ஒரு மாதிரி இருக்கியா. வேலையா இருப்பாங்க உனக்கு நான் சொல்லி தெரிய வேணாம். இதுக்கெல்லாம் கலங்கிட்டு இருக்காதடா. அவங்க போன் பண்ணுவாங்க” என்று மகளின் கலக்கத்தை போக்க பேசினார் மகேஸ்வரி.

அவள் உதகைக்கு வந்து மூன்று நாட்களாகிறது, ஆத்திரேயன் இதுவரை அவளுக்கு அழைக்கவே இல்லை. அன்று கோபமாய் கிளம்பிச் சென்றவன் தான் வீட்டிற்கு வந்த போது கூட அவளிடத்திலே பேசவேயில்லை.

அவன் பேச்சை மீறக்கூடாது என்று தான் இவளும் கிளம்பி ஊட்டி வந்திருந்தாள். எதிலும் மனது ஒட்டவேயில்லை, எங்கு சுற்றினாலும் அது ஆத்திரேயனிலேயே வந்து நின்றது. நின்றால் நடந்தால் உட்கார்ந்தால் என்று ஒவ்வொரு நொடியும் அவனைத் தான் நினைத்திருந்தாள். 

இவள் ஊருக்கு வந்துவிட்டதாக சொல்ல கூப்பிட அவன் எடுக்கவேயில்லை. மெசேஜ் அனுப்ப அவன் பார்த்த அடையாளம் மட்டும் வந்தது.

அதற்கு பின் ஒவ்வொரு நாளும் இவள் போன் செய்யவும் அவன் எடுக்காதிருக்கவும் அடுத்து இவள் மெசேஜ் அனுப்பவும் என்று தான் அந்த மூன்று நாளும் கழிந்தது. 

“எனக்கு உங்க கூட பேசாம இருக்க முடியலை ப்ளீஸ். என் மனசு உங்களை ரொம்ப தேடுது” என்று இவள் இரவு தாள முடியாது மெசேஜ் அனுப்பி கண்ணீர் வழியும் பொம்மையை அனுப்ப உடனே பார்த்த அடையாளம் வந்தது இரண்டு மணி ராத்திரியில். தன்னைப் போல அவனும் தூங்காது விழித்திருக்கிறான் என்பதே சற்று ஆறுதலாய் இருந்தது அவளுக்கு.

ஊருக்கு போனதும் எப்படியாச்சும் அவர் கோபத்தை சரி பண்ணிடணும் என்றவள் எண்ணியிருக்க அங்கோ அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இடியொன்று மொத்தமாய் விழக் காத்திருந்தது இவளின் வரவிற்காய்.

மெல்லினா உதகையில் இருந்து கிளம்பியிருந்தாள் சந்தோசமாய். ஆத்திரேயனை எப்படி சந்திக்கப் போகிறோம் எப்போதடா அவனைப் பார்ப்போம் என்று மனம் கொக்கரித்துக் கொண்டிருந்தது.

ரயிலில் ஏறிவிட்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு கால் வந்து கட்டாகிப் போனது. அழைப்பு புது எண்ணில் இருந்து, இவள் பதிலுக்கு அழைக்கப் போக ரயிலில் சிக்னல் கிடைக்காது போக அழைப்பு செல்லவேயில்லை.

சரி நாளைக்கு காலையில போய் பார்த்துக்கலாம் என்றெண்ணியவள் இரவு ஆத்திரேயனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள். “உங்களை பார்க்க ஆவலாய் வந்திட்டு இருக்கேன்” என்று.

மெசேஜ் சென்றடைந்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லை. இவள் பெர்த்தில் ஏறி படுத்திருந்தாள் மறுநாள் அவனைப் பார்க்க போகிறோம் என்பதில் உறக்கம் அவளை ஆட்கொண்டிருந்தது.

காலையில் இவள் வீட்டிற்கு வர இடி தயாராய் விழுந்திருந்தது. ஆத்திரேயன் வீட்டில் இல்லை, வாசவியின் முகமோ சரியில்லை, இவளுக்கு அலுவகலத்தில் இருந்து அழைப்பு உடனே வருமாறு. 

அடித்து பிடித்து இவள் செல்ல இவளை தற்காலிக வேலை நிறுத்தம் செய்திருந்தனர். மெல்லினாவைப் பற்றி மனித உரிமை கமிஷன் அலுவலகத்திற்கு புகார் சென்றிருக்க அதன் பொருட்டு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவளின் மேல் புகாரை கொடுத்திருந்தது வாசவி.

Advertisement