Advertisement

15

“எதுக்கு அப்படி சொன்னே??”

“எப்படி??” என்றாள் மெல்லினா. அம்மாவும் பிள்ளையும் முட்டிக்கொண்டு நிற்க அவரின் முன்னேயே “இனிமே நீங்க எனக்காக எதுவும் பேசக்கூடாது” என்று அழுத்தமாய் உறுதியாய் ஆத்திரேயனிடம் அவள் சொல்லியிருந்தாள். அப்போது அவளை முறைத்துவிட்டு மேலேறிவிட்டிருந்தான் அவன்.

அதைத்தான் அவன் இப்போது கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு இரவு உறங்க அறைக்கு வந்தவளை பிடித்துக் கொண்டான்.

“எங்கம்மாகிட்ட இனிமே எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னியே??”

“அதை இன்னைக்கா சொன்னேன் இதுக்கு முன்னாடியும் சொல்லியிருக்கேன் தானே”

“சொன்ன ஆனா இன்னைக்கு உன் தோரணையே வேற மாதிரி இருந்துச்சு”

“ஒரு மாதிரியும் இல்லை”

“என்னன்னு சொல்லு”

“எனக்காக நீங்க சப்போர்ட் பண்ணி பேச வேண்டாம்”

“அதான் ஏன்??”

“ஏன்னா அத்தைக்கு அது பிடிக்கலை”

“அதுக்காக நான் நியாயத்தை கூட சொல்லக்கூடாதா?? ஒரு வேளை நீ தப்பா இருந்து அம்மா சரியா இருந்திருந்தா நான் அவங்க சார்பா தானே பேசியிருப்பேன்”

“இங்க பாருங்க நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல நியாயம் பேசுற மாதிரி பேசறீங்க. இது குடும்பம் இங்க அதெல்லாம் சரியா வராது. எங்க விட்டுக்கொடுக்கணுமா அங்க விட்டுக் கொடுத்து தான் போகணும்”

“இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன் நிஜமாவே எனக்கு புரியலை” என்றான் அவன்.

“நீங்க சொன்னது தப்பில்லை சொல்லியிருக்கணுமான்னு தான் நான் சொல்றேன்”

“அதான் ஏன்??”

“என்ன இப்படி ஏன்?? ஏன்னு கேட்கறீங்க. நீங்க பேசப்பேச எனக்கும் அவங்களுக்குமான இடைவெளி தான் அதிகம் ஆகும். எங்களோட உறவுல ஒரு துளி முன்னேற்றம் கூட வராது”

“இப்போ நான் என்ன செய்யணும்??”

“எதுவுமே செய்ய வேணாம்”

“உனக்கு ஹெல்ப் கூட செய்யக்கூடாதுன்னு சொல்வியா”

“சொல்ல மாட்டேன்”

“அப்படின்னா”

“எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணலாம், பண்ணணும்”

“ஹ்ம்ம் அப்புறம்”

“அத்தைகிட்ட எனக்காக எதுவும் பேசாதீங்க. அவங்களுக்கு என்னைத்தான் பிடிக்கலை உங்களை ரொம்ப பிடிக்கும், நான் உங்களுக்கு சரியானவ இல்லைன்னு நினைக்கிறாங்க”

“நீயா சும்மா சொல்லாதே”

“பின்ன என்ன காரணமா இருக்கும்ன்னு நினைக்கறீங்க. நீங்க தான் சொல்லுங்களேன்”

“அதான் எனக்கு தெரியலையே”

“நான் சொன்னது தான். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அத்தை உங்களை திட்டினா சண்டை போட்டா வீட்டை விட்டு போயிருப்பீங்களா”

“தெரியலை”

“நான் வந்த பிறகு நீங்க அந்த மாதிரி பேசினா நான் தான் அதுக்கு காரணம்ன்னு நினைக்க மாட்டாங்களா??”

“நான் ஒண்ணும் தனிக்குடித்தனம் போறேன்னு சொல்லவே இல்லையே”

“சொல்லலைன்னாலும் அவங்களுக்கு அப்படித்தானே தோணும்”

“சத்தியமா என்னால முடியலைடி. நீ வெளிய ஒரு மாதிரி வீட்டில ஒரு மாதிரி இருக்க. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியலை, இந்த பஞ்சாயத்தே பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போல”

“இதுக்கு தான் சொல்றேன் வேணாம்ன்னு. என்னைப்பத்தி பேசினா பேசிட்டு போறாங்க. என்னால முடிஞ்சவரை நான் பொறுத்துக்குவேன் முடியலைனா நான் பேசாமலா இருக்க போறேன்”

“நீ பேசுவே நம்பிட்டேன் என்கிட்ட வேணா வாய் கிழிய பேசுவே. அவங்ககிட்ட பேசிட்டாலும்”

“போதும் இந்த பேச்சை விட்டிருவோம்” என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் அவள்.

—————–

விக்ரமின் அலைபேசி தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க மீட்டிங்கில் இருந்தவனால் உடனே அழைப்பை ஏற்று பேச முடியவில்லை. மீட்டிங் முடிந்ததும் அவன் போனை பார்த்து யோசனையானான்.

பின் அவ்வெண்ணுக்கு அவன் அழைக்க ஒரே ரிங்கிலேயே அழைப்பை ஏற்றிருந்தவன் “விக்ரம் எங்க இருக்கே??” என்றிருந்தான்.

“இந்த நேரத்துல எங்க இருப்பேன் ஆபீஸ்ல தான்” என்றான் இவன்.

“அது எனக்கு தெரியும் உன் பக்கத்துல யாரும் இருக்காங்களா” என்று மறுமுனை சொல்லவும் சட்டென்று திரும்பி சுற்றுப்புறம் பார்த்தான். அவன் இன்னமும் மீட்டிங் ஹாலில் தான் இருந்தான், அங்கு சிசிடிவி கேமரா உள்ளது.

“ஒரு நிமிஷம் இரு” என்றவன் தன் மொபைலுடன் அவனறைக்குள் நுழைந்தான். “இப்போ இப்போ சொல்லு அவினாஷ் என்ன எதுவும் பிரச்சனையா??”

“ஹ்ம்ம் ஆமா விக்ரம்”

“சைட்லயா??”

“இல்லை”

“என்னன்னு சொல்லு”

மறுமுனை ஏதோ சொல்ல இங்கு இவன் முகம் எவ்வித உணர்வும் காட்டாது அசையாதிருந்தது.

“என்ன விக்ரம் நான் பேசிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்லாம இருக்கே??”

“கண்டிப்பா பிரச்சனை ஆகும்ன்னு சொல்றியா”

“ஆமா ரெண்டு பேருக்குமே விஷயம் தெரிஞ்சு போச்சு. நாங்க போலீஸ் போறோம்ன்னு சொல்லிட்டு இருக்காங்க”

“போக மாட்டாங்க” என்று உறுதியான குரலில் சொன்னான் அவன்.

“எப்படி உறுதியா சொல்றே??”

“கொஞ்சம் யோசிச்சு பாரு உனக்கே தெரியும்”

“புரியலை”

“அந்த இன்னொரு வீடியோவை ரெண்டு பேருக்குமே அனுப்பி வை. எல்லாமே நாம அனுப்பின மாதிரி இருக்கவே கூடாது, உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றுவிட்டு போனை வைத்தவனின் முகம் சுருங்கியது.

அவன் கண் முன்னே மெல்லினா வந்து போனாள். இப்போ நடந்ததுக்கும் அவளுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமா என்ற திக்கில் யோசனை ஓடியது அவனுக்கு.

சரியாய் அவன் போன் இசைக்க எடுத்து பார்த்தவன் முகம் சுருக்கி யோசித்தான். புது எண்ணில் இருந்து அழைப்பு, மெல்லினாவின் எண் அவனிடமிருந்தது.

யாராய் இருக்கும் எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடே அழைப்பை ஏற்று காதில் வைத்தான். “என்ன போன் எடுக்க இவ்வளவு நேரமாகுது?? பயந்துட்டியா??” என்ற எகத்தாள குரலே சொன்னது அழைத்தது மெல்லினா என்று.

“நீ?? நீயா??”

“நானே வருவேன் இங்கும் அங்கும்” என்று மெலிதாய் பாடினாள் அவள்.

“என்ன விஷயம்??” என்றான் கடினமான குரலில்.

“விஷயம் ஏதோ இருக்கே அதான் சார் அரண்டு போய் இருக்கார். போன் எடுக்கலாமா வேணாமான்னு யோசனை பண்ணி எடுத்திருக்கார், விஷயம் இல்லாமலா” என்றாள்.

“உனக்கு என்ன வேணும் இப்போ?? சும்மா கண்டதும் பேசாம போனை வை. ஆதியோட மனைவியாச்சேன்னு பார்க்கறேன்”

“இல்லைன்னா என்னடா பண்ணுவே”

“உன்னோட பேச்சுக்கு உன்னை என்ன வேணா பண்ணியிருப்பேன்”

“உன் பிரண்ட்கிட்ட வேணா நல்லவன் வேஷம் போடலாம், ஊர் உலகத்தையும் நம்ப வைக்கலாம். என்கிட்ட உன் பாட்சா எல்லாம் பலிக்காது. இப்போ உனக்கு வந்த நியூஸ் வெறும் சாம்பிள் தான், பின்னாடி பெரிசா உனக்கு ஆப்பு வந்திட்டே இருக்கு. சீக்கிரமே உன்னை பிடிச்சு உள்ள போடுறேன்”

“பேசி முடிச்சிட்டியா உன்னால ஆனதை பாரு. பேசி நேரத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணுறே??” என்று அவளிடம் ஜம்பமாய் பேசிவிட்டு வைத்தவனுக்கு ஓரிரு நிமிடம் எதுவும் ஓடவில்லை.

மாட்டவும் கூடாது அதே சமயம் வேலையும் நடக்க வேண்டும் என்று யோசித்து பெரிதாய் திட்டம் தீட்டினான் அவன்.

விக்ரமிடம் பேசிவிட்டு போனை வைத்த மெல்லினாவின் முகத்தில் அரும்பாய் புன்னகை. விக்ரமை அடுத்த தப்பிற்கு தூண்டிவிட்டு அவனாகவே வெளியே வரவைக்க அவள் தீட்டிய திட்டம் சிறப்பாகவே மிகச்சிறப்பாகவே வேலை செய்தது.

——————

“என்னங்க” என்ற மெல்லினாவின் விரல்கள் கணவனின் நெஞ்சத்தில் கோலம் வரைந்துக் கொண்டிருந்தது.

“ஹ்ம்ம்”

“நான் அடுத்த வாரம் ஊட்டிக்கு போயிட்டு வரட்டுமா??” என்றுவிட்டு அவன் மார்பின் மீது படுத்துக்கொண்டே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் என்ன சொல்வானோ என்று.

“என்ன திடீர்ன்னு??” என்று அவன் கேட்கவும் அவள் முகத்தை அவன் மீது அழுத்திக் கொண்டவளின் இமையோரம் நனைந்து அவனையும் ஈரமாக்க “போயிட்டு வா” என்றான் அவன்.

“நான் பதிலே சொல்லலையே” என்றாள் தொண்டையடைக்க. “தெரியும்” என்றவனை கட்டிக்கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாராளமாய் பொங்கி பெருகியது.

அவள் முகத்தை நிமிர்த்தி தன்னருகே அவன் இழுக்க அவனுக்கு முகம் காட்டாது அவள் திருப்ப முயன்று தன் புறம் திருப்பினான்.

“எதுக்கு இந்த அழுகை??”

“நான் சொல்லாமலே எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு”

“அத்தை இங்க வந்திருக்கும் போது சொன்னாங்க. உங்கம்மாவோட இறந்த நாள் வருதுன்னு”

அவளிடம் பதிலில்லை கண்கள் விடாது மழை பொழிந்தது. “போதும் மெல்லினா” என்றவன் அவள் கண்களை அழுந்த துடைத்தான்.

“உங்கப்பா பத்தி ஒண்ணுமே தெரியலையே”

“எனக்கே தெரியாது”

“என்ன??”

“மகேஸ்வரி அம்மா எங்களை பார்த்தப்போ நானும் அம்மாவும் தான் இருந்தோமாம். அப்பாப்பத்தி அம்மா எதுவும் சொல்லலைன்னு சொன்னாங்க”

“மகேஸ்வரி அம்மாவை அவங்க தான் யானைகிட்ட இருந்து காப்பாத்தி கடைசியில அவங்க உயிரை கொடுத்திட்டாங்க. என்னை படிக்க வைக்கணும் பெரியாளாக்கணும்ன்னு மட்டும் தான் அம்மா கடைசியா சொன்னாங்களாம்”

“மாமா போலீஸ் தானே ஏன் உங்கப்பாவை பத்தி எதுவும் விசாரிக்கலை”

“அப்பா விசாரிக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அம்மா எப்படி அந்த இடத்துக்கு வந்தாங்கன்னே தெரியலை. தவிர அங்க நிறைய மலைஜாதி குடும்பம் இருக்காம். அதுல யார்கிட்ட போய் என்னன்னு விசாரிக்க, அம்மாவோட பேரு கூட தெரியலை”

“அப்போ எப்படி உங்கம்மாவை அடக்கம் பண்ணாங்க”

“அப்பா போலீஸ்ல இருந்ததுனால தன்னோட சொந்தக்கார பொண்ணுன்னு சொல்லி எப்படியோ கேசை முடிச்சுட்டதா சொன்னாங்க”

மறுநாள் காலையில் குளித்து கீழே வந்திருந்த மெல்லினா எப்போதும் போல் சமையலறை சென்று தன் வேலையை பார்க்க வாசவி அவளுக்கு முன்னேயே அங்கு நின்றிருந்தார்.

அன்றைய நிகழ்விற்கு பிறகு அவர் மெல்லினாவிடம் பேச்சு வார்த்தையை சுத்தமாய் நிறுத்தியிருந்தார். அதற்காக மெல்லினா அவரிடம் பேசாமல் எல்லாம் இல்லை சாப்பிடுங்க, போயிட்டு வர்றேன் என்று சொல்லிக் கொண்டு தானிருந்தாள்.

அவர் பதில் சொல்லாது போனாலும் அவள் தன் வழமையை மாற்றவில்லை. வாசவி காபியை போட்டுக் கொண்டிருக்க இவள் சாதத்திற்கு உலை கொதிக்க வைத்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்து சமையலை தொடங்கினாள்.

Advertisement