“இது எப்படி??”

“பிளட் டெஸ்ட் ரிசல்ட்ல அந்த பிளட் ஓ பாசிடிவ்ன்னு தெரிஞ்சது. உன்னோட ஆபீஸ்ல யாருக்கெல்லாம் அந்த குருப் இருக்குன்னு பார்த்தேன். அதுல தேறினது சிலர் தான்”

“உன்னோட ஸ்டாப் மேல எல்லாம் எனக்கு பெரிசா எந்த சந்தேகமும் வரலை. இந்த ரூமை யூஸ் பண்ணுற லிஸ்ட்ல இருந்த ரெண்டு பேருக்கு ஒரே ரத்தம். ஒண்ணு நீ இன்னொண்ணு உங்கப்பா”

“நீயில்லைன்னு தெரியும் அடுத்து இருக்கறது உங்கப்பா. அவரோட நம்பருக்கு போன் பண்ணேன். மனுஷன் வாயே திறக்கலை. அவங்க எந்த ஊர் போயிருக்கறதா நீ சொன்னே??”

“பெங்களூர்”

“இங்க தான் சென்னையில ஓஎம்ஆர்ல இருக்க  உங்க பார்ம் ஹவுஸ்ல தான் இருக்காங்க உங்கப்பாவும் மாமாவும். அவர் நம்பரை வைச்சு இடத்தை கண்டுப்பிடிச்சேன். நேராவே போய் அவங்க முன்னாடி நின்னேன். என்னை பார்த்ததும் அரண்டு போய்ட்டாங்க ரெண்டு பேரும். பாவம் உங்கப்பா உன்னை மாதிரி இல்லை ரொம்ப நல்லவரு, என்னை பார்த்ததுமே எல்லாமே ஒப்பிக்க ஆரம்பிச்சிட்டார்”

“முன்னபின்ன தப்பு பண்ணதில்லைல அதான் அவருக்கு உன்னோட சூதுவாது எல்லாம் தெரியலை”

“ஏய் என்ன என்னைய பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசிட்டு இருக்க??”

“நிறைய தெரியும் எடுத்து விடவா”

“தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போ என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் காட்டுல நான் தான் ராஜா”

“எப்போமே ராஜாவாவே இருக்க முடியாது. எதிரி வந்து வீழ்த்திட்டு போய்டுவான்”

“போதும் நிறுத்து”

“சரி விடு உங்கப்பா கதைக்கு வருவோம். எல்லாம் செஞ்ச உங்கப்பாவுக்கு உன் மாமாவை காட்டிக்கொடுக்க மனசில்லை. அதான் அப்படி செஞ்சிருக்கார், உன் மாமாவோட மனசை மாத்தத்தான் அவரை கூட்டிட்டு வெளியூர் போறேன்னு பொய் சொல்லிட்டு பார்ம் ஹவுஸ் கூட்டிட்டு போய் உங்க மாமாவை சமாதானம் செஞ்சிருக்கார்”

“இங்க நீ அதுக்குள்ளே கேஸ் கொடுப்பேன்னு அவங்க எதிர்பார்க்கவேயில்லை போல”

“நீ சொல்றது எனக்கு இப்போ கூட நம்ப முடியலை”

“நம்பலைன்னா போ” என்று அவள் சொல்லி முடிக்கும் போது அவளின் கைப்பேசி சிணுங்கியது. “ஹலோ சொல்லுங்க கிளம்பியாச்சா?? எவ்வளவு நேரம் ஆகும் சீக்கிரம் வாங்க நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றுவிட்டு போனை வைத்தாள்.

“யாரு??” என்றான் விக்ரம்.

“லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்??”

“வேணாம் வேணாம் யாரும் வர வேணாம். கேஸ் எதுவும் வேணாம். நான் கொடுத்த கம்பிளைன்ட்டை வாபஸ் வாங்கிக்கறேன்” என்றான் பதறியவாறே.

“எங்களை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு??”

“உன்னைப் பார்த்தா எப்படியெப்படியோ தெரியுது எனக்கு” என்று அவன் வாயைவிட அவள் தனது வலது கையை மடித்து அவன் முகத்திலேயே ஒரு குத்துவிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

“இது வெறும் சாம்பிள் தான். அதிகமா பேசினா இன்னும் அதிகமா அடிபடுவே. டிஐஜிக்காக இப்போ உன்னை சும்மாவிட்டுட்டு போறேன். போலீஸ் என்ன நீ வைச்ச வேலைக்காரங்கன்னு நினைச்சியா”

“நீ வான்னா வர்றதுக்கும் போன்னா போறதுக்கும். இதுக்கு மேலே அந்த கேஸ் இந்த கேஸ்ன்னு நீ வந்தேன்னு வை டிஐஜி என்ன உங்க பாட்டனே வந்தாலும் அத்தனை பேரையும் பிடிச்சி உள்ள போட்டிருவேன்”

“என்னை அடிச்சதுக்கு நீ ரொம்ப அனுபவிப்ப??”

“இந்த டயலாக் சினிமால வரும்ல புதுசா எதாச்சும் சொல்லேன்”

“புதுசோ பழசோ இனிமே நீ நிறைய அழுவே. உன்னை அழ வைக்கிறேன். என்னை ரத்தம் சிந்த வைச்சேல பதிலுக்கு…”

“என்ன மிரட்டறியா??”

“கண்டிப்பா மிரட்டல் தான்” என்றவன் சட்டென்று அவள் கையில் இருந்த மொபைலை பறித்து அதிலிருந்த வீடியோவை முழுதுமாய் அழித்தான். அதை அவளிடம் தூக்கிப் போடும் போது அது கீழே விழுந்து டிஸ்பிளே லேசாய் உடைந்தது.

“எங்கப்பாவும் மாமாவும் பேசின வீடியோ எதுலயும் இருக்கக்கூடாது”

“அதுக்கு என் போனை உடைப்பியா”

“புதுசு வாங்கிக்கோ” என்று சொல்லி அவன் பர்சில் இருந்த பணத்தை அவளை நோக்கி வீசி அடித்தான். அவள் கண்கள் சிவக்க அவனருகே வந்தவள் கையை ஓங்கியிருக்க அவள் கையை பிடித்து தடுத்திருந்தான் அவன், பிடியையும் தளர்த்தவேயில்லை.

இவள் பெண் தானே இவளால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. லாவகமாய் அவள் கையை விடுவித்தவள் சட்டென்று அவன் வயிற்றில் ஒரு குத்துவிட அப்படியே அமர்ந்துவிட்டான் அவன். பின் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட 

“நீ நிறைய பண்ணிட்டே, நீ செஞ்ச தப்புக்கான தண்டனை உன்னைத்தேடி வந்திட்டு இருக்கு. உன் விரல் நகத்தை ஒவ்வொண்ணா பிச்சு எடுத்து உன்னை ஒவ்வொரு நிமிஷமும் கதற வைக்கலை நான் மெல்லினாவே இல்லைடா” என்றுவிட்டு அவள் வாயில் புறம் செல்ல “மேடம் ஒரு நிமிஷம்” என்று அவன் சொல்ல நின்றாள்.

இப்போது எழுந்து நின்றிருந்தான் அவன். தன் கைக்குட்டையால் மூக்கில் இருந்து இன்னமும் லேசாய் வந்துக் கொண்டிருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே அவளருகில் வந்தான்.

“இதுவரைக்கும் உனக்கு எனக்கும் எந்த பிரச்சனையுமே இருந்ததில்லை. நீ யாருன்னு கூட எனக்கு தெரியாது, ஆனா உன்னை பார்த்ததுல இருந்து உன்னையே அடிக்கடி நினைக்க வைச்சிருக்க”

“அப்படி பார்க்காத கண்டிப்பா நல்லவிதமா இல்லை” என்று அவள் பார்வைக்கு பொருளுரைத்தவன் “உனக்கு என்னைப்பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு. அது நல்ல விஷயம் இல்லைன்னு மட்டும் தெரியுது”

“இல்லை ஒரு வேளை உன் பார்வையில நான் தப்பா தெரியறனோ என்னவோ?? நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை” என்றான் அவன்.

அவள் முகத்தில் ஒரு புன்னகை கீற்று, பின் மெதுவாய் இதழ் பிரித்தவள் “நீ நிச்சயமா நான் நினைக்கிற அளவுக்கு மோசமானவன் இல்லை அதைவிட படுமோசமானவன். கெட் ரெடி நீ செஞ்சதுக்கான தண்டனையை அனுப்பவிக்க, குட் லக், வில் மீட் யூ ” என்றுரைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நகர்ந்திருந்தாள்.

—————

காலையில் நேரமாகவே கண் விழித்திருந்தான் ஆத்திரேயன். அருகில் கையை துழாவிப் பார்க்க அவன் மனைவி அங்கில்லை. கட்டிலின் மேலே இருந்த இடத்தில் தடவி தன் மொபைலை எடுத்து நேரம் பார்க்க அது ஆறு மணி என்று காட்டியது.

தன் வேலைகள் முடித்து அவன் கீழே இறங்க ஆறரை மணி ஆகியிருந்தது. சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்க உள்ளே சென்றால் மெல்லினா தனியே சமைத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறே??”

“கிட்சன்ல என்ன பண்ணுவாங்க”

“அது எனக்கு தெரியுது, இவ்வளவு சீக்கிரம் சமைக்கிற அளவுக்கு என்ன அவசரம். அம்மா சமைப்பாங்க, நீ போய் குளிச்சு கிளம்பு. இன்னைக்கு கோர்ட்க்கு வேற போகணும்ன்னு நேத்து போன்ல பேசிட்டு இருந்தே போ அந்த வேலையை பாரு”

“இருக்கட்டும் இதை முடிச்சிட்டு போறேன்”

“நான் சொன்னா கேட்க மாட்டியா??” என்று அவன் சொல்ல திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை தான் கவனித்தாள் அவள்.

அவள் பார்வையின் பொருள் புரிந்து வந்தானோ அன்று எதைக்கண்டு வந்தானோ அவளருகே நெருங்கியிருந்தான் ஆத்திரேயன்.

“அம்மா தான் சமைக்க சொன்னாங்களா?? இந்நேரம் எப்பவும் எழுந்திருப்பாங்களே இன்னும் ஆளைக்காணோம்” என்று யோசனையாய் அவள் பதிலை எதிர்பார்த்தான்.

“ஏன் நான் வேலைப் பார்த்தா என்ன??”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“சமைக்க தானே செய்யறேன் ஏதோ குத்தம் பண்ண மாதிரி கேட்கறீங்க”

“எனக்கு நிஜமாவே புரியலை மெல்லினா. நீ யாரு??”

“உங்க மனைவி” என்று சொல்லவும் அவன் முகம் ஒரு நொடி மலர்ந்தது. 

“நீ என் மனைவின்னு தெரியாமத்தான் கேட்கறேனா. போடி” என்றான்.

“நீ வெளிய எப்படின்னு எனக்கு நல்லா தெரியும். எங்கம்மாகிட்ட நீ அடங்கி போக வேண்டாம், ஒதுங்கி போன்னு தான் நான் சொன்னேனே தவிர ஒடுங்கி போகச் சொல்லலை”

“உன்னால முடிஞ்சதை மட்டும் செய். முடியலைன்னா முடியாதுன்னு சொல்லிரு இதுல என்ன இருக்கு. அவங்களுக்கு முடியலைன்னா வேலைக்கு ஆள் வைச்சுக்குவோம்”

“வெளிய இருக்க மாதிரி நான் வீட்டில இருந்தா வீடு நரகமாகிடும். இது குடும்பம் எங்க எல்லாரையும் நிறை குறைகளோட தான் ஏத்துக்கணும். அவங்களோட சேர்ந்து வாழ பழகிக்கணும்”

“என்னமோ போ நீ பேசுறது எனக்கு ஒண்ணும் புரியலை. நான் சொன்னா நீ கேட்க மாட்டே அது மட்டும் எனக்கு நல்லா புரியுது” என்றவன் பேசிக் கொண்டே கத்தியை அவளிடமிருந்து வாங்கியிருந்தான்.

அவன் காய்கறிகளை நறுக்க “கொடுங்க அதை நான் பார்த்துக்கறேன்”

“இப்போ நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன். அம்மாவை உதவி பண்ண சொல்லலை, நான் உதவி பண்ணுறதை உன்னால தடுக்க முடியாது” என்றவன் அழகாய் காய் நறுக்க அவன் பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள் அவள்.

“என்ன இது நான் பண்ண வேண்டியது எல்லாம் நீ பண்ணுறே??”

“அதென்னா இதெல்லாம் நீங்க தான் பண்ணணும்ன்னு எதுவும் எழுதி வைச்சிருக்கா. நாங்க கட்டிப்பிடிச்சா வேணாங்குதா”

“நான் போய் அப்படி சொல்வேனா”

“அப்போ எதுக்கு சொன்னீங்களாம்”

“கொஞ்சம் வசதியா திரும்பிகிட்டா நல்லாயிருக்கும்ன்னு பார்க்கறேன்” என்று அவன் திரும்பப் போக “ஆதி” என்ற குரலில் மெல்லினா அவனிடமிருந்து விலகினாள்.

அவர்கள் வீட்டின் சமையலறைக்கும் ஹாலுக்கும் இடையே சின்னதாய் ஒரு காலி இடம் உண்டு. ஹாலில் சமையலறை சுவற்றின் ஓரமாய் போடப் பட்டிருக்கும் உணவு மேஜைக்கு சூடாய் உணவு பரிமாற வசதியாய் இருக்கும் வழி அது.

வாசவி அவர்கள் அறையில் இருந்து வெளியில் வர மகன் காய் நறுக்குவதை கண்டுவிட்டு தான் சத்தம் போட்டார். நேரே உள்ளே வந்தவர் “இங்க என்னடா பண்ணிட்டு இருக்கே” என்றவரின் கேள்வி மட்டுமே மகனிடத்தில், குற்றம் சாட்டும் பார்வை முழுதும் மருமகளிடத்திலேயே இருந்தது.

“பார்த்தா தெரியலையாம்மா காய் நறுக்கிட்டு இருக்கேன்”

“நீ தான் சொன்னியா அவனை காய் நறுக்கி தரச்சொல்லி” என்று முறைத்தார் மருமகளை.

“நானா தான் செய்யறேன்” என்றவன் நறுக்கிய காய் கறிகளை மனைவிடத்தில் கொடுத்துவிட்டு “வாங்க உங்ககிட்ட பேசணும்” என்று தாயை வெளியே அழைத்துச் சென்றான்.

“என்னடா உனக்கென்ன தலையெழுத்தா நீ எதுக்கு இதெல்லாம் செய்யற”

“என் பொண்டாட்டி தனியா செய்யறாளே அதான்”

“உங்கம்மாவும் இத்தனை வருஷம் தனியா தான்டா சமைச்சா?? அப்போ ஒருத்தனும் வரலை”

“அம்மா ஆரம்பிச்சுடாதீங்கம்மா. அவ வீட்டில இருக்கறதா இருந்தா நான் எதுவுமே சொல்லியிருக்க மாட்டேன். அவளும் வேலைக்கு போறாம்மா. எனக்கு தெரியும் அந்த வேலை எப்படியிருக்கும்ன்னு. எத்தனை பேருக்கு பதில் சொல்லணும் தெரியுமா”

“இன்னைக்கு அவ கோர்ட்டுக்கு போகணும். நைட்டும் அவ வீட்டுக்கு வந்து சமைக்கிறா, நான் உங்களையே எல்லாம் செய்ய சொல்லலைம்மா. நீங்க கொஞ்சம் உதவி பண்ணலாமே, அதுவும் கூட செய்ய மாட்டீங்களா” என்றான் அவன்.

“நல்லா பேசறேடா நீ, ரொம்ப அழகா மயக்கி வைச்சிருக்காடா. அம்மா வேலைக்கு போகலைன்னா அவ வீட்டில வேலைக்காரியா இருக்கணும்ன்னு சொல்ல வர்றே. சரிப்பா இனிமே உன் பொண்டாட்டிக்கு நான் சேவகம் பண்றேன் சந்தோசமாப்பா” என்றவர் நேரே சமையலறை வந்து அவள் கையில் இருந்த கரண்டியை பிடிங்கினார். “அம்மா என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க” என்று ஆத்திரேயனும் பின்னாடியே வந்தான்.

“இப்போ என்ன உங்களை ஒண்ணும் சொல்லக் கூடாது அதானே. சொல்ல மாட்டேன்ம்மா, ஆனா என்னை நம்பி வந்தவளை நீங்களும் எதுவும் சொல்ல நான் விட மாட்டேன். நீங்க அவளுக்கு எந்த உதவியும் செய்ய வேணாம். நான் செய்யறதை நீங்க தடுக்க முடியாது. நிஜமா சொல்றேன்ம்மா வீட்டுல இருக்கவே எனக்கு பிடிக்கலை”

“சொல்லிட்டியா சொல்லுடா சொல்லு அதுக்கு தானே இவ எல்லாம் பண்ணா. உன்னை தனிக்குடித்தனம் கூட்டிட்டு போகத்தான் இவ்வளவும் செய்யறா. நீயும் அதே சொல்றே. போங்கடா போங்க எல்லாரும் எனக்கு யாரும் தேவையில்லை” என்றவர் கண்ணீரோடு சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டார். மெல்லினா தன் கணவனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க ஆத்திரேயன் தலையில் கைவைத்துக் கொண்டான்.