Advertisement

14

ஆத்திரேயனின் பார்வை இப்போது தன் மனைவி மீதிருந்து திரும்பி விக்ரமை நோக்கியது. அவன் கண்களில் கண நேரத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தவனுக்கு உள்ளுக்குள் லேசாய் ஒரு அதிர்வு ஓடியது.

விக்ரமை அதுநாள் வரை நண்பனாக மட்டுமே அவன் பார்த்திருந்தான். இந்த நொடி அவனின் மற்றுமொரு முகத்தைத் தான் கண்டிருந்தான். மேலே எதுவும் பேசாது அவன் அமைதியாய் இருக்க அவன் மனைவிக்கு புரிந்து போனது கணவன் தங்களை கவனித்துவிட்டான் என்று.

அவள் சுதாரித்துக் கொண்டாள். “என்னங்க பேசிட்டு இருக்கீங்க, அவரை சாப்பிட அனுப்புங்க” என்றாள் மெல்லினா.

“இல்லை ஆதி எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன்” என்ற விக்ரமை ஆத்திரேயன் முறைத்தான்.

“ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பற” என்று கட்டளையாக சொன்னவன் “அண்ணா” என்று ஆதவனை அழைக்க “சொல்லு ஆதி” என்று வந்து நின்றான் அவன்.

“என்னோட பிரண்டு விக்ரம் உனக்கு தெரியும்ல”

“நல்லா தெரியுமே ரெண்டு பேரும் ஸ்கூல் கட் அடிச்சுட்டு படம் பார்த்திட்டு வந்து எத்தனை முறை வீட்டில அடி வாங்கி இருக்கீங்க” என்று சொல்ல “அச்சோ அண்ணா அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வைச்சிருக்கீங்க” என்றான் விக்ரம்.

“அண்ணா அவனை சாப்பிட வைச்சு அனுப்புங்க. கிளம்பறேன்னு குதிக்கறான்” என்று விக்ரமை அவன் பொறுப்பில் விட்டு இவர்கள் மற்ற விருந்தினர்களின் வருகையில் மீண்டும் பிசியாகினர்.

சாப்பிட அமர்ந்த விக்ரமின் வலக்கரம் மெல்ல உயர்ந்து அவன் மூக்கை தொட்டுப் பார்த்தது. மெல்லினாவை ஏதாவது செய்ய வேண்டும் அவளை அழ வைக்க வேண்டும் என்ற ஆவேசம் அவனுக்குள் பெரும் பிரவாகமாய் உருவாகியது. அன்றைய நாள் கண்ணுக்குள் நிழலாடியது அவனுக்கு.

“மெல்லினா விக்ரமை தெரியும்ன்னு அன்னைக்கு ஏன் என்கிட்ட சொல்லலை”

“உங்க கேஸ் விஷயத்தை பத்தி நீங்க என்னைக்காச்சும் என்கிட்ட சொல்லி இருக்கீங்களா??”

“சோ விக்ரமோட கேசை நீ என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாததுக்கு அது தான் காரணம். ஓகே நான் விக்ரம் கேசை பத்தி கேட்கவே இல்லை, அவனை உனக்கு தெரியுமான்னு அன்னைக்கு கேட்டப்போ நீ எனக்கு சரியா பதில் சொல்லலையே”

“இங்க பாருங்க மறுபடியும் சொல்றேன் இது நான் டீல் பண்ணுற கேஸ் விஷயம். அதை உங்ககிட்ட நான் டிஸ்கஸ் பண்ண முடியாது. இப்போ தான் விக்ரமோட நேரடியா நான் பேச ஆரம்பிச்சிருக்கேன்”

“டிஐஜி சொல்லலைன்னா அந்த கேசை எடுத்திருக்கவே மாட்டேன், அவர் ரொம்ப கேட்டதால செஞ்சேன், அவ்வளவு தான்”

“அதுக்கும் முன்னாடியே உனக்கும் அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு??”

“ஆமா இருக்கு ஆனா நேரடியா இல்லை”

“உனக்கு பெரிய தாதான்னு நினைப்பா. ஊருக்கு நல்லது பண்ணுற ஆளா நீ” என்றான் குனிந்து அவளிடம்.

“நல்லது பண்ணுறதுக்கு தாதாவா இருக்கணும்ன்னு அவசியமில்லை. தேவையிருந்தா அப்படி ஆகறதுல தப்புமில்லை” என்றவளை ‘என்ன திமிரு இவளுக்கு, எதுக்கும் அசராம பதில் சொல்லுறா. இந்த திமிரும் அழகு தான்’ என்றவனின் பார்வை கணவனாய் அவளை கண்டு ரசித்தது இப்போது.

மெல்லினாவிற்கு விக்ரம் பற்றிய எண்ணமே அவன் கொடுத்த கேசை ஒரே நாளிலேயே அவள் கண்டுப்பிடித்திருந்தாள் அன்று.

——————-

மெல்லினா முதல் நாள் விக்ரமின் அலுவகலத்தில் இருந்து கொண்டு வந்திருந்த வீடியோ, சிசிடிவி புட்டேஜ் மற்றும் ஊழியர்கள் தகவல்கள் என்று அனைத்தும் முழுதாய் அலசி ஆராய்ந்து முடித்திருந்தாள். டெக்னிகல் டீமின் உதவியையும் நாடியிருந்தவள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

பின் கிளம்பி அவன் அலுவலகத்திற்கும் வந்திருந்தாள். இந்த முறை விக்ரம் வாசலிலேயே காத்திருந்தான். “உங்களுக்காக தான் மேம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“நான் உங்களை வெயிட் பண்ண சொல்லலையே??” என்றாள்.

‘இவளுக்கு ஏன் இவ்வளவு கொழுப்பு’ என்று எண்ணிக்கொண்டவன் மேற்கொண்டு வாயை திறக்கவில்லை அவளிடம்.

“போன்ல ஒரு விஷயம் கேட்டேனே??”

“அப்பாவும் மாமாவும் பார்க்கணும்ன்னு சொன்னது தானே”

“உங்க பிரண்ட் அவரையும் பார்க்கணும்ன்னு சொல்லியிருந்தேன்”

“அவினாஷ் சைட் வொர்க் முடிச்சுட்டு இங்க தான் வந்திட்டு இருக்கான். அப்பாவும் மாமாவும் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா ஊருக்கு போயிருக்காங்க. போன்லையே சொன்னேனே??”

“அப்படியா??” என்று அவனை நம்பாது பார்த்தாள்.

“சரி வாங்க போகலாம்” என்று அவனோடு நடக்க இருவருமாய் அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர்.

“லோக்கல் ஸ்டேஷன்ல இருந்து வரச்சொல்லி இருக்கேன். அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி அவனை பார்த்தாள்.

‘என்ன’ என்பது போல அவனும் பார்க்க “இந்த ரூம்ல இருக்க இன்னொரு ரூமை கொஞ்சம் திறந்து காட்ட முடியுமா??”

“அப்… அப்படியெல்லாம் எதுவுமில்லையே??” என்றவனுக்கு ‘இவள் தெரிந்து கேட்கிறாளா இல்லை ஊகமா’ என்று தோன்றியது.

“ஓகே நானே பார்த்துக்கறேன்” என்றவள் சரியாய் சுவரோடு அலங்கார விளக்கை போல இருந்த அந்த குமிழை திருக அந்த கதவு திறந்துக் கொண்டது. திரும்பி பின்னால் நின்றிருந்தவனை பார்க்க அவன் முகம் சுருங்கியது.

“இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியணும்??” என்றாள் அதிகாரத் தோரணையாக.

“இதை கண்டுப்பிடிச்சிட்டா நீ பெரிய இவன்னு நினைப்பா??”

“மரியாதையா பேசலைன்னு வைய்யேன், உன் ரெண்டு கன்னமும் வீங்கிடும்”

“ஹேய் என்ன அடிப்பியா?? இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் அதை மனசுல வை. என்னைவிட உனக்கு பலம் அதிகமோ. உன்னை இங்க என்ன செஞ்சாலும் கேட்க ஒரு நாதியில்லை. நீ இங்க வரவேயில்லைன்னு கூட நான் சாதிப்பேன்”

“அச்சோ பாவமே நீ சொல்றதை எல்லாம் கேட்டா எனக்கு நடுங்குதே. என்னடா பொம்பளை தனியா வந்திருக்கான்னு பயம் காட்டப் பார்க்கறியா. தனியா வந்திருக்கேன்னா துணிஞ்சு வந்திருக்கேன்னு அர்த்தம்”

“தன் கையே தனக்குதவின்னு தெரிஞ்சு வந்திருக்கேன்னு அர்த்தம். பயம் அதை வைச்சுட்டு தானேடா ஒரு ஒரு பெண்ணையும் அழவைச்சு வேடிக்கை பார்க்கறீங்க நீங்கலாம். பயம் காட்டி பெண்களை பலவீனப்படுத்தலாம்ன்னு தானே இதெல்லாம் செய்யறீங்க”

“உன்னை மாதிரி ஆளுங்களால தான் பயங்கற வார்த்தையே நான் வெறுத்தேன். ஆரம்பத்துல நானும் பயந்து பயந்து வேலை பார்த்திருக்கேன். ஆனா ஒரு கட்டத்துல உன்னை போல ஆளுங்க பண்ணுற அநியாயத்தை பார்த்து அமைதியா போக என்னால முடியலை”

“என்னோட பலவீனம் தானே உங்களுக்கு ஆதாரமா இருக்கும். அதனால தான் நான் துணிஞ்சு நிற்கவே ஆரம்பிச்சேன். இப்போ பாரு என்னை பார்த்து ஒவ்வொருத்தனும் நடுங்குவான்”

“என்னது நடுங்குவானா?? என்ன சிரிப்பு காட்டுறியா?? அவன் நடுங்கல ஒதுங்கி போறான். உன் பின்னாடி உன்னை கண்டபடி பேசுவான்”

“என் பின்னாடி பேசுறதை பத்தி எனக்கென்ன கவலை. என் முன்னாடி ஒருத்தானலையும் பேச முடியலைல்ல. அது எனக்கு பெரிய வெற்றி தான். அது போதும் எனக்கு” என்றாள் அவள்.

“ரொம்ப கர்வப்பட்டுக்காத”

“ஆமா கர்வம் தான் அதுக்கென்ன இப்போ”

“அதெல்லாம் என்கிட்ட செல்லாது”

“சீக்கிரத்திலேயே உன்னை செல்லாக்காசாக்கி காட்டுறேன். வெயிட் பண்ணு”

“என்ன கிண்டலா??”

“எப்படிடா கண்டுப்பிடிச்சே??”

“ஹேய்”

“போதும் அடங்கு. நீ சொன்னதை தான் நானும் உனக்கு சொல்றேன், இங்க யாருமே இல்லை. உன்னை நான் அடிச்சா கூட ஒருத்தனாலையும் வந்து கேட்க முடியாது. முதல்ல உன்னாலேயே நான் அடிச்சேன்னு வெளிய போய் சொல்லிக்க முடியாது”

“நான் அப்படியெல்லாம் கிடையாது, என்னை அடிச்சா வெளிய இருக்க அத்தனை பேரும் உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க”

“நான் அடிச்சேங்கறதையே உன்னால வெளிய சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்க. நான் வேணா அடிக்கறேன் உன்னை போய் வெளிய சொல்லு. ஆமா என்னன்னு சொல்லுவே அதையும் சொல்லு. சரி விடு உன்னை அடிக்கிற கதையை அப்புறம் பார்ப்போம். இப்போ உன் கேஸ் கதைக்கு வருவோம்”

“உன்னோட பணம் காணாம போனது. உங்கப்பா உங்க மாமா ரெண்டு பேருமே ஊர்ல இல்லாதது எல்லாம் வைச்சு பார்க்கும் போது எனக்கு எங்கயோ இடிக்குது”

“அவங்க அப்படி இல்லை”

“உனக்கு உறவுக்காரங்க வேற எப்படி இருப்பாங்க”

“வேணாம்”

“நான் சொல்றதை சொல்லி முடிச்சிடறேன். டிஐஜிக்கு ஏற்கனவே சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவருக்கு எல்லாம் தெரியும். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?? இங்க சிந்தின ரத்தம் உன்னோட ரத்தம்”

“என்ன சொன்னே??”

“ஐ மீன் உங்கப்பாவோட ரத்தம்”

“எங்கப்பாவை யாரு என்ன செஞ்சிருப்பாங்க, பொய் சொல்றியா?? அவர் நல்லா தான் இருக்கார், காலையில கூட என்கிட்ட பேசினார்”

“அவர்க்கு ஏதோ ஆகிடுச்சுன்னு நான் சொல்லவே இல்லையே. நீ சொன்ன மாதிரி அவர் நல்லாவே இருக்கார். உன் மாமாவுக்கு தான் திடிர்ன்னு பணக்காரனா ஆகணும்ன்னு ஆசை வந்திருக்கு”

“பாவம் அவருக்கு இருக்கறதே ஒரே பொண்ணு. அதுவும் பலவருஷம் கழிச்சு பிறந்த பொண்ணு. கொஞ்சம் பெரிய பொண்ணா இருந்தாலும் உனக்கு கட்டிக் கொடுத்திருப்பார்”

“சின்ன பொண்ணா இருக்கு, அதோட எதிர்காலம் எல்லாம் அவர் கண்ணு முன்னாடி நின்னதுல இங்க இருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சுருட்ட ஆரம்பிச்சிருக்கார்”

“நோ வே”

“ரொம்பவும் உறுதியா சொல்லாதேன்னு அப்போவே உனக்கு சொன்னேன்ல. சரி நான் சொல்லி முடிச்சிடறேன். அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சுருட்டி எப்போ பெரியாளாகறதுன்னு ஒரு நினைப்பு வந்திடுச்சு”

“அப்போ தான் ஒரு நாள் உங்கப்பா மூலமா இந்த அறையில் இருக்க ரகசிய வழியை தெரிஞ்சுக்கிட்டார். உங்கப்பா வேணும்ன்னு அவர்கிட்ட சொல்லலை. தற்செயலா அவர் இந்த வழியில ஏதோ எடுக்கவோ வைக்கவோ போகும் போது பார்த்திட்டார்”

“அவரு உங்கப்பாக்கிட்ட அங்க என்ன இருக்குன்னு கேட்க ஐடி ரைடு வந்தா சில பைல்ஸ் மறைச்சு வைக்கறதுக்காக கட்டின ரூமுன்னு சொல்லியிருக்கார். உன் மாமாவோ எல்லாமே நம்மகிட்ட சொன்னாங்கல்ல இதை ஏன் சொல்லலைன்னு நினைச்சிருக்கார். அப்போ அங்க ஏதோ இருக்கு, கண்டுப்பிடிக்கணும்ன்னு திட்டம் போட்டார்”

“அந்த நேரத்துல தான் நீ மசாஜ் பண்ண கேரளா போனே”

“போன வாரம் ரெண்டு நாள் தானே நான் இல்லை”

“நீ ரெண்டு நாள் இல்லைல அதான் அவருக்கு வசதியாப் போச்சு. நீ மசாஜ் பண்ண போனியோ இல்லை…”

“நா… நான் ஆயுர்வேதிக் ட்ரீட்மெண்ட்க்கு போனேன்”

“சரி சரி நம்புறேன் நீ அப்படியே சொல்லிக்கோ. நீ அந்த பக்கம் போனே இந்த பக்கம் உன் மாமா உங்கப்பா இல்லாத நேரமா பார்த்து பிளான் பண்ணி கதவை திறக்க ட்ரை பண்ணி எப்படியோ திறந்திட்டார் போல”

“உங்கப்பா தற்செயலா ஆபீஸ் வர ரெண்டு பேருக்கும் தகராறு நடந்திருக்கு. அப்போ உன் மாமா கையில வைச்சிருந்த பேனா கத்தி உங்கப்பாவோட கையை கிழிச்சிடுச்சு”

“என்னமோ நேர்ல பார்த்த மாதிரி என்கிட்ட கதை சொல்லிட்டு இருக்கே. உன்னால கண்டுப்பிடிக்க முடியாதுன்னா என்கிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே. பெரிய இவ மாதிரி பேசிட்டு இங்க என்கிட்ட பூ சுத்துற??”

“நேர்ல பார்த்த மாதிரி சொல்லலை. போன்ல கேட்டதை தான் சொல்றேன், நீயே கேளு உங்கப்பனும் மாமனும் பேசினதை” என்றவள் அவள் போனில் இருந்த வீடியோவை ஓடவிட்டாள். அதை முழுதுமாய் கேட்டு முடித்தவனுக்கு நம்பவே முடியவில்லை. 

Advertisement