Advertisement

“மெல்லினா கிளம்பு போகலாம்”

“எங்கே??”

“துணிக்கடைக்கு”

“இப்போவே என்ன அவசரம்??”

“பொறுமையா நம்ம ரிஷப்சன் முடிஞ்சதும் டிரஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றியா??”

“இல்லைங்க அது வந்து”

“என்ன வந்து வான்னு தானே சொல்றேன். உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா??”

“ஹ்ம்ம்”

“அப்போ நீ போயிட்டு வந்ததும் கிளம்பலாமே??”

“இல்லைங்க நீங்களே போயிட்டு வந்திடுங்க”

“ஏதே நானா?? எனக்கென்ன தெரியும்”

“எனக்கு மட்டும் என்ன தெரியும்?? அம்மா செலக்ட் பண்றதை தான் நான் இதுவரை கட்டியிருக்கேன்”

“என்ன சொன்னே?? திரும்பச் சொல்லு” என்றான் அவளின் பேச்சைக்கேட்டு.

“நான் புடவையை சொன்னேன்” என்றாள் அவன் எதை மனதில் வைத்துக் கொண்டு கேட்கிறான் என்று அறிந்தவளாய்.

“ஹ்ம்ம் நம்பிட்டேன். சரி என்ன கலர்ல வேணும்ன்னாச்சும் சொல்லு”

“நான் என்ன கலர் கட்டினா நல்லாயிருக்கும்ன்னு நீங்களே பார்த்து வாங்குங்க. பார்க்கப் போறது நீங்க தானே” என்று அவள் சொல்லவும் “ஏன்டி என்னை இப்படி இம்சை பண்ணுறே”

“ஆபீஸ்ல உன்னைப் பார்த்தா எதுவும் தோணாது எப்பவும். இப்போ நீ பேசுறதை கேட்டா என்னென்னவோ பண்ணணும்ன்னு தோணுது” என்றவனின் பார்வை அவள் முகத்தை தாண்டி பயணிக்க நினைக்க அவன் கண்கள் கீழே இறங்க மறுத்தது அவள் அணிந்திருந்த உடை கண்டு.

“என்ன??”

“ஒண்ணும்மில்லை நான் வீட்டுக்கு போயிட்டு அம்மாவை கூட்டிட்டு கிளம்பறேன். நீ வேலை முடிஞ்சா எனக்கு ஒரு போன் பண்ணு ஓகேவா” என்றுவிட்டு கிளம்பினான்.

மெல்லினா வேலை முடித்து வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். வீட்டிற்கு வந்தால் அங்கு ஒருவரும் இல்லை, பிறகு தான் அவளுக்கு ஞாபகமே வந்தது ஆத்திரேயன் அவளை புடவை எடுக்க அழைத்தது.

உடனே அவனுக்கு போன் செய்ய ஒரே ரிங்கிலேயே எடுத்தவன் “மெல்லினா எங்கே இருக்கே??” என்றான்.

“நம்ம வீட்டில”

“நீ எதுக்கு அங்கே போனே. உன்கிட்ட சொன்னேன்ல வேலை முடிச்சுட்டு போன் பண்ணுன்னு”

“இல்லை ஏதோ ஞாபகத்துல வந்திட்டேன்”

“சரி பரவாயில்லை வண்டியை வீட்டில விட்டுட்டு நீ ஒரு ஆட்டோ பிடிச்சு வா”

“நான் யூனிபார்ம்ல இருக்கேன் நான் வரலை”

“மேடம் இப்போ நீங்க இங்க வர்றீங்க” என்றவன் எங்கு என்ற தகவலை சொல்லிவிட்டு போனை வைத்துவிட மெல்லினா வாசலிலேயே அமர்ந்துவிட்டாள்.

காலையில் இருந்து ஒரே அலைச்சல் அவளுக்கு. சூடாக ஒரு காபியோ டீயோ குடித்தால் தேவலாம் என்றிருந்தது. ஆத்திரேயன் வேறு ஆசையாய் அழைக்கிறான் அவனை மறுக்கவும் அவளால் முடியவில்லை.

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு பின் வீட்டில் இருந்து கிளம்பினாள். அவள் அந்த கடையில் சென்று இறங்கவும் ஆத்திரேயன் அவளுக்காய் வாயிலிலேயே காத்திருந்தான்.

“இங்கவே ஏன் நிக்கறீங்க??”

“உனக்காக தான் வெயிட் பண்ணுறேன். பொண்டாட்டி தான் புருஷனுக்காக காத்திருக்கணுமா புருஷன் காத்திருக்க மாட்டானா”

“அது சரி உங்களை பேசி ஜெயிக்க முடியுமா??”

“யாரு நான் பேசி உன்னை ஜெயிக்கறதா, என்னை வைச்சு காமெடி பண்ணாதம்மா…” என்றவனுடன் அவள் சேர்ந்து நடக்க “ஒரு நிமிஷம்” என்றவன் அந்த துணிக்கடைக்கு வெளியில் இருந்த காபி ஷாப்பிற்கு அவளை அழைத்துச் சென்றான்.

“சூடா ஒரு காபி” என்று கேட்டு வாங்கி வந்தவன் அதை அவள் கைகளில் கொடுக்க கண்களில் இரண்டும் கலங்கிப் போனது அவளுக்கு.

“என்னாச்சு காபி சூடா இருக்கா?? இன்னொரு கப் வாங்கிட்டு வரவா ஆத்திக்கலாமா??” என்று அவன் பதற “ஒண்ணுமில்லை” என்றவள் அவனை பார்த்துக் கொண்டே காபியை பருகினாள்.

“சைட் அடிக்கறியா என்னை??”

“இப்போ அடிச்சா தப்பில்லை” என்று அவள் சொல்ல அதை கேட்டவன் அவளை ஆழமான பார்வையுடன் நோக்கினான்.

அவள் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது காபி கப்பை கீழே வைத்து “போகலாமா”

“ஹ்ம்ம்”

“புடவை எடுத்தாச்சா??”

“நான் செலக்ட் பண்ணிட்டேன் நீ வந்து பார்த்ததும் பில் போட்டிருலாம். எனக்காக தான் வெயிட் பண்ணீங்களா நான் தான் சொன்னேன்ல நீங்களே வாங்கிடுங்கன்னு”

“அல்மோஸ்ட் ஓகே தான், இருந்தாலும் நீ பார்த்திடு. இன்னும் பர்சேஸ் முடியலை, அம்மா, தங்கச்சி, அண்ணி எல்லாம் செலக்ட் பண்ணி முடிக்கலை. ஏன் தான் இவங்க கூட வந்தோம்ன்னு பீல் பண்ண வைச்சுட்டாங்க. நீ கிரேட் எஸ்கேப் அப்பா பாவம் முழி பிதுங்கி உட்கார்ந்திருக்கார். அண்ணாவும் வரலை அவனும் எஸ்கேப்” 

“உங்களுக்கு டிரஸ் எடுத்தாச்சா??”

“ஹ்ம்ம் வந்து பாரு நீ பைனல் பண்ணிட்டா பில் பண்ணிடலாம். அத்தைக்கும், வெண்பாக்கும் கூட எடுத்து வைச்சிருக்கேன். நீ பார்த்து ஓகே பண்ணிடு. வெண்பா வீட்டில எல்லாருக்கும் எடுத்திருக்கேன்”

“எதுக்கு அதெல்லாம்”

“அவங்க எல்லாரும் நம்ம சொந்தம் தானே. நீ எடுத்துக் கொடுத்தாலும் நான் எடுத்துக் கொடுத்தாலும் ஒண்ணு தான் சரியா” என்று சொல்ல அவன் கரத்துடன் தன் கரத்தை பிணைத்துக் கொண்டாள்.

“அடியேய் நீ இன்னும் யூனிபார்ம் மாத்தலை”

“இருக்கட்டும் அதனாலென்ன??”

“உனக்குன்னு ஒரு கெத்து இருக்கு”

“அதனால”

“இதெல்லாம் வீட்டில போய் வைச்சுக்கலாம்”

“முடியாது உங்களை விடமாட்டேன்” என்றவள் இன்னும் அதிகமாய் இறுக்கினாள் அவள் பிடியை.

ஒருவழியாய் அவர்கள் அனைவருக்கும் உடை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப ஆத்திரேயன் அருகில் மெல்லினா அமர்ந்தாள்.

வாசவி வந்ததில் இருந்து அவளைத்தான் முறைத்துக் கொண்டிருந்தார். “ஏன்டி திலோ உங்க அண்ணி ஆபீஸ்ல இருந்து நேரா இந்த டிரஸோடவே கடைக்கு வந்திருக்கா. யாராச்சும் உங்க மருமக எங்கன்னு கேட்டா எப்படிடி காட்ட”

“ஏன்மா அண்ணியை காட்டுறதுக்கு என்ன?? அண்ணனுக்கு பொருத்தமா நல்லா தானே இருக்காங்க”

“ஆமா அவளும் அவ காக்கி ட்ரெஸ்ஸும். வெளிய போறோம்ன்னு வேற உடுப்பு மாத்திட்டு வர்றதுக்கு என்ன??”

“நீ வீட்டை பூட்டி சாவி கொண்டு வந்திட்டே அவங்க வீட்டுக்கு போயிட்டு தானே இங்க வந்திருக்காங்க. உனக்கு அவங்களை குறை சொல்லலைன்னா தூக்கம் வராதே” என்றாள் மகள்.

ஆத்திரேயனுக்கும் மெல்லினாவிற்கும் கூட அவர்களின் உரையாடல் காதி விழத்தான் செய்தது. மெல்லினா பெருமூச்சை வெளியேற்றினாள்.

“அத்தை நாளைக்கு வர்றாங்கன்னு சொன்னேல்ல. அவங்களை நேரா குவார்ட்டஸ் கூட்டிட்டு போய்டு”

“ஏன்?? எதுக்கு அங்கே போகணும்??” என்றார் பின்னில் அமர்ந்திருந்த அவன் அன்னை வாசவி.

“முதல் முதல்ல வர்றாங்க, அவங்க பொண்ணு வீட்டில தங்காம வேற எங்கயோ எதுக்கு தங்க வைக்கணும்”

“அம்மாசொன்னேன் நம்ம வீட்டிலையும் நாளைக்கு எல்லா சொந்தக்காரங்களும் வந்திடுவாங்க. வீடு முழுக்க ஆளுங்க இருப்பாங்க. அவங்களால இங்க ப்ரீயா அத்தனை நாளெல்லாம் இருக்க முடியாது. அதனால தான் நான் அவங்களை குவார்ட்டஸ் கூட்டிட்டு போகச்சொன்னேன்”

“அப்போ நம்ம வீட்டுக்கு வராமலே போய்டுவாங்களா”

“அதெப்படி வராம இருப்பாங்க, ரிஷப்சன் முடியவும் ஊர்ல இருந்து வர்ற ஆளுங்க எல்லாம் கிளம்பிடுவாங்க. அவங்களை மறுநாள் கூப்பிட்டு வீட்டில விருந்து வைச்சிடுங்க” என்று ஆத்திரேயன் முடிக்க வாசவி மகனை முறைத்திருந்தார்.

“எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் முடிவெடுக்கறீங்க. நான் சொன்னா கேட்கவா போறீங்க” என்று முணுமுணுத்தவாறே அந்த பேச்சை விடுத்தார் அவர்.

————-

அந்த நட்சத்திர ஹோட்டலின் ஹால் களைகட்டியிருந்தது. நீல நிறமும் வெள்ளை நிறமுமாய் ஆங்காங்கே பலூன்கள் நிறைந்திருக்க மேடையில் முழுக்க பூ அலங்காரம். ட்ரோன் கேமிரா தலைக்கு மீது பறந்துக் கொண்டிருந்தது விருந்தினர்களை படம்பிடிக்க.

மணமக்கள் தயாராகி அப்போது தான் வந்திறங்கினர் ஹோட்டலில். அந்த ஹோட்டலில் அவர்களுக்கு சிறப்பு கவனிப்பாய் சிவப்பு கம்பளம் விரித்திருக்க ஆத்திரேயன் தன் மனைவியின் கரம் பற்றி நடந்து வந்தான்.

ஆத்திரேயன் கருநீல நிற சூட்டும் அதே நிற கால்சட்டையும் அணிந்திருந்தான். அவனருகே மெல்லினா ஆகாய வண்ண நிறத்தில் புடவையுடுத்தி நின்றிருந்தாள்.

அன்று அவர்களின் திருமண வரவேற்பு. விருந்தினர்கள் கூட்டம் அந்த ஹாலையே நிறைத்திருந்தது. அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என வந்துக்கொண்டே இருந்தனர் ஒவ்வொருவராய்.

மணமக்கள் இருவருக்கும் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று ஏராளம் பேர் வந்தும் சென்றும் கொண்டிருந்தனர். மணமக்களை வாழ்த்தி பரிசுகளை கொடுத்து ஒவ்வொருவராய் நகர்ந்தனர்.

கூட்டம் குறைவதாகவேயில்லை போல நின்று நின்று இருவருக்கும் கால் வலி எடுத்தது தான் மிச்சம். அவர்கள் அமர இருக்கை இருந்த போதும் அமர்வதற்கு நேரமின்றி வாழ்த்து சொல்ல வந்தனர்.

அப்போது கூட்டத்தை மெல்ல விலக்கி ஒருவாறு உள்ளே நுழைந்தவன் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தான். ஆத்திரேயன் அவனைக் கண்டு புன்னகைக்க பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் அவனருகே வந்தான்.

“டேய் விக்ரம் என்னடா முழிக்கிறே?? சரியா தானேடா வந்திருக்க, ஏதோ வேற கல்யாண மண்டபத்துக்குள்ள நுழைஞ்ச பீல் கொடுக்கறே??”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ரெண்டு நாள் முன்னாடி ஒரு அதிர்ச்சி கொடுத்தே, உடனே ரிஷப்சன் இருக்கு வந்திருடான்னு அடுத்து சொல்றே”

“சாரிடா மச்சான் பத்திரிகை அடிக்க நேரமில்லை. எல்லாருக்கும் போன்ல தான் சொன்னேன். நேர்ல கூட போக முடியலை, என் வேலை தான் உனக்கே தெரியும்ல”

“நீ போன்ல சொன்னதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்கலை”

“அப்போ வேற எதுக்கு கோபம் உனக்கு”

“கோபம் எல்லாம் இல்லை சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன். அப்புறம் அறிமுகம் எல்லாம் செய்யறதில்லையா” என்று அவன் கேட்கவும் ஆத்திரேயன் மெல்லினாவை சங்கடமாய் பார்த்தான்.

“இவன் விக்ரம்”

“ஐ நோ இவர் விக்ரம் வேதாந்த். ஒரு கேஸ் விஷயமா டிஐஜி என்னை பார்க்க அனுப்பி இருந்தார்”

“சொல்லவே இல்லை” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான் ஆத்திரேயன்.

“இதுல சொல்ல என்ன இருக்கு. கேசை கண்டுப்பிடிச்சு கிளோஸ் பண்ணியாச்சு அவ்வளவு தான்”

“ஓ!!”

”மேடம் ரொம்ப பாஸ்ட்டா நானே எதிர்பார்க்கலை”

“ஹான்” என்ற ஆத்திரேயன் “கொஞ்சம் முன்னாடி அறிமுகம் செஞ்சு வைன்னு சொன்னே”

“அவங்களை ஒரு போலீசா எனக்கு தெரியும் உன்னோட மனைவி அவங்கன்னு எனக்கு தெரியாது. அதான் அப்படி கேட்டேன் ஆனாலும் உன் வைப் ரொம்ப போலீசா இருக்காங்க”

“ஆமா என்னாச்சுடா முகம் வீங்கின மாதிரி இருக்கு. மூக்குல வேற லேசா காயமா இருக்கு என்னாச்சுடா” என்றான் ஆத்திரேயன்.

‘எங்கே சொல்லு பார்ப்போம்??’ என்று விக்ரமை ஒரு பார்வை பார்த்தாள் மெல்லினா.

“அது வந்து ஒரு குரங்கு கீறிடுச்சுடா” என்றான் அவனும் இவளைப் பார்த்தவாறே.

“அப்படியா பார்த்தா குரங்கு கீறின மாதிரி இல்லையே. ஏதோ ஒரு சிங்கம் கீறின மாதிரியில்ல இருக்கு. ஜூல எதாச்சும் பெண் சிங்கத்துக்கிட்ட வம்பு எதுவும் பண்ணீங்களோ” என்று அவள் சொல்ல ஆத்திரேயன் மெல்லினாவை நோக்கினான். விக்ரமோ அவளை கொலைவெறியுடன் பார்த்தான்.

Advertisement