Advertisement

13

மெல்லினா அந்த இருபது மாடி கட்டிடத்தின் முன் காரில் வந்து இறங்கினாள். தன் கண்ணாடியை எடுத்து விழிகளுக்கு திரையிட்டுக்கொண்டவள் வண்டியில் இருந்து கம்பீரமாய் இறங்கினாள்.

விவி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயர் பலகையை பார்த்தவாறே அந்த கட்டிடத்தின் உள் நுழைந்தாள். ரிஷப்சன் பெண் அவளைக் கண்டதும் எழுந்து நின்றாள்.

“எஸ் மேம் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்” என்றாள் ஆங்கிலத்தில்.

“உங்க பேரென்ன??”

“மாலதி”

“அப்போ உங்களுக்கு தமிழ் தெரியும்”

“தெரியும் மேம்”

“அப்போ தமிழ்ல கேட்க மாட்டீங்களா என்ன உதவி வேணும்ன்னு”

“சாரி மேம்”

அவள் மீண்டும் ஆங்கிலத்திலேயே தொடர்வதைக் கண்டு மெல்லினா தலையை குலுக்கிக் கொண்டாள். “ஓகே நீங்க என்ன வேணா பேசிக்கோங்க. எனக்கு விக்ரமை பார்க்கணும்” என்றாள்.

“மேம் யூ மீன் அவர் ஸ்டாப் சி. விக்ரம் ரைட்”

“அப்போ உங்க எம்டி பேரு விக்ரம் இல்லையா??”

“மேம் அவர் எங்க எம்டி”

“சோ வாட்??”

“அவரை மினிஸ்டர் பார்க்க வந்தாலே விக்ரம் சார்ன்னு தான் சொல்வார்” என்று அப்பெண் சொன்னதைக் கேட்டு கடுப்பானவள் அவனை என்னைத்தேடி வரவைக்கிறேன் பார் என்று சொல்லிக் கொண்டவள் அப்பெண்ணிடம் அதை அப்படியே கூறவும் செய்தாள்.

“அவருக்கு சேவகம் பண்றவங்க அப்படி கூப்பிடலாம் நான் ஏன் அப்படி கூப்பிடணும். அவரை இப்போ வரச்சொல்லுங்க” என்றுவிட்டு எதிரில் இருந்த சோபாவில் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

விக்ரம் அவனறையில் இருந்துக்கொண்டு அவளைத் தான் பார்த்திருந்தான். “என்னவொரு ஆட்டிடியுட் இவளுக்கு. வந்த வேலை முடியட்டும் அப்புறம் வைச்சுக்கறேன் இவளுக்கு கச்சேரியை” என்று சொல்லிக் கொண்டவன் ரிஷப்சன் பெண் அழைக்கும் முன் அவளுக்கு அழைத்திருந்தான்.

“மாலதி”

“எஸ் சார்”

“ஆஸ்க் ஹர் டு கம்”

“ஷ்யூர் சார் ஐ வில் இன்பார்ம் ஹர் சார்” என்றுவிட்டு போனை வைத்தாள்.

“மேம் சார் உங்களை அவரோட ரூம்க்கு வரச்சொன்னார்”

“அவரை இங்க வரச்சொல்லுங்க நான் போய் எல்லாம் அவரை பார்க்க முடியாது” என்று சட்டமாய் பின் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

சிசிடிவியின் வழியே நடப்பதை பார்த்திருந்தான் விக்ரம். மாலதி சொல்லியும் சோபாவைவிட்டு மெல்லினா நகரவில்லை. மாலதி வேகமாய் ரிஷப்சன் மேஜைக்கு வருவதையும் இன்டர்காமை எடுப்பதையும் பார்த்தான். இப்போது அவன் மேஜையில் இருந்த இன்டர்காம் ஒலியெழுப்பியது.

“எஸ் மாலதி”

“சார் அவங்களை நீங்க வந்து பார்க்கணுமாம்” என்றாள் விக்ரம் என்ன சொல்லப் போகிறானோ என்று பயத்தோடு.

“ஓகே ஐ வில் கம்” என்றவன் இருக்கையைவிட்டு எழுந்திருந்தான்.

“இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு உன்னை என்ன செய்யறேன் பாருடி” என்று கருவிக்கொண்டு அவன் கீழே இறங்கி வந்தான்.

“ஹலோ மெல்லினா”

“கால் மீ மேம்” என்றாள் முகத்திலடித்தது போல.

வரவேற்பறை பெண்ணின் முன்னேயே அவள் பேசிய விதம் அவனை கோபம் கொள்ளச் செய்தது. அமைதியானவன் பண்பானவன் கோபம் கொள்ளாதவன் என்று பெயரெடுத்தவனின் பிம்பத்தை அவள் சிறிது சிறிதாக தகர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

பல்லைக் கடித்தவன் “வாங்க மேம் மேலே தான் என்னோட ரூம்” என்றான்.

“மதன் முன்னாடி போங்க” என்று அவளுடன் வந்தவனிடம் சொல்ல “ஷ்யூர் மேம்” என்றவன் விக்ரமை பின் தொடர அவன் பின்னே சென்றாள் மெல்லினா.

லிப்ட்டில் அவர்கள் பயணிக்க “நீங்க உங்க ரூம்ல தானே ரத்தக்கறை இருந்ததா சொன்னீங்க??”

“ஆமா”

“அந்த ரூமைத் தான் நீங்க யூஸ் பண்றீங்களா??”

“இல்லை இப்போ நான் அப்பாவோட ரூம் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். லோக்கல் ஸ்டேஷன்ல இருந்து வந்தவங்க அந்த ரூம்ல எதையும் டச் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாங்க”

“குட்” என்று அவள் முடிக்கும் போது லிப்ட்டின் கதவு திறக்க விக்ரம் முன்னே சென்றான்.

“ஓகே நாம முதல்ல அங்க போய் பார்த்திடலாம்” என்றாள்.

“ஷ்யூர் மேம்” என்றவன் அவர்களை முதலில் அங்கு தான் அழைத்துச் சென்றான்.

அவனறைக்கு செல்ல ஆக்செஸ் செய்யவேண்டி இருந்தது. அவன் திறந்து உள்ளே செல்லவும் “இங்க எதுக்கு ஆக்செஸ் போட்டு வைச்சிருக்கீங்க??”

“இங்க தான் முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாம் வைப்போம். இதை நானு, அப்பா அப்புறம் கம்பெனியோட ஜிஎம், ப்ராஜெக்ட் ஹெட் மட்டும் தான் யூஸ் பண்ணுவோம்”

“அப்போ உங்க நாலு பேரோட ஆக்செஸ்ல யாரோ ஒருத்தர் தான் அதுக்கு காரணமா இருக்கணும்”

“இதுல இருக்க நாலு பேருமே இருக்க வாய்ப்பில்லை”

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க??”

“அப்பாவும் நானும் அடுத்தது ஜிஎம் அவர் என்னோட சொந்த தாய் மாமா, ப்ராஜெக்ட் ஹெட் அவினாஷ் என்னோட கிளோஸ் பிரண்ட்”

“சோ அவங்க செஞ்சிருக்க மாட்டாங்கன்னு நீங்க நினைக்கறீங்க சரியா”

“செய்யலைன்னு சொல்றேன்”

“பார்த்து ஓவர் கான்பிடன்ட்டா இருக்கப் போகுது” என்றாள்.

“நோ வே நான் ரொம்ப டீப்பா செக் பண்ணிட்டேன் எல்லாமே”

“ஓகே லீவ் இட்” என்றவள் “அன்னைக்கு நைட் யாரெல்லாம் ஆக்செஸ் பண்ணாங்கன்னு பார்த்தீங்களா??”

விக்ரம் இல்லையென்பதாய் தலையசைத்தான். “ஏன்?? ஏன் பார்க்கலை?? அவ்வளவு உறுதியா பேசுற நீங்க இதை ஏன் செக் பண்ணலை”

“இல்லை நைட் நான் தான் அவசர வேலையா கிளம்பினேன். கடைசியா ஆபீஸ்ல இருந்ததும் நான் தான். நைட் டோர் கிளோஸ் பண்ணிட்டு போனவன் காலையில வந்து பார்த்தேன்”

“இடையில யாரும் வர்றதுக்கு வாய்ப்பில்லை அதனால தான் நான் எதையும் யோசிக்கலை”

“அப்போ இந்த ரூமுக்கு வர்றதுக்கு வேற எதுவும் வழி இருக்கா??” என்று அவள் சொல்லவும் விக்ரமின் கண்கள் சுருங்கியது. அவன் இந்தக் கோணத்தில் யோசித்திருக்கவில்லை.

யாரும் அறியா ரகசிய வழியொன்று அவன் அறையில் உள்ளதை அறிந்தவர் அவன், அவன் தந்தை மற்றும் அதை கட்டியவர். கட்டியவருக்கு கூட வழி மட்டுமே தெரியும் அறைக்கு வாயில் வைத்தது வேறொருவர்.

“என்ன பேசாம இருக்கீங்க??”

“ஒண்ணுமில்லை”

“ஓகே அன்னைக்கு நைட் வேற யாராச்சும் டோர் ஆக்செஸ் பண்ணியிருக்காங்களான்னு பாருங்க” என்று அவள் சொல்லவும் அவன் அருகிருந்த மற்றொரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

அதில் அந்த அறையை ஆக்செஸ் செய்திருப்பதற்கான அறிகுறி எதுவும் கிடைக்கவில்லை. விக்ரம் சொன்னது போல இரவில் பத்தரை மணி போல அவன் தான் கிளம்பியிருந்தான். காலையிலும் அவன் தான் ஆக்செஸ் செய்திருந்தான்.

“ஹ்ம்ம் நோ க்ளு, ஓகே எனக்கு அந்த ரூமை மறுபடியும் பார்க்கணும்” என்று அவள் சொல்ல அவளால் கண்டுப்பிடிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு விக்ரம் அவளை மீண்டும் அவ்வறைக்கு அழைத்துச் சென்றான்.

அவள் அந்த அறையின் அமைப்பை முழுதும் பார்த்து முடித்தவள் “ரத்தக்கறை இருந்த இடம்??” என்று கேட்க “இதோ??” என்று காண்பித்தான் விக்ரம்.

“மதன்” என்று இவள் குரல் கொடுக்க “எஸ் மேம்” என்ற மதன் அவ்விடத்தை தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

“மதன் இந்த ரூம் முழுக்க கம்பிளீட்டா வீடியோ ஷூட் பண்ணுங்க”

“எதுக்கு??”

“கேஸ் எங்ககிட்ட எதுக்கு கொடுத்தீங்க?? கண்டுப்பிடிக்கத்தானே?? அப்போ எங்களை வேலையை செய்ய விடுங்க” என்றுவிட்டு அவள் மதனை அர்த்தத்தோடு பார்க்க அவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

“ஓகே நாங்க கிளம்பறோம்” என்று அவள் மதனுடன் கிளம்ப “எப்போ மேம் கண்டுப்பிடிப்பீங்க??”

“நாளைக்கு??” என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப “என்ன கிண்டலா??”

“மதன்”

“மேடம்”

“அந்தாளுக்கிட்ட சொல்லுங்க” என்றுவிட்டு அவள் விறுவிறுவென்று முன்னே சென்றுவிட்டாள்.

“என்னய்யா அந்த பொம்பளை ரொம்ப பேசுது” என்று இவன் கொதித்தான்.

“சார் மேம் சொன்னா செஞ்சிடுவாங்க. நாளைக்கே யாரு என்னன்னு உங்களுக்கு விபரம் சொல்லிடுவாங்க சார். நீங்க உங்க ஆபீஸ் ஸ்டாப் எல்லாரோட டீடைல்ஸ் மெயில் அனுப்பிடுங்க”

“எந்த ஐடிக்கு அனுப்பணும்??”

“உங்க நம்பர் சொல்லுங்க சார், வாட்ஸ் அப் பண்ணிடறேன்” என்றவன் அவன் எண்ணை குறித்துக்கொண்டு உடனே மெயில் ஐடியை அனுப்பிவிட்டான்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும் விக்ரம் அவ்வறைக்குள் மீண்டும் நுழைந்தான். அந்த ரகசிய வழியின் கதவைத் திறந்து பார்க்க அதன் சாவித்துவாரம் உடைப்பட்டிருந்ததை அப்போதுத் தான் கவனித்தான்.

அவனறையில் இருந்து அவ்வறைக்கு செல்ல சாவி கொண்டும் திறக்கலாம் அல்லது கைப்பிடியின் குமிழை திருகியும் திறக்கலாம். ஆனால் அந்த புறம் இருப்பவர்கள் சாவியை மட்டுமே கொண்டு திறக்க முடியும். அவன் யோசனையோடு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான். எத்தனுக்கு எத்தன் உலகத்தில் இருக்கத்தானே செய்வான். 

அதை மறந்தவனாய் என்னையே ஒருத்தன் ஏமாத்திட்டான் என்ற கோபமும் ஆத்திரமும் போட்டியிட முகம் சிவக்க அடுத்த என்ன என்ற யோசனையில் ஆழ்ந்தான் அவன். இதை கண்டுப்பிடிக்க ஒரு பொம்பளையை போய் வரவைச்சிட்டோமே என்ற எண்ணமும் வேறு அவனை எரிச்சல் கொள்ளச் செய்தது.

—————–

Advertisement