Advertisement

“சொல்லுங்க அமைதியாகிட்டீங்க??”

“நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??” என்றான்.

“உங்களை குற்றம் சொல்றதுக்காக இதை நான் சொல்லலை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது”

“இங்க அப்படியா நடக்குது. சட்டத்தை காப்பாத்த வேண்டியவங்களே அதை செய்ய வேண்டியதா இருக்கு தானே. சோ நல்லதுக்காக தப்பு பண்ணலாம் அது தப்பில்லை. அதனால நன்மைன்னா அதை செய்யலாம்”

“மெல்லினா நீ இவ்வளவு பேசுவேன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியுது” என்றவன் கண்ணாடியின் வழியே அவளை பார்த்திருந்தான் இன்னும் ஆழமாய்.

ஒருவாறு அலுவலகம் வந்துவிட இருவருமே இறங்கினர். அவள் திரும்பிக்கூட பார்க்காது முன்னே சென்றுவிட்டாள். ஒரு பெருமூச்சுடன் ஆத்திரேயன் தன் வேலைகளை கவனிக்கச் சென்றான்.

————–

“ஆதி எங்கே??”

“மேலே இருக்கார் அத்தை”

“வரச்சொல்லு அவனை பேசணும்” என்றார் வாசவி.

“என்ன பேசப் போறே வாசவி??”

“ஏன் உங்களுக்கு தெரியாதா??” என்றார் பதில் சொல்லாது எதிர்கேள்வியுடன்.

மெல்லினா ஆத்திரேயனை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள். “என்னம்மா பேசணும்ன்னு சொன்னீங்களாம்??”

“ஆமா” என்றவர் “நீயும் உட்காரு” என்று மெல்லினாவையும் பார்க்க அவள் ஆத்திரேயனின் அருகில் அமர்ந்தாள்.

“கல்யாணம் முடிஞ்சாச்சு”

“அதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா??”

“அடுத்ததை பார்க்க வேண்டாமா??”

‘என்னது மறுபடியும் நமக்கு பர்ஸ்ட் நைட் அரேன்ஜ் பண்ணப் போறாங்களா என்ன’ என்று யோசித்த ஆத்திரேயன் ‘ச்சே இருக்காது ரெண்டு தடவையா வைப்பாங்க. இருந்தாலும் ஆதி உனக்கு பேராசைடா’ என்று சொல்லிக் கொண்டான்.

“என்னன்னு கேட்காம என்னடா யோசிச்சுட்டு இருக்கே??”

“என்னன்னு நீங்களே சொல்லுவீங்கன்னு தான்” என்று சமாளித்தான் அவன்.

“வர்ற சன்டே ரிஷப்சன் வைக்கலாம்ன்னு இருக்கேன்”


“எதுக்கு இப்போ ரிஷப்சன்??”

“நீ பண்ண அவசரத்துல ஊர்ல சிம்பிளா கல்யாணத்தை முடிச்சாச்சு. ஒரு சொந்தக்காரங்க வரமுடியலை, எல்லாம் என்ன என்னன்னு கேட்கறாங்க. உன் பையன் போலீஸ் அப்படிங்கறதுக்காக சீர்த்திருத்த கல்யாணம் முடிச்சிட்டியா அப்படி இப்படின்னு கேட்கறாங்க”

“அவங்களுக்காக எல்லாம் நாம இதெல்லாம் பண்ண முடியாது”

“ஆதி நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களை இவளுக்கு தெரியுமா. இல்லை அவளோட சொந்தத்தை உனக்கு தான் தெரியுமா, எல்லார்க்கும் எல்லாரும் வேணும். நீ உன் இஷ்டத்துக்கு பேசாதே”

“இந்த வாரம் ரிஷப்சன் கன்பார்ம் நீங்க யாருக்கெல்லாம் சொல்லணுமோ சொல்லிக்கோங்க. ஏங்க நான் சொன்னது சரி தானே” என்று தன் கணவரை பார்த்தார் வாசவி.

“இன்னைக்கு தான் நீ கொஞ்சம் சரியா பேசியிருக்கன்னு நினைக்கிறேன்” என்றார் அவர்.

“என்னப்பா நீங்களும் அம்மா கூட சேர்ந்தாச்சா”

“ஆதி அம்மா சொன்ன விதம் முன்னப்பின்ன இருந்திருக்கலாம். ஆனா சொன்ன விஷயம் சரி தானே. உன் பிரண்ட்ஸ் எல்லாம் உங்க கல்யாணத்தை பார்த்திருக்க மாட்டாங்க எல்லாருக்கும் ஒரே இடத்துல அறிமுகம் செஞ்சுடலாம்”

“அதே போல மெல்லினாவோட பிரண்ட்ஸ் வருவாங்க ஒருத்தர்க்கொருத்தர் பார்த்துக்க பேசிக்கன்னு இது போல நல்லதுல தானே முடியும் ஆதி. எப்பவும் வேலை வேலைன்னு இருந்தா இந்த மாதிரி சந்தோஷ தருணம் எல்லாம் கிடைக்காம போய்டும்”

“என்னப்பா இன்னும் யோசனையா??” என்றார் அவர் தொடர்ந்து.

ஆத்திரேயன் திரும்பி மெல்லினாவை பார்த்தான் அவளுக்கு சம்மதமா என்று. அவளின் பார்வை எதையுமே வெளிப்படுத்தாது போக “மெல்லினா” என்றழைத்தான்.

“ஹ்ம்ம்”

“நீ என்ன சொல்றே??”

“ஏன் அவ சொல்றதுக்கு இதுல என்ன இருக்கு??” என்று இடையில் வந்தார் வாசவி.

“அம்மா…”

“வாசவி நீ பேசாம இரு”

“ஏன்?? ஏன் நான் பேசக்கூடாது?? அவனோட அம்மா நானு இத்தனை வருஷம் அவனோட நல்லது கெட்டது எல்லாம் பார்த்திருக்கேன். இப்போ மட்டும் என்ன அவனுக்கு கெட்டதா பண்றேன்”

“ஒரு நல்ல காரியம் தானே பண்றேன். அதுக்கு சரின்னு சொல்லாம நேத்து வந்தவ அவக்கிட்ட கேட்கிறான்” என்று புலம்பினார் அவர்.

“நீ மட்டும் நான் பேசினது சரியான்னு என்கிட்ட கேட்டே, அது போலத்தானே அவனும்”

“நானும் அவளும் ஒண்ணா. நமக்கு கல்யாணம் முடிஞ்சு முப்பத்தியெட்டு வருஷமாச்சு. இவனுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னம்மா மயக்கி வைச்சிருக்கா” என்று அவர் பேச மெல்லினா இருக்கையை விட்டு சட்டென்று எழுந்து நிற்க அதை எதிர்பாராத வாசவியின் வாய் சட்டென்று மூடிக் கொண்டது.

மெல்லினா ஒன்றும் பேசவில்லை அவரை ஒரு பார்வை பார்த்து சமையலறைக்குள் சென்று மறைந்தாள். ஆத்திரேயன் தான் இப்போது தன் அன்னையை முறைத்தான்.

“என்னை எதுக்குடா முறைக்கிறே?? உன் பொண்டாட்டியை எதாச்சும் சொன்னா உனக்கு உடனே பொத்துக்குமே” என்றார்.

“ஒரு ரிஷப்சன் வைக்க இவ்வளவு அக்கப்போரு” என்று பொருமினார் தொடர்ந்து.

ஆத்திரேயனும் எதுவும் சொல்லாது எழுந்து செல்ல “என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ எதுவும் சொல்லாம போறே. வர வர என் பேச்சுக்கு இங்க எந்த மதிப்பும் இல்லை. புள்ளையும் மதிக்கலை, மருமகளும் மதிக்கலை” என்றார்.

“அம்மா ரிஷப்சன் தானே நடத்துங்க. ஆனா அதுக்கு முக்கியமா யாரு இருக்கணும்”

“நீயும் அவளும் தான்”

“அப்போ நீங்க என்கிட்ட மட்டும் கேட்டா போதுமா. நான் மட்டும் ரிஷப்சனுக்கு வந்தா போதும்ன்னு நினைக்கறீங்களா” என்றான் நிறுத்தி நிதானமாய்.

“இதென்னடா வம்பா போச்சு ரெண்டு பேரும் தானே வரணும். நீ மட்டும் எப்படி வருவியாம்??”

“அப்படின்னா ஒண்ணு செய்ங்க நீங்களே அவகிட்ட போய் பேசுங்க. ரிஷப்சனுக்கு அவளுக்கு சம்மதமான்னு கேளுங்க, அவளுக்கு சரின்னா தான் ரிஷப்சன் இல்லைன்னா இல்லை” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.

“இவன் என்னங்க இப்படி பேசிட்டு போறான். நான் போய் அவ கால்ல விழணுமா” என்றார் அவர் அப்போதும் விடாது. ஏனோ அவருக்கு மெல்லினாவை பார்த்தாலே அவள் கோவில் வாசலில் ஒருவனை அடித்ததுமே மட்டுமே நினைவிற்கு வருகிறது.

அவரும் இயல்பாய் நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் எங்கே அவள் தலைக்கு மேலே ஏறிவிடுவாளோ என்ற பயம் அவருக்கு எப்போதும். சாதாரணமாகவே மாமியார் மருமகள் உறவென்பது தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாது இருக்கும்.

இதில் மெல்லினா காவல்துறையில் இருந்ததால் அவள் திமிராக இருப்பாள் அவளை அடக்கி வைக்கிறேன் பேர்வழி என்று அவர் வாய் கொடுத்தது தான் மிச்சம். மெல்லினா வாயே திறக்காது சாதித்ததை அவர் வாய் பேசி சாதிக்க முடியவில்லை.

“என்னங்க இப்போ என்ன செய்ய??” என்று தன் கணவரை பாவமாய் பார்த்தார் வாசவி.

“வெண்ணை திரண்டு வரும் போது நீ தானே தாழியை உடைச்சே. நீயே பார்த்துக்கோ” என்று அவரும் நகர்ந்துவிட்டார்.

வாசவி வேறு தன் சொந்தங்களுக்கு எல்லாம் போனில் தகவல் சொல்ல ஆரம்பித்திருந்தார் தன் மகன் ஒத்துக்கொள்வான் என்ற எண்ணத்தில். இப்போது இல்லையென்றால் அவமானமாகிப் போகும் என்ற எண்ணம் அவரை மெல்லினாவை நோக்கிச் செல்ல வைத்தது.

அவள் சமையல் அறையில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். “இங்க என்ன பண்றே??” என்றார் அப்போதும் அதிகாரமாய்.

“குளிக்கறதுக்கு இது ஒண்ணும் பாத்ரூம் இல்லை சமையலறை. அதான் சமைக்க வந்தேன்” என்று அவளும் துடுக்காய் பதில் சொல்லிவிட வாசவியின் முகம் கருத்தது அவளின் அந்த பதிலில். 

“சன்டே ரிஷப்சன் நீ தான் அவன்கிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும். உங்கம்மாவுக்கும் கூட சொல்லிட்டேன் அவங்க வெள்ளிக்கிழமையே இங்க வந்திடுவாங்க” என்ற வாசவி இப்போதும் கூட அவளிடத்தில் தகவல் மட்டுமே சொன்னார்.

அவர் ஆரம்பித்த போது அவளுக்கு கோபமே எழுந்தது. இப்போ கூட நம்மகிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு இவங்களுக்கு தோணலையே என்று. வாசவியின் பேச்சின் முடிவில் சொன்ன தகவல் அவளை மனதில் குளிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.

இத்தனை வருடமாக அவள் தனியாக இருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் வேலை மட்டுமே அவளை இருக்கச் செய்திருந்தது. நேரம் கிடைக்கும் போது சென்று தன் அம்மாவை பார்த்து வருவாள்.

ஆனால் இப்போதோ திருமணம் ஆன தினத்தில் இருந்து இன்று வரை அவள் அவரை நினைக்காத நாளில்லை. அவர் அருகே இருக்க வேண்டும் அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் எழுந்தது அவளுக்கு. 

அது பெண்களுக்கு இயற்கையாகவே எழும் போலும். அவளுக்கும் அவள் அன்னை மடி தேடியது. எத்தனையோ முறை மகேஸ்வரி தானும் அவளுக்கு துணையாக குவார்ட்டஸில் தங்கிக்கொள்வதாக கூறிய போதெல்லாம் மறுத்திருக்கிறாள்.

அது அவரின் பாதுகாப்பு கருதி மட்டுமல்லாது. மகேஸ்வரின் ஆழ்மன விருப்பத்தை அவள் அறிந்ததினாலும் தான். தன் கணவர் வாழ்ந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம்.

மக்களுக்காகவும் அவர்களின் நலன் கருதியும் அவர்களுடனும் இருப்பதையும் தாய் மனம் விரும்பியது. இரண்டு மனநிலைக்கும் சிக்கித் தவித்தவரின் எண்ணம் புரிந்தவளாய் மெல்லினா அவர் தன்னுடன் வந்து இருக்கிறேன் என்று சொன்னதை வேண்டாமென்றிருந்தாள் அப்போது. அவரை தன்னுடனே இருக்கச் சொல்லி இருக்கலாம் என்று இப்போது தோன்றியது.

மெல்லினா தீவிர யோசனையில் இருக்க ஆத்திரேயன் அவளின் கைபேசியோடு வந்தான். “மெல்லினா அத்தை போன் பண்ணியிருக்காங்க போல, பேசு” என்று அவளிடத்தில் கொடுத்தான்.

“நீங்க என்னம்மா இங்க நிக்கறீங்க??” என்று அன்னையை கேட்கவும் அவன் தவறவில்லை.

“எல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டேன். அவங்கம்மா இந்த வெள்ளிக்கிழமை வந்திடுவாங்க” என்ற வாசவி “மெல்லினா நீ போய் உங்கம்மாகிட்ட பேசு, சமையலை நான் பார்த்துக்கறேன்” என்று சொல்ல அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

மெல்லினாவின் பலவீனத்தை நன்கு அறிந்துக் கொண்டிருந்தார் வாசவி. எங்கு அடித்தால் என்ன நடக்கும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தார் அவர். அதை மிகச்சரியாக பயன்படுத்தினார்.

“என்னம்மா சொல்றீங்க அவங்கம்மாவை வரச்சொன்னீங்களா எதுக்கு??”

“எல்லாம் மெல்லினாகிட்ட கேட்டுக்கோ” என்றுவிட்டு அவர் திரும்பிக் கொண்டார். ஆத்திரேயன் மெல்லினாவின் பின்னே செல்ல அவள் அன்னையிடம் பேசி வைத்திருந்தாள். முகமும் மலர்ந்திருந்தது.

“மெல்லினா அத்தை எதுக்கு போன் பண்ணியிருந்தாங்க??”

“வெள்ளிக்கிழமை இங்க வர்றாங்களாம். அத்தை ரிஷப்சன் பத்தி சொன்னாங்களாம்”

“இந்தம்மாவை என்ன பண்ணுறது. நம்மளை கேட்கவேயில்லை அதுக்குள்ள அத்தைக்கிட்ட வேற சொல்லி வைச்சிருக்காங்க. அவங்க நம்மளைப்பத்தி என்ன நினைப்பாங்க” என்றான் கோபமாய்.

“அம்மா…” என்று அவன் குரல் கொடுக்கவும் மெல்லினா அவன் கரம்ப்பற்றி அழுத்தினாள். “விடுங்க நடக்கறது நடக்கட்டும்”

“உனக்கு ஓகேவா”

“ஹ்ம்ம்”

“நிஜமா??”

“நிஜமா ஓகே தான். எ… எனக்கு” என்று நிறுத்திவிட்டாள்.

“எதுவா இருந்தாலும் சொல்லு??”

“அம்மாவை நாளைக்கே கிளம்பச் சொல்லவா??”

“அதுக்கெல்லாம் என்கிட்ட கேட்கணுமா??”

“தேங்க்ஸ் அவங்களை குவார்ட்டஸ்ல தங்க வைக்கட்டுமா??”

“எதுக்கு??”

“இல்லை இங்க அவங்களால ப்ரீயா இருக்க முடியாதுல, என்னாலையும் தான்”

“ஏன் அப்படி சொல்றே?? அத்தை வந்தா நீ அவங்க கூடவே இரு. அவங்க ஊருக்கு போனதும் நம்ம ரூமுக்கு வா”

“நான் அதுக்கெல்லாம் சொல்லலை. ப்ளீஸ்…” என்று அவள் கேட்க அவன் புரியாது பார்த்தான். 

புகுந்த வீட்டில் இருந்துக்கொண்டு தாயிடம் செல்லம் கொஞ்ச அவளாலும் முடியாது, அவள் தாயாலும் மகளை கொஞ்ச முடியாது என்று அவனுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை, அவனுக்கும் புரியவில்லை.

Advertisement