Advertisement

12

“ஏதே ஷூட் மீயா?? என்னடா சொல்றே?? நான் கன் லோட் வேற பண்ணலையேடா??” என்று சொல்ல “மரமண்டை மரமண்டை ஷூட் மீன்னு சொன்னா கன் எடுத்து ஷூட் பண்ணுவியா??”

“பின்ன இல்லையா, போலீஸ்க்காரன்கிட்ட ஷூட் மீன்னு சொன்னா அதானேடா செய்வான்”

“இந்த போனை பிடி நான் பேசறதை ஷூட் பண்ணு”

“அதான் மீடியா வீடியோ எடுக்கறாங்கல்ல நான் வேற எதுக்கு எடுக்கணும். அதெல்லாம் லைவ் போடுவாங்க வேணும்ன்னா யூடூப்ல டவுன்லோட் பண்ணிக்கலாம்”

“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ நான் சொல்றதை செய்” என்றுவிட்டு அவன் போனை எடுத்து இவனிடம் கொடுத்து பிரஸ் மீட் சென்றான்.

“ஹலோ எல்லாருக்கும் வணக்கம், இந்த பிரஸ் மீட் எதுக்குன்னு உங்களுக்கு முதல்ல சொல்லிடறேன்”

“அதான் எங்களுக்கே தெரியுமே சார். புதுசா எதாச்சும் சொல்லுங்க” என்று ஒருவர் முந்திரிக்கொட்டையாக பதில் சொல்ல “சார் உங்க பேரு என்ன??”

“ரஞ்சித்”

“ரஞ்சித் உங்களுக்கு சொல்லுவாரு இந்த பிரஸ் மீட் எதுக்காக என்னன்னு அவரையே கேளுங்க” என்றவனை பார்த்து விழி பிதுங்கினான் அந்த ரஞ்சித் என்ற செய்தியாளர்.

“சார் மீடியாவை கலாய்க்கறீங்களா??” என்றார் ஒரு பெண் நிருபர்.

“மீடியாவை கலாய்ச்சா மீடியா ஆளு கேட்பாங்கல்ல”

“கண்டிப்பா கேட்போம் சார்”

“அப்போ உங்க மீடியா ஆளு என்னை கலாய்ச்சார் அதை எங்க ஆளுங்க எல்லாரும் சேர்ந்து கேட்கலாமா… முதல்ல ஒண்ணை புரிஞ்சுக்கோங்க இங்க நாம பப்ளிக்கு வொர்க் பண்ண வந்திருக்கோம்”

“நம்ம ஒருத்தர்க்கொருத்தர் ஒத்துழைச்சா தான் நல்லது. நம்மளை நாமளே கிண்டல் அடிக்கறதுக்கு இங்க வரலை. ஓகே கம் டூ தி பாயின்ட், இந்த மீட் எதுக்காகன்னா தயாளன் சார் கேஸ் க்ளோஸ் ஆல்மோஸ்ட் முடிஞ்சதுன்னு சொல்றதுக்கு தான்”

“போலீஸ் மரணம் துப்பு கிடைக்கவில்லையான்னு கேட்டிருந்தீங்கல்ல. கேஸ் முடிஞ்சது குற்றவாளியை பிடிச்சாச்சு, அவரை கோர்ட்ல ஹேன்ட் ஓவர் பண்ணியாச்சு”

“எப்படி சார் பிடிச்சீங்க?? அது கொலை தான்னு எப்படி கண்டுப்பிடிச்சீங்க?? கொலைக்கான மோட்டிவ் என்ன?? கொலையாளி யாரு?? பேரென்ன?? எங்களுக்கு ஒரு தகவலும் கொடுக்கலையே, நேரா கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கீங்க அதுக்கு என்ன காரணம்??” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் எழுந்தது.

“பொறுங்க எல்லா கேள்விக்கும் ஒவ்வொண்ணாபதில் சொல்றேன். தயாளன் தங்கியிருந்த வீட்டு பக்கத்துல இருந்த சிசிடிவ் புட்டேஜ் எல்லாம் அலசி ஆராய்ஞ்சோம். அதுல தான் கொலையாளி பிடிபட்டான். மோட்டிவ் முன்விரோதம் தான்”

“முன்விரோதமா?? எப்படி சார்?? கொலையாளிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு??”

“தயாளன் சார் டீல் பண்ண கேஸ்ல கொலையாளிக்கும் அவருக்கும் பிரச்சனை இருந்திருக்கு. மதுரையில அவர் வேலை பார்த்திட்டு இருக்கும் போது அந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்திருக்கார்”

“அவன் அங்க ஒரு பிரபலமான ரவுடி. லோடுமேன் லோகுங்கறது அவனோட பேரு, கஞ்சா, பிரவுன் சுகர்ன்னு சப்பிளை பண்றவன், லாரி ஓட்டிட்டு இருந்தான் அங்க. லோடுக்கு போறேன்னு சொல்லிட்டு அவன் சரக்கை தான் கைமாத்தி இருக்கான்”

“எப்படி சார் இதெல்லாம் போலீஸ் கண்டுக்காமலா இருந்தாங்க. எப்படி அவன் அதெல்லாம் செஞ்சான்”

“அவன் ஏத்திட்டு போற லோடுல எதுவும் பிரச்சனை இருந்ததில்லை. அவன் ஒரே நாள்ல இதெல்லாம் செய்யலை, ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமா தான் இதெல்லாம் கொண்டு போயிருக்கான்”

“டூல் பாக்ஸ்ல வைச்சு கடத்தியிருக்கான். அவனை பிடிக்க தயாளன் தனிப்படை அமைச்சு கஷ்டப்பட்டு பிடிச்சுட்டாங்க. அவனை கோர்ட்ல ஒப்படைச்சு கேஸ் தீர்ப்பு கொடுக்கற அன்னைக்கு அவன் போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க பார்த்திருக்கான். தயாளன் அவனை கால்ல சுட்டுட்டார்”

“அப்படியே ஓடி தப்பிச்சு போனவனை திரும்பி பிடிக்க முடியலை. அவன் பேரை மாத்திட்டு ஊரையும் மாத்திட்டு நார்த் பக்கம் போய்ட்டான். இப்போ தான் தயாளனை பழிவாங்க மறுபடியும் வந்திருக்கான்”

“அவன் தப்பு செஞ்சான் அவர் தண்டனை வாங்கி கொடுத்திருக்கார். அதுக்காக அவன் அவரை கொலை பண்ணுவானா… சார் நம்பற மாதிரி சொல்லுங்க சார்”

“நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் நடந்ததை மாத்த முடியாது. அவன் ஒரு ரவுடி அவன்கிட்ட ஈவு இரக்கமெல்லாம் எதிர்பார்க்க முடியுமா சொல்லுங்க. அவரால அவனுக்கு கால் நடக்க முடியாம போய்டுச்சு. அவன் தான் கொலை செஞ்சான்னு உறுதியாகிடுச்சு”

“அவனே அதை ஒப்புக்கிட்டான். மீதி எல்லா விஷயமும் ஸ்டேட்மெண்ட்டா ஆபீஸ்ல கொடுக்கச் சொல்றேன், ஈவினிங் வந்து வாங்கிக்கோங்க”

“சார் அந்த லோகுவோட போட்டோ”

“அதெல்லாம் மீட்டிங் முடியவும் கொடுக்கச் சொல்றேன்” என்றான்.

அவர்கள் மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவனை குடைய தன்னால் இயன்ற பதிலை அவர்களுக்கு கொடுத்து ஒருவழியாய் மீட்டிங்கை முடித்தான்.

பின் நித்தேஷை நோக்கி வந்தான். “ஷூட் பண்ணிட்டியா??”

“நீ சொல்றதை அவங்க நம்பிட்டாங்களா??”

“எதுக்கு கேட்கறே??”

“நான் நம்பலை” என்றான் மற்றவன்.

“அதைப்பத்தி நாம மேற்கொண்டு எதுவும் பேச வேணாம்”

“நீ எதையும் காரணமில்லாம செய்ய மாட்டே, சரி அதை விடு. இந்தா உன் போன்” என்று நண்பனிடம் கொடுக்க “அப்படியே இன்னொரு ஹெல்ப் பண்றியா மச்சான்”

“என்ன மறுபடியும் ஷூட்டிங்கா??”

“இல்லை கொரியர் சர்வீஸ் பண்ணணும்”

“என்னது??”

“இதை என் பொண்டாட்டிகிட்ட கொடுக்கணும்”

“என்னைப் பார்த்தா எப்படிடா தெரியுது??” என்று சொல்லி நண்பனை முறைத்தான் நித்தேஷ்.

“காக்கை விடு தூது நீ கேள்வி பட்டதில்லை”

“என்னது காக்கையா?? எவ்வளவு வெள்ளையா இருக்கேன் காக்கான்னு சொல்லிட்டியேடா”

“சரி சரி ஆமை விடு தூது, நாரை விடு தூது, கொக்கு விடு தூதுல இது நித்தேஷ் விடு தூது ஓகே வா”

“ஷப்பா முடியலைடா உன்னோட, இப்போ என்ன இதை மெல்லினாகிட்ட கொடுக்கணும் அவ்வளவு தானே. நான் கொடுத்திறேன், மறுபடியும் எடுத்திட்டு வந்தெல்லாம் கொடுக்க முடியாது எனக்கு வேலை இருக்கு பார்த்துக்க”

“அதை என் பொண்டாட்டி கொண்டு வந்து என்கிட்ட கொடுத்திடுவா நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டான் ஆத்திரேயன்.

நித்தேஷ் மெல்லினாவைத் தேடிச் சென்றான். அவள் பிரஸ் மீட் முடியும் வரை அங்கு தான் நின்றிருந்தவள் முடிந்ததும் அறைக்குள் சென்று அடைந்தாள்.

“ஹாய் மெல்லினா” என்றவாறே உள்ளே நுழைந்தான் அவன்.

“உட்காருங்க” என்று அவனுக்கு இருக்கையை காட்டினாள் மற்றவள்.

நித்தேஷ் ஆத்திரேயனின் கைபேசியை அவளிடம் நீட்டினான். இதை எதுக்கு என்கிட்ட கொடுக்கறாரு என்று யோசித்துக் கொண்டே அவன் முகம் பார்த்தாள்.

“இதுல இருக்க வீடியோவை நீ பார்ப்பியாம்மா”

“என்ன??”

“சரிம்மா நான் கிளம்பறேன்” என்று எழுந்தான் அவன்.

“நீங்க ஏன் இதெல்லாம் கொண்டு வந்தீங்க. ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல நானே வந்திருப்பேனே”

“இது நண்பனுக்காக செய்யற ஒரு சின்ன உதவி”

“தேங்க்ஸ்”

“இட்ஸ் ஓகே” என்றவன் கிளம்பவும் அந்த வீடியோவை ஆன் செய்து முழுதுமாய் பார்த்து முடித்தவளின் முகத்தில் சொல்லொணாத திருப்தி வந்து அமர்ந்தது, கொஞ்சம் கோபமும் வந்திருந்தது.

அந்நேரம் சரியாய் ஆத்திரேயனின் கைப்பேசி ஒலியெழுப்ப அழைத்தது நித்தேஷ். ‘எடுக்கவா வேண்டாவா’என்று யோசித்துக்கொண்டே எடுத்து காதில் வைத்திருந்தாள்.

“லஞ்ச்க்கு வெளிய போறோம் கீழே வந்திடு. சேர்ந்து போய்டலாம்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஆத்திரேயன்.

மெல்லினா நேரம் பார்க்க மணி பன்னிரண்டரை என்றிருந்தது. வேலையை பார்ப்போம் என்று எண்ணி அவள் மேஜையில் இருந்த கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேரம் கடந்திருக்க மீண்டுமொரு அழைப்பு வரவும் இவள் எடுக்கும் வேளை அழைப்பு நின்றிருந்தது. நேரே கிளம்பி கீழே வரவும் ஆத்திரேயன் அவன் வண்டியின் அருகே நின்றிருந்தான்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, சரி வண்டியில ஏறு” என்று சொல்லவும் இவள் இருபுறமும் கால்களை போட்டுக் கொண்டு அமரவும் அவன் வண்டியை கிளப்பினான்.

“கட்டி பிடிச்சுட்டு வரமாட்டியா??”

“வீட்டுக்கு போனதும் வேணா செய்யறேன்”

“ஏன் வண்டி ஓட்டும் போது கட்டிப்பிடிச்சா ஆகாதா??”

“இப்படில்லாம் போனா போலீஸ் பிடிப்பாங்க தெரியாதா”

“அடியேய்” என்று இவன் பின்னால் திரும்பப் போக “வண்டியை ஒழுங்கா ஓட்டுங்க. நாமே ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ணக்கூடாது” என்று அவள் சொல்லவும் கண்ணாடியின் வழியே அவளை ஆழ்ந்து அவன் பார்த்தான்.

“தேவைப்பட்டா மட்டும் நல்லதுன்னா மட்டும் ரூல்ஸ் பிரேக் பண்ணலாம் தப்பில்லை” என்றாள் அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாய்.

அவன் ஒன்றும் பேசாது ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான். இருவர் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடும் இருக்கையை தேர்ந்துடுத்து அங்கு சென்றான். உணவை ஆர்டர் செய்துவிட்டு எதிரில் அமர்ந்திருந்தவளை நோக்கி கையை நீட்ட அவன் மொபைலை எடுத்து அதில் வைத்தாள்.

“பார்த்தியா??”

“ஹ்ம்ம்”

“அவங்களுக்கு எதுவும் ஆகலை. நல்லா தான் இருக்காங்க, போய் பார்த்து பேசிட்டு தான் வந்தேன். அவங்களை எதுவும் செய்யலை ஏன்னு தெரியுமா??” என்றான். பதிலாய் அவள் தலை தெரியாது என்பது போல் ஆடியது.

“அவர் நல்லவர் இல்லைங்கறதுக்காக மட்டும் தான். நீ இவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களை காப்பாத்த நினைக்கிற அளவுக்கு உனக்கு அவங்களுக்கும் என்ன இருக்கு. அதுக்கு தகுதியான ஆளா அவங்க” என்றான் சற்று முறைப்போடு.

“இங்க இதைப்பத்தி பேச வேண்டாமே??”

“பேசக்கூடாதுன்னு தான் இருந்தேன். அவங்க அதுக்கு தகுதியான ஆளா இருந்தா கண்டிப்பா பேசியிருக்க மாட்டேன்”

“ப்ளீஸ்” என்று அவள் சொல்லி முடிக்கவும் உணவு வரவும் சரியாக இருக்க இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசாது உணவருந்தினர்.

அவன் வண்டியிலேயே இருவரும் செல்ல ஆத்திரேயன் பேசாது வண்டியை ஓட்டினான். “தகுதிங்கறது என்ன??” என்றாள்.

கண்ணாடியின் வழியே அவளை பார்த்திருந்தான் ஆத்திரேயன் பதில் சொல்லாது. “சொல்லுங்க தகுதிங்கறது என்ன??”

“அவங்க ஒரு பிராஸ்டியூட்”

“சோ அவங்க அப்படி இருக்கறதால அவங்களை நான் காப்பாத்த கூடாதா”

“அதுக்கான அவசியமென்ன”

“பதிலை நான் ஒரு நாள் சொல்றேன். ஆனா அவங்க அந்த தொழில் செய்யறாங்க அப்படிங்கறதுக்காக அவங்களுக்கு தகுதி இல்லைன்னு இனி நீங்க சொல்லாதீங்க”

“நல்ல உத்தியோகத்துல தான் இருந்தார் அந்த தயாளன் ஆனா அவர் பண்ணதெல்லாம் வெளிய சொல்லக்கூடிய காரியமா. நம்ம டிபார்ட்மென்ட்ன்னு சொல்லி அவரோட இமேஜை நீங்க எல்லாரும் சேர்ந்து மூடி மறைச்சிட்டீங்க தானே”

“அப்புறம் எதுக்கு நீங்க நியாயம் பேசறீங்க தகுதியை பத்தி பேசறீங்க” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி நிதானமாய் தெளிவாய் பேசியவளை எதிர்த்து பேச முடியவில்லை அவனுக்கு. அவள் பேசியதில் அவனுக்கு கோபம் எழுந்தாலும் பதில் சொல்ல முடியாத நிலை தானே என்றிருந்தான்.

அவள் சொல்வது உண்மை தானே. கொலையாளி பற்றி தகவலை முழுதாய் தன் மேலதிகாரிக்கு தெரிவிக்காவிட்டாலும் தயாளனைப் பற்றி அவன் விசாரித்ததை முழுதுமாய் பகிர்ந்திருந்தான் அவன்.

ஒருவர் தப்பு செய்தாலும் ஒட்டு மொத்தமாய் அனைவரையுமே மக்கள் தவறாக எண்ணுவார்கள் என்ற ரீதியில் தான் தயாளனைப் பற்றி அதிகம் தகவல்கள் வெளியே பரவவிடவில்லை. ஆத்திரேயனுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும் அவன் தன் மேலதிகாரிக்கு கட்டுப்பட்டவனே.

சில விஷயத்தில் துணிந்து முடிவெடுப்பவன் தான். ஆனால் தன் துறை சார்ந்த கொலை, கொள்ளை இதுப்போன்ற ஒவ்வொன்றுக்கும் அவர்கள் சட்டென்று முடிவெடிக்க முடியாது எப்போதும். 

ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டும், சட்டம் ஒழுங்கே சரியில்லை என்ற பேச்சுகள் வரும் என்பதாலேயே கூடுதல் கவனமாயிருப்பார்.

Advertisement