Advertisement

மெல்லினாவின் முகம் அவன் பதிலை கேட்டு மாறியதை கவனித்துக் கொண்டு தானிருந்தான். “உன்னை மாதிரி முகத்திலடிச்சது போல எனக்கும் பேசத் தெரியும். ஆனா நான் அப்படி பேச விரும்பலை. நான் தயாளன் கேஸ் விஷயமா தான் போறேன்”

“திரும்பி வரும் போது இந்த கேஸ் முடிஞ்சிருக்கும். என்னோட உண்மையும் வரும்” என்று அவளை அழுத்தமாய் பார்த்து சொன்னவன் “போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

கீழே வந்து அன்னை தந்தையிடம் விடைபெற வாசவி ஆரம்பித்துவிட்டார். “நீ கீழே காபி போட வந்தியே அப்போவே ஏன் என்கிட்ட சொல்லலை. என் புள்ளை கிளம்பிட்டு வந்து என்கிட்ட சொல்றது இதான் முதல் முறை” என்று மெல்லினாவை பிடித்துக்கொண்டார்.

“ஆதி பொண்டாட்டி வந்ததும் நீ மாறிட்டடா??” என்றார்.

“ஆமாம்மா அப்பா, அண்ணன் வழியில நானும் மாறிட்டேன்” என்று அவருக்கு தகுந்தாற் போல் பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை தன் மனைவிடம் கண்களால் விடைபெற்றுக் கொண்டு கிளம்பியிருந்தான்.

—————

“எக்ஸ்க்யூஸ் மீ, இங்க மெல்லினாங்கறது” என்று யாரோ தன்னைப்பற்றி விசாரிப்பது காதில் விழ அவள் அறையில் இருந்தவாறே வெளிக் கதவை லேசாய் திறந்து பார்த்தாள். 

‘இவன் எதுக்கு இங்க வர்றான்’ என்று பார்த்தாள். அவன் வரும் முன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவள் அறைக்கதவு தட்டப்பட அவளுக்கு கீழே இருக்கும் அதிகாரி உள்ளே வந்தார். “சொல்லுங்க” என்றாள் நிமிர்ந்து.

“மேடம் உங்களை பார்க்க விக்ரம்ன்னு ஒருத்தர் வந்திருக்கார். டிஐஜி சார் தான் உங்களை பார்க்கச் சொன்னாராம்” என்று அவர் சொல்லி முடிக்கவும் அவளின் கைபேசி ஒலியெழுப்பியது.

“அவரை உள்ள அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு போனை அட்டென்ட் செய்தாள் அவள். அழைத்தது டிஐஜியே “சார் சொல்லுங்க சார்”

“மெல்லினா உங்களை பார்க்க விக்ரம்ன்னு ஒருத்தர் வருவாரு. எனக்கு ரொம்ப தெரிஞ்சவர், அவருக்கு நம்ம சப்போர்ட் தேவைப்படுது, ப்ளீஸ் ஹெல்ப் ஹிம். என்ன விஷயம்ன்னு அவரே சொல்வார்”

“வேற எதுவும் உதவி தேவைப்பட்டா நீங்க என்கிட்ட சொல்லுங்க. அந்த கேஸ்க்கு உங்களை ஐஓவா நான் அப்பாயிண்ட் பண்றேன்”

“ஷ்யூர் சார் நான் அவர்கிட்ட பேசிட்டு உங்ககிட்ட பேசறேன் சார்” என்று சொல்ல அவர் “தேங்க்ஸ்ம்மா” என்றுவிட்டு போனை வைத்துவிட்டார்.

“எக்ஸ்கியூஸ் மீ” என்று கதவை தட்டவும் “உள்ள வாங்க” என்றிருந்தாள்.

“ஐ யம் விக்ரம்” என்று அவன் கைக்கொடுக்க “ஹ்ம்ம் தெரியும் உட்காருங்க” என்றாள் அவனுக்கு கைக்கொடுக்காது.

‘ரொம்ப திமிரா இருப்பா போல’ என்று எண்ணிக்கொண்டவன் ‘எப்படியிருந்தா என்ன நமக்கு நம்ம வேலை ஆகணும்’ அது ஒன்றே குறியாய் அவன் வந்த வேலையை சொல்ல ஆரம்பித்தான்.

“எங்க ஆபீஸ்ல ஒரு மாசம் முன்னாடி ஒரு தெப்ட் நடந்திருச்சு. அதைப்பத்தி ஏற்கனவே அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்க்கு தகவல் சொல்லிட்டேன். கமிஷனர் ஆபீஸ்லயும் ஒரு கம்பிளைன்ட் கொடுத்திட்டேன்”

“அப்புறம் எதுக்காக என்னை பார்க்க வந்தீங்க??”

“மேடம் என்னை கொஞ்சம் முழுசா பேசவிடுறீங்களா” என்றான் அவன்.

“நான் என்ன பண்ணணும் அதை சொல்லுங்க முதல்ல” 

“எங்க ஆபீஸ்ல திருட்டு போன அன்னையில இருந்து ஒரு ஆளை காணோம் இப்போ வரை. நேத்து நைட் பூட்டிட்டு போன ஆபீஸ்ல என்னோட ரூம்ல ரத்தக்கறை இருக்கு. போலீஸ் கூப்பிட்டு அதை அப்போவே காமிச்சுட்டேன். அவங்களும் வந்து பார்த்திட்டு போய்ட்டாங்க”

“எங்க ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை. அதை கண்டுப்பிடிக்கணும் அதுக்கு தான் இங்க வந்து கம்பிளைன்ட் பண்ணேன். டிஐஜி உங்களை பார்க்கச் சொன்னார், நீங்க கிரைம் பிரான்ச்ல ஸ்பெஷலிஸ்ட்ன்னு” என்று சொல்லி முடித்தான்.

“உங்க சந்தேகம் என்ன??”

“எதுவும் மர்டர் நடந்திருக்குமா இல்லை வேற எதுவுமான்னு எனக்கு தெரியலை. அதுக்காக தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்”

“ரொம்ப தைரியம் தான்” என்றாள்.

“என்ன?? என்ன சொன்னீங்க??”

“ரொம்ப தைரியமா தான் ஸ்டெப் எடுத்து வைச்சிருக்கீங்கன்னு சொன்னேன்”

“போலீஸ்கிட்ட தானே போகணும்”

“ஹ்ம்ம் போகணும் தான், ஆமா நீங்க ரெண்டு வருஷம் முன்னாடி கேரளாவுல இருந்தீங்களா??” என்றதும் விக்ரமின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானதை கவனித்துக் கொண்டு தானிருந்தாள் மெல்லினா.

“ஹ்ம்ம் இருந்தேன் ஒரு ஆறு மாசம் அங்க இருந்தேன். ஆயுர்வேதிக் ட்ரீட்மெண்ட்க்கு போனேன்”

“ட்ரீட்மெண்ட்டா உங்களுக்கு என்ன ப்ராப்ளம்??”

“ப்ராப்ளம் எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை. பேக் பெயின் கொஞ்சம் உண்டு அதுக்காக வந்தேன். நீங்க என்னை பார்த்திருக்கீங்களா அங்க??”

“ஹ்ம்ம் செம்மஞ்சேரி பீச் ரிசார்ட்ல உங்களை பார்த்திருக்கேன். அங்க ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருந்தேன்” என்று சொல்லிவிட்டு அவனை தான் பார்த்திருந்தாள். அவன் முகத்தில் லேசாய் வியர்வை துளி அதை திருப்தியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். “அப்… அப்போ பார்த்தது இப்போ வரை ஞாபகம் வைச்சு இருக்கீங்களா??”

“ஹ்ம்ம் எனக்கு ஒருத்தர் முகத்தை ஒரு தரம் பார்த்தா மறக்கவே மறக்காது அவங்களை எங்கே எப்போ எந்த இடத்துல என்ன நேரத்துல என்ன விஷயமா பார்த்தேன்னு கூட என்னால சொல்ல முடியும்”

“நாம இதுக்கு முன்னாடி பேசியிருக்கோமா??”

“இல்லை” என்றவள் ‘அப்போவே நீ என்கிட்ட மாட்டியிருக்க வேண்டியது, என்னோட ட்ரான்ஸ்பர்னால நீ தப்பிச்சிட்டடா. அதான் இப்போ நீயே வசமா வந்து சிக்கியிருக்கியே. இனிமே வைக்குறேன் உனக்கு கச்சேரி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்னோட கேசை மட்டும் கொஞ்சம் பார்த்து சீக்கிரம் முடிச்சிடுங்க”

“ஹ்ம்ம் முடிக்க தானே நான் காத்திட்டு இருக்கேன்”

“என்ன?? என்ன சொன்னீங்க இப்போ??”

“அதுக்காக தானே டிஐஜி வரைக்கும் போய் சிபாரிசு பிடிச்சிருக்கீங்க. முடிக்காம விடுவேனா” என்றாள் ஒரு மாதிரிக்குரலில்.

தன்னை சுதாரித்துக் கொண்டவனுக்கு இவள் என்ன பெரிய இவளா. இவளால் என்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் தலைத்தூக்க “நீங்க பேசுற விதமே சரியில்லையே” என்றான் அவளிடம்.

“அப்படியா நீங்க வேணா பேசக் கத்துக்கொடுங்களேன்” என்றாள் திமிராய்.

‘ஒரு பொண்ணுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது’ என்று எண்ணியவன் “என்னவோ பண்ணுங்க என் வேலையை மட்டும் முடிங்க” என்றவன் தான் கொண்டு வந்திருந்ததை அவளிடம் நீட்டினான்.

“முடிச்சிடுவேன் சீக்கிரமே உங்க கேசை” என்று ஒவ்வொரு வார்த்தையாய் அழுத்தி உச்சரித்தாள்.

“தேங்க்ஸ்” என்றுவிட்டு வெளியேற போனவனை அவளின் குரல் தடுத்தது.

“இங்க இருந்து ஓடிடுவ, என்கிட்ட இருந்து உன்னால ரொம்ப நாளைக்கு ஓடமுடியாது. கெட் ரெடி பார் எவரிதிங்” என்று அவள் சொல்லவும் நின்று நிதானமாய் அவளை திரும்பி பார்த்தான்.

அவளின் அதிகாரப்பார்வை அவனை துளைத்தது. “அப்போ என்னைப்பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும்”

அவள் பதில் பேசவில்லை. அவளின் மௌனமே சொன்னது தெரியும் என்று. “என்ன பண்ணுவே??” என்றான் மரியாதைவிட்டு.

“பண்ணும்போது பாரு”

“யாராலையும் என்னை எதுவுமே செய்ய முடியாது, நீ…” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்க்க “என்ன திமிரா??” என்றாள் அவள்.

“என் பார்வையை உன்னால தடுக்க முடியாது என்ன பண்ணுவே இப்போ” என்றான் அவன் கொஞ்சமும் பயமில்லாது.

“உனக்கு பார்வையே இல்லாம பண்றேன் பார்க்கறியா?? அப்போ நீ யாரைப் பார்ப்பேன்னு பார்க்கறேன். இப்போ கிளம்பு சீக்கிரம் வர்றேன்”

“வா வா உன்னை மாதிரி திமிரான பட்சிகளுக்கு எப்பவும் இடம் உண்டு” என்று கோணலாய் சிரித்தவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.

—————-

ஆத்திரேயன் ஊருக்கு சென்று இரண்டு இரவுகள் ஒரு பகல் கழிந்திருந்தது. அவனுக்கு போன் செய்தால் பெரும்பாலும் அவன் அதை அட்டென்ட் செய்யவே இல்லை.

அவனாகவே ஒரு முறை இடையில் அழைத்து அவன் வந்துவிட்ட விபரம் மட்டும் உரைத்திருந்தான். காலையில் எழுந்த மெல்லினா எப்போதும் போல் வேலை முடித்து படியேற “நில்லு” என்ற வாசவியின் குரலில் நின்றாள். “ஆதி எப்போ வருவான்??” என்றார் அவர்.

“தெரியலை அத்தை”

“தெரியலைன்னா என்ன அர்த்தம் அவன் பொண்டாட்டி தானே நீ இதெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்க மாட்டியா… முன்ன மாதிரின்னா அவன் எனக்கு போன் பண்ணி சொல்லுவான். இப்போ என்னடான்னா நான் காலையில போன் பண்ணா நைட் போன் பண்ணி பதில் சொல்றான். அதான் பொண்டாட்டி பைத்தியம் பிடிச்சு சுத்துறானே உன்கிட்ட சொல்லாமயா இருப்பான்” என்றார் அவர்.

“இன்னைக்கு வந்திடுவேன்னு கிளம்புற அன்னைக்கு சொன்னார். கிளம்பிட்டாரான்னு எனக்கு தெரியலை”

“போன் பண்ணி கேட்டியா இல்லையா??”

“போன் பண்ணேன் எடுக்கலை”

“அதெப்படி எடுக்காம இருப்பான் நொடிக்கொரு போன் பண்ணி பேசிட்டு தானே இருக்கான்” என்று அவர் வம்பளத்தார்.

“சரி அப்படியே நினைச்சுக்கோங்க, எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகுது நான் கிளம்பறேன்” என்று அவர் பதிலை எதிர்பாராமல் மேலேறி சென்றுவிட்டாள்.

இவள் அலுவலகம் செல்லவும் ஆத்திரேயன் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. “என்ன ஆதி போன் பண்ணா எடுக்க மாட்டியா?? கிளம்பிட்டேன்னு கூட சொல்ல முடியாதா உனக்கு” என்றார் வாசவி வாசலில் நின்றுக்கொண்டே

“வாசவி அவன் உள்ள வரட்டும் நிதானமா கேளேன்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் அவரின் கணவர்.

“வழியை விடுங்கம்மா முதல்ல. ஏற்கனவே ரொம்ப லேட் நான் ஆபீஸ் கிளம்பணும்” என்ற ஆத்திரேயன் அவனறைக்கு சென்று குளித்து உடைமாற்றி சாப்பிட வந்தான்.

அவனே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட “புருஷனை கவனிக்காம கூட ஒருத்தி ஓடுறா. நீ எப்போ வருவேன்னு கேட்டா அவளுக்கு தெரியாதாம் என் காதுல பூ சுத்திட்டு போறா” என்று அவர் முணுமுணுக்க ஆத்திரேயன் பொறுமையிழந்தான்.

“அம்மா நான் எப்போ வருவேன்னு அவகிட்ட சொன்னா தானே உங்களுக்கு சொல்லுவா. சும்மா அவளை குறை சொல்றதைவிட்டு வேற வேலையை பாருங்க. மனுஷன் வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்குதா” என்று கத்திவிட்டு எழுந்துவிட்டான்.

————-

பிரஸ் மீட் அரேஜ் ஆகியிருந்தது, ஆத்திரேயன் வந்துவிட்டதா அவளுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தான். அதிலிருந்தே அவளுக்கு சற்று படபடப்பாய் இருந்தது. தகவலில் அவன் வெற்றி குறி வேறு போட்டிருக்க என்னாகியிருக்கும் என்ற பதைப்பு.

காலையில் இருந்து அவள் ஒருவருக்கு போன் செய்ய ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. அது வேற மனதை குடைய கீழே என்ன நடக்கிறது என்று மேலிருந்து பார்த்தாள். ஆத்திரேயன் கையில் போனை எடுத்து நித்தேஷுக்கு அழைத்தான். “சொல்லுடா”

“நான் ஆபீசர்”

“அப்படியா ஆபீசர் சொல்லுங்க ஆபிசர்” என்றான் அவன் கிண்டலாய்.

“கொஞ்சம் கீழ வா”

“எனக்கு நெறைய வேலை இருக்கு ஆபிசர்”

“எருமை வாடா கீழே”

“நான் இப்போ ஆபிசர் அப்படியெல்லாம் பேசக்கூடாது”

“வரப்போறியா இல்லையா”

“நீ எப்போ எந்த மோட்ல இருக்கே. பிரண்டா ஆபிசரா”

“பிரண்டு தான்டா வாடா செகண்ட் அட்டெம்ப்ட்”

“அடேய் என்னடா இப்படி இறங்கிட்ட”

“நீ மட்டும் என்னை பர்ஸ்ட் அட்டெம்ப்ட்ன்னு அன்னைக்கு அவ்வளவு பேசினே”

“சரி சரி சொல்லு என்ன விஷயம். ஆமா நீ போன விஷயம்??”

“முடிஞ்சது பிரஸ் மீட் நடக்கப் போகுது சீக்கிரம் வா”

“டேய் எனக்கு நிறைய வேலை இருக்கு மச்சான்”

“என்ன வேலை??”

“நான் போதை தடுப்பு பிரிவு போலீஸ்டா”

“ஆமா உனக்கு டெய்லி நூறு கேசு வருது பாரு. ஆறு மாசம் முன்னாடி வந்த கேசையே இன்னும் வைச்சுட்டு ஓட்டிட்டு இருக்க இதுல வேலை அதிகம் இருக்காம் வாடா முதல்ல” என்றான் ஆத்திரேயன்.

‘ரொம்ப மானத்தை வாங்குறானே பேசாம போய்டுவோம்’ என்று யோசித்த நித்தேஷ் “வர்றேன் வை” என்றான். நித்தேஷ் வரவும் “எனக்கு ஒரு உதவி பண்ணுடா”

“சொல்லுடா”

“ஷூட் மீ” என்றான் ஆத்திரேயன்.

“ஏதே” என்று அதிர்ந்தான் நித்தேஷ்.

Advertisement