Advertisement

11

“மெல்லினா எங்கே இருக்க??”

“வெளிய இருக்கேங்க…”

“சாப்பிட்டியா??”

“சாப்பிட தான் வந்தேன்”

“நல்லது எங்கே போயிருக்க??”

“சங்கீதா வந்தேன், நான் அப்புறம் பேசறேன்” என்றவள் அவன் பதில் பேசும் முன்னே வைத்திருந்தாள்.

ஆத்திரேயனும் அன்று அங்கு தான் வந்திருந்தான் உணவருந்துவதற்காய். சுற்றி முற்றி அவன் பார்க்க மெல்லினா கடைசி டேபிளில் அமர்ந்திருந்தாள், உடன் மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.

அவளை தொந்திரவு செய்யாது ஆத்திரேயன் அவனிடத்திலேயே அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்க மெல்லினாவும் அவளுடன் இருந்தவர்களும் உணவருந்தி முடித்து கிளம்பியிருந்தனர்.

இவனை தாண்டிக்கொண்டு தான் அவர்கள் செல்ல வேண்டும். மெல்லினா தான் முதலில் வந்தவள் இவன் உணவருந்திக் கொண்டிருப்பதை பார்த்து “நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?? எப்போ வந்தீங்க சொல்லவே இல்லையே என்கிட்ட??” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“மூச்சு விடும்மா…” என்றவன் “நான் சொல்றதுக்குள்ள நீ போனை வைச்சுட்டே, பார்த்தா உன்கூட ஆளுங்க இருந்தாங்க. எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுவானேன்னு இங்கவே இருந்திட்டேன்”

“நாங்க கீழ இருக்கோம், நீங்க பே பண்ணிட்டு வாங்க பேசுவோம்” என்று சொல்ல அவன் தலையாட்டினான்.

மெல்லினா கீழே காரின் அருகே காத்திருக்க ஆத்திரேயன் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான். “இவர் என்னோட ஹஸ்பன்ட்” என்று அவளுடன் இருந்தவர்களுக்கு அறிமுகம் செய்ய அவர்கள் இவனை நோக்கி கைக்கூப்பினர்.

பதிலுக்கு இவனும் வணங்கினான். “இவங்க என்னோட வொர்க் பண்ண மோகனோட அம்மா, அப்பா, தம்பி”

“ஓ!!” என்றவன் “இவங்க மட்டும் வந்திருக்காங்க மோகன் வரலையா??” என்று அவன் யதார்த்தமாய் தான் கேட்டான். அங்கு நின்றிருந்த பெண்மணியின் கண்கள் கலங்கிப் போனது, மற்ற இருவரும் முகம் வாடி நின்றனர்.

“அவங்க இப்போ உயிரோட இல்லை”

“மன்னிச்சிடுங்க என்னாச்சு எதுவும் ஆக்சிடென்ட்டா??”

“சூசைட்”

“சூசைட்டா எதுக்காக??” என்று அவன் கேட்கவும் தான் மெல்லினா சுதாரித்தாள். மோகனின் அம்மாவை அவள் குறிப்பாய் பார்க்க அந்த பார்வை புரிந்தவராய் அவரே பதில் சொன்னார்.

“லவ் பெயிலியர் தம்பி”

“அதுக்கா சூசைட் பண்ணிக்கிட்டார், ச்சே பாவம்… நீங்க தைரியமா இருங்க. என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க” என்றான் ஆத்திரேயன்.

“மெல்லினா தான் எங்களுக்கு எல்லா உதவியும் பண்ணுது. ரொம்ப நல்ல பொண்ணு தம்பி” என்று அவளை புகழ அவளோ அவரை போதும் என்பது போல பார்க்கவும் வாயை மூடிக் கொண்டார் அவர்.

ஆத்திரேயன் அனைத்தையும் கவனிக்காதது போல கவனித்துக் கொண்டு தானிருந்தான். “சரி மெல்லினா நான் கிளம்பறேன், நீ எப்படி வர்றே??”

“நான் இவங்களோட கால் டாக்சில தான் வந்தேன். அவங்களை ஸ்டேஷன்ல விட்டு நான் அதே வண்டியில ஆபீஸ் வந்திடறேன்” என்றாள் அவள்.

“ஓகே நான் கிளம்பறேன். போயிட்டு வர்றேன்” என்று மற்றவர்களுக்கும் தலையசைத்தவன் அலுவலகம் கிளம்பியிருந்தான்.

அவன் அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாய் மெல்லினா வேலை பார்த்த அத்தனை ஸ்டேஷன் விவரங்களையும் சேகரித்திருந்தான். அங்கு அவளுடன் பணிபுரிந்தவர்கள் விபரம் எல்லாம் அதே டேட்டா பேசை வைத்தே எடுத்திருந்தான்.

மெல்லினாவை பிடிக்க ஆரம்பித்ததும் முன்பே அவள் வேலை பார்த்த விவரங்களை பார்த்திருந்தான். அப்போது மேம்போக்காய் பார்த்திருந்தவன் இப்போது ஒவ்வொன்றையும் அலசினான்.

அவளும் அவனும் எங்கு சந்தித்தார்கள் என்றும் அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது. மெல்லினா யாரை காப்பாற்ற நினைக்கிறாள் என்றும் அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.

தயாளனின் கேசை அவன் எடுத்த போது அவர் பணிபுரிந்த அத்தனை ஸ்டேஷன் பற்றிய தகவல்களும் அலசி ஆராய்ந்திருந்தான். மெல்லினாவை அப்போது பார்மாலிட்டியாக விசாரித்ததும் அவனுக்கு நினைவிருக்கிறது.

இடையில் கேசில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது உண்மையே. அந்த நேரத்தில் தான் மெல்லினாவிற்கும் அவனுக்குமான மோதலும் அதனைத் தொடர்ந்து அவனுக்கு மெல்லினாவின் மீது காதலும் வந்திருந்தது.

பின் தாமதம் செய்யாது உடனே திருமணம் என்று அதில் சற்று அவன் பிசியாகியிருக்க தயாளனின் கேசை அந்த ஏரியா எஸ்ஐ விசாரித்துக் கொண்டிருந்தார். புதிதாய் அவர் எந்த தகவலும் சேகரித்திருக்கவில்லை.

தாமதம் செய்ததின் விளைவு தான் ஐஜியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது. மெல்லினாவிடம் இன்னும் மூன்று நாளில் கண்டுப்பிடித்துவிடுவேன் என்று சொன்னவன் அதிதீவிரமாய் இறங்கிவிட்டிருந்தான் அதில்.

மோகன் பற்றிய தகவல்களை சேகரித்தவனுக்கு ஒரே நேரத்தில் மெல்லினா, தயாளன், மோகன் மூவருமே ஒரே இடத்தில் பணியில் இருந்தனர் என்ற தகவல் நெருடியது.

தவிர மோகனின் மறைவிற்கு பின் தயாளனின் மீது யாரோ புகார் கூறி பின்னர் அந்த புகாரில் உண்மையில்லை என்று நிராகரிப்பட்டிருந்ததும் அறிந்தான்.

அந்த புகாரை கொடுத்தது யார் என்ற விபரம் மட்டும் இன்னமும் அவனுக்கு வந்திருக்கவில்லை. அதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான். அது வந்ததும் அதன் காரணத்தை முழுதாய் ஆராய வேண்டும் என்பதை மட்டும் குறித்திருந்தான்.

மாலை நேரமாகவே வீட்டிற்கு கிளம்பியிருந்தான் ஆத்திரேயன். மெல்லினாவும் ஏதோ கேஸ் விஷயமாய் வெளியே சென்றிருந்தவள் அவனுக்கு முன்னமே வீட்டிற்கு வந்திருந்தாள்.

“என்ன ரெண்டு பேரும் இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்காங்க” என்றார் வாசவி தன் கணவரிடம்.

“அதுல உனக்கென்ன கஷ்டம்??” என்றார் அவர்.

“உங்ககிட்ட ஒண்ணு சொல்லிட முடியாது உடனே என்னையவே திருப்புங்க” என்று கணவரிடம் முகத்தை திருப்பிக் கொண்டார் அவர்.

ஆத்திரேயன் வீட்டிற்கு வந்த போது மெல்லினா குளியலறையில் இருந்தாள். அவள் குளித்து வரவும் ஆத்திரேயன் அவசரமாய் ஒரு பையில் துணிகளை எடுத்து வைப்பது தான் கண்ணில் விழுந்தது.

“என்னங்க சீக்கிரம் வந்திட்டீங்க இன்னைக்கு??”

“ஆமா மெல்லினா நான் ஊருக்கு கிளம்பறேன், அனேகமா நாளைக்கு மறுநாள் வந்திடுவேன்னு நினைக்கிறேன்”

“எதுவும் கேஸ் விஷயமாவா??”

“ஹ்ம்ம்” என்றவன் தன் வேலையில் கவனமாக மெல்லினா அவனையே உறுத்து விழித்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

அவன் வேலை முடித்து நிமிரவும் மெல்லினா அந்த இடத்தை விட்டு அசையாது இருப்பதை பார்த்தவன் “நான் போய் குளிச்சுட்டு வந்திடறேன். எனக்கு ஒரு காபி எடுத்திட்டு வர்றியா??” என்று அவளை திசைத்திருப்பி அனுப்பினான்.

அவளும் கீழே சென்றவள் அவனுக்கு காபி போட்டு எடுத்துவர “எங்களுக்கும் போட்டு தரலாமில்லை. அதென்ன புருஷனுக்கு மட்டும் போடுறது” என்று வாசவி பேச கொண்டு வந்த காபியோடு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“மெல்லினா எனக்கு காபி வேணாம்மா” என்றார் அவளின் மாமனார்.

“இருக்கட்டும் மாமா நான் போடுறேன் நீங்க குடிங்க. நான் ஏதோ யோசனையில போட மறந்திட்டேன்” என்றவள் அவர்களுக்கும் காபியை கலக்கி கொண்டு வந்து கொடுத்தாள்.

பின் படியேறி செல்ல அங்கு ஆத்திரேயன் குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி கண்ணாடியின் முன் தன் சிகையை வாரியவாறே நின்றிருந்தான்.

“காபி” என்று அவள் நீட்டவும் அவள் முகத்தை ஆராய்ந்தவாறே “தேங்க்ஸ்” என்று சொல்லி பெற்றுக் கொண்டான்.

அவள் முறைக்க “கொஞ்சம் வெயிட் பண்ணு காபி குடிச்சுக்கறேன், அப்புறம் முறைச்சுக்கோ” என்றவன் காபியை நிதானமாய் ரசித்து குடித்தான்.

“உன்கிட்ட ரெண்டு கேள்வி கேட்பேன் எனக்கு அதுக்கான பதில் வேணும்”

அவள் மௌனம் சாதித்தாள், “இப்போவே மௌனமாகிடாதே, நான் கேட்கவா வேணாமான்னு முதல்ல சொல்லு. நான் கேட்குறதுக்கு உனக்கு பதில் தெரிஞ்சா சொல்ல முடியும்ன்னா சொல்லு” என்றான்.

“கேளுங்க” என்று இதழ் பிரித்தாள்.

“தேங்க்ஸ்” என்றவன் “நீயும் நானும் மதுரையில சந்திச்சிருக்கோம் முதல் முதல்லா சரி தானா”

“சரி தான்”

“அப்போல இருந்து தான் நீ என்னை விரும்புனியா??”

“இல்லை”

“அப்போ நீ என்னை விரும்பவே இல்லைன்னு சொல்றியா??”

“நான் அப்படி சொல்லவே இல்லை”

“அப்போ அதுக்கும் முன்னாடியே உனக்கு என்னைத் தெரியுமா?? எப்படித் தெரியும்?? வாய்ப்பே இல்லையே, நான் சென்னை நீ ஊட்டி. நான் ஊட்டிக்கு வந்ததே உங்கம்மாவை பார்க்கவும் நம்ம கல்யாணத்தப்பவும்தான். அதுக்கு முன்னாடி நான் அங்க வந்ததேயில்லையே”

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்ன்னு எதிர்பார்க்கறீங்க??”

“நீ எதையும் சொல்லப் போறதில்லைன்னு எனக்கு தெரியும். ஆனா என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்ன்னு தான் எனக்கு புரியலை. அதுவும் நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகும் நீ சொல்ல யோசிக்கிறன்னா நான் என்ன பண்ணன்னு எனக்கு தெரியலை”

“ஏன் இப்படிலாம் பேசறீங்க??”

“பேசக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா நீ ரொம்ப யோசிக்க வைக்கற பேச வைக்கற. இதான் லாஸ்ட் இனிமே நானா இதைப்பத்தி உன்கிட்ட கேட்க மாட்டேன்”

“உன்னோட செயல்களை வைச்சு உன்னை கணிக்கலாம். ஆனா நீ மனசுல என்ன நினைக்கிற அப்படிங்கறதை நீ சொல்லாம கணிக்கவோ யோசிக்கவோ எதுவுமே செய்ய முடியாது”

“ப்ளீஸ்”

“அதான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. நிம்மதியா இரு” என்று அவன் சொன்ன போது அதில் ஆதங்கம் தான் பெரிதாய் இருந்தது.

“சரி அதைவிடு அடுத்து ஒண்ணு கேட்கறேன் அதுக்கான பதிலாச்சும் சொல்ல முடியுதான்னு பாரு”

“விக்ரம்க்கும் உனக்கு என்ன பிரச்சனை??” என்று அவன் கேட்கவும் அவள் உடல் இறுகியது.

“எனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை இருக்கப் போகுது??” என்று அவள் அசட்டையாய் பதில் சொன்னாள்.

அதுவே சொன்னது ஏதோ இருக்கிறது என்று. “அப்படியா?? அப்போ நீ ஏன் என்னை அன்னைக்கு திட்டினே??” என்றான் ஆத்திரேயன்.

அவனுக்கு அவள் ஏன் அன்று திட்டினாள் என்று புரியாமலே இருந்தது. அதிலிருந்து தானே அவளை அவன் பார்க்க ஆரம்பித்தான். எதற்கு திட்டு என்பது மறந்து போய் அப்போது அவள் மட்டுமே நினைவில் இருந்தாள்.

திருமணத்திற்கு பின்னர் கேட்ட போது கூட ஏதோ தவறாக நினைத்து கேட்டுவிட்டேன் என்று தான் சொல்லியிருந்தாள். அப்போது வேறு ஒன்றும் தோன்றாததால் அப்படியே விட்டுவிட்டான்.

இன்று அவன் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் விக்ரம் அலுவலகம் வரவும் அவனுக்கு சட்டென்று பொறி தட்டியது போலிருந்தது. அன்றும் விக்ரமிடம் பேசிவிட்டு திரும்பி வரும் போது தான் அவள் திட்டினாள் என்பது நினைவிற்கு வந்தது.

தவிர ஐஜியிடம் அவள் கம்பிளைன்ட் செய்த அன்றும் அதற்கு சற்று முன்னதாக அவன் விக்ரமிடம் தான் போனில் பேசியிருந்தான். அதை அவள் கேட்டிருக்க வேண்டும் அதன் பின்னர் தான் கம்பிளைன்ட் செய்ய சென்றிருக்க வேண்டும் என்பது அவனின் ஊகம்.

“அதான் அன்னைக்கே சொன்னேனே உங்களை தப்பா நினைச்சு பேசிட்டேன்னு”

“நீ சொல்றதை எல்லாம் நான் நம்புவேன்னு நினைக்கறியா??”

“அது உங்க இஷ்டம்”

“அன்னைக்கு நீ குற்றவாளி கூட எல்லாம் ஏன் பேசறீங்கன்னு கேட்டே?? அப்போ நான் அவன் கூட பேசுறது உனக்கு பிடிக்காம தானே அப்படி சொன்னே?? அதுக்கு என்ன அர்த்தம்”

“ஆதாரம் முழுசா இன்னும் கிடைக்கலை, கிடைச்சதும் அவன் யாருன்னு உங்களுக்கு தோலுரிச்சு காட்டுறேன். இதுக்கு மேல என்னோட கேஸ் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க” என்று சட்டென்று முகத்தில் அடித்தது போல் அவள் சொல்லிவிட ஆத்திரேயனுக்கு கோபம் தலைக்கேறியது.

மேற்கொண்டு அவளிடம் ஒன்றும் பேசவில்லை. தன் உடைமைகளை எடுத்துக் கொண்டான், அவளிடம் ஒரு தலையசைவு மட்டுமே பதிலாய் கொடுத்து அவன் கிளம்ப “ஒண்ணும் சொல்லாம போறீங்க??”

“என்ன சொல்லணும் அதான் வந்ததுமே சொல்லிட்டனே ஊருக்கு போறேன்னு”

“எந்த ஊருக்குன்னு??” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

“கேஸ் விஷயமா போறேன், எங்கேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது. நெறைய இடத்துக்கு போக வேண்டி இருக்கு” என்று பொதுவாய் சொன்னான்.

Advertisement