Advertisement

“எங்க போயிட்டு வர்றே??”

“எதுக்கு கேட்கறீங்க??”

“போகும் போது ஒரு டிரெஸ் வரும் போது டிரெஸ்”

“என்னோட டிரெஸ் எப்பவும் ஆபீஸ்ல ஒரு செட் இருக்கும். இன்னைக்கு என்னோட பழைய குவார்ட்டஸ் போயிட்டு வந்தேன், அங்கவே டிரெஸ் மாத்திட்டு வந்திட்டேன்”

“எங்கயாச்சும் போனா சொல்லிட்டு போக மாட்டியா. உன்னை தேடிட்டு என் புள்ளை பின்னாடியே வரணுமா”

பேசப்பேச பேச்சு வளரும் என்று தோன்றியதால் மேலே பேச்சை வளர்க்க அவளுக்கு பிடிக்கவில்லை, பேசாமல் பாலை காய்ச்சினாள்.

“உங்களுக்கும் சேர்த்து காய்ச்சவா??”

“இன்னுமா நாங்க சாப்பிடாம இருக்கோம்” என்று அதற்கும் ஒரு குத்தல் பேச்சு.

“உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொன்னேன்”

என்ன என்பது போல் அவரை நிமிர்ந்து பார்த்தாள். “வீட்டில இருக்கும் போது புடவை தான் கட்டணும்ன்னு”

“அப்படி தானே செஞ்சிட்டு இருக்கேன்”


“அப்போ இதென்ன??” என்று அவள் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

“நான் தான் சொன்னேன்ல குவார்ட்டஸ் போனேன்னு. அங்க இருந்த என்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க கொண்டு வந்தாச்சு. அங்க மாத்திக்க இதான் இருந்துச்சு அதான் மாத்திக்கிட்டேன்”

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைச்சிருப்ப போல” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார். இவளும் அடுப்பை அணைத்துவிட்டு பாலை எடுத்துக்கொண்டு படியேறினாள்.

“என்ன இவ்வளவு நேரம் அம்மா எதுவும் சொன்னாங்களா??” என்றான் அவளின் கணவன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“அப்போ ஏதோ சொல்லியிருக்காங்க” என்றவனின் கரத்தில் பாலை கொடுத்தாள்.

“இதைக்குடிங்க முதல்ல”

“என்னன்னு சொல்லு”

“நான் ஒண்ணு சொல்றேன் நீங்க கேட்பீங்களா??”

“ஹ்ம்ம் சொல்லு”

“இனிமே எனக்காக உங்கம்மாகிட்ட சப்போர்ட் பண்ணி பேசாதீங்க”

“ஏன்?? ஏன் பேசக்கூடாது?? நீயும் பேச மாட்டே நானும் பேசக்கூடாதா??”

“நீங்க என் சார்பா பேசினா அவங்களுக்கு என் மேல இன்னும் வெறுப்பு தான் அதிகமாகும். ஏனோ அவங்களுக்கு என்னை இப்போ பிடிக்கலை. இப்படியே போய்டாது, என்னைக்காச்சும் ஒரு நாள் சரியாகும்”

“அப்போ நீங்க பேசினது எதுவும் அவங்களை காயப்படுத்தியிருக்க கூடாதுன்னு தான் சொல்ல வர்றேன்” என்றவளை ஆழ்ந்து பார்த்திருந்தான்.

பாலை ஒரே மூச்சில் தொண்டையில் சரித்துக் கொண்டவன் கிளாஸை அவளிடத்தில் நீட்ட அவளும் குடித்து முடித்திருந்தாள் அந்நேரம். கிளாஸை கழுவி மேஜையில் வைத்துவிட்டு இவனருகே வந்து அமர்ந்தாள்.

“என்ன பதிலே சொல்லலை. நான் சொன்னது தப்பா??”

“நீ சொன்னதுல தப்பில்லை சரி தான். நான் ஒண்ணு கேட்பேன் நீ பதில் சொல்வியா?? இது எப்பவும் நான் உன்கிட்ட கேட்குற மாதிரியான கேள்வியில்லை வேற” என்றான்.

“கேளுங்க”

“எங்கம்மாவை நீ அத்தைன்னு கூப்பிடவே இல்லையே ஏன்??”

“தெரியலை”

“இது பதில் இல்லை”

“அவங்களுக்கு என் மேல எப்பவும் ஒரு கோபமிருக்கு. என்னை அவங்களுக்கு பிடிக்கலை, அதனால என்னால அவங்ககிட்ட இயல்பா ஒட்ட முடியலை. அதான் எனக்கும் அவங்களை எப்படியும் கூப்பிடத் தோணலை” என்று வெளிப்படையாய் ஒத்துக்கொண்டாள் அவனிடத்தில்.

“நீ இப்படி பட்டுன்னு சொன்னதுல எனக்கு சந்தோசம் தான். ஆனா வருத்தமாவும் இருக்கு. கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னே, எங்க உறவு இப்படியே இருந்திடாதுன்னு”

“ஹ்ம்ம்”

“அப்போ நீ ஏன் முதல் அடியை எடுத்து வைக்ககூடாது. அவங்க இப்படித்தான்னு உனக்கே புரிஞ்சிடுச்சு. எனக்கு தெரிஞ்சு நீ எல்லாரோடவும் ஒத்துப்போற ரகம் தான். எங்கம்மா சொல்ற எல்லாத்துக்கும் ஒத்து போக சொல்லலை, ஒதுக்கிட்டு போய்டு”

“அவங்களுக்கான மரியாதையை நீ கொடுக்கற எனக்கு அதுல எந்த சந்தேகமுமில்லை. அவங்களை என்னோட உறவா பார்க்காம உன்னோட உறவா அதைவிட சிம்பிளா சொல்லணும்ன்னா நம்மோட உறவா பாரு”

“புரியுதுங்க” என்றாள்.

“தேங்க்ஸ்”

—————–

இரவு தாமதமாக உறங்கியதால் மறுநாள் நேரம் கழித்தே எழுந்திருந்தாள் மெல்லினா. எப்போதும் எழும் நேரத்தை விட ஒரு மணி நேரம் தாண்டி மணி ஆறரை என்று காட்ட அவசர அவசரமா எழுந்தாள்.

ஆத்திரேயனின் கரம் அவளை தன் புறம் இழுக்க “டைம் ஆச்சு” என்றவள் எழுந்து குளியலறை புகுந்தாள். வெளியில் வந்து ஐந்து நிமிடத்தில் சூரிய நமஸ்காரம் மட்டும் செய்து முடித்து குளித்து புடவைக்கு மாறி கீழே இறங்க மணி ஏழரை ஆகியிருந்தது.

சமையலறையில் இருந்து சாம்பாரின் மணம் வர வேகமாய் அங்கு சென்றாள். வாசவி இவளை கண்டும் காணாதது போல் தன் போக்கில் வேலை செய்துக் கொண்டிருந்தார்.

இவள் காபி போடலாம் என்றால் அவர் அடுப்பின் அருகிலேயே நின்றிருந்தார். மெல்லினா செய்வதறியாது நின்றாள். மெல்லிய குரலில் “அத்தை” என்றழைக்க என்னவென்று திரும்பி பார்த்தார் வாசவி.

“காபி போடவா”

“நாளைக்கு வந்து கேளேன் காபி போடவான்னு. ஒருத்திக்கு ரெண்டு மருமக இருக்கான்னு தான் பேரு. எல்லாருக்கும் நானே தான் சேவகம் பண்ண வேண்டியதா இருக்கு” என்றவர் காபியை எடுத்து அவள் கையில் கொடுக்க அதை வாங்கியவளுக்கு அருந்த மனதில்லை.

“என்ன குடிக்காம வைச்சிருக்கே குடி. இப்பவே சொல்லிட்டேன் நாளையில இருந்து நீ தான் சமைக்கணும், என்னால முன்ன மாதிரி வேலையெல்லாம் பார்க்க முடியலை”

“அவனோட துணி உன்னோட துணி எல்லாம் துவைக்கறதும் உன் வேலை தான். எங்க துணியை நான் துவைச்சுக்குவேன்”

“ஹ்ம்ம்”

இவள் காபி தம்ளருடன் நகர “எங்க போறே??” என்றார்.

“காபி குடிக்க”

“இங்கவே குடிச்சிட்டு அவனுக்கும் எடுத்திட்டு போ. சாம்பார் வைச்சுட்டேன் காய் கட் பண்ணி வைச்சிருக்கேன் அதை செஞ்சிட்டு சாதம் வைச்சி ஹாட் பேக்ல வைச்சிடு” என்று அவர் நகர்ந்துவிட்டார்.

“அத்தை நான் எனக்கு ஆபீஸ்க்கு டைம்மாச்சு. நாளையில இருந்து நான் சமைக்கறேன்”

“ஏன் நைட் லேட்டா வர்றே?? ஒரு நாளைக்கு லேட்டா போனா வேணாம்ன்னா சொல்லிடுவாங்க” என்று அவர் விதண்டாவாதம் பேசினார். மெல்லினாவின் பொறுமை கரையும் தருணம் தன் ஆயுதத்தை எடுத்தார் அவர்.

“நான் சொன்னா யாரு கேட்பா. யாரும் கேட்க மாட்டாங்க, உங்கம்மா சொன்னாங்க என் பொண்ணு யாரையும் எதிர்த்து பேசமாட்டா அனுசரிச்சு போவா, எல்லாரையும் மதிப்பான்னு. என்னத்தை சொல்ல நான் பெத்தது சரியில்லை” என்று அவர் சொல்ல காபியை ஒரே மடக்கில் சரித்துக் கொண்டவள் காலி கிளாஸை சிங்கில் போட்டாள்.

வாசவி நீளமாய் அறிந்து வைத்திருந்த வெண்டைக்காயை பொடியாய் நறுக்கினாள். அடுப்பில் எண்ணை விட்டு வெண்டையை வதக்கினாள்.

வாசவிக்கு அவளின் அதிரடி சற்று பயத்தை தான் கொடுத்தது. இருந்தாலும் அவர் தன் பிடியை தளர்த்த விரும்பவில்லை. இவளை விட்டால் மேலே ஏறிவிடுவாள் என்ற எண்ணம் அவருக்கு.

தட்டித்தான் வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே தனக்கு தானே சபாஷ் போட்டுக்கொண்டு அவர் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவர் சாம்பார் மட்டும் தான் வைத்திருந்தார். காலை உணவுகென்று எதுவும் செய்திருக்கவில்லை. காயை வதக்கி முடிக்கவும் மறுபுறம் சாதம் வெந்துக் கொண்டிருந்தது.

குக்கரை எடுத்து அரிசியும் சிறுபருப்பும் போட்டு வெண்பொங்கல் தயார் செய்தாள். அது விசில் வந்ததும் அடுப்பை அனைத்து சாதத்தையும் வடித்து முடிந்திருந்தாள்.

தேங்காய் சட்டினியை அரைத்து தாளித்து அங்கிருந்து அவள் வெளியில் வரும் போது மீண்டும் குளித்தது போலிருந்தது. மணி எட்டரை ஆகியிருந்தது. ஆத்திரேயனுக்கு காபியை எடுத்துக்கொண்டு மேலே செல்ல அவன் குளித்து அப்போது தான் வெளியில் வந்தான்.

“ஒரு காபி எடுத்திட்டு வர்றத்துக்கு இவ்வளவு நேரமா, ஆபீஸ்க்கு டைம் ஆகுதுல” என்று சிடுசிடுப்பாய் சொன்னான் அவன்.

ஒன்றும் சொல்லாமல் அவன் கையில் அதை திணித்துவிட்டு அவள் குளியலறை புகுந்தாள். மீண்டும் ஒரு குளியல் முடித்து வெளியில் வந்து தன் சீருடையை எடுத்து அணிந்துக் கொண்டாள். அவள் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

“நான் கிளம்பறேங்க” என்றவள் கீழே இறங்கப் போக “சாப்பிட்டு போ” என்றான் அவன்.

அதெல்லாம் கேட்க அவள் அங்கிருந்தால் தானே, அவள் கீழே இறங்கி வர சுசிந்திரம் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார் காலை உணவிற்காய். வாசவி அருகே இருந்து பரிமாறிக் கொண்டிருந்தார்.

“மாமா கிளம்பறேன் போயிட்டு வர்றேன் அத்தை” என்றவள் கிளம்பிவிட்டாள்.

“வாசவி அந்த பொண்ணு சாப்பிட்டுச்சா” என்றார் சுசிந்திரம்.

“எனக்கென்ன தெரியும்” என்ற மனைவியின் அசட்டையான பதிலில் சாப்பிடுவதை விட்டு எழுந்து வெளியில் வந்தார் அவர்.

மெல்லினா வண்டியை அப்போது தான் ஸ்டார்ட் செய்திருக்க “மெல்லினா சாப்பிட்டு போம்மா” என்றார் அவர்.

“இருக்கட்டும் மாமா நேரமாகிடுச்சு இன்னும் பத்து நிமிஷத்துல நான் ஆபீஸ்ல இருக்கணும்” என்றவள் கிளம்பிவிட்டிருந்தாள்.

மீண்டும் திரும்பி அவர் உள்ளே வர “என்னமோ வேகமா எந்திச்சு போனீங்க. என்னவாம் டிபன் சாப்பிட கூட நேரமில்லையாமா” என்று இடித்தார் வாசவி.

“பாவம் டைம் ஆகிடுச்சாம்” என்றார் அவர்.

“இன்னைக்கு டிபன் யார் செஞ்சா, நீயா??”

“நான் இல்லை அவ தான் செஞ்சா. நான் சாம்பார் மட்டும் தான் வைச்சேன்”

“காலையில எழுந்து அவ செஞ்சாளா நீ எதுவும் உதவி பண்ணலையா வாசவி. அதான் சாப்பிடாம கூட அந்த பொண்ணு ஓடுதா. எல்லாம் உன் வேலை தானா” என்று திரும்பி மனைவியை முறைத்தார் அவர்.

அப்போது சரியாய் ஆத்திரேயனும் வர “டிபன் வைங்கம்மா” என்றான் அவன்.

“உன்னை உட்கார வைச்சு உன் பொண்டாட்டி தான் பரிமாறணும். கல்யாணம் ஆகிப்போச்சு இன்னும் நானே இதெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு” என்று அவர் அங்கலாய்க்க “இனிமே நானே போட்டு சாப்பிட்டுக்கறேன்ம்மா, யாரும் எனக்கு பரிமாற வேணாம்” என்றவன் எழுந்துவிட்டிருந்தான்.

“சும்மா சாப்பிடுடா நான் இதுக்கு முன்னாடி உன்னை எதுவும் சொன்னதில்லையா என்ன” என்றவர் தட்டில் பொங்கலை வைத்து குழம்பை ஊற்ற ஆத்திரேயன் அவரையும் விட பிடிவாதம் பிடிப்பவனாயிற்றே.

உள்ளே சென்று வேறு தட்டை கழுவி எடுத்து வந்து தனக்கு தானே பரிமாறிக் கொண்டு உணவருந்தினான்.

“என்ன பண்ணிட்டு இருக்க வாசவி நீ?? எனக்கு இதெல்லாம் பிடிக்கலை நீ சரியில்லை மாத்திக்கோ, இல்லைன்னா நானே அவங்க ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் வைச்சுடுவேன்” என்று மனைவியை மிரட்டினார் சுசிந்திரம்.

“பயப்படாதீங்கம்மா அப்பா சொன்னாலும் நான் போக மாட்டேன். அண்ணன் தான் தனியா போயிருக்கான், அம்மா அப்பா கூட கடைசி வரை நான் இருப்பேன். நான் அப்படி ஒண்ணும் விட்டுட்டு போய்ட மாட்டேன். நானே போறேன்னு சொன்னாலும் என் பொண்டாட்டி வேணாம்ன்னு தான் சொல்லுவா”

“ஆதி நீ வருத்தப்படாதே” என்றார் அவன் தந்தை அவனின் தோளில் தட்டி.

“வருத்தப்படாம எப்படிப்பா இருக்க முடியும். அம்மாக்கு என்னாச்சுன்னு எனக்கு புரியலை. இவங்க என்னோட அம்மா தானான்னு எனக்கு சந்தேகம் வருது” என்றவன் சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பியிருந்தான்.

——————

ஆத்திரேயன் சொன்னது போலவே அடுத்த மூன்று நாளில் தயாளனின் கேசை முடித்திருந்தான். ஏற்கனவே போலீஸ் மரணம் துப்பு கிடைக்கவில்லையா என்று பத்திரிக்கையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எழுதியிருந்தனர்.

அதனாலேயே அவர்களுக்கு தெளிவாக்கும் பொருட்டு அதற்கான பிரஸ் மீட் ஏற்பாடாகியிருக்க மெல்லினா அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதைபதைப்போடு மாடியில் இருந்து கீழே பார்த்திருந்தாள் அவன் பேசுவதை.

Advertisement