Advertisement

10

“நீ என்ன யோசிக்கறேன்னு எனக்கு தெரியும். ரொம்பவும் யோசிக்காத, நான் தான் வேலையில இருக்க கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன். தப்பு தான், நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்று அவன் எழுந்து நின்றான்.

மெல்லினா இன்னமும் யோசனையோடே அமர்ந்திருந்தாள். “நான் சொன்னா சொன்னது தான். நீ எப்படி சில விஷயங்களை வெளிப்படையா பேசுறதில்லையோ அப்படித்தான் நானும். நடக்கப் போறது நல்லதா நடக்கும்ன்னு நம்பு, என்னையும் தான்” என்று அவன் சொல்லவும் வேகமாய் எழுந்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“ஹேய் நீ இப்போ என்ன பண்ணே?? ச்சீய் இதெல்லாம் தப்பு பாரு உன் உடுப்பை கூட நீ மாத்தலை. இப்படி செய்யலாமா” என்றான் அவன் சிரித்தவாறே.

“அன்னைக்கு சார் மட்டும் என்ன பண்ணாராம்??”

“அது… அது உன் டிரெஸ்ல ஸ்டார் எல்லாம் இல்லை, அது அப்போ வேறு காக்கி டிரெஸ் மட்டும் தான்” என்று சமாளித்தான்.

“நீங்க அன்னைக்கு புல் யூனிபார்ம்ல தானே இருந்தீங்க. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி பார்த்தா இன்னைக்கு நீங்க காக்கி டிரெஸ்ல கூட இல்லை, சோ நான் பண்ணது தப்பில்லை”

“அன்னைக்கு நீ கேட்ட மாதிரி கேள்வி எல்லாம் இப்போ நான் கேட்டா??” என்று முடிக்காமல் அவன் அவளைப் பார்க்க “ஹ்ம்ம் அடி வாங்குவீங்க” என்றாள் முறைப்போடு.

“ஹான் அதெப்படி நீ மட்டும் என்னை என்னெல்லாம் கேட்டே, எத்தனை பேருகிட்ட இப்படி செஞ்சிருக்கீங்க. அத்துமீறிட்டீங்கன்னு எல்லாம் சொன்னியேம்மா. இந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிச்சுன்னு தெரியுமா உனக்கு”

“அது அப்போ நான் கல்யாணம் ஆகாத பொண்ணு”

“எனக்கு மட்டும் பத்து கல்யாணம் ஆகியிருந்துச்சா என்ன?? சரி அப்போ மாறி இப்பவும் கேட்பியா நீ”

“கேட்க மாட்டேன்”

“இப்போ மட்டும் உனக்கு என் மேல நம்பிக்கை வந்திடுச்சா??”

“நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க”

“அடிங்க உனக்கு நான் சரியா பாடம் எடுக்கலைன்னு நினைக்கிறேன் இன்னைக்கு நைட் வைச்சுக்கறேன் கச்சேரியை” என்றான்.

“நான் அந்த பாடத்துல நீங்க வீக்குன்னு சொல்லவே இல்லையே”

“வேற எதுல நான் வீக்கு??”

“நீங்க ஐபிஎஸ் பர்ஸ்ட் அட்டெம்ப்ட் தானே”

“கடவுளே நான் ஒரே அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணது ஒரு குத்தமா. அந்த நித்தேஷ் பய தான் அன்னைக்கு அதை சொல்லி என்னை ஓட்டினான்னா நீயுமா”

“உங்களுக்கு படிக்கிறது தவிர வேற எதையும் கவனிக்கறதுக்கெல்லாம் நேரம் இருந்திருக்காது. அப்படி மட்டும் இருந்திருந்தா உங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகியிருக்கும்”

“ஹ்ம்ம் ஒத்துக்கறேன் நீ சொன்னது என்னவோ உண்மை தான்”

“ஆனா இது ஏன் அன்னைக்கே உனக்கு தெரியாமப் போச்சு

“அன்னைக்கும் எனக்கு தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லையே”

“அப்போ ஏன் அப்படியொரு வார்த்தை சொன்னே, இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்க வாயை அடைச்சிருக்கீங்கன்னு”

“ஏன்னா உங்களை நான் எப்பவும் கண்ணியமா தான் பார்த்திருக்கேன். எந்த பொண்ணுங்களையும் ஒரு பேச்சுக்கு கூட நீங்க ஆர்வமா பார்த்ததில்லை. உங்களை எப்படியோ நான் நினைச்சுட்டு இருக்கும் போது நீங்க என்கிட்ட அப்படி நடந்துக்கவும் தான் நான் அந்த மாதிரி கேட்டுட்டேன்”

“நிஜமாவே உனக்கு என் மேல எந்த டவுட்டும் இல்லையே”

“எங்கம்மா எப்பவும் ஒண்ணு சொல்வாங்க. ஒரு மனுஷன் தன் மேல தான் அதிக நம்பிக்கை வைக்கணும்ன்னு. எனக்கு எப்பவும் என் மேல அதிகம் நம்பிக்கை உண்டு. ஆனா என்னை விட அதிகமா நான் உங்களை நம்புறேன்” என்று அவள் முடிக்கவும் அவளை அணைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். 

அவள் உடை தடுக்க “முதல்ல நீ போய் வேற டிரெஸ் மாத்திட்டு வா, ஆமா இங்க வேற டிரெஸ் இருக்குல்ல”

“இருக்கு ஆனா எல்லாம் பேண்ட் சார்ட் தான் இருக்கு. அத்தை நான் வீட்டில இருக்கும் போது புடவை தான் கட்டணும்ன்னு சொல்லியிருக்காங்க”

“அதேல்லாமா நீ கேட்கறே, பரவாயில்லை நீ போய் முதல்ல இங்க என்ன இருக்கோ அதை மாத்திட்டு வா.  சுடிதார்ன்னா கூட ஓகே தான்”

“எதுக்கு இப்போ அதெல்லாம் அதான் வீட்டுக்கு போகப் போறோமே”

“எனக்கு அர்ஜென்ட்டா உன்னை கட்டிக்கணும் போல இருக்குடி சொன்னா கேளு” என்று அவன் சொல்லவும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள் அவள்.

அவனும் பின்னோடு வர அவள் தனக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறை புகுந்தாள்.

“இங்கவே மாத்திருக்கலாம்”

“குளிச்சுட்டு தான் மாத்தணும்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“என்னது தனியா குளிக்கப் போறியா, சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல”

“வருவீங்க வருவீங்க ஒரு ஐபிஎஸ் ஆபீசர் மாதிரி பேசுங்க” என்றாள் அவள் பதிலுக்கு.

“ஏன்டி ஐபிஎஸ்ன்னா கல்யாணம் பண்ணிக்க கூடாது பொண்டாட்டியை கொஞ்சக் கூடாதுன்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன. கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் நான் அம்பியா இருக்கலாம், இப்போ நான் ரெமோ” என்று இவன் சொன்னதை கேட்டு அவள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டாள்.

“என்ன பதிலே காணோம், சிரிக்கிறாளோ. கொஞ்சம் ஓவரா பேசிட்டமோ எனக்கு இதெல்லாம் வராதே. எல்லாம் இவளால தான்” என்று தனக்குத்தானே இவன் பேசிக் கொண்டிருக்கவும் குளித்து வெளியே வந்திருந்தாள் மெல்லினா சிரிப்போடு.

“என்னை தனியா புலம்பவிட்டு என்னடி சிரிக்கிற??”

“நீங்க சொன்னதை நினைச்சு சிரிப்பு வந்திடுச்சு. உங்களை எப்படியெல்லாம் நினைச்சுட்டு இருந்தேன். இப்படி காமெடி பண்றீங்க” என்று அவள் சொல்ல ஆத்திரேயன் முறைத்தான்.

“என்னை சிரிப்பு போலீஸ் ஆக்கிட்டியேடி. எல்லாம் உன்னால தான்” என்றவன் அவள் இடையை பற்றி தன் புறம் இழுத்தான்.

மெல்லினா அதை எதிர்பாராததால் அவன் மேலேயே இடித்துக் கொண்டு நின்றாள். “எதுக்கு இப்போ அவசரம்??”

“அதான் சொன்னேன்ல கட்டிப்பிடிக்கணும் ரொம்ப அர்ஜென்ட்ன்னு” என்றவன் இறுக அணைத்துக் கொண்டிருந்தான் அவளை. சில நொடிகள் அப்படியே நின்றிருக்க அவன் கைப்பேசி நந்தியாய் அழைப்பை விடுத்தது.

அதை எடுக்கக்கூட தோன்றாது அவன் இன்னமும் அவளை இறுக்கிக் கொண்டிருக்க தோல்வியை தழுவி இருந்த நந்தி இல்லையில்லை அவன் கைப்பேசி மீண்டும் ஒலியெழுப்பியது.

“போன் அடிக்குது” என்றாள் அவன் மனைவி.

“ஹ்ம்ம் தெரியும்”

“எடுங்க”

“வேணாம்”

“ஏன்??”

“எடுத்தா இப்படி இருக்க முடியாதே”

“நான் எங்க போய்ட போறேன்”

“நான் எடுக்கறேன் நீ எனக்கு முத்தம் தர்றியா” என்று கணக்கு பேச “என்னங்க இப்படி இறங்கிட்டீங்க”

“எல்லாம் உன்னால தான் போ” என்றவன் அவள் தலையில் முட்டிக் கொண்டே தன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்தான்.

பேன்ட்டில் இருந்த போனை எடுத்து அட்டென்ட் செய்ய “ஆதி என்னாச்சு எங்கே போய்ட்டா அவ??” என்று எதிர்முனையில் இருந்து பேசியது அவன் அன்னை வாசவி.

“கொஞ்சம் வேலைமா அதான் லேட் ஆகிட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கா நான் தான் கவனிக்கலை. நாங்க வந்திடறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல. நீங்க சாப்பிட்டு படுங்க” என்று போனை வைக்கப் போனவன் “அம்மாம்மா ஒரு நிமிஷம்”

“என்னடா??”

“நாங்க வெளியவே சாப்பிட்டு வந்திடறோம்மா” என்றுவிட்டு வைத்துவிட்டான்.

“என்னங்க இதெல்லாம்”

“வா கிளம்புவோம்” என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான். இருவரும் வெளியே உணவை முடித்து வீட்டிற்கு வர பதினோரு மணியாகிப் போனது.

வாசவி உறங்காது அவர்களுக்காய் விழித்திருந்தார் ஹாலிலேயே. அவரை கண்டதும் “என்னம்மா தூங்கலையா நீங்க??”

“எப்படி தூங்குறது நீங்க வராம??” என்றவரின் பார்வை மருமகளின் உடையின் மீதே இருந்தது.

“ஏன் தூங்குறதுக்கு என்ன?? தூக்கம் வரலையா??”

“நான் கதவை சாத்திட்டு தூங்கிட்டா உங்களுக்கு யார் கதவை திறந்து விடுறது. ஆபீஸ் போறதுன்னா நீ சாவி எடுத்திட்டு போவே. நீ உன் பொண்டாட்டியை காணோம்ன்னு வீட்டு கேட்டு சாவியை கூட எடுக்காம ஓடுற. இதுல தூங்கலையா, தூக்கம் வரலையான்னு கேள்வி கேட்டுட்டு”

“அச்சோ சாரிம்மா, சாரிம்மா. நான் அதை யோசிக்கவே இல்லை, நீங்க திரும்ப போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல”

“ஒவ்வொண்ணுத்துக்கும் போன் பண்ணி சொல்லிட்டே இருக்க முடியுமா. எல்லாம் தானா தெரியணும், ஏன் உனக்கு தெரியாதா. நீ சொல்ல மாட்டியா அவனுக்கு” என்று இப்போது நேரடியாக மருமகளையே கேள்வி கேட்டார்.

“அம்மா அவளுக்கு என்ன தெரியும்??”

“ஆமா அவளுக்கு ஒண்ணுமே தெரியாது”

“அம்மா” என்று இவன் ஆரம்பிக்கவும் மெல்லினா அவன் கையை அழுத்தினாள் மேலே பேச வேண்டாம் என்பது போல்.

“உங்ககிட்ட பேசுறது வேஸ்ட்” என்றவன் மெல்லினாவின் கைப்பிடித்து மேலே செல்லப் போக “பால் எடுத்து வைச்சிருக்கேன் கொண்டுட்டு போ” என்று மெல்லினாவை பார்த்துச் சொன்னார் அவர்.

“ஹ்ம்ம் சரி” என்றவள் ஆத்திரேயனிடம் “நீங்க போங்க நான் பால் ஆத்தி எடுத்திட்டு வர்றேன்” என்று கீழே இறங்கினாள்.

Advertisement