Advertisement

“யோவ் ஐபிஎஸ் முடிச்சுட்டு டைரக்ட்டா வந்திருக்காரு,ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காரு. நீ தான் நேத்து வந்திருக்க இங்க”

“நிஜமாவா இவன் ஐபிஎஸ்ஆ”

“என்னய்யா உன் பிரச்சனை ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க??”

“அதில்லை சரவணா இவன் அங்க இருக்கும் போது நான் கூட குறைய செஞ்சுட்டேன். இப்போ என்னைப் பார்த்தா என்ன செய்வானோ அதான் யோசிக்கறேன்”

“நீர் யாரைத்தான் விட்டு வைச்சீரு. ஒருத்தர் விடாம அலும்பு பண்ண வேண்டியது. இப்போ புலம்ப வேண்டியது. தான் பெரிய அதிகாரின்னு ஓவரா நீ பில்ட்டப் பண்ணப் போய் தானே வளராம இன்னும் இதே பொசிஷன்ல இருக்கே”

“ஆமா அப்படியே நீர் பெரிய பதவில போய் உட்கார்ந்தீரு. என்னை சொல்ல வந்திட்ட போய்யா”

“உன்னையவிட நான் பரவாயில்லையா” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களை அழைத்தார்கள் மீட்டிங் அறைக்கு.

அவர்கள் உள்ளே வந்து அமரவும் ஆத்திரேயன் காக்கி உடையில் மிடுக்காய் உள்ளே நடந்து வந்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளே வரும் போது அறையில் ஒரு துளி சத்தமில்லை அவன் ஷுவின் சத்தத்தை தவிர.

“எதுக்குய்யா இவ்வளோ அமைதியா இருக்கு??” என்று தயாளன் உடன் அமர்ந்திருந்த தன் சக அதிகாரி சரவணனை கேட்க “பேசாம வாயை மூடிட்டு இரு” என்று மெல்லிய குரலில் பதில் கொடுத்தார் அவர்.

“குட்மார்னிங் ஆல்” என்றவன் தன் பேச்சை ஆரம்பித்திருந்தான்.

“இது என்ன மீட்டிங்ன்னு எல்லாருக்கும் தெரியும் தானே” என்று அவன் கேட்க “தெரியும்” என்ற பதில்கள் ஒட்டுமொத்தமாய் வந்தது.

ஆத்திரேயன் தயாளனின் புறம் பார்த்தவன் “தயாளன் நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா. வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு”

“தெரியும்”

“என்ன சொன்னீங்க??”

“தெரியும்ன்னு சொன்னேன்”

“கேட்கவே இல்லையே??” என்றான் அவன் விடாது.

“தெரியும் சார்” என்று அவர் பதில் கொடுக்கவும் தான் பார்வையை வேறு புறமே திருப்பினான்.

“யோவ் மறந்திருப்பான்னு நினைச்சேன். என்னையவே கேள்வி கேட்குறான்” என்று அருகில் அமர்ந்திருந்தவரிடம் காதை கடித்தார் அவர்.

“என்ன மிஸ்டர் தயாளன் உங்களுக்கு எதுவும் சந்தேகமா. சரவணன் சாரை எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க எது கேட்கறதா இருந்தாலும் என்னை கேளுங்க” என்றான் இவன்.

“ஒண்ணுமில்லை சார்”

“அதை தான் அவர்கிட்ட கேட்டீங்களா??” என்று அதற்கும் ஒரு கேள்வி கேட்டான் அவன்.

‘ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே’ என்றிருந்தது அந்த தயாளனிற்கு.

“யோவ் இவன் என்னய்யா இந்த குடை குடையறான்” என்று தன் அருகில் இருந்தவரிடம் மீண்டும் அங்கலாய்க்க அந்த அறையின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து மீண்டும் ஒரு முறை அதிர்ந்துக் கொண்டிருந்தது தயாளனே அன்றி வேறு எவர்.

ஆத்திரேயன் தயாளனிடத்தில் பேச்சை முடித்து மீண்டும் தன் உரையை ஆரம்பித்த வேளையில் குறுக்கீடாய் அறைக்கதவை திறந்து ஷூ சத்தம் சப்திக்க உள்ளே வந்தவளை நிமிர்ந்து முறைத்தான் அவன்.

“ஹலோ வாட் நான்சஸ் திஸ், இங்க மீட்டிங் நடக்குதுன்னு தெரியும்ல. நீங்க பாட்டுக்கு உள்ள வர்றீங்க” என்றான் அடக்கப்பட்ட கோபக்குரலில்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார் உங்க மீட்டிங்கை டிஸ்டர்ப் பண்ணிட்டு வர்றேன்னா அதைவிட முக்கியமான விஷயமா இருக்கும்ன்னு யோசிக்க மாட்டீங்களா” என்றாள் அவள் அதையும்விட கோபக்குரலில்.

“அப்படியென்ன முக்கியமான விஷயம்”

“மூர்த்தி சார் மிஸ்ஸர்ஸ் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்காங்க நெஞ்சு வலின்னு. அவங்க வீட்டில இருந்து போன் மேலே போன் வந்திட்டு இருக்கு. சார் போனை ஆப் பண்ணி வைச்சிருக்கார்.சார் நீங்க உடனே கிளம்புங்க” என்று அந்த மூர்த்தி என்பவரை பார்த்து அவள் சொல்ல வியர்த்து எழுந்து நின்றிருந்தார் அவர்.

“மூர்த்தி ஒரு நிமிஷம்” என்ற குரலில் அப்படியே நின்றார் அவர்.

“நான் உங்களை ரிலீவ் பண்ணுறேன் இந்த டீம்ல இருந்து. உங்க வைப்பை போய் முதல்ல பாருங்க. தைரியமா இருங்க” என்று அருகே வந்து அவரை மெதுவாய் அணைத்து விடுவித்தான் அவன்.

“தேங்க்ஸ் சார் நான் கிளம்பறேன்” என்று அவர் வெளியேறி இருந்தார்.

“சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்” என்றுவிட்டு அவள் வெளியேறப் போக “ஒன் மினிட் ப்ளீஸ்” என்றவனின் குரலில் நின்றாள்.

“உங்க பேரு”

“மெல்லினா”

அவள் பெயரை தன்னையுமறியாமல் மென்மையாக முணுமுணுத்தது அவன் உதடுகள். அவள் திரும்பி நடக்கப் போக “வை டோன்ட் யூ ஜாயின் வித் அஸ்” என்றான் அவன்.

“பார் வாட்??”

“திஸ் டீம்”

“சாரி” என்றுவிட்டு வெளியேறப் போனவளின் கண்களில் தயாளன் விழ இருந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் அவள்.

“யோவ் என்னையவே எல்லாரும் டார்கெட் பண்ணுற போல எல்லாம் நடக்குதேய்யா” என்று மீண்டும் புலம்பினார் தயாளன் தன் நண்பரிடம்.

“இப்போ என்னாச்சு??”

“அந்த பொண்ணு தான் போகுதே இவரு ஏன் அதை நம்ம டீம்ல இழுக்கறாரு”

“அவங்ககிட்ட என்ன ஏழரையை இழுத்தீரு??” என்றார் சரவணன்.

“அந்த கதையெல்லாம் சொல்ல முடியாது” என்றவரின் எண்ணங்களில் பல காட்சிகள் ஓடியது.

மெல்லினா திரும்பி வந்தவள் “என்னை எப்படி உங்க டீம்ல எடுப்பீங்க??” என்றாள் ஆத்திரேயனிடம்.

“அது என்னோட பொறுப்பு, உங்களோட விருப்பம் என்ன??”

“ஓகே”

“நான் கமிஷனர்கிட்ட பேசிடறேன்”

“எக்ஸ்க்யூஸஸ் நான் கிரைம் பிரான்ச் லீட் பண்ணிட்டு இருக்கேன். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ??”

“தட்ஸ் ஓகே, ஒரு மாசம் தான் அதுக்குள்ள இந்த வேலையை முடிச்சுட்டு டீமை கலைச்சிடுவோம்”

“என்ன வேலைன்னு இன்னும் சொல்லவே இல்லையே??”

“ப்ளீஸ் பீ சீட்டட்”

“சார் நம்ம டீம்க்கு லேடிஸ் தேவையில்லையே நீங்க எதுக்கு இவங்களை இதுல இன்வால்வ் பண்றீங்க” என்று ஒருவர் சொல்ல மெல்லினா திரும்பி சொன்னவரை முறைப்போடு பார்த்திருந்தாள். “ஐ நோ வாட் ஐ யம் டூயிங்” என்று பதில் கொடுத்தான் அவன்.

“சார் அப்படி ஒண்ணும் கஷ்டப்பட்டு இவங்களை ஏன் இந்த டீம்ல வைச்சு இருக்கீங்க. எல்லாமே பெண்களாவே போடுங்க இவங்களை வேற டீம்க்கு மாத்திடுங்க” என்று முறைப்போடு சொன்னாள் அவள்.

“மெல்லினா விடுங்க” என்றவன் மீட்டிங்கை தொடர்ந்தான். மீட்டிங் முடிந்து அவர்கள் வெளியேற பின் தங்கினாள் அவள். தயாளன் அவளைத் தாண்டி வெளியேறப் போக கை சொடுக்கியவள் “ஹலோ எப்படி இருக்கீங்க??” என்ற சொல்ல அந்த குரலில் அப்படியே நின்றார் அவர்.

“ஹேய் என்ன கையை சொடுக்குறே விரலை உடைச்சிடுவேன்” என்று பதிலுக்கு அவர் குரல் உயர்த்த “யோவ் என்னய்யா பண்ணுறே?? உனக்கு நேரம் சரியில்லை அது யாருன்னு தெரியாம என்னய்யா இப்படி பேசுறே??” என்று சரவணன் அவர் காதில் முணுமுணுக்க திரும்பி அவரைப் பார்த்தார். “யாரு” என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது.

அதற்குள் அவள் மீண்டும் சொடக்கிட அதே கோபத்தோடு அவளைப் பார்த்தார். “என்ன உன் ஸ்டேஷன்ல நீ விரட்டினா மெல்லினான்னு நினைச்சியா. என்ன சொன்னே விரலை உடைப்பியா எங்க உடை பார்ப்போம்” என்றவள் அவர் முன் தன் ஒற்றை விரலை நீட்ட அதை பற்றபோனவரை சரவணனின் கரம் தடுத்தது.

“மேடம் சாரி மேடம் நீங்க யாருன்னு தெரியாம நடந்துகிட்டார் நீங்க போங்க நான் சொல்லி வைக்குறேன்”

“அதெல்லாம் இந்தாளுக்கு நான் யாருன்னு நல்லாவே தெரியும். இப்போ என்னை தெரியாது சீக்கிரம் தெரிஞ்சுக்குவான் சொல்லி வைங்க” என்றுவிட்டு வெளியேறினாள் அவள்.

“எதுக்கு சரவணன் என் கையை பிடிச்சே அவ எல்லாம் ஒரு ஆளா எனக்கு. இந்த டீம்ல இவளும் நம்மளை மாதிரி ஒரு ஆளு அவ்வளவு தான்”

“யோவ் நிஜமாவே நீ லூசு தான். ஆத்திரேயன் சார் ஒண்ணும் இவங்களை சும்மா நம்ம டீம்க்கு கேட்கலை. அவங்க கிரைம் பிரான்ச்ல இருக்காங்க ஸ்பெஷல் அப்பாயின்மென்ட்யா”

“இவளுக்கு எவன் போஸ்டிங் கொடுத்தான்”

“ஐபிஎஸ் முடிச்சா கொடுக்கத்தான் செய்வாங்க. இவங்க முதல்ல கேரளால தான் போஸ்டிங் ஆனாங்க. அங்க இவங்க அதிரடி பார்த்திட்டு நம்ம ஊருக்கு இவங்களை வர வைச்சு இருக்காங்க”

“என்னது இவளும் ஐபிஎஸ்ஆ”

“நீயெல்லாம் போலீஸ் வேலைக்கு எப்படிய்யா வந்தே. அவங்க ஸ்டார் பேட்ஜ் எல்லாம் பார்க்க மாட்டியா”

“இவ எதுக்குய்யா இங்க??”

“வந்ததும் சொன்னாங்கல்ல கிரைம் பிரான்ச்ல இருக்கறதா. அந்த ஜானி கேஸ் தெரியும்ல பத்து பொண்ணுங்களை கடத்தி ரேப் பண்ணி கொன்னானே. அவனை என்கவுன்ட்டர்ல போட்டுத் தள்ளினது இவங்க தான். இதுவரைக்கும் ஏழு என்கவுன்ட்டர் பண்ணியிருக்காங்க”

“என்னய்யா என்னை பயமுறுத்த பார்க்கறியா?? “யோவ் இவ சாதாரண ஏட்டா என் ஸ்டேஷன்ல இருந்தா. ஒரு நாலு வருஷம் இருக்குமா அதுக்குள்ளே படிச்சி கிழிச்சிட்டாளா இவ”

“உன்னை எதுக்கு நான் பயமுறுத்தணும். நீ தான் இருக்கற எல்லார்கூடவும் பிரச்சனை பண்ணி வைச்சிருக்கியே. உன் வாய்க்கு உனக்கு ஒரு நாள் வாய்க்கரிசி போடப் போறாங்க யாராச்சும்” என்று விளையாட்டாய் அவர் சொல்லியிருக்க அடுத்த எட்டாம் நாள் தயாளனை சடலமாய் தான் காண முடிந்தது.

Advertisement