Advertisement

1

அன்று

———–

வீட்டில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழரை ஆகியிருந்தது. ‘கடவுளே கிளம்பும் நேரமே சரியில்லையே, முதல் நாளே அந்த ஏட்டு சொல்லியிருந்தாரே. நாளைக்கு இன்ஸ் வருவாரு சீக்கிரம் வந்திடுங்கன்னு’

‘எஸ்ஐ வேற லீவுல இருக்காரு. இவரு வந்து என்ன சொல்லப் போறாரோ’ என்று மனதில் ஓட தன்னுடைய ஸ்வெட்டரை இழுத்துவிட்டுக் கொண்டு வேக எட்டுக்கள் போட்டாள் மெல்லினா.

அடுத்த பத்து நிமிடத்தில் அவள் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருக்க ஏட்டு கோவிந்தன் இவளை சங்கடமாய் பார்த்தார். ‘என்னாச்சு சார்??’ என்று இவள் பார்வையால் கேட்க அவர் சைகையால் இன்ஸ்பெக்டர் வந்திருக்கும் தகவலை கூறினார். உடன் டிஎஸ்பி வேறு வந்திருக்கிறார் போலும்.

இவள் சத்தமில்லாமல் நேரே உள்ளே நுழைந்தாள். “கோவிந்தன் எங்கே??” என்று ஒரு குரல் கேட்க “வந்துட்டேன் சார்” என்று அவர் முன்னால் நின்றார் கோவிந்தன்.

“எங்கே அந்த பொம்பிளை ஏட்டு காலையிலையே வரணும்ன்னு சொல்லியிருக்கீங்களா இல்லையா. ஆடி அசைஞ்சு வீட்டு வேலை முடிச்சுட்டு தான் வருவாங்களா அந்தம்மா”

“நேத்தே ஸ்டேஷன்க்கு போன் பண்ணி சொல்லியிருந்தேன் தானே” என்றார் அந்த அதிகாரி.

“சார் அவங்க வந்திட்டாங்க அப்போவே” என்றார் இவர்.

“அவங்களுக்கு வெத்தலை பாக்கு வைக்கணுமா?? வரச்சொல்லுங்க” என்று அவர் சொல்லவும் “சார்” என்று மெல்லினா முன்னே வந்தாள்.

அந்த அதிகாரியின் முன் வந்து அவள் நிற்கவும் அவளை மேலிருந்து கீழாக முழுவதுமாக பார்த்தார் அந்த அதிகாரி. அது அளவிடும் பார்வையல்ல என்பதை அவரை பார்க்காமலே அவளால் உணர முடிந்தது.

அவஸ்தையுடன் “சொல்லுங்க சார்”

“பேரென்ன??” என்றவரின் பார்வை அவள் விழிகளை நோக்காது அதற்கு கீழே தான் இருந்தது.

“மெல்லினா” என்றாள்.

“கேக்கலை சத்தமா சொல்ல மாட்டீங்களா காலையில சாப்பிடலையா??”

“சார் மெல்லினா சார்” என்றாள்.

“உங்களுக்கு ஒரு வேலை இருக்கு”

“சொல்லுங்க சார்”

“நேத்து ஒரு கம்பிளைன்ட் வந்துச்சு. சைபர்க்கு போக வேண்டிய கேஸ் நம்ம தலையில கட்டிவிட்டாங்க. ஒருத்தர் ஒரு பொம்பளைக்கு அனானிமஸ் கால் பண்ணி தப்பு தப்பா பேசுறனாம். ஆரம்பத்துல இந்தம்மாவும் பேசி இருக்கு. அவன் அந்தம்மாகிட்ட பணத்தை கறந்திருக்கான் எக்கச்சக்கமா”

“ஒரு கட்டத்துல தான் அவங்களுக்கு புரிஞ்சிருக்கு எங்கயோ தப்பு நடக்குதுன்னு. ஆளு நல்ல வசதியான பார்ட்டி தான். இப்போ நம்மகிட்ட வந்திருக்காங்க”

“நான் என்ன சார் பண்ணனும்??”

“அந்தாளு நம்பர் தர்றேன். நீங்க பேசுங்க அவன்கிட்ட, பேசிப்பேசி அவனை உங்களை பார்க்க வரவைக்கறீங்க. அப்புறம் அவனை ஒரே கொத்தா தூக்கி உள்ளே போட்டிற வேண்டியது தான்” என்று அவர் வெகு சுலபமாக சொல்லி முடிக்க மெல்லினாவிற்கு திக்கென்றிருந்தது.

இந்த வேலையில் ஒன்றென்ன இது போல ஓராயிரம் வரும் என்று அவள் அறிவாள் தான் ஆனாலும் பயமாக இருந்தது அவளுக்கு.

“சார் நான் எப்படி??”

“சின்ன குழந்தையா நீ?? எப்படின்னு உனக்கு கிளாஸ் எடுக்கணுமா என்ன??” என்றார் அவர் வெடுக்கென்று.

அவள் பார்வை கோவிந்தனை நோக்கிச் செல்ல அவர் சரியென்று சொல்லுமாறு சைகை காட்டினார். “நான் இங்க பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு அங்கென்ன பார்வை” என்று அதற்கும் அவர் அவளை காய்ந்தார்.

“சரி சார்” என்று அவள் சொல்லவும் அந்த எண்ணை அவளிடம் கொடுத்தார்.

“சீக்கிரம் பேசு, இப்போவே என் முன்னாடியே பேசு. நீ எப்படி பேசுறேன்னு நான் பார்க்கணும்” என்று அவர் சொல்ல இதென்ன சோதனை ஆண்டவா என்றிருந்தது அவளுக்கு.

“சீக்கிரம் எனக்கு நேரமாகுது. டிஎஸ்பி வேற உள்ள இருக்காரு, அவரோட நான் குன்னூர் வரை போற வேலை இருக்கு” என்று அவர் அவசரப்படுத்த வேறு வழியில்லாது இவள் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.

மெல்லிய குரலில் இவள் பேசுவதை காதில் வாங்கியவரின் விழிகள் எங்கெங்கோ பாய்ந்தது. அவருக்கு வயது ஐம்பதை தாண்டியிருக்கும். மகள் வயது உடையவளை அவர் பார்க்கும் பார்வையே வேறு விதமாய் இருந்தது. ஒரு வழியாய் பேசி முடிந்த மெல்லினா நிமிர்ந்து அவரிடம் “சார் பேசிட்டேன்”

“இப்படித்தான் பேசுவாங்களா?? குரல்ல ஒரு ஏத்த இறக்கமே இல்லை. ஆமா நீயெல்லாம் எப்படி இந்த வேலைக்கு வந்தே??” என்றார் அவர்.

“சார் வந்து…”

“எக்ஸாம் எழுதினியா??”

“சார் மெல்லினா நம்ம ஆனந்தனோட பொண்ணு”

“யாரு ஹார்ட் அட்டாக்ல செத்து போனானே அவனா??”

“ஆமா சார்”

“கோவிந்தன் நீங்க போய் டீ வாங்கிட்டு வாங்க” என்று அவரை வெளியே விரட்டிவிட்டார். இன்னும் சிலரும் அங்கு இருந்தனர், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு.

“கூடப்பிறந்த அண்ணன் தம்பின்னு யாருமில்லையா??”

“இல்லை சார்”

“ஓ!! அதான் பொம்பிளை பிள்ளைக்கு வேலையை கொடுத்திட்டாங்களா??”

அவள் பதில் பேசாது நின்றிருந்தாள். “நீ மட்டும் தானா வீட்டில??”

“அம்மா, தங்கச்சி இருக்காங்க சார்”

“ஹான்… உங்கப்பன் செத்து உனக்கு வேலை கிடைச்சிருக்கு அப்படித்தானே” என்றார் அவர் மீண்டும்.

அவளுக்கு கோபமாக வந்தது. அவரைப் பொறுத்தவரை அவளின் அப்பா அவருக்கு வயதில் சிறியவராகவோ பெரியவராகவோ எப்படி வேண்டுமாலும் இருக்கலாம். அவளுக்கு அவர் அப்பா, அதுவுமில்லாமல் அவர் உயிருடனும் இல்லை. இறந்தவரை பற்றி பேசும் போதாவது அவர் இவர் என்று கூறலாம் தானே என்ற ஆத்திரம் அவளுக்கு.

மேலதிகாரி என்பதால் பேசாமல் நின்றிருந்தாள். “ஆமா நான் போன முறை வந்திருக்கும் போது நீ இங்க இல்லையே??”

“எக்ஸாம் நடந்திட்டு இருந்துச்சு சார். லீவ்ல இருந்தேன்”

“படிக்கிற பிள்ளைக்கெல்லாம் வேலையை தூக்கி கொடுத்திருக்கானுங்க. இப்படி ஒடிஞ்சு போய் மெல்லிசா இருக்கேன்னு தான் உனக்கு உங்கப்பன் மெல்லினான்னு பேரு வைச்சிருக்கானா” என்று அவர் பேசவும் அவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

சட்டென்று எதிர்த்து பேச முடியாது. அவள் சூழல் அப்படி படித்துக் கொண்டிருக்கும் தங்கைக்கு அவள் என்ன வழி செய்வாள். திடிரென்று மாரடைப்பில் அவளின் தந்தை இறப்பார் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

ஒரே நாளில் அவர்களுக்கு உறவுகள் யார் என்பதை அடையாளம் காண வைத்த தருணங்கள் அது. அவளுக்கென்று ஓர் வேலை கிடைக்கவும் தான் வாய் மூடி பேசாமல் இருக்கிறது அவளின் சொந்தங்கள். எல்லாம் யோசித்து அமைதி காத்தவளால் அதற்கு மேல் முடியும் போல் தோன்றவில்லை.

“சார் நான் கிளம்பட்டுமா??”

“பேசிட்டு இருக்கேன் கிளம்பறேன்னு மரியாதை இல்லாம பேசறே??”

“சொல்லுங்க முக்கியமான விஷயம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் கேட்டுக்கறேன். இல்லைன்னா சொல்லுங்க நான் கிளம்பறேன், எனக்கு கந்தன் சார் கொஞ்சம் வேலை கொடுத்திருக்காரு அதை பார்க்கணும்” என்று அவள் கட்டன் ரைட்டாக சொல்ல இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று அமைதியாகிவிட்டார் அவர்.

“சரி போ” என்று அவர் சொல்லவும் வெளியே வந்தாள்.

அந்த ஊட்டி குளிரிலும் அவளுக்கு வியர்த்தது. வெளியே வந்த பின்பு தான் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது அவளால்.

இன்று

———–

“யோவ் இவன் எங்கய்யா இங்க வந்தான்” என்றார் தயாளன். 

“யாரை சொல்றீங்க??”

“அதான் அந்த ஆத்திரேயன்??”

“அவர் வராம வேற யாரு வருவாங்களாம். இவர் தானே இந்த டீம்க்கு ஹெட்டு”

“என்னய்யா சொல்றே??”

“என்ன தயாளன் தெரியாத மாதிரி கேட்கறே??”

“நிஜமா தான் கேட்கறேன் இவன் கான்ஸ்டபிள் தானேய்யா…”

“எப்போ பார்த்த அவரு கான்ஸ்டபிளா இருந்ததை”

“என் ஸ்டேஷன்ல தான் இருந்தான்??”

“யோவ் தயாளு மரியாதை இல்லாம பேசாதய்யா. அவருக்கு புடிக்காது, சின்னவரு பெரியவரு பார்க்க மாட்டாரு. லெப்ட் ரைட் வாங்கிடுவாரு”

“இவன் இப்படி இங்க அதை முதல்ல சொல்லுய்யா”

Advertisement