Advertisement

கொஞ்சும் மொழியடி

         “சுமதி.. சுகர் மாத்திரை போட்டுக்கிட்டியா…” என பைகளை எடுத்து வைத்துக் கொண்டே மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் செந்தில்.

“போட்டுட்டேன்ங்க… ஏங்க… அந்த ரெண்டு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கலாமாங்க.. அங்க ரூம்ல வச்சுக்கலாம்.” என ஆசையாக கேட்ட மனைவியைப் பார்த்த செந்தில்..

“நீ என்ன சொன்னாலும் கேக்கப் போறது இல்ல… வை… வை. . ” என்றவர் தானும் தன் பைகளை எடுத்து வைத்துக் கொண்டார்.

“ஏங்க அந்த ஃபோட்டோவ மட்டும் எடுத்துக்கலாம்ங்க..” என ஆசையாக கேட்ட மனைவியைப் பார்த்தவர் ,

” உன்னையக் கல்யாணம் பண்ணின நாள்லருந்து.. நீ என்ன சொன்னாலும் சரினு தானடி சொல்றேன்..” என்ற செந்திலின் கண்களில் இன்றும் வற்றாத காதல் தான்.. அதை நாணத்துடன் கேட்டுக் கொண்ட சுமதி ,தங்களுக்கு தேவையானதை எடுத்துக் காரில் வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே வந்து அந்த வீட்டை ஆசையாக ஒரு முறைப் பார்த்துக் கொண்டார். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கட்டியவராகிற்றே…

மனைவியின் கையைப் பிடித்துக் கொண்ட செந்தில் , ” வண்டில ஏறு..” என்றவர் … சுமதியை உள்ளே அமர வைத்து விட்டு தானும் அருகில் அமர்ந்துக் கொண்டார். கண்களில் நீருடன் அந்த தெருவின் முனை வரை வீட்டையேப் பார்த்துக் கொண்ட வந்த சுமதியின் இடது கரத்தினை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார் செந்தில்.

கார் சாலையில் முன்னோக்கி செல்ல .. அவர்களின் நினைவுகள் பின்னோக்கி சென்றது… முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு …

       ஒரு மாலை வேளை ராஜன் பரபரப்பாக இருந்தார்.. அவர் ஒரு அரசாங்க வங்கியின் கடைநிலை ஊழியர். அந்த வங்கியில் அவருடன் பணிபுரிந்த நண்பரின் உறவினர் மகனை ராஜனின் மூத்த மகள் சுமதிக்கு மாப்பிள்ளையாக அழைத்து வருவதாக இருந்தார். பையனும் புதிதாக வேறு ஒரு அரசாங்க வங்கியில் இளநிலை உதவியாளனாக பணியில் சேர்ந்திருந்தான்.அதனாலயே ராஜனுக்கு இந்த பரபரப்பு.

சுமதி இருபதை நெருங்கும்  இளம்பெண் .. கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி முடிய இன்னும் நான்கு மாதம் இருக்கிறது. ஆனாலும் பையன் தன்னைப்போலஅரசாங்க வேலை.. மகளின் வாழ்வு நிம்மதியாக இருக்கும் என்ற ஆசையில் உடனே பெண் பார்க்க வரச் சொல்லியிருந்தார்.

வந்தது செந்தில் தான் … பி.ஏ.படித்திருக்கிறான். தந்தை அவன் அரசாங்க பணியில் சேர்ந்தஒரு வருடத்தில் தவறியிருக்க தாய் மட்டுமே.. அவரும் கிராமத்தில்  இருக்கிறார். விவசாயக் குடும்பம்.. அவன் தந்தை இருந்தவரை கஷ்டமின்றி இருந்தார்கள். அது வானம் பார்த்த பூமி… மழையை நம்பியே விவசாயம்.. செந்தில் படித்துக் கொண்டிருந்ததால் அவனுக்கு விவசாயம் அவ்வளவாக தெரியவில்லை. எனவே நிலங்களை தெரிந்தவர்களுக்கு குத்தகைக்கு விட்டு இருக்கிறார்கள். ஒரு அக்கா ஒரு தங்கை… அக்காவிற்கு தந்தை தான் செழிப்பாக திருமணம் செய்து வைத்திருந்தார். 

ஆனால் அவர் மறைவிற்கு பின் தலைகீழ் மாற்றம் .. எனவே  தங்கைக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு அவனுடையதானது. இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு திருமணம்.. அக்காவிற்கு அவர் தந்தையின் தங்கை குடும்பத்தில் திருமணம் செய்து விட்டார்கள்.செந்தில் வங்கிப் பணியில் சேர்ந்து மூன்று வருடங்களாகிறது. தங்கைக்கு தன்னைப்போல் ஒரு அரசாங்கப் பணியில் உள்ள மணமகனைத் தேர்ந்தெடுத்து செந்தில்தான் திருமணம் செய்து வைக்கிறான். அவனுக்கும் வயது இருபத்து எட்டு முடியப் போகிறது என்பதால் பெண் பார்க்கச் சொல்லியிருக்க இதோ அவனது உறவினர் சுமதியைப் பார்க்க அழைத்து வந்திருந்தார்.

வீட்டினுள் வந்து அமர்ந்தவன் அந்த வீட்டின் ஒரு அறையிலிருந்து தலையை தலையை நீட்டிப் பார்க்கும் சிறுவனை “வா.. ” என அழைக்க.. அவன் தன் பக்கத்தில் சுவற்றை ஒட்டி அமர்ந்திருந்த தன் அக்காவிடம் ,

“அக்கா அந்த ஆளு என்னையக் கூப்பிடுறான்…” என்றான்.சுமதி… ” ஷூ.. ஆளுனு எல்லாம் சொல்லக் கூடாது.. ” என்றாள்.அவள் அருகிலேயே அமர்ந்திருந்த சுமதியின் தங்கை பத்மா..

“ஆமாம் டா… அம்மா சொன்னாங்க அக்காவ கல்யாணம் பண்ண போறவங்கள அத்தான்னு சொல்லணுமாம்..” என்றாள். பத்மா பனிரெண்டாம் வகுப்பும் அவளுக்கு அடுத்துப் பிறந்த செல்வன் ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தான். அதற்குள் செந்தில் மீண்டும் “வா” என சைகை செய்ய அவனருகில் சென்றான் செல்வன். அவனிடம் என்னப் படிக்கிறாய். உனக்கு என்னப் பிடிக்கும் என்பது போல் பேசியவன் தான் கொண்டு வந்திருந்த பிஸ்கட்டுகளும் ,பழங்களும் நிரம்பிய ஒரு பையைக் கொடுத்தான்.

தந்தை சம்மதம் கொடுக்க .. அதனை வாங்கிக் கொண்ட சிறுவன் அக்காவிடம் சென்றான். அதன் பிறகு பெண்ணை அழைத்து வந்து செந்தில் முன் நிறுத்த… அவனுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது.சுமதி அறைக்குள் சென்றவுடன் செந்திலே.. தன்னை அழைத்து வந்திருந்த தன் தாய் மாமனிடம் ,

“மாமா நான் உங்க கிட்ட முதல்லயே சொன்னது தான்… தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் என் கல்யாணத்த வச்சுக்கணும்னு நினைக்கிறேன்… இவங்க அதுவரைக்கும் காத்திருப்பாங்கன்னா சரி… இல்லை இடையில என்னை விட நல்ல வரனா வந்தா அவங்க விருப்பம்… ” என்று விட்டு அவன் மட்டும் முதலில் கிளம்பி விட்டான்.

ராஜன் தன் தோழனிடம் , “என்ன சகல பையன் இப்படி சொல்லிட்டு போறாப்புல… “

“அது சகல உன் பொண்ண புடிக்கப் போய் தான்.என் அக்கா மகன் இப்படி உன் முன்னாலயே சொல்லிட்டுப் போறாப்புல… இல்லனா எனக்குத் தெரிஞ்சதையே திரும்ப சொல்லுவானா… அவன் தான் தங்கச்சி கல்யாண செலவெல்லாம் பாக்குறான்… அடுத்த ரெண்டு மாசம்னா அவன் கல்யாண செலவையும் அவனே பார்த்துப்பான். பொண்ணு வீட்ல செய்வாங்கனு காத்துட்டு இருக்கிற ஆள் கிடையாது என் மருமவன் … அவன் அக்காவுக்கு ரெண்டும் பொட்ட புள்ளைக … அதுக ரெண்டுக்கும் இப்பதான் காது குத்துக்கு செஞ்சான்… தங்கச்சி கல்யாணத்தையும் உடனே வச்சுட்டான்..அதான் இப்படி சொல்லிட்டுப் போறான். எங்க அக்கா தான்.. விட்டா இவன் அக்கா தங்கச்சினு தான் பார்ப்பான்னு பயந்துருச்சு..

 ஒரே புள்ளல அவன் கல்யாணத்தையும் பார்க்க ஆசைப்பட்டு எங்கிட்ட சொல்லிச்சு… நானும் ரெண்டு இடம் சொன்னேன். அப்பலாம் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன் உன் மகள பார்த்துட்டுத்தான் காத்துட்டு இருப்பியானு கேட்கிறான்..இனி உன் இஷ்டம் தான் ராஜா…” என்றவரும் கிளம்பி விட்டார்.

இது எல்லாம் சுமதியின் காதுபடவே இருக்க… அவள் செந்திலை நன்றாகப் பார்த்தாளோ இல்லையோ… ஆனால் அவன் குணங்களை அறிந்தவள் அவனே மணமகனாக வர விரும்பினாள். அவன் பெயர் செந்தில் எனவும் .. தனது நோட்டு முழுவதும் முருகா முருகா என எழுத ஆரம்பித்தாள். அவள் கல்லூரிக்கு செல்லும் போதும் வரும் போதும் தெரியும் திருப்பரங்குன்றத்தில் வேண்டிக் கொண்டாள்.. செந்தில் தான் வேண்டுமென்று.

ராஜனும் செந்திலின் தங்கை திருமணத்திற்கு அழைக்கப்பட்டு இருக்க.. நேரில் அவனது பொறுப்பான செயல்களை கவனித்தவர் திருமணத்திலேயே செந்திலின் தாயிடம் பேசி தன் மகளைத் தர சம்மதித்து இதோ இன்றுக்காலை அவனது ஊரிலேயே வீட்டின் முன் பந்தலிட்டு திருமணமும் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது.

அன்று மாலையே சுமதி வீட்டிற்குச் சென்று மறு வீடு சடங்கு முடிந்து செந்திலின் வீட்டிற்கு கிளம்ப ராஜன் டாக்ஸி பிடித்திருந்தார்.அதுவரை புதுப்பெண்ணாக செந்திலோடு அமர்ந்திருந்தவளுக்கு இப்போது அழுகை வர ஆரம்பித்துவிட்டது அம்மா தம்பி தங்கை என மாற்றி மாற்றி அவளைப் பிடித்துக் கொண்டு அழ … செல்வனோ… செந்திலிடம் ,

“எங்க அக்கா கூட நீங்க இங்க இருங்க” என்றான்.செந்திலுக்கு அந்த பாசம் மிக்க குட்டி மைத்துனனை அதிகம் பிடித்து விட்டது. அனைவரையும் சமாளித்து பின்புறம் ஒரு வேன் நிறைய சீர் வரிசைப் பொருட்களோடு புகுந்த வீடு பயணமான சுமதி அவர்கள் தெருவைத் தாண்டும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அன்று அவள் வலக்கையைப் பிடித்து , ” நான் இருக்கிறேன்…. ” என்றுணர்த்தியவன் அதன் பின்னர் விடவே இல்லை. மாமியார் வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையில் இரும்பு கட்டிலில் மெத்தை போட்டு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்ப்பட்டு இருக்க.. வெகு நேரம் கழித்து வந்தவன்.. கல்லூரியில் பரிட்சை எப்படி எழுதியிருக்கிறாய் என ஆரம்பித்தவன்.. பின் பள்ளியறை பாடங்களை பயிற்றுவித்து தாம்பத்திய பரிட்சையையும் அவளை எழுதவைத்தான்.

காலை எழுந்து தாயின் அறிவுரைப்படி செந்தில் வீட்டு பின்புறம் இருந்த குளியலறையில் குளித்து முடித்து விளக்கேற்றியவளிடம் காஃபி போட்டுக் கொடுத்த செந்திலின் அம்மா பின்புறத் தோட்டத்தில் குளித்து முடித்து வந்துக் கொண்டிருந்தவனிடம் கொடுக்கச் சொன்னார்.சுமதி எடுத்துக் கொண்டு சென்ற நேரம் அன்றைய நாளிதழை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை… எப்படி அழைப்பது என தெரியவில்லை. அவன் முன் சென்று நிற்கவும் இடமில்லை.. ஒரு வழியாக தன் நாணத்தை எல்லாம் கை விட்டு,

“என்னங்க..” என்றழைத்தாள்.

இரவில் அரங்கேறிய அழகிய தாம்பத்தியத்தில் “இவன் என்னவன்” என்ற உரிமையில் அழைத்த அந்த வார்த்தையில் தான் எத்தனை காதல்… மனைவி தன்னை அழைத்த அந்த முதல் அழைப்பில் ..செந்தில் மயங்கித் தான் போனான்.. இரவில் அவன் பேசியதற்கு ம்… ம்ஹூம்… என்ற பதில் தானே கிடைத்தது. திரும்பி நின்று அவள் முகம் பார்க்க. அவன் பார்வை வீச்சுத் தாங்காமல் “காஃபி” என்றவள் , அவன் அதை வாங்கிக் கொண்டதும் முகம் சிவக்க ஓடி விட்டாள்.

அடுத்து மறு வீடு செல்ல … அன்றைய தினம் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த “கரகாட்டக்காரன்” படத்திற்கு மனைவியை அழைத்துச் செல்ல விரும்பியவனிடம்..”என்னங்க..” என்றவள் கண்களாலயே தம்பி தங்கையைக் காட்ட … வாருங்கள் குடும்பத்தோடு போகலாம் என அழைத்துச் சென்றான்.

அவனுக்கு பணி மாற்றம் ஆகி தில்லி செல்ல … சென்றதுமே… “என்னங்க ” என கிசுகிசுப்பாக வெட்கத்துடன் அழைத்து தன் வயிற்றில் அவன் கையை வைக்க … செந்தில் வானில் தான் பறந்தான்.

முதலில் பெண் குழந்தை பிறக்க … அதே நேரம் பதவி உயர்வும் வர … செல்ல மகளை சீராட்ட சொல்லவா வேண்டும். அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு மகனையும் பெற்றுக் கொடுத்த தன் மனையாளின் மீதான காதல் பெருகிக் கொண்டே போனது. விடுமுறைக்கு டெல்லி வரும் தன் மைத்துனன் மைத்துனி இருவரையும் சொந்த தம்பி தங்கை போல் பார்த்து பார்த்து செய்வான் செந்தில்.

செந்திலின் தம்பி முறையில் இருந்த உறவுப் பையன் மத்தியரசுப் பணியில் சேர்ந்திருந்தான். செந்தில் மகன் காதுகுத்துக்கு வந்தவனுக்கு பத்மாவை பிடித்திருக்க அவளைப் பெண் கேட்டனர்.ஒரு நாள் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிவிட்டு வைத்த சுமதி.. குழந்தையிடம் விளையாடிக் கொண்டிருந்தவனிடம் ,”என்னங்க…” என்றாள். குரலும் முகமும் காட்டும் வேறுபாடு அறியாதவனா..

“என்னடி … என்னாச்சு… ” எனப் பதறிப் போய் கேட்டான். ஊரில் ஏதேனும் அசம்பாவிதமோ என்று..சுமதியோ…”அதெல்லாம் இல்லங்க…உங்க சித்தி.. பத்மாவுக்கு கூட பதினஞ்சு பவுன் கூட போட்டா நல்லாருக்கும்னு சொன்னாங்களாம்.. சென்ட்ரல் கவர்மென்ட் வேலை …” என்றவள் … மீண்டும்’ என்னங்க ‘ என .. “இப்ப நீ என்ன செய்யனும்னு சொல்ற..” என சரியாக மனைவியை கணிக்க … முகத்தில் மலர்ச்சியுடன்…

“அதுங்க எனக்கு தான் நீங்க நிறைய வளையல் செயினு எல்லாம் வாங்கி கொடுத்துருக்கீங்களே… இன்னும் கூட நாம வாங்குவோமேங்க … அது தான் அப்பா எனக்கு போட்ட இருபத்தஞ்சு பவுன்ல பதினஞ்சு பவுன நாம பத்மாவுக்கு கொடுத்துடுவோமாங்க..” மனைவி கேட்ட விதத்தில் சிரிப்பு வந்தாலும் அவளது குடும்ப பாசம் உணர்ந்தவன் ,

” நான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லி தானடி உன்னைய பொண்ணு கேட்டேன்.. அதுக்கு உங்கப்பா எனக்கு என்ன கோளாறுனு பேங்க் வாசல்ல நின்னு வேவு பார்க்குறாரு..”…எனறவனிடம் ,

“ம். எங்கப்பாவ குறை சொல்லாதீங்க… நாளைக்கு நாமளும் நம்ம பாப்பாவுக்கு அப்படித்தானே பார்க்கணும்.” என்றவளைப் பார்த்து சிரித்தவன் ,

“அது சரி.. உங்கப்பாவ குறை சொல்ல விட மாட்டியே…அது உங்கப்பா போட்டது .. அவருகிட்டயே கொடுத்துடலாம்…”அது தானே வேணும் அவளுக்கு .. இப்போது மலர்ந்த முகத்தோடு ‘என்னங்க ‘ வர… கணவனுக்கு வேறு என்ன வேண்டும்.

காலங்கள் ஓட ஊர் ஊராக மாற்றலாகிச் சென்றவனுக்கு சென்னையில் பதவி உயர்வோடு வேலையில் அமர… அவனது அக்கா மகள்கள் பூப்படைந்த செய்தி வர… இருவருக்கும் ஒரே நாளில் விழா எடுக்க முடிவாகி இருக்க… செந்திலின் தாயாரின் சொல்படி சீர்சாமான்களை வாங்கிக் கொண்டிருந்த சுமதி …”என்னங்க..” என வந்து நின்றாள். அவளை உணர்ந்தவனிடம் ,

“நாம மதினி மகளுங்க ரெண்டு பேருக்குமே அஞ்சு அஞ்சு சவரனுக்கு செய்துடலாம்ங்க.. நம்ம மதுரைல பார்த்து வச்ச இடத்தை அப்புறம் முடிச்சுக்கலாம்ங்க..” அவளை நன்கு உற்றுப் பார்த்தான். அவள் ஆசையாக பணம் சேர்த்து வைத்து அந்த நிலத்தை கிரையம் செய்ய விரும்பி இருந்தாள்.. ஆனால் இப்போது ..

“அதுனால என்னங்க… நீங்க இதை விட பெரிய பெரிய பதவி உயர்வு வாங்குவீங்க.. நாம அப்ப வாங்கிக்கலாம் … “என்ன அழகான ஆறுதல்.. சிரித்தவன் அவள் சொன்னது போலவே செய்தான்.

அன்று குழந்தைகளோடு ஹோட்டலில் சாப்பிட சென்றிருக்க… வழக்கம் போல்  கணவனிடம் ‘என்னங்க …ஆ’ என முதல் கவளை உணவை வாங்கிக் கொண்ட சுமதியிடம் ,

” இப்ப சரி தான் … நம்ம பசங்க வளர்ந்ததும் எப்படி ஊட்டுறது.. ” என்றவனிடம் ,

” அப்பவும் நான் தான் முதல்ல டேஸ்ட் பார்ப்பேன்ங்க.. வீட்ல நான் பார்த்து பார்த்து செய்வேன்… வெளில என்ன எண்ணையோ தெரியல … நான் சாப்பிட்டுப் பார்த்து நான் நல்லாருக்கேன்னு தெரிஞ்சப் பிறகு தான் உங்களையே சாப்பிட விடுறேன்… நம்ம பிள்ளைங்கள அப்படி விட்டுருவேனா… எனக்கு எதுனாலும் நீங்க பார்த்துக்குவீங்க… உங்களுக்கு ஒன்னுனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.”

இது தான் சுமதி .. அவள் காதலை இப்படித்தான் வெளிப்படுத்துவாள். இப்படி அழகான நாட்கள் செல்ல . செல்வனுக்கு பொறியியல் சேர வாய்ப்பு கிடைக்க.. “என்னங்க…” என செந்திலிடம் வந்து நின்றாள்.

” தம்பிக்கு அப்பா எல்லாம் பண்ணிட்டாரு… இருந்தாலும் நல்ல நல்ல சட்டை.. ஷூ எல்லாம் வேணுமின்னு கேட்கிறானாம்…”

” வாங்கி கொடுத்துரலாம்.” என்றவன் மனைவி கேட்டு செய்யாமலா இருப்பான். ஆனால் அன்று மட்டுமா… அவன் கல்லூரி முடிக்கும் வரை ..” அக்கா டேப் ரிக்கார்டர் சூப்பரா இருக்கு …… அக்கா இந்த டெக் … அக்கா அத்தான் என்ன சென்ட் போடுறார் .. “தம்பி கேட்டாலே போதும்,” எடுத்துச் செல் என சொல்லிவிடுவாள். ஒரு நாள் குளியலறையிலிருந்து துண்டுடன் திரும்பி வந்தவன் , தான் புதிதாக வாங்கியிருந்த ஷேவிங் லோஷனைத் தேட.. பின்னாடியே வந்த சுமதி ,

” அதுங்க.. செல்வன் அன்னைக்கு வந்தான் ல..” என ஆரம்பிக்கவும் , “இருடி ” என்றவன் மறுபுறம் திரும்பி நின்று துண்டை அவிழ்த்து மீண்டும் கட்டியவாறு..

” நல்ல வேலை இருக்கு…” என.. “என்னங்க…” என்ற கொஞ்சல் வார்த்தையில் சிணுங்கியவளை அணைத்துக் கொண்டவன்,

“பின்ன விட்டா உன் தம்பி போட்டிருக்கிற ஜட்டியக் கூட உருவிட்டு ஓடிருவான் டி…”

“ம்.. ம். சீ.போங்க…” எனச் சிணுங்க…, போய் கதவடைத்து வந்தவன் , “பிள்ளைங்க ஸ்கூலுக்கு போயாச்சு… வீட்ல நீயும் நானும் தான் … இப்படி சினுங்கினா..” அதற்கு மேல் அங்கு என்ன ..

வருடங்கள் உருண்டோட தங்கள் பெற்றோர் குடும்பத்தையே பார்த்தவர்கள்..தங்கள் குடும்பத்தையும் பார்க்க.. மகளின் இருபத்து இரண்டாம் வயதில் திருமணம் முடித்து அவளை அமெரிக்காவிற்கு அனுப்ப … மகனும் கல்லூரிப் படிப்பிற்காக ராஜஸ்தான் செல்ல … செந்திலுக்கும் சுமதிக்கும் அவர்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் தனிமைக் கிடைக்க … வாழ்க்கையை அழகாக அனுபவித்தார்கள். அதுவும் மகளின் பிரசவத்திற்கு சுமதியை அழைக்க.. கணவனை விட்டுப் பிரிய மனமின்றி சென்றார்.

அதன் பிறகு மகனுக்கும் அமெரிக்காவிலேயே வேலைக் கிடைக்க அவனும் இப்போது அங்கு தான். அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமையை முடித்த செந்தில் மனைவிக்காக மதுரையில் அவள் விரும்பிய இடத்தில் பார்த்து பார்த்து வீட்டைக் கட்டி குடியிருக்க , செந்திலும் ஒய்வு பெற்றார். அவருக்கு கிடைத்த பணத்தை மகன் மகளுக்கு சரிசமமாக பங்கிட்டு கொடுக்க … மகள் தனக்கு தேவையானதை எல்லாம் பட்டியலிட.. கணவனிடம் … ” என்னங்க ” என வந்து நின்ற சுமதி கேட்டதை செய்யாமலில்லை.

ஒரு முறை சுமதிக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட… கூட இருந்து கவனித்துக் கொண்டது செந்தில் மட்டுமே…

பத்மா வந்து பார்த்தவள், “அக்கா திவ்யா  ரெண்டாவதுபிரசவத்துக்கு வந்திருக்கா… நானில்லனா முடியாது.. உனக்கு அத்தான் இருக்காருல்ல..” என்று விட்டுச் சென்று விட்டாள்.

இப்போது ராஜனும் , செந்தில் தாயாரும் உயிருடன் இல்லை …சுமதியின் அம்மா மட்டும் செல்வனோடு அவன் தற்சமயம் வேலை பார்க்கும் பெங்களூரில் இருக்கிறார். செல்வனும்.. தொலைப்பேசியில் நலம் விசாரித்தவன் ,

“அக்கா.. வந்துப் பார்க்க முடியலனு கோவிச்சுக்காத … அவளும் வேலைக்குப் போய்டுவா…அம்மாதான் என் பிள்ளைங்கள பார்க்கணும்… அத்தான் வீட்லதான இருக்காங்க..உன்னைய அத்தான் நல்லா பார்த்துக்குவார்.. இல்லனா ஆளு வச்சுக்க அக்கா…” என அறிவுரைக் கூறினான்.செந்தில் சுமதி ஒவ்வொருவரிடம் பேசுவதையும் அவள் முகமாற்றங்களையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. பிள்ளைகளோ தூர இருந்து அவளிடம் வீடியோ காலில் நலம் விசாரித்ததோடு சரி … யாரும் உடனே நேரில் வந்துப் பார்க்கிறோம் என வில்லை.

ஒருவருக்கு ஒருவர் அவர்களே அவர்களைப் பார்த்துக் கொள்ள… மகனுக்கும் திருமணம் முடித்து அனுப்பி விட்டனர். நான்கு மாதத்திற்கு முன்புதான் அவனுக்கும் குழந்தை பிறந்திருக்க … வெளிநாடு செல்ல இருவர் உடலும் ஒத்துழைக்கவில்லை. இரண்டு மாதத்திற்கு முன் ஃபோன் செய்த செந்திலின் மகன் விசாகன்,

“ப்பா… நான் சம்பாதிச்ச பணத்துல சென்னைல அபார்ட்மென்ட்  வாங்கிட்டேன் இல்லையா.. எப்படியும் நம்ம வீடு எனக்குத் தானே.. அதை இப்பவே தாறீங்களாப்பா.. சினேகாவுக்கு நம்ம வீடு ரொம்ப பிடிச்சிருக்காம்… ஆனா அவ விருப்பத்துக்கு இன்டீரியர் பண்ண ஆசைப்படுறா… அதுவரை நீங்க நம்ம தாத்தா வீட்ல இருக்கலாம்லப்பா… அது கிராமத்து வீடா இருந்தாலும் இப்ப நாம எடுத்துக் கட்டியிருக்கோம் இல்லையா… எல்லாம் முடிச்சதும் அங்க வாங்க..”

மனம் வலித்தாலும் செந்திலை யோசிக்க விடவில்லை சுமதி …”என்னங்க…” என்ற  அவரின் தொனியிலயே மனைவியைப் பார்க்க…

“என்னங்க.. எல்லாம் நம்ம பிள்ளைக்கு தானங்க… நம்ம பாப்பா கேட்டது எல்லாம் செய்தோம்தானே… விச்சுக் குட்டிக்கும் இதைக் கொடுத்ததரலாம்ங்க.. பிள்ள ஆசையா கேக்குறான்.. “

அவள் அப்படித்தான்.. வயதில் தன் பெற்றோர் தம்பி தங்கைகள் … செந்திலின் தாய்.. அவனின் உடன் பிறந்தவர் எனப் பார்த்தவள்.வயது போன பின் தன் பிள்ளைகள் எனப் பார்ப்பாள் எனத் தெரியும்.. ஆனால் அவளை அவன் தானேப் பார்த்துக் கொள்ள வேண்டும். மகன் கேட்டான்.. மகள் கேட்டாள் என அத்தனையையும் தூக்கிக் கொடுத்தவர்கள் இன்று தங்கள் குடியிருந்த வீட்டையும் விட்டு கிளம்பினார்கள்.

வெகு நேரம் ஏதேதோ சிந்தனையில் வந்தவள் பாதை அவர்கள் கிராமத்துப் பக்கம் செல்லாது வேறு எங்கோ செல்வதைப் பார்த்து கணவரிடம் கேட்க…

“ஏன்டி… நமக்கு வயசாகிருச்சு.. எதுவும் அவசரம்னா அங்கயிருந்து டவுனுக்கு ஓடிவர முடியுமா.. அப்புறம் நாளைக்கு உன் பேரன் ஆசைப்பட்டான்னு அந்த வீட்டையும் கொடுக்க சொல்லுவ… அப்ப நாம வேற வீடு தேட முடியுமா.. அதுதான் நாம முதியோர் இல்லம் போறோம்…” என்றதும்.. “என்னங்க..” என அலறியவரை அமைதிப்படுத்தி மதுரையிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்த.. வரிசையாக வீடுகளும் தோட்டமும் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று.. அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சாவி வாங்கிக் கொண்டு அங்கிருந்த  ஒரு வீட்டைத் திறந்தார்.

எல்லாம் சுமதிக்குப் பிடித்தது போல் அமைக்கப்பட்டு இருக்க… வியந்த மனைவியிடம்..

“நம்ம கல்யாணம் ஆன நாள்லருந்து நீ என்ன கேட்டாலும் செய்துட்டுத் தானே இருக்கேன்.. ஏன்னா நாம ரெண்டு பேரும் நம்ம மேல வச்சுருந்த நம்பிக்கையும் காதலும் அப்படிப்பட்டது..ஆனாலும் நீ மனுஷங்கள படிக்க தவறிட்ட டி.. இது தான் உலகம்.. யார் எத்தனை பேர் இருந்தாலும்… ஏன் நாம பெத்த பிள்ளைங்களா இருந்தாக்கூட கடைசில நானும் நீயும் மட்டும் தான்.. இது தான் யதார்த்தம்..

என் கூடப் பிறந்தவங்க… உன் கூடப் பிறந்தவங்க.. நாம பெத்தவங்கனு நாம பார்த்தது போதும் டி.. இனியாவது நீயும் நானும்னு நம்மள பார்ப்போம்.. தனியா இன்னொரு வீடு நமக்குனு கட்டினாக் கூட அது நம்ம பிள்ளைங்க உனக்கு எனக்குன்ற நிலை வந்துடும்..அதுதான் இந்த சொந்த முதியோர் இல்லம்… முன்னயே புக் பண்ணி வச்சுருந்தேன் .. என்ன இன்னும் கொஞ்சம் வயசான பிறகு போகலாம்னு இருந்தேன்… ஆனா இப்பவே வரவேண்டிய சூழ்நிலை ஆகிருச்சு. கவலைப்படாத இதுல யாரும் பங்கு கேட்க முடியாது. இதை கட்டியிருக்கிற கம்பெனி ரூல்ஸ் அப்படி.. ” என்றவர் அந்த சீனியர் சிட்டிசன் வில்லா பற்றி எடுத்துரைக்க..

என்னங்க… “ கண்ணில் நீருடன் அழைத்த மனைவியை தோள் சாய்த்துக் கொண்ட செந்தில் …

“ஷ்… அழாம இந்த ‘என்னங்க ‘ சொல்லுவியே அது தான் டி அழகு… நான் உன்னையக் கொஞ்சும் போது.. நீ சிணுங்கும் போது… எதுவும் வேணும்னா கேட்கும் போது… வேண்டாம்னு சொல்லும் போது.. கோபப்படும் போது… சிரிக்கும் போது .. ப்பா விதவிதமா நீ கூப்பிடுற இந்த ஒரு வார்த்தைல தானடி இத்தனை வருஷத்த நிம்மதிய கழிச்சிருக்கேன். . கொஞ்சும் மொழியடி அது எனக்கு…” எனப் பாடியவாறு அவள் விழிப்பார்க்க..அப்போதும் வெட்கத்தோடு தோள் சாய்ந்த மனைவியைப் பார்த்து காதல் பெருகாமலில்லை.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் 

ஆனாலும் அன்பு மாறாதது 

மாலையிடும்சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது…

Advertisement