“நான் ஒன்னும் தூங்கல, நீங்கதான்” என குறையாக சொன்னாள்.

“ம்ம்… ஆமாம், எங்க என் தூக்கத்தை கலைச்சு விடு பார்ப்போம்” என அவன் குறும்பாக சொல்ல, அவனது கன்னத்தை கடித்து வைத்தாள் அவள்.

பதிலுக்கு அவனும் கடிக்க, அப்படியே அது வேறெங்கோ சென்றது. பின் அவர்கள் உறங்க வெகு நேரமானது.

பசுபதியின் வீடு பர பரப்பாக இருந்தது. காலையிலேயே லாவண்யா அவளது இரண்டு மகள்களுடன் வந்திருக்க, இப்போது சின்ன மகள் குடும்பமும் வருவதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

லாவண்யாவுக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகள்கள். அம்மாவை போலவே அவர்களும் அப்பாவின் செல்லங்கள். அன்புவுக்கு மனைவியே பாப்பாதான், தன் மகள்கள் எப்படியென கேட்கவும் வேண்டுமா?

தாமதமாக குழந்தை பிறந்தது என்றாலும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என மனதில் அத்தனை ஆசை அவனுக்கு. இரண்டாவது முறை மனைவி கருவுற்ற போது கூட, ‘இதுவும் பொண்ணாயிருந்தா நல்லாருக்குமே’ என நினைத்துக்கொண்டே இருந்தான். அதுவும் நிறைவேறியது.

அம்மாவை டென்ஷன் செய்யும் இரு மகள்களும் அப்பா ஒரு பார்வை பார்த்தால் போதும் இரு கைகளையும் மேலே உயர்த்தி விடுவார்கள்.

“ரெண்டும் அந்நியனுங்க, அப்பாவை பார்த்ததும் எல்லாத்துக்கும் ஓகே ஓகேதான். நான்னா இளிச்சவாய்” என கணவனிடம் குறை படிப்பாள் லாவண்யா.

“உன்னை போலவே இருக்குது என் சாமி ரெண்டும்” என்பான் அன்பு.

சித்தி சித்தப்பா வரப் போகிறார்கள் என்பதில் ஆவலாக  இருந்தனர் இருவரும்.

அவர்கள் வந்து சேர மாலையாகி விட்டது. உறங்கிப் போயிருந்த ஹர்ஷினியை தூக்கிக் கொண்டு மிது இறங்க, தங்களை நோக்கி ஓடி வந்த அண்ணன் மகள்களை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு சுற்றினான் ஜீவா.

“டேய் டேய் விட்ரா, புள்ளைங்களுக்கு தலை சுத்த போகுது” என சொல்லிக் கொண்டே பைக்கிலிருந்து இறங்கினான் அன்பு.

அண்ணனை டென்ஷன் செய்ய இன்னும் இரண்டு சுற்றுகள் சுற்றி விட்டுத்தான் பிள்ளைகளை இறக்கி விட்டான் ஜீவா. தம்பியை முறைத்துக் கொண்டே சின்ன மகளை தூக்கிய அன்பு, “ஒன்னுமில்லையேடா என் தங்கத்துக்கு?” எனக் கேட்டான்.

“பயப்படாதப்பா, ஜாலியாத்தான் இருந்துச்சு” என்றாள் பெரிய மகள்.

“ஆமாம் உன் அப்பா பயப்படவெல்லாம் வேற செய்வாரா?” எனக் கேட்டாள் மிது.

“இல்லை எங்கப்பாக்கு பயமே கிடையாது, எங்கப்பாதான் ஸ்ட்ராங்” என பெருமையாக சொன்னாள் அன்புவின் தலைமகள்.

மிது வேண்டுமென்றே குழந்தையிடம் “உங்கப்பாக்கு எங்கப்பான்னா பயம்” என விளையாட்டு பேச, ஒத்துக் கொள்ளாமல் அப்படி சொன்ன சித்தியை பார்த்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன் அப்பாவின் அருகில் சென்று அவனது காலை பிடித்த படி நின்று கொண்டாள்.

“சும்மான்னு இரு மிது” என அதட்டினான் அன்பு.

“இருங்க எங்கப்பாவை கூப்பிடுறேன்” என்றாள் மிது.

“பேட் சித்தி, நீ இங்க வா சித்தப்பா” என ஜீவாவை தன் கட்சிக்கு சேர அழைத்தாள் குழந்தை.

ஜீவாவும் அண்ணன் மகளை தூக்கிக் கொண்டு, “உங்கப்பாதான் ஸ்ட்ராங், சித்திக்கு தெரியாது” என சமாதானம் செய்து கொண்டே வீட்டுக்குள் சென்றான்.

“வந்த உடனே என் பொண்ண வாட வுடுறியா நீ? இரு இரு, அப்புறம் பேசிக்கிறேன் உன்கிட்ட” என மிதுவை பொய்யாக மிரட்டினான் அன்பு.

“ஏன் இப்பவே பேசுங்களேன் மாமா, வாய் வலிக்குதா? இருக்கும் இருக்கும் வயசாகுதுல்ல?” என்றாள் மிது.

“அடி…” என அன்பு ஓரடி எடுத்து வைக்க, மகளோடு உள்ளே ஓடி சென்று விட்டாள் மிது.

வீடே அமர்க்களப் பட்டது. கோயில் திருவிழா என்பதால் சைவ விருந்துதான், ஆனால் வகை வகையாக செய்திருந்தார் வினோதினி.

மங்கம்மா பாட்டிக்கும் நாயகம் தாத்தாவுக்கும் முன் போல முடிவதில்லை, ஆனாலும் நடை உடையாக இருக்கிறார்கள். கொள்ளு பேத்திகளை பார்த்ததில் அவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி.

ஹர்ஷினி எழுந்து கொள்ளவும் மூன்று குட்டி இளவரசிகளும் ஒரே ஆட்டம்தான். லாவண்யா பொறுமையாக அவர்களை பார்த்துக் கொண்டாள்.

இரவானதும் அன்பு தன் குடும்பத்துடன் புறப்பட்டான். தனித்தனியாக அனைவரையும் திருவிழாவுக்கு அழைத்து விட்டே சென்றான்.

அடுத்த நாள் காலை உணவு அன்புவின் வீட்டில்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே விஜயா பாட்டி தவறியிருந்தார்.

அருந்ததியும் லாவண்யாவும் வந்தவர்களை சிறப்பாக கவனித்தனர். உணவுக்கு பின் தன் குடும்பத்துடன் சங்கரன் பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்தான் ஜீவா. இங்கு ஒரு நாள் தங்க வேண்டுமென அவர் அன்புக்கட்டளை போட்டார்.

“ஒரு வாரம் மாமா வீட்லதான் இருக்க போறோம் பெரியப்பா, ஏதாவது ஒரு நாள் இங்கேயும் வந்து தங்குறோம்” என்றான் ஜீவா. மகளுக்கு காணொளி அழைப்பு வாயிலாக பேச வைத்தார். நீ ஏன் அக்கா வரவில்லை என சாந்தாவிடம் விசாரித்தான் ஜீவா. மாமியாருக்கு மிகவும் முடியவில்லை, ஒருநாள் வருகிறேன் என்றாள் அவள்.

அக்காவால் வர முடியா விட்டால் தான் சென்று பார்த்து வர வேண்டும் என மனதில் குறித்து வைத்துக்கொண்டான் ஜீவா.

அனைவரையும் கோயிலுக்கு அழைத்து சென்றான் அன்பு. ஊரின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு மரியாதை உண்டு, அன்று அன்புவின் குடும்பத்துக்கான நாள். பரிவட்டம் கட்ட அன்புவை அழைக்க, அவன் ஜீவாவையும் அழைத்து சென்றான்.

இருவருக்கும் சேர்த்தே பரிவட்டம் கட்டப் பட்டது. முன்னரே ஏற்பாடு செய்திருப்பான் போல அன்பு. தம்பியை போல அதிகமாகவெல்லாம் அவனுக்கு பேச வராது, செயல் வழியாக உன்னை நான் எப்படி பார்க்கிறேன் என்பதை அவனுக்கு உணர்த்தி விட்டான்.

சில வருடங்களுக்கு முன் அன்புவின் எண்ணெய் ஆலையில் பெரிய விபத்து, செய்தி கேள்வி பட்டு அன்றே வந்து நின்றான் ஜீவா. லாவண்யாவுக்கு இரண்டாவது பிரசவ நேரம் வேறு. ஜீவா அப்போது அவனுடன் நின்றது அவனுக்கு யானை பலம்.

அந்த சமயத்தில்தான் தம்பியுடன் இன்னும் நெருங்கினான் அன்பு. எல்லா வருடமும் இப்படி தம்பிக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என நினைப்பான்தான், ஆனால் எங்கே… இந்த முறைதானே ஜீவா வந்திருக்கிறான்.

அன்புவின் செயல் ஜீவாவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த முதல் மரியாதை பற்றியெல்லாம் அவனுக்கு தெரியாது, ஆனால் அண்ணனின் அன்பை உணர்ந்தான்.

மிதுவுக்கு அவளை மீறி கண்ணீர் வந்து விட்டது. “அழக்கூடாது மிது!” என சின்னக் குரலில் அதட்டினார் அருந்ததி.

தங்கையின் தோள் பிடித்து அவளை ஆற்றுப் படுத்தினாள் லாவண்யா.

வீடு வந்த பிறகு பிரகாசம் சித்தப்பா அவரது குடும்பத்துடன் வந்திருந்தார். மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது, மகளுக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

“சென்னைல வேலை பார்க்கிற பையன் வேணும் ஜீவா, ஏதாவது இருந்தா சொல்லு” என உரிமையாக கேட்டார் பிரகாசம்.

ஏன் நான் பார்க்க மாட்டேனா என அன்பு கோவமெல்லாம் படவில்லை.

எனக்கென்ன தெரியும் என விழித்த தம்பியிடம், “மேட்ரிமோனியல்ல ரெஜிஸ்டர் பண்ணு, நீ சென்னைல இருக்கிறதால உன்கிட்ட சொல்றாரு” என நல்ல விதமாகவே சொன்னான் அன்பு.

ஜீவாவும் சரியென சொன்னான்.

இப்போது ஜீவாவுக்கு நிறைய சொந்தங்கள். முடிந்த வரை யாரின் விஷேஷத்தையும் விட்டுக் கொடுக்காமல் செல்கிறான், அவனால் முடியா விட்டாலும் மிதுவை அனுப்பி வைத்திடுவான்.

அவனது மாமா இளங்கோவின் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டான், அவன் வரவில்லை என இளங்கோவுக்கு நல்ல கோவம். மிது அவளது பெற்றோருடன் சென்று இருந்து எல்லாம் சிறப்பாக செய்தாள்.

விஷேஷத்துக்கு அடுத்த நாள் நேராக மதுரைக்கு வந்து சேர்ந்த ஜீவா மாமாவின் கோவ முகத்தை தாங்கிக் கொண்டான். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே வந்து விடுகிறேன் என சமாதானம் செய்தான்.

“போ போ மிது முகத்துக்காக விடுறேன் உன்னை” என அவரும் இறங்கி வந்து விட்டார்.

ஜீவா நடனத் துறையில் ஸ்திரமாக காலூன்ற மூன்று வருடங்களாகி விட்டன. மிதுவின் தாத்தா இது குறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தார். பசுபதிக்கும் கூட அந்த நேரம் அது உறுத்தல்தான்.

ஜீவா கூட சோர்ந்து போவான், கணவனுக்கு மிதுதான் பக்க பலமாக இருந்தாள். பொருளாதார ரீதியாக எதையும் அவனிடம் எதிர்பார்க்காமல் அவனது வேலையை அர்ப்பணிப்போடு செய்ய விட்டு விட்டாள்.

ஆரம்பத்தில் அவன் வெளியூர் செல்லும் போது அவளுக்கு கையாள தெரியாமல் அவர்களுக்குள் சண்டைகளும் வாராமல் இல்லை. சூழல்களை எதிர்கொண்டால்தானே சமாளிக்க தெரிய வரும், அப்படி போக போக சமாளிக்க கற்றுக் கொண்டாள்.