மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டாள் மிதுன்யா. சரோஜாம்மாவிற்கு சொந்தத்தில் ஏதோ விஷேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல வேண்டும், மிதுவுக்கோ இன்று விடுப்பு எடுக்க முடியாத நிலை, ஆகவே மாலை வரை இருக்க முடியுமா என கேட்டு அவரின் வசத்தில் மகள் ஹர்ஷினியை விட்டிருக்கிறாள்.
வீடு திறந்திறக்க “சரோம்மா…” என அழைத்துக் கொண்டே சென்றாள் மிது. ஹாலில் அவள் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து விட்டாள்.
ஒன்றரை வயது ஹர்ஷினி விளையாட்டு சாமான்களை எல்லாம் ஹால் முழுதும் நிறைத்து விட்டு அதில் எல்லாம் ஈடுபாடு இல்லை என்பது போல பெரிய பிளாஸ்டிக் டப்பில் இருந்த மண்ணை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
தலை முடியெல்லாம் கலைந்து ஆடையெல்லாம் மண்ணாக வெகு மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
இப்படியெல்லாம் சரோம்மா மகளை விட மாட்டார் என மிதுவுக்கு நன்றாக தெரியும். ஜீவா வந்து விட்டாரா என்ன என அவள் நினைக்க, “லட்டுக் குட்டி சூப் ரெடி…” என சொல்லிக் கொண்டே வந்தான் ஜீவநந்தன்.
“எப்ப வந்தீங்க ஜீவா?” என விழி விரித்தாள் அவனது மனைவி.
“போடி, சர்ப்ரைஸ் பண்ணலாம்னு சொல்லாம வந்தேன், இன்னிக்கு லீவ்னுதானே நைட் சொன்ன, வந்து பார்த்தா உன்னைய காணோம்” என ஜீவா சொல்ல, வேகமாக அவனிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.
இரண்டு வாரமாக ஜீவா வீட்டில் இல்லை, வெளிநாட்டு படப்பிடிப்பு. தனியாக நடன இயக்குநராக அவன் பணி புரியும் ஐந்தாவது படம். நாளை வருவதாக சொல்லியிருந்தவன் இன்றே வந்திருந்தான். மனைவி இல்லாமல் ஏமாற்றம் கொண்டாலும் மகளை பொறுப்பெடுத்தக் கொண்டு சரோம்மாவை அனுப்பி விட்டான்.
“சரோம்மாவை டைமுக்கு அனுப்பி வைக்கணுமேன்னு எவ்ளோ டென்ஷன்ல வர்றேன் தெரியமா? சொல்லியிருக்கலாம் நீங்க” என குறை பட்டுக் கொண்டவள் படப்பிடிப்பு எப்படி போனது என விசாரித்தாள்.
“எதிர்பார்த்தது விட நல்லா வந்திருக்கு. லவ்வர்ஸ்க்கெல்லாம் ஸ்டேட்டஸ் வைக்கிற மாதிரி செம சாங். ஹீரோ ஹீரோயின் கெமிஸ்டரி வேற லெவல்ல இருக்க போகுது மிது” என்றான்.
“அப்படியா?” புருவங்களை உயர்த்திக் கேட்டவள் அவனது டி ஷர்ட் பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள்.
சிறு சிரிப்புடன் சூப் கிண்ணத்தை வாங்கிக் கொண்டவள், “முதல்ல அவளை க்ளீன் பண்ணுங்க, அப்புறம் சூப் கொடுக்கலாம்” என சொல்லி சென்றாள்.
தன் அம்மாவின் சாயலில் இருக்கும் மகளை ஆசையாக தூக்கிக் கொண்டான் ஜீவா. அப்பாவையும் அழுக்காக்கினாள் குட்டி தேவதை. ப்பா ப்பா என மழலை வேறு.
நேரம் கிடைத்தால் தோட்டத்தில் பாத் டப் வைத்து அங்குதான் குளிக்க வைப்பான் மகளை. இப்போதும் அப்படியே அப்பாவும் மகளும் தண்ணீரை வாரி இறைத்து அதகளம் செய்தனர். சோர்வாக வீடு வந்திருந்த மிதுவுக்கு கணவனை கண்டதும் எங்கிருந்து சக்தி வந்ததோ, ஒற்றை ஆளாகவே ஹாலை சுத்தம் செய்து விட்டாள்.
முழுதும் நனைந்து போயிருந்த ஜீவா, குளித்திருந்த மகளை துண்டை சுற்றி தூக்கி வந்தான்.
“எதுக்கு நீங்க நனைஞ்சிருக்கீங்க இப்போ? திருந்தவே மாட்டீங்க ஜீவா” என கணவனை சலித்துக் கொண்டே நீராட சென்று விட்டாள் மிது.
மிது குளித்து முடித்து ஆடை மாற்றிக் கொண்டு ஹால் வர, மகளுக்கு சூப் கொடுக்கிறேன் என ஜீவா நிற்க, குழந்தையோ மீண்டும் விளையாட்டு சாமான்களை இறைத்துக் கொண்டிருந்தாள்.
இடுப்பில் கை வைத்து மிது முறைக்க, “என் பொண்ணு விளையாடதான் இந்த வீடே, நாங்களே திருப்பி எடுத்து வச்சுக்கிறோம்” என்றான்.
அவனது கண்களில் சோர்வை கண்டவள் மகளுக்கு தான் சூப் கொடுப்பதாக சொல்லி கிண்ணத்தை வாங்கிக் கொண்டு, அவனை ஈர உடையை மாற்றிக் கொள்ளவென அனுப்பினாள்.
அவனும் குளித்து தயாராகி வர, அப்பாவை கண்டதும் அவனிடம் வந்து நின்று தூக்க சொன்னாள் மகள். அள்ளிக் கொண்டவன் கன்னங்களில் முத்தம் வைத்து கொஞ்ச, குழந்தையும் அப்பாவை கொஞ்சியது.
ரசித்துக் கொண்டே கணவனுக்கு சாலட் கொடுத்தாள் மிது.
“நல்ல பசி மிது, இதெல்லாம் போதாது” என்றான்.
சரோஜா இரவு உணவை தயார் செய்து விட்டுத்தான் சென்றிருந்தார். சாப்பாடு இருக்கிறது என அவள் சொல்லியும் மகளை வைத்துக்கொண்டு அவளது மழலையில் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தான். அவளே சாப்பாடு போட்டு அவனுக்கு ஊட்டி விட வாங்கிக் கொண்டான்.
ஹர்ஷினி உறங்குவேனா என அப்பாவை விட்டு நகராமல் இருந்தாள். பயணக் களைப்பில் இருந்தவன் படுக்கையில் படுத்திருக்க, அவன் மார்பில் அமர்ந்திருந்தாள் குழந்தை. கையில் ஏதோ புத்தகம்.
புத்தகத்திலிருந்த விலங்குகளின் பெயர்களை எல்லாம் அவள் மொழியில் தந்தைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனும் அந்த விலங்கு போலவே சத்தமிட்டு காட்ட, மகளுக்கு ஒரே சிரிப்பு.
வழக்கமாக மதியம் போல தூங்கி எழும் குழந்தை, சில நாட்களாக உடனில்லாத அப்பா இன்று கூட இருந்ததால் அதீத உற்சாகத்தில் உறங்காமல் இருந்தாள்.
இப்போது இரவில் விரைவாக தூங்கி விடக்கூடும் என்பதால் மகளுக்கான இரவு உணவை கொண்டு வந்தாள் மிது.
சாப்பிடுகிறேன் என அப்பாவின் சட்டையெல்லாம் அழுக்கு செய்தாள். அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை. மகளின் வாயைத்தான் துடைத்து விட்டான்.
“வாய தொறக்குறப்போ கொடுத்தாதான் உண்டு. நீங்க பேசாம இருங்க” என்ற மனைவியை முறைத்தான்.
“சாப்பிட்டு தூங்கட்டும், அப்பதான் நீங்க தூங்கலாம், உங்க கண்ணெல்லாம் உள்ள போய் கெடக்கு” என்றாள்.
“அதெல்லாம் இல்லை, நாளைக்கு சரியாகிடுவேன். கோயில் திருவிழாவுக்கு ஊருக்கு போகணுமே, நாளைக்கு மார்னிங் கிளம்பலாமா?” எனக் கேட்டான்.
அன்புவின் ஊரில்தான் திருவிழா, அவனே இருவருக்கும் முறையாக அழைப்பு விடுத்திருந்தான்.
இத்தனை வருடங்களில் ஜீவாவால் ஒரு முறை கூட திருவிழா சமயத்தில் ஊருக்கு செல்ல முடியவில்லை. ஏதாவது வேலையாக வெளியூர் சென்றிருப்பான். மிதுதான் எல்லா வருடமும் தவறாமல் செல்வாள். ஆகவே இந்த முறை எப்படியும் செல்ல வேண்டுமென நினைத்திருந்தான் ஜீவா.
அன்புவும் கூட “எதையும் மனசுல வச்சுக்கிட்டு வராம இருக்கியாடா?” என நேரடியாகவே கேட்டிருந்தான். அப்படியெல்லாம் இல்லை என ஜீவா சொல்லியிருந்தாலும் நேரில் சென்று வந்தால்தான் சரியாக இருக்கும் என அவனுக்கு தோன்றி விட்டது.
அன்புவும் சென்னை வரும் சமயங்களில் எல்லாம் தவறாமல் ஜீவாவின் வீட்டிற்கு வந்து விட்டுத்தான் செல்கிறான். ஹர்ஷினியின் முதல் பிறந்தநாள் விழாவின் போது குடும்பத்தோடு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து விழாவை சிறப்பித்தும் இருந்தான்.
திருவிழாவுக்கு இரண்டு தினங்களுக்கு பின்னர்தான் ஊருக்கு செல்வதாக திட்டம், இப்போது அதை ஜீவா மாற்ற, “உங்களுக்கு டயர்டா இருக்கும்” என்றாள் மிது.
ரங்கசாமிக்கு வயது முதிர்வின் காரணமாக நெடுந்தூர பயணம் செய்ய முடிவதில்லை. இங்கு தோட்ட வேலை பார்த்துக் கொள்வார், உள்ளூரிலேயே கார் ஓட்டுவார், அவ்வளவுதான்.
கணவன் சொன்னதற்கு சரியென ஒத்துக் கொண்டாள் மிது. மகளுக்கு முன் ஜீவா உறங்கி விட்டான். அப்பாவை செல்லம் கொஞ்சிக் கொண்டே கொட்டாவி விட்டாள் ஹர்ஷினி.
“அவரை பிச்சு தின்னுடுவா பட்டுக் குட்டி, அப்பா தூங்கியாச்சு, நீ வா” என மிது குழந்தையை தூக்க, அப்பாவின் மேலேயே படுத்துக் கொண்டு வர மாட்டேன் என அடம் செய்தாள்.
என் செல்லமே தங்கமே என தாஜாவாக பேசி மகளை தூக்கிக் கொண்டு கணவனை இலகுவாக உறங்க விட்டாள் மிது.
நடு இரவில் விழித்துக் கொண்ட ஜீவாவின் கைக்கு அகப்பட்டாள் மிது.