அவனுக்கு முன் சங்கரனே, “உன் தங்கச்சி மக காது குத்து நாளான்னிக்கு இருக்கு, எதையும் மனசுல வச்சுக்காம வந்திடு அன்பு” என்றார்.

எதிர்பார்த்திராத அன்பு, “வர்றேன் பெரியப்பா” என உடனே ஒத்துக் கொண்டான்.

தன் பேத்தியை ஜீவாவின் மடியில் அமர வைத்து மொட்டை போட்டு, பின் அன்புவின் மடியில் வைத்து காது குத்துவது என தான் யோசித்து வைத்திருக்கும் ஏற்பாட்டையும் சொன்னார் சங்கரன்.

“அவனே எல்லாம் செய்யட்டும்” என்றான்  அன்பு.

கோவத்தில் சொல்கிறான் போலும் என நினைத்துக் கொண்ட சங்கரன், “அவனை ஒதுக்கி விட முடியாது அன்பு, அவனும் என் தம்பி பையன்தான், அவன் அம்மாவை நீ பார்த்ததும் இல்லை, பழகினதும் இல்லை, அப்படியொரு மகராசி அந்தம்மா. அவனுக்கும் உரிமை இருக்குல்ல…” எனக் கேட்டு, “நீங்க எடுத்து சொல்லுங்க மாமா” என நாயகத்திடம் உதவி கேட்டார்.

தாத்தா எதுவும் பேசுவதற்கு முன், “சத்தியமா கோவத்துல பேசல நான். அவனும் இந்த குடும்பத்துல ஒருத்தன்னு எல்லாருக்கும் புரிய வைக்கத்தான் நினைக்கிறேன். எல்லா முறையும் அவன் செய்றதுல எனக்கு வருத்தமோ கோவமோ இல்லை, மனசாரத்தான் சொல்றேன்” என்றான் அன்பு.

சங்கரன் மகிழ்ச்சியோடு அவனை பார்த்தார். தாத்தாவும் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை. பேத்திகளின் கணவர்கள் ஒற்றுமையாக இருந்தால் சரிதான் என நினைத்துக்கொண்டார்.

அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பசுபதி, தன் மருமகனின் தோளை தட்டிக் கொடுத்து, “எனக்கு தெரியும்டா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ மாறுவேன்னு” என்றார்.

அப்படியே அருந்ததி, லாவண்யா, வினோதினி, பாட்டி என அனைவருக்கும் இந்த செய்தி பரவியது. அன்புவின் முடிவில் அனைவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை தங்கையிடம் சொல்ல அவளை தேடினாள் லாவண்யா. அவள் இங்கே இல்லாமல் போக, தேடிக் கொண்டு அவர்கள் இருக்குமிடம் வந்தாள்.

 ஜீவா மிதுவை தூக்கி வைத்திருந்த படி நின்றிருந்தான்.

“என்ன பண்ற ஜீவா? நீ திருந்தவே மாட்டியா? சாப்பாடு முடிஞ்சு எல்லாரும் கிளம்பறதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு?” என கிண்டல் செய்தாள் லாவண்யா.

“அட ஏன் அண்ணி நீங்க வேற, நாங்க தனியா இருக்கோம்னா நினைச்சீங்க? அங்க பாருங்க வானரக் கூட்டத்தை” என்றான் ஜீவா.

லாவண்யாவும் அவர்களுக்கு எதிர் பக்கத்தில் பார்க்க, எல்லா இளசுகளும் நின்றிருந்தனர். பிரகாசத்தின் மகனின் கையில் கேமரா, மற்றவர்கள் எப்படி போஸ் கொடுப்பது என மணமக்களை இயக்கிக் கொண்டிருந்தனர்.

சிரித்த லாவண்யா, “என் கல்யாணத்தப்போ எங்கடா போயிட்ட நீ?” என தன் கொழுந்தனாரிடம் பொய்யாக கோபித்துக் கொண்டாள்.

“இப்ப இருக்க விவரம் அப்ப இல்லை அண்ணி, ஆனாலும் உங்க ஆசைய நிறைவேத்தாம விட மாட்டேன்” என்ற பிரகாசத்தின் மகன் தன் தங்கையின் காதில் ஏதோ சொல்ல, அவள் அங்கிருந்து ஓடிச் சென்றாள்.

“ஏய் மிது! நீ அந்த மரத்து மேல சாஞ்சுக்க, ஜீவா உன்கிட்ட உன்னை பார்க்க நிற்பாரு. ஜீவா… உங்க கண்ணதான் ஃபோகஸ் பண்ண போறோம், காதல் அருவியா கொட்டணும்” என அடுத்தது எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என சொன்னாள் வாசுகி.

மனைவியை இறக்கி விட்ட ஜீவா, “க்ளோஸ் அப்ல சும்மா உன்னை பார்த்துகிட்டே எப்படி நிக்க முடியும், மனுஷனோட அவஸ்தை புரியாதா உன் ஃபிரெண்ட்க்கு” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான்.

வெட்கப்பட்ட மிது, “உங்களுக்குத்தான் என் அவஸ்தை புரிய மாட்டேங்குது, பேச்சை பாரு, ஒழுங்கா வாங்க” என்றாள்.

அவர்கள் நெருக்கமாக நின்று பேசிக் கொண்ட காட்சிகளை அப்படியே கேமராவில் பதிவு செய்தான் பிரகாசத்தின் மகன்.

அன்புவை அழைத்துக் கொண்டு வந்தாள் பிரகாசத்தின் மகள்.

“கல்யாண ஜோடியை காணோம்னு பார்த்தா  உன்னையும் காணோம், இங்க என்ன பண்ற பாப்பா?” என தன் மனைவியிடம் கேட்டான் அன்பு.

“நம்ம கல்யாணத்தப்போ அடுத்தவங்க முன்னாடி டீசெண்டா நிக்கணும்னு சொல்லி ஒரு ஃபோட்டோ கூட நெருக்கமா பிடிச்சுக்கவே இல்லை. பாருங்க ஜீவாவும் மிதுவும் அழகழகா ஃபோட்டோ எடுத்துக்கிறாங்க” என்றாள் லாவண்யா.

“ஹையோ அண்ணி அதுக்குத்தான் அண்ணனை இழுத்திட்டு வந்திருக்கேன், நீங்க பிரைட்டா சூப்பரா இருக்கீங்க, அண்ணன்தான் வேர்த்து வழிஞ்சு நிக்கிறாரு, சீக்கிரம் சரி பண்ணி விடுங்க, அடுத்த ஃபோட்டோ ஷூட் உங்களுக்குத்தான்” என சொல்லி நகர்ந்தாள் அன்புவின் தங்கை.

அதெல்லாம் வேண்டாம் என அன்பு மறுக்க, அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“வர வர உன் அலும்பு கூடிப் போச்சு பாப்பா” என அலுத்துக் கொண்டே சம்மதம் சொன்னான். கணவனின் முகத்தை கழுவிக் கொள்ளும் படி அவள் சொல்ல, போர் செட்டுக்கு சென்றான், அவளும் உடன் சென்றாள்.

தண்ணீரால் முகம் கழுவிக் கொண்ட அன்பு,  மனைவியின் முகத்தில் தண்ணீரை உதறி விட, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“மூஞ்ச காட்டு பாப்பா, காலைலேருந்து நேரமே கிடைக்கல உன்னை பார்க்க” என்றான் அன்பு.

சட்டென திரும்பிய லாவண்யா அவன் மீது அதிகப்படியான தண்ணீரை வாரி இறைத்தாள்.

தன்னை முழுதாக நனைத்தவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன் அவளது கன்னத்தை வருட ஆரம்பித்தான்.

“அச்சச்சோ கேன்டிடா ஃபோட்டோ எடுக்கலாம்னு வந்தா சின்ன பையன் மனச கெடுக்குறீங்களே” என்றான் ஜீவா.

அதிர்ந்து போன இருவரும் விலகிக் கொள்ள, கையில் மேமராவோடு ஜீவா.

ஐயா சாமிகளா எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் என ஜீவா சொல்லியிருக்க, அடுத்து அன்பு அண்ணன் வந்து விட்டதை சொன்னாள் அன்புவின் தங்கை. அவர் சொல் பேச்சே கேட்க மாட்டார், அண்ணி வேறு ஆசை படுகிறார், என்ன செய்வது? எனக் கேட்டான் அன்புவின் தம்பி.

போஸ் கொடுக்க சொன்னால் எல்லாம் சரியாக வராது, அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுக்கலாம் என யோசனை கொடுத்தான் ஜீவா. அண்ணனுக்கு தெரிந்தால் அடி நிச்சயம் என கூறி போட்டோ எடுக்க மறுத்தான் பிரகாசத்தின் மகன். உடனே ஜீவாவே கேமராவை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

“ஸாரி ஸாரி… யூ ப்ளீஸ் கேரி ஆன்” என சொல்லி விலகிப் போனான் ஜீவா.

“அந்த பய முன்னாடி என் மானமே போச்சு, எல்லாம் உன்னாலதான் பாப்பா” என்ற அன்பு தன் மனைவியை முறைக்க, அவளோ கல கலவென சிரித்தாள்.

“சிரிக்காத, இந்த ஃபோட்டோல்லாம் நமக்கு செட் ஆகாது. பசிக்கலையா உனக்கு, சாப்பாடி ரெடி, வா போலாம்” என்றான்.

அவள் விடவில்லை, வலுக்கட்டாயமாக கணவனை இழுத்து சென்று அதீத நெருக்கமாக இல்லா விட்டாலும் சேர்ந்து நிற்பது போல் சில பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுதான் விட்டாள்.

சங்கரனின் பேத்திக்கு தாய்மாமனாக அனைத்தையும் ஜீவா செய்யப் போகும் விவரத்தை பகிர்ந்தாள் லாவண்யா. மிது உடனே திகிலோடு அன்புவின் முகத்தைத்தான் பார்த்தாள்.

“அண்ணி எங்க பெரியண்ணன் ஒன்னும் வில்லன் கிடையாது, அவரும் ஹீரோதான்” என்றான் பிரகாசத்தின் மகன்.

“நீங்க இருக்கும் போது நான் செய்றது மரியாதையா இருக்காதுன்னு மிது சொல்லிட்டே இருப்பா. பெரியப்பாவை நான் கன்வின்ஸ் பண்றேன், நீங்கதான் எல்லாம் செய்யணும்” என அன்புவிடம் சொன்னான் ஜீவா.

அன்புவின் முடிவுதான் இது எனவும் அதற்கான காரணத்தையும் விளக்கினாள் லாவண்யா.