தன் சின்ன மகளின் திருமணத்திற்காக எளிமையாக என்றாலும் நிறைவான வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் பசுபதி.
சந்நிதியில் வைத்து மிதுன்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்து விட்டான் ஜீவா. மற்ற சடங்குகள் எல்லாம் கோயிலுக்கு வெளியில் சின்னதாக இருந்த மண்டபத்தில்தான் நடைபெற்றன.
மாசிலாமணி மற்றும் மிதுவின் தோழிகளை அழைத்துக் கொண்டு தன் மனைவியோடு காரில் வந்திருந்தார் ரங்கசாமி. பங்கஜ் மற்றும் இளங்கோ அவர்களின் குடும்பங்களுடன் தனி தனி காரில் வந்திருந்தனர்.
மிகவும் நெருங்கிய உறவுகள், ஊரின் முக்கியஸ்தர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர் என குறுகிய அழைப்புகள்தான் என்ற போதும் அதுவே எண்ணிக்கையில் நூறை தொட்டது.
அன்புவின் சித்தப்பா பிரகாசம், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாம் ஜீவாவுடன் இணக்கமாக பேசினார்கள்.
அன்புவும் சங்கரனும்தான் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே இருந்தனர். அன்பு தன் பெரியப்பாவைத்தான் தவிர்த்தானே தவிர, அவரது மகள் சாந்தா மற்றும் அவளின் கணவனிடம் வழிய சென்று பேசினான்.
மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கில் மிதுவின் கழுத்தில் அத்தனை சுலபமாக மாலையிட்டு விடாத பிடி அவளை இழுத்துக் கொண்டனர் அவளின் தோழிகளும் பிரகாசத்தின் பிள்ளைகளும். மிதுவின் இடுப்பை வளைத்து தன்னிடம் இழுத்துக் கொண்ட ஜீவா, இன்னோரு கையால் அவளுக்கு மாலை அணிவித்து விட்டான்.
இப்போது மணியும் ஜீவாவை பின்னால் இழுத்துப் பிடிக்க, நண்பனை விலக்கி விட்ட ஜீவா, மிதுவின் முன் இடை வரை குனிந்து அவள் மாலையிட வாகாக தன் கழுத்தை நீட்டினான். வெட்கமும் பெருமிதமுமாக தன் ஆசைக் கணவனுக்கு மாலை அணிவித்தாள் மிது.
“விட்டா கால்ல விழுந்திடுவார் போல” என கிண்டல் செய்தாள் மிதுவின் மாமா மகள்.
“இன்னும் அவன் விழாம இருக்கான்னு பார்த்தியாக்கும் நீ?” என கிண்டல் செய்தார் மங்கம்மா பாட்டி.
“உன் புருஷன் உன்கிட்ட விழுந்து கெடக்கிறத மட்டும் நாங்க பார்த்தோமா என்ன?” எனக் கேட்ட பாட்டி, ஜீவாவுக்கு மட்டும் தனியே திருஷ்டி வழித்து, “தனியா இருக்கையில அவளை எவ்ளோ வேணாலும் கொஞ்சிக்கடா, ஊர் கண்ணு பொல்லாதது” என்றார்.
தன்னைத்தான் சொல்கிறார் போல என நினைத்து கோபத்துடன் தள்ளிப் போய் நின்று கொண்டாள் மிதுவின் மாமா பெண். ஆனால் பாட்டி அவளை குறித்து அப்படி சொல்லவில்லை, பொதுவாகத்தான் அப்படி சொன்னார்.
பசுபதியும் வினோதினியும் மகளுக்காக மகிழ்ச்சி கொண்டார்கள், இருவரும் நீடூழி வாழ வேண்டும் என மனமார வாழ்த்தினார்கள்.
ஜீவாவிடம் அட்டிகையும் மிதுவிடம் பிரேஸ்லெட்டும் கொடுத்து ஒருவரை மற்றவருக்கு அணிவித்து விட சொன்னார்கள் அன்பு, லாவண்யா தம்பதியினர்.
“இதுக்கு மேல வெயிட்டா வாங்கிப் போட்டா உன் கழுத்து வலிக்குமே, அந்த அக்கறைதான்” என அன்புவும் சிரித்த முகமாக சொன்னான். எப்போது ஜீவாவை அன்பு ஏற்றுக் கொண்டு விட்டானோ அப்போதே அவன் மீதிருந்த கோவத்தை விட்டு விட்டாள் மிது.
பிரேஸ்லெட்டின் கொக்கியை மாட்ட முடியாமல் சிரமப் பட்டாள் மிது. அன்புவே அதை சரி செய்து விட, ஜீவாவுக்கு அந்த தருணத்தில் மனம் நிறைந்து போனது.
இரண்டு தினங்களுக்கு முன் ஜீவாவுடன் அன்பு காரில் இறங்கிய போது அருந்ததிக்கும் லாவண்யாவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவனாக வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை.
சாப்பிடும் நேரத்தில் லாவண்யாதான் ‘என்ன நடக்கிறது உங்களுக்குள்?’ என வாய் விட்டு கேட்டாள்.
“அவன் மேல தப்பில்லைனு எனக்கு தெரியும் பாப்பா, ஆனாலும்… அவன்… அவன்…” என தயங்கியவன், “பார்க்க என்னை பெத்தவர் மாதிரியே இருக்கானே, அதனாலயா என்னன்னு தெரியலை, ஏத்துக்கவே முடியலை” என்றான்.
“அப்புறம் இப்ப மட்டும் என்னாச்சு உங்களுக்கு?” என கேள்வி கேட்டாள் அவள்.
“யோசிச்சு பார்த்தா அவன் அம்மா ரொம்ப க்ரேட்னு புரிஞ்சுது. உண்மை தெரிஞ்சதும் அப்பாவை விலக்கி வச்சிட்டாங்க, எதுவும் வேணும்னு கேட்டு இங்க வந்து நிக்கல, எந்த விதத்துலேயும் யாருக்கும் தொந்தரவு தராம சொந்தக் கால்ல நின்னுருக்காங்க. இந்த குடும்பத்து ஆளாள பாதிக்க பட்டவங்களுக்கு என்ன கிடைச்சுது, எதுவுமே இல்லை”
“அதனால?”
“இப்பவாவது அவங்களுக்கு நியாயம் செய்யணும்ல பாப்பா? அவங்க உயிரோட இல்லை, அப்ப அவங்க பையனுக்குத்தான் செய்யணும். அம்மாவை இழந்திட்டு நிக்கிறான், என்ன பெருசா ஆசை படுறான், சொந்தம் வேணும்ங்கிறது தவிர வேற பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவன்கிட்ட. இப்ப மிதுவோட புருஷன் வேற ஆகிட்டான், எங்கப்பன் சாடை இருக்குன்னு மட்டும் அவனை ஒதுக்குறது சரியில்லைனு பட்டுச்சு” என அன்பு சொல்ல, மகிழ்ச்சியாக அவனை பார்த்திருந்தாள் லாவண்யா.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அருந்ததி, “நீ மாறுனதுல எனக்கும் சந்தோஷம்டா தம்பி. அவர் சாடை இருக்குன்னுலாம் நினைக்காத. நிச்சயமா அவர் குணம் இருக்காது அந்த புள்ளகிட்ட. அது சரி, உங்கப்பா சாடைய கொண்டே உனக்கு புள்ளை பொறந்தா என்னடா பண்ணுவ?” எனக் கேட்டார்.
“அம்மா!” என அதிர்ந்தான் அன்பு.
“அதெல்லாம் நம்ம கைல இல்லை. அந்த புள்ள ரொம்ப நல்ல புள்ள. எப்பவும் எந்த விரோதமும் காட்டாம இருக்கணும் நீ” என கட்டளையாகவே சொல்லி விட்டார் அருந்ததி.
விஜயாதான் நிதம் புலம்பிக் கொண்டே இருந்தார், அவர் பேசுவதை யாரும் பொருட் படுத்திக் கொள்ளவில்லை. இப்போது கூட திருமணத்துக்கு வர மாட்டேன் என பிடிவாதமாக சொல்லி வீட்டிலேயே இருந்து கொண்டார்.
மணமக்களை அழைத்துக் கொண்டு சில பெரியவர்கள் மட்டும் வீடு செல்ல, அன்புவின் தலைமையில் மற்றவர்கள் தோட்டம் சென்றனர். அங்குதான் உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளை முடித்துக் கொண்டு மண மக்களும் தோட்டம் வந்து விட்டனர்.
தோட்டத்து வீடு அலங்கரிக்கப் பட்டு வெளியில் பெரிய சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. சமையல்காரர் மணக்க மணக்க விருந்து தயாரித்துக் கொண்டிருந்தார்.
மண மக்கள் வரவும் அரை மணி நேரம் சொந்தங்கள் பேசுவதும் என்ன வேலை எங்கு ஜாகை என மாப்பிள்ளையிடம் விசாரிப்பதுமாக நேரம் சென்றது. இவர்களுக்கு முன்னரே மணமான விஷயம் யாருக்கும் தெரியவில்லை. ஏன் இத்தனை எளிமையாக செய்ய வேண்டும் என பசுபதியிடமும் விசாரணை போட்டார்கள்.
திருமணத்தை தள்ளிப் போட்டால் தடையாகும் என மகளின் ஜாதகத்தில் இருப்பதாக சமாளித்தார் பசுபதி.
“ஃபோட்டோ ஷூட் கூட இல்லாம என்னப்பா மேரேஜ் பங்ஷன்?” எனக் கேட்ட பிரகாசத்தின் மகன், மணமக்களை உறவுக் கூட்டத்தினரிடமிருந்து கடத்தி தனியே அழைத்து சென்று விட்டான்.
மணி, வாசுகி, தீபா, பிரகாசத்தின் மகள் ஆகியோர் இவர்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தனர். இளையவர்களின் ரகளை அங்கே களை கட்ட ஆரம்பித்தது.
தாத்தா பெரியவராக, ஒருவரை ஒருவர் தவிர்த்துக் கொள்ளும் அன்பு, சங்கரன் இருவரையும் தன் முன் ஒன்றாக அமர வைத்து விட்டார்.
“விட்டுக் கொடுக்க மாட்டேன்னு வீம்பா நின்னா சொந்தம் விட்டு போயிடும், யாராவது ஒரு ஆள் இறங்கி வரணும்” என்றார் தாத்தா.
மற்ற இருவரும் அமைதியாக இருக்க, “உன் பெரியப்பா உன்னை விட வயசுல எவ்ளோ பெரியவன்? முதல்ல நீயே பேசுடா?” என அன்புவை அதட்டினார்.