அந்தப் பையன் சிரித்து விட, வேறொரு நிர்வாகியும், “சரியா சொன்னப்பா சரியா சொன்னப்பா” என இரண்டு முறை அழுத்தி வேடிக்கையாக சொல்ல, அந்த பையன் இன்னும் வாய் விட்டு சிரித்தான்.
ஜீவாவை முறைத்த அன்பு “ஓவரா போறடா நீ” என்றான்.
“அவர்கிட்ட சரின்னு சொல்லுங்க, காதல் பட்ட நெஞ்சத்தை கலங்க விட்டா காதலுக்கு மரியாதையே இல்லைல? லவ்வர் பாய்ஸ்லாம் லவ்க்கு சப்போர்ட் பண்ணனும்” என இன்னும் விளையாட்டாகவே பேசிக் கொண்டிருந்தான் ஜீவா.
அந்த பையனிடம், “போ ஆட்டத்தை பார்க்கிறதுன்னா பாரு, இல்லைனா வீட்டுக்கு போ. வேலை கிடைச்சதும் வந்து பாரு” என்றான் அன்பு. அந்த பையன் சந்தோஷமாக ஆட்டத்தை காண சென்றான்.
எல்லாரும் அவரவர் இருந்த இடத்துக்கு சென்று விட, அன்புவும் ஜீவாவும் மட்டும் அங்கேயே நின்றிருந்தனர்.
“நீங்க பட்ட கஷ்டதுல என் பங்கு என்னன்னு தெரியலை, இருந்தாலும் கேட்கிறேன், ஸாரி” என்றான் ஜீவா.
அன்பு எதுவும் சொல்லாமல் நிற்க, “என் அம்மா அப்பாவோட ஃபோட்டோ கூட எனக்கு காட்டினதில்லை, எனக்கு அப்பா அம்மா ரெண்டுமே அம்மா மட்டும்தான். சத்தியமா சொல்றேன் என் அம்மா யாருக்கும் துரோகம் செய்யலை, யாரையும் ஏமாத்தல, அவங்கள தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்” என்றான் ஜீவா.
தனக்கு தன் அம்மாவை போலத்தானே அவனுக்கும் அவனது அம்மா என அன்புவுக்கு தோன்ற, குரலை செருமிக் கொண்டவன், “டயர்டா இருந்தா வீட்டுக்கு போ, கிட்டக்க கல்யாணத்தை வச்சுக்கிட்டு உடம்புக்கு இழுத்து விட்டுக்காத, அப்புறம் அதுக்கும் நான்தான் காராணம்னு பக்கம் பக்கமா பேசி கோவ படுவா மிது” என்றான்.
புன்னகை செய்த ஜீவா, “அதான் அவ எது பேசினாலும்தான் மல்லுக்கு நிக்கிறாங்களே அண்ணி” என்றான்.
லாவண்யா அப்படித்தான், அவளை யார் எது சொன்னாலும் தாங்கிக் கொள்வாள், கணவனை யாரும் ஒரு வார்த்தை சொல்லி விடக்கூடாது, மனைவியின் நினைவில் தானாக அவனது முகத்தில் புன்னகை உதயமானது.
“வாட் அ மிராக்கில், நீங்க சிரிக்க கூட செய்றீங்க? உபயம் அண்ணிதானே?” எனக் கேட்டான் ஜீவா..
“டேய் நிஜமா சொல்றேன், நீ லிமிட் தாண்டி போற, வாய மூடிக்கிட்டு இருக்கிறதா இருந்தா இரு, இல்லைனா நடைய கட்டு” என எச்சரிக்கை போல சொன்னான் அன்பு.
இனி வாயை திறக்க மாட்டேன் என சைகை மொழியாக சொன்ன ஜீவா, அதன் பின் நல்ல பையனாக இருந்து கொண்டான்.
அன்புவுடன் ஜீவாவும் விடியும் வரை அங்குதான் இருந்தான். உறக்கத்தில் ஜீவா கண்களை தேய்த்துக் கொள்ள இறுதியாக ஒரு ஆட்டம் போடலாம் என ஊர் இளைஞர்கள் அழைத்தார்கள்.
தலையை உலுக்கிக் கொண்ட ஜீவா, “எம்மேல அக்கறை வச்சு ரெண்டு வார்த்தை நீங்க சொன்னீங்க பாருங்க, அதை செலிப்ரேட் பண்ண வேணாம்?” எனக் கேட்டுக் கொண்டே மேடைக்கு தாவினான்.
‘ராஜா ராஜாதி ராஜான் இந்த ராஜா’ என பாடலை போட்டு விட்டான் டி ஜே. அவனருகில் இருந்தவன், “ஹேஹேய் சிட்டிவேஷன் சாங்தானே? மோதிகிட்டு நின்ன அண்ணன் தம்பி ரெண்டு பேரும் விடிய விடிய பக்கம் பக்கமாவே நின்னாங்கன்னுதானே இந்த பாட்டு? அன்பு அண்ணன் இங்குட்டுதான் பார்க்குது, உன்னையதான் தேடுது” என்றான்.
நிஜமாகவே அன்பு அந்த டி ஜே’வைதான் பார்த்தான். டி ஜே இரண்டு கை கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டி, “உங்களுக்கு டெடிகேட் பண்றேன் ண்ணா” என சத்தம் போட்டான்.
“அறுந்த வாலுங்க!” என முணு முணுத்த அன்பு மேடைப் பக்கமாக பார்த்தான். ஜீவாவுக்கு பாட்டின் உள் குத்து எல்லாம் புரியவில்லை. அனுபவித்து ஆடிக் கொண்டிருந்தான்.
அடுத்து ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திப் போ’, ‘மாருகோ மாருகோ’, ‘என்னோட ராசி நல்ல ராசி’ ‘பொதுவாக எம்மனசு தங்கம்’’ என தாளம் போட வைக்கும் பாடல்களாக ஒலிக்க மேடை இடிந்து விழாத குறையாகிப் போனது.
“தம்பி நல்லா விடிஞ்சு போச்சு, இவனுங்க ஆட்டம் இப்போதைக்கு நிக்காது போல, அடுத்த வருஷ திருவிசாக்கும் சேர்த்து ஆடுறானுவோ, போதும்னு சொல்லு, செத்த படுத்து எந்திரிச்சாதான் அடுத்த வேலைய பார்க்க முடியும்” என்றார் நிர்வாகி.
“எப்பவுமா ண்ணன் ஆட போறாய்ங்க, விடுங்க, நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க” என சொல்லி அவரை அனுப்பி வைத்தான் அன்பு.
இளைஞர் பட்டாளம் தானாக ஓய்ந்துதான் தரை இறங்கியது.
தன்னிடம் வந்த ஜீவாவிடம் கார் சாவியை கொடுத்த அன்பு, “என் கார் சாவியை கொடு” என்றான்.
ஜீவா பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு தேட, சாவி அவனிடம் இல்லை. அவன் விழித்ததை பார்த்த அன்பு, “நீ போட்ட ஆட்டத்துல எங்க விழுந்து தொலைஞ்சுதோ” என்றான்.
“வேற ஸ்பேர் கீ இல்லையா உங்கள்ட்ட?” எனக் கேட்டான் ஜீவா.
அவனை முறைத்த அன்பு, “நீ கிளம்பு” என சொல்லி நடந்தான்.
“என் கூட வாங்க நான் உங்களை வீட்ல விட்டுட்டு அப்புறம் இந்த காரை மாமா வீட்ல விடுறேன்” என்றான் ஜீவா. அன்பு சம்மதிக்கவில்லை, ஆனால் விடாப் பிடியாக அவனை காரில் ஏற்றி விட்டான் ஜீவா.
அப்போதுதான் எழுந்திருந்த லாவண்யா கணவனை காணாமல் தேடிக் கொண்டு ஹால் வந்தாள். அருந்ததிக்கும் மகன் எங்கே என தெரியவில்லை. காரின் சத்தம் கேட்க இருவரும் வெளியில் வந்தனர்.
அன்பு காரிலிருந்து இறங்கினான். “அங்க கிடக்கிற என் காரோட சாவி அந்த இடத்தை க்ளீன் பண்ணும் போது கிடைச்சிடும், இல்லைனாலும் பிரச்சனை இல்லை, வேற சாவி இருக்கு, நானே போய் எடுத்துக்கிறேன், நீ தூக்க கலக்கத்துல எங்குட்டாவது விட்ராம பத்திரமா வீடு போயி சேரு” என ஜீவாவிடம் சொன்னான்.
இப்படியெல்லாம் பேசுவது இவர்தானா என நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டே காரை எடுத்தான் ஜீவா. கார் பார்வையிலிருந்து மறைந்த பிறகுதான் வீட்டை நோக்கி நடந்தான் அன்பு.
மாமியாரும் மருமகளும் அதிசயத்தை பார்ப்பது போல பார்த்திருந்தனர். அவர்களிடம் எதுவும் பேசாமல் அவன் பாட்டுக்கும் உள்ளே சென்று விட்டான்.
மாமனாரின் வீடு வந்த ஜீவா இதையெல்லாம் மிதுவிடம் சொல்ல, அவள் நம்பவே இல்லை.
“நிஜமாவா? இல்லை சும்மா அடிச்சு விடுறீங்களா ஜீவா” எனக் கேட்டாள்.
அவள் கையில் அடித்து, “பிராமிஸ் மிதுக்குட்டி” என்றான்.
“ஆனா… எப்படி இப்படி நடக்கும்?” எனக் கேட்டாள்.
‘தெரியவில்லை’ என்பது போல தோள்களை குலுக்கிக் கொண்டான் ஜீவா. உற்சாக மிகுதியில் அவனை வேகமாக அவள் கட்டியணைத்துக் கொள்ள, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
“ஆசைய வாயால சொன்னா நானே கோஆபரேட் பண்ணுவேன், எதுக்கு இப்படி பயங்கரமா நடத்துக்கிற?” என ஜீவா கேட்க, அப்போதுதான் அவன் மீது தானிருந்த நிலையை கண்டாள்.
வெட்கப் பட்டவளாக எழப் போனவளை விடாமல் பிடித்துக் கொண்டவன், அவளை வாகாக தன் மீது கிடத்திக் கொண்டான்.
“ஹேப்பியா இப்போ?” என அவன் கேட்க, முத்தங்களால் பதில் சொன்னாள் மிது.