ஜீவாவை கட்டியணைத்த ஒருவன், “தேங்க்ஸ் ப்ரோ, மறக்க முடியாத மொமெண்ட், ஒன்ஸ் அகெயின்  தேங்க்ஸ்!” என்றான். பின் சலனமில்லாமல் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டனர்.

அன்புவிடம் அடி வாங்கியவன் அவனை பார்த்து விட்டு பயம் கொள்ள, எதுவும் திட்டாமல் “போ போ…” என சொல்லி அனுப்பி வைத்தான் அன்பு.

இப்போது உள்ளூர் இளைஞர்கள் அன்புவை சூழ்ந்து கொண்டனர்.

“அசலூர் காரனெல்லாம் ஆடுறான் நாங்களும் ஆடணும் அண்ணா, இல்லைனா எங்க கெத்து என்னாகிறது?” என்றனர்.

‘எல்லாம் உன்னாலதான்டா’ என ஜீவாவை முறைத்தான் அன்பு.

“யாருக்கும் தொந்தரவு இல்லாம ஆடுறதுல என்னண்ணா தப்பு? திருவிழான்னா செலிப்ரேஷன் இல்லையா? என்ஜாய் பண்ணட்டுமே” என ஜீவா சொல்ல, “செமத்தியா வாங்கிக் கட்டிக்க போறடா எங்கிட்ட” என்றான் அன்பு.

தங்களை ஆட விடாமல் அவர்களே ஆடினால் எங்கே தங்களுக்கு கொடுக்கும் பணத்தில் கை வைத்து விடுவார்களோ என பயந்து போய் விட்டனர் ஆட்டக்காரர்கள். நாங்களே ஆடுகிறோம் என்றனர்.

“எப்பவும் நீங்கதானே ஆடி மத்தவங்கள மகிழ்ச்சி படுத்துறீங்க, இன்னிக்கு ஒரு சேஞ்ச்க்கு நீங்க என்ஜாய் பண்ணுங்க. எங்க அண்ணன் ஊர்லேயே பெரிய நியாயவாதி,  கொடுக்க வேண்டியதெல்லாம் குறையில்லாம கொடுத்திடுவார்” என ஆட்டக் குழுவுக்கும் ஜீவாவே உத்தரவாதம் கொடுத்து விட்டான்.

“அடேய்!” என அன்பு மிரட்டிக் கொண்டிருக்கையிலேயே, “ஆடணும்னு சொல்லிட்டு சும்மா பார்த்திட்டு இருந்தா எப்படி? ஏறுங்க பாய்ஸ்” என்றான் ஜீவா.

உற்சாகமான சத்தத்தோடு ஒரு இளைஞர் படை மேடை ஏறியது. ஒருவன் ஜீவாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு ஏறினான்.

‘வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என பாடல் ஓட, ஆட்டம் தூள் பறந்தது. வேடிக்கை பார்த்திருந்த இளம் பெண்கள் எல்லாம் தங்கள் மனம் கவர்ந்தவனை பார்த்து ரசிப்பதும் கைப்பேசியில் படம் பிடிப்பதுமாக இருந்தனர்.

திருமணம் ஆகி குழந்தை பெற்று விட்டால் மட்டும் நாம் குதூகலிக்க கூடாதா என தங்களுக்குள் கேட்டுக் கொண்ட மணமான இள வயது மற்றும் நடுத்தர வயதுடைய ஆண்களும் தனித்தனி குழுக்களாக சேர்ந்து கீழே இருந்தபடியே ஆடினார்கள்.

நடனம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அந்த இடமே அதீத உற்சாக மழையில் நனைந்து கொண்டிருந்தது. ஜீவாவின் அசத்தலான ஆட்டத்தை கண்டு அன்புவே வியந்து விட்டான்.

ஒவ்வொரு இளைஞர் படையாக மேடை ஏறியது, அனைவருக்கும் மாஸ்டர் ஜீவாதான். எளிமையான அசைவுகளை சொல்லிக் கொடுத்து ஆட வைத்தான்.

ஒரு மணி நேரத்துக்கு பின்னர்தான் ஊர்க்காரர்கள் அமைதியானார்கள். அதன் பின்னர் ஆட்டக்காரர்கள் மேடை ஏறினார்கள்.

ஜீவா முன்பு டிவியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவன் என்பதை ஒருவன் கண்டுபிடித்து விட, அந்த செய்தி அப்படியே கூட்டத்தில் பரவி விட்டது.

ஜீவாவின் அம்மா நடனம் ஆடியவர் என்பது அன்புவுக்கும் தெரியும்.

“அசத்திபுட்டீங்க தம்பி!” என சொல்லி ஜீவாவின் கையை குலுக்கினார் நிர்வாகி.

லேசாக மூச்சு வாங்க புன்னகை செய்தான் ஜீவா.

அன்பு அவனை பார்வையால் எடை போட்டுக் கொண்டிருக்க, “நீங்க ஏன் வந்தீங்க? அண்ணி எப்படி விட்டாங்க உங்களை?” எனக் கேட்டான்.

“என் விஷயம் இருக்கட்டும், என்ன வேலை பார்க்கிற நீ?” என விசாரித்தான் அன்பு.

ஜீவா சொல்லவும், “மாமாக்கு தெரியுமா சேதி?” எனக் கேட்டான் அன்பு.

“எல்லாருக்கும் தெரியும். அது ஏன் எல்லாரும் டான்ஸ் ஆடுறவன்னா இப்படி பார்க்குறீங்க? இதுவும் ஒரு ஆர்ட் ஃபார்ம்தான். என் அம்மா இந்த கலைய வச்சுதான் அடுத்தவங்க தயவு இல்லாம வாழ்ந்தாங்க, என்னை வளர்த்தாங்க. எல்லாத்துக்கும் மேல எந்த துன்பத்தையும் தூக்கி சுமக்காம அவங்கள ஹேப்பியா வச்சுக்கிட்டாங்க” என்றான் ஜீவா.

தன் அம்மா பட்ட வேதனைகள் எல்லாம் அன்புவுக்கு நினைவு வந்தது, அதைப் போலவே முகமறியா இன்னொரு பெண்மணியும் துயரங்களையும் சவால்களையும் எதிர் கொண்டிருக்கிறார் என நினைத்துப் பார்க்கையில் அவனது மனம் வேதனை அடைந்தது.

அதை புரிந்து கொள்ளாமல் அப்பாவின் மீதுள்ள வெறுப்பை வேறெங்கோ காட்டிக் கொண்டிருக்கிறேனே, இது சரியில்லை என அவனது மனசாட்சி எடுத்துக் கூற அமைதியாக இருந்தான் அன்பு.

“என்ன சைலன்ட் ஆகிட்டீங்க?” எனக் கேட்டான் ஜீவா.

“சரி நீ போ” என்றான் அன்பு.

“நீங்க போங்க” என்றான் ஜீவா.

ஆக மொத்தம் இருவருமே கிளம்பாமல் அங்கேயே இருந்தனர்.

சிறிது நேரத்தில் சற்று தள்ளி ஒரே சத்தமாக இருந்தது.  ஏதோ பிரச்சனை என புரிந்து, “செத்த நேரம் சும்மான்னு இருக்க மாட்டாய்ங்க” என அலுத்துக் கொண்டே அவ்விடம் சென்றான் அன்பு. ஜீவாவும் அவனுடனே சென்றான்.

ஏதோ ஒரு பெண்ணும் அவளுடைய காதலனும் ரகசியமாக சந்தித்துக் கொண்டு, அந்த பெண்ணின் சகோதரனிடம் மாட்டிக் கொண்டனர் போலும்,

இரு தரப்பையும் அன்பு சமாதானம் செய்ய, தங்கையின் காதலனை அடித்து விடுவதிலேயே குறியாக இருந்தான் அந்த அண்ணன்.

அவனை பிடித்துக் கொண்ட ஜீவா, “பாஸ் பாஸ்… நல்ல பையன்னா கட்டி வைக்கலாம், கெட்ட பையன்னா உங்க சிஸ்டருக்கு அட்வைஸ் பண்ணலாம்,  அதை விட்டுட்டு வயலன்ஸ் எதுக்கு பாஸ்?” எனக் கேட்டான்.

“ஒரு வேலையும் இல்லாம  வெட்டி ஆஃபிசரா இருக்கிறவனுக்கு என் தங்கச்சி கேட்குதா? என்னை விடுங்க ரெண்டு போட்டாதான் மனசு ஆறும்” என்றான் அந்த அண்ணன்.

“கவர்மெண்ட் வேலைக்கு போக படிச்சிட்டுதான் இருக்கேன், பரீட்சை எழுதி பாஸ் ஆகி அப்புறம்தான் வேலை கிடைக்கும். நாளைக்கே எங்கேயாவது போன்னா எங்க போவேன்?” எனக் கேட்டான் அந்த காதலன்.

“அப்ப அது வரைக்கும் என் தங்கச்சி இருக்க திசை பக்கம் அவன் வரக்கூடாது, எதுக்கு இப்படி தனியா பார்க்க கூப்பிடுறான்” என கோவப்பட்டான் அண்ணன்.

“இது ஓவர் பாஸ், லவ்வர்ஸ்னா அப்படித்தான் இருப்பாங்க” என ஜீவா சொல்ல, “முதல்ல நீ யாருடா என் குடும்ப விஷயத்துல தலையிட? விட்றா என்னை? பெருசா பேச வந்திட்டான்” என சீறினான் அண்ணன்.

“எலேய் அவன் உன்னை மரியாதை கொடுத்துதான பேசிட்டு இருக்கான், எதுக்கு வாடா போடாங்கிற?” என அதட்டல் போட்டான் அன்பு.

உடனே அந்த பெண்ணின் அண்ணன் அமைதியாகி விட, “வீட்டு பிரச்சனைனா வீட்டுக்குள்ள இருக்கணும். பொது நிகழ்ச்சி நடக்கிற இடத்துல வச்சு பிரச்சனை பண்ணினா வேடிக்கை பார்க்க மாட்டேன், புரிஞ்சுதா?” என கடுமையான தொனியில் பேசி அண்ணனையும் தங்கையையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அன்பு.

அந்தக் காதலன் பாவமாக நிற்க, “கவலை படாதீங்க பாஸ், உங்காளு ஸ்ட்ராங்கா இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் வெயிட் பண்ணுவாங்க.. சீக்கிரம் வேலைய தேடிக்கிட்டு கெத்தா போய் பொண்ணு கேளுங்க, எங்கண்ணன் பேசி முடிச்சு தருவாரு” என்றான் ஜீவா.

“டேய்…” என அன்பு ஜீவாவை அதட்ட, “உங்கள்ளட்ட என்ன பேச்சு?” என அவனிடம் கேட்டவன், அந்த பையனிடம், “நீங்க நேரா போயி அண்ணி கால்ல விழுந்திடுங்க, அவங்க சொன்னா இவர் முடியாதுன்னு சொல்லவே மாட்டார்” என்றான்.