கொஞ்சும் காதல் சாரல் -35

அத்தியாயம் -35

நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆடவன் திடீரென கால் தடுக்கி விழுந்து விட்டான். அவனால் மேற்கொண்டு ஆட முடியவில்லை. எங்கே ஆடா விட்டால் மிச்ச பணம் கிடைக்காதோ என பயந்து வலியை பொறுத்துக் கொண்டு ஆடினான். பார்த்த ஜீவாவுக்கு பொறுக்க முடியவில்லை.

பாடலை பாதியில் நிறுத்த சொன்னவன் அவனை ஓய்வெடுக்க சொன்னான்.

“ரெண்டு பாட்டுக்குத்தான் ஆடியிருக்கேன், அதுக்கு மட்டும்தான் பைசா தருவாங்க, ஒன்னும் தேறாது எனக்கு, பரவாயில்லை நான் ஆடுறேன்” என்றான் அவன்.

அவனுக்கு பதிலாக நிகழ்ச்சியில் ஆட வந்த வேறு யாரை ஆட வைத்தாலும் அதற்குரிய பணத்தை இவனுக்கு தராமல் அவர்களே எடுத்துக் கொள்வார்கள் என்றும் சொன்னான்.

உனக்கு பதிலாக நான் ஆடுகிறேன் என ஜீவா சொல்லவும் மற்றவர்கள் வியப்பாக பார்த்தனர்.

காலில் அடி பட்டவனுடன் ஜோடியாக ஆடிய பெண்ணை பார்த்த ஜீவா, “பாட்டுல வர்ற ஸ்டெப்ஸ்தானே க்கா, நான் ஆடிக்கிறேன், நீங்க என் கூட சிங்க்(sync ஒத்திசைவு) ஆகி ஆடாட்டாலும் பரவாயில்லை, நீங்க பாட்டுக்கும் ஆடுங்க, நான் உங்க கூட சிங்க் ஆகிடுறேன்” என்றான்.

அந்தப் பெண் சரி என தலையாட்டவும், “ஆனா ஒரு கண்டிஷன் க்கா, நோ டச்சிங் டச்சிங்” என்றான்.

“என்னப்பா தம்பி உன் ஆளு கூட்டத்துல இருக்கா?” எனக் கேட்டாள் அந்தப் பெண்.

“இந்த கூட்டத்துல இல்லக்கா” என அவன் சொல்லவும், “ஓஹோ உன் நெஞ்சாங்கூட்டுல இருக்குதாக்கும்?” என கிண்டலாக கேட்டாள்.

“அதேதான், பார்த்து பண்ணுங்க, இல்லைனா காளியாத்தாவா மாறிடுவா” என்ற ஜீவா விசில் அடித்து பாடலை போடுமாறு டி ஜே’வுக்கு சைகை செய்து கொண்டே மேடை ஏறினான்.

‘வருது வருது விலகு விலகு’ என பாடல் ஒலிக்க மேடையை அதகளம் செய்ய ஆரம்பித்திருந்தான் ஜீவா. ஏற்கனவே சுறு சுறுப்பாக இருந்த கூட்டத்தில் இன்னும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

மிதுன்யா இன்று நிகழ்ச்சிக்கு வராததால் அன்புவின் பக்கத்து வீட்டு பெண் இதை படம் பிடித்து அவளுக்கு அனுப்பி வைத்தாள். உறங்கியிருக்காத மிது, அந்த அரை நிமிட காணொளியை பார்த்து திகைத்தவளாக அந்த பெண்ணுக்கு அழைத்து  அங்கே நடப்பதை காணொளி அழைப்பில் காண்பிக்கும் படி கேட்டுக் கொண்டாள்.

ஆட்டத்தை பார்க்க ஆசை பட்டு கேட்கிறாள் என நினைத்து அவளும் ஜீவாவின் நடனத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தாள்.

ஆடி முடித்து அவன் இறங்கவும் விசில் சத்தமும் கைதட்டலும் அந்த இடத்தை குலுங்க வைத்தது. மிது அவனுக்கு அழைத்து விட்டாள். அவள் என்ன ஜீவா இதெல்லாம் என கேட்க,  அவன் விவரம் சொன்னான்.

“பணம் வேணும்னா அவருக்கு நீங்களே கொடுக்கலாம், அதை விட்டுட்டு தேவை இல்லாத வேலை பார்க்குறீங்க” என்றாள்.

“நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் மிதுக்குட்டி, உன் வீட்ல ஓகே சொல்லிட்டாங்க, முறைச்சுகிட்டே திரிஞ்சாலும் என்னை இங்க பார்த்துக்கன்னு சொல்லிட்டு போயிருக்கார் அன்பு அண்ணன். அவர்கிட்டருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தானே இது? ஒரு காலத்துல எதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லைனு பயந்தோமோ எல்லாமே நடக்குது, நான் செலிபிரேட் பண்றேன்டி செல்ல பொண்டாட்டி!” என்றவன் பேச்சில் அத்தனை உற்சாகம்.

அதை தடுக்க விரும்பாமல் அவன் ஆட சம்மதம் சொல்லி வைத்து விட்டாள் மிது.

அன்பு காரில் சென்றதை கண்டிருந்த தகராறு செய்த இளைஞர்கள், அவன் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லாததால் இனி தைரியமாக நிகழ்ச்சியில் இஷ்டம் போல இருக்கலாம், குறுக்கே வருபவர்களிடம் கைவரிசையை காட்டலாம் என்ற நினைப்புடன் மீண்டும் இங்கு வந்து விட்டனர்.

‘உன்னை அழைத்தது கண்’ என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர் பெண்கள் குழுவினர். அந்த இளைஞர்கள் மேடையில் ஏறி அவர்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டனர். குழுவில் இருந்த பெண்கள் இறங்கி விட்டனர்.

அன்புவுக்கு அழைக்கிறேன் என்றார் நிர்வாகி.

“அட அவரை ஏங்க தொந்தரவு பண்ணிகிட்டு?” எனக் கேட்ட ஜீவா, பாடலை நிறுத்த சொல்லி விட்டான்.

“பாட்ட போடுடா…” என அலறினான் ஒருவன்.

“டியர் பிரதர்ஸ், எல்லாரும் என்ஜாய் பண்ண வந்தா யாருக்கும் தொல்லை இல்லாம செய்யணும், நீங்க பண்றது சரியில்லை?” என்றான் ஜீவா.

“கொஞ்ச நேரம் முன்னாடி நீயும்தான் ஸ்டேஜ்ல ஆடின, நாங்க மட்டும் ஆடக் கூடாதா என்ன?” எனக் கேட்டான் இன்னொருவன்.

அதுதானே எங்களுக்கும் ஆட உரிமை இருக்கிறது என அடமாக சொன்னார்கள் அந்த இளைஞர்கள்.

உறங்கிக் கொண்டிருக்கும் போலீசை எழுப்பி அழைத்து வருகிறேன் என்றார் நிர்வாகி.

“அதெல்லாம் செஞ்சா இவங்க இன்னும் வெறி ஆகிடுவாங்க ஸார். இருங்க ஆடணும்னும்தானே கேட்கிறாங்க, ஆடட்டும்” என்றான் ஜீவா.

நிர்வாகிகள் சரியாக வராது என சொல்லியும் அன்பு அண்ணன் தன்னைத்தான் பொறுப்பாக பார்க்க சொல்லியிருக்கிறார், பிரச்சனை வராமல் இருக்க நான் பொறுப்பு என உத்தரவாதம் அளித்தான்.

ஆட வந்திருந்த குழுவினரை ஓய்வெடுக்க சொல்லி விட்டு அந்த இளைஞர்களுடன் அவனும் ஏறிக் கொண்டான்.

‘லாலாக்கு டோல் டப்பிமா’ என பாடல் ஒலிக்க, அவர்கள் ஏனோ தானோ என ஆடினார்கள். அவர்களுடன் ஜீவாவும் ஆடினான். பின் அவனை பார்த்தே அவனது நடன அசைவுகளை பின்பற்றி ஓரளவு நன்றாகவே ஆடினார்கள்.

அன்பு வீட்டுக்கு வந்த உடனேயே மாமனாருக்கு அழைத்து லாவண்யா இங்கு வந்து விட்டதை சொல்லி விட்டான். அவள் உறங்கிய பிறகும் அவனால் கண்களை மூட முடியவில்லை. விழாவில் ஏதும் பிரச்சனை வரக்கூடாதே என்ற சிந்தனையிலேயே இருந்தவன் மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு விட்டான்.

இங்கு வந்து பார்த்தால் ஜீவாவும் அந்த இளைஞர்களும் ஒரே ஆட்டம். அந்த பாடல் முடியவும், “உங்க ஆசை நிறைவேறிடுச்சுல்ல, ஒழுங்கா இறங்குங்க எல்லாரும்” என்றான் ஜீவா.

“ப்ரோ ப்ரோ இன்னும் ஒரே ஒரே டான்ஸ், அப்புறம் சத்தியமா இறங்கிடுறோம்” என்றனர் அவர்கள்.

டி ஜே அடுத்த பாடலை போட்டு விட்டான்.

‘என் ஜோடி மஞ்சக் குருவி’ என  பாடல் ஓட, பார்த்திருந்த அனைவருமே அந்த ஆடவர்களை ரசித்து பார்த்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

“என்னண்ணே நடக்குது இங்க?” என நிர்வாகியிடம் கேட்டான் அன்பு.

“வந்திட்டியா அன்பு? என்னமோ ஆக போகுதுன்னு நானும் பயந்துதான் போயிட்டேன், பரவாயில்லை உன் தம்பி ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்ங்கிற வித்தை தெரிஞ்சு வச்சிருக்கான்” என்றார் அவர்.

“அவன் எனக்கு தம்பியா?” என எரிச்சலாக கேட்டான் அன்பு.

“இல்லாமையா அவனை நம்பி பொறுப்பு கொடுத்த?” என்றவர் “நல்லா ஆடுறான ப்பா?” என வியப்பாக சொல்லிக் கொண்டே ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆட்டம் முடியவும் அனைவரையும் போஸ் கொடுக்க சொல்லி செல்ஃபி எடுத்தான் ஒருவன், ஜீவாவையும் தங்களுடன் நிற்க வைத்துதான்.